தமிழ் சினிமாவின் தனிக்காட்டு ராஜா உதயநிதி!

-சாவித்திரி கண்ணன்

உலகில் அடிமைத் தனத்திற்கு பேர் போனதில் தமிழ் சினிமா துறையை மிஞ்ச வேறொன்றில்லை. திரைத் துறைக்கு தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர் சங்கம், திரை அரங்க உரிமையாளர் சங்கம்.. எனப் பல சங்கங்கள் உண்டு. இவை எல்லாம் உதயநிதி என்ற ஒற்றை மனிதரின் விரலசைவுக்கு கட்டுப்பட்டு பிழைப்பு நடத்துவதை என்னென்பது?

இன்றைய தினம் திரைத் துறையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது எனக்காக! தியேட்டர்கள் கட்டப்பட்டு இருப்பது எனக்காக! என உதயநிதி நம்புகிறார்! இன்றைக்கு முக்கிய நடிகர்களின் படங்கள் எதுவும் ரெட்ஜெயண்டை மீறி வேறொரு நிறுவனத்தால் ரிலீஸ் செய்ய முடியாது என்பது எழுதப்படாத விதியாக மாறியுள்ளது.

ஒரு காலத்தில் நூற்றுக்கணக்கான தயாரிப்பாளர்கள், ஆயிரத்திற்கு மேற்பட்ட விநியோகஸ்தர்கள், இரண்டாயிரம் திரை அரங்குகள் என தழைத்தோங்கிய தமிழ் சினிமா துறையில் இன்று விரல்விட்டு எண்ணத் தக்கவர்களே படம் எடுக்க முடிகிறது. அதே போல விரல்விட்டு எண்ணத்தக்கவர்களே விநியோகஸ்தர்களாக வலம் வர முடிகிறது. ஆனால், அதிலும் கூட தமிழ் நாட்டில் தனிக்காட்டு ராஜாவாக – போட்டிக்கு கூட எதிரில் யாரும் நிற்க முடியாமல் – சினிமா துறையில் ஒன்மேன் ஷோவாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது ரெட் ஜெயிண்ட் மூவீஸ்!

திமுகவின் முந்தைய ஆட்சியில் சன் குழுமம் இப்படித்தான் திரைத்துறையை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து திக்குமுக்காட வைத்தது. பழம் பெருமை வாய்ந்த ஏ.வி.எம். நிறுவனமே அன்று தன் படத்தை சன் பிக்சர்ஸ்க்கு டிஸ்டிரிபியூசன் தந்து சரணாகதியானது. நடிகர் விஜய் நடித்த காவலன் படம் சன் பிக்சர்ஸ்க்கு தரப்படாததால் சந்தித்த இன்னல்கள் அப்போது வெகு பிரசித்தம். அன்றைக்கு சன் குழுமம் செய்ததையே இன்று சத்தமில்லாமல் செய்கிறது ரெட்ஜெயிண்ட் மூவீஸ்!

ரெட்ஜெயண்டின் விஸ்வரூப வளர்ச்சி!

சன் குழுமம் கோலோச்சிய போது அதற்கு போட்டியாக 2008 ஆம் ஆண்டில் ரெட்ஜெயண்ட் உதயமானது! கலைஞர் ஆட்சியில் இருந்ததால் விஜய்யின் குருவி, சூர்யாவின்  ஏழாம் அறிவு, கமலஹாசனின் மன்மதன் அம்பு, ஆதவன் எனப் பல படங்களை தயாரித்தார் உதயநிதி ஸ்டாலின்! 2011ல் அதிமுக ஆட்சி வந்தவுடன் ரெட் ஜெயண்ட் வளர்ச்சி தடைபட்டது. உதயநிதி தயாரிக்கும் படங்களுக்கு பல தடங்கல்கள் கொடுக்கப்பட்டன! அவர் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் கிடைப்பது முதல் ரிலீஸ் செய்வது பல சிக்கல்கள் இருந்தன! தமிழில் பெயர் வைப்பதால் கேளிக்கை வரி விலக்கு ரெட்ஜெயிண்ட் தயாரிக்கும் படங்களுக்கு மறுக்கப்பட்டது. பெரிய நடிகர்கள் கால்ஷீட் தர பயந்த சூழலில், அவரே நடிகராகி ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர் வேலன் காதல், சரவணன் இருக்க பயமேன் ஆகிய படங்களை நடித்து தயாரித்தார். இது தவிர நண்பேண்டா, கெத்து, நீர் பறவை, மனிதன், கண்ணே கலைமானே, வணக்கம் சென்னை ஆகிய படங்களை தயாரித்து விநியோகம் செய்தார்!

கொரானா காலத்தில் நடந்த அரசியல்;

கொரானா காலகட்டத்தில் திரைப்படத் தொழில் ஸ்தம்பித்துப் போனது. திரையரங்குகள் மூடப்பட்டு இருந்தன! வேறு வழியின்றி ஒடிடி தளத்திற்கு சூர்யா, ஜோதிகா போன்றவர்கள் நீண்ட நாள் காத்திருக்க முடியாமல் நகர்ந்தனர். ஓரளவு நிலைமை சரியானதும் தனுஷ் நடித்த கர்ணன் வெளியானது. அது நல்ல வரவேற்பை பெற்று வசூலானது. உடனே இரண்டு, மூன்று நாட்களில் மீண்டும் கொரொனா அபாயம் என சொல்லப்பட்டு தியேட்டர்களில் பாதி இருக்கைகள் மட்டுமே என கட்டுப்பாடுகள் அமலாகின!

இந்தச் சூழலில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அண்ணாத்தே படம் வெளி வரத் திட்டமிட்டனர். அதற்கு உடனே தோதாதாக திரைப்பட அரங்குகளில் முழு இருக்கைகளையும் நிரப்பிக் கொள்ள அரசு ஆணை பிறப்பித்தது. அண்ணாத்தேவை ரெட்ஜெயண்ட் தான் வாங்கி விநியோகம் செய்தது என்பது கவனத்திற்கு உரியது. அண்ணாத்தே படத்தை மிக அதிக விலை வைத்து தியேட்டர்காரர்களுக்கும், சிறு விநியோகஸ்தர்களுக்கும் நிர்பந்தித்தது ரெட் ஜெயண்ட். இதனால் அவர்கள் இதில் லாபம் பார்க்க முடியாமல் நஷ்டப்பட்டனர். ஆனால், சன் பிக்சர்ஸும், ரெட் ஜெயிண்ட்டும் நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்துவிட்டனர்.

இதே கால கட்டத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடித்த மாநாடு படம் தீபாவளி ரீலீசிற்காக தயாராக இருந்தது. ஆனால், அண்ணாத்தேவிற்கு அதனால் பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக அதற்கு தியேட்டர் கொடுக்காமல் தடுக்கப்பட்டது. அதில் கருணாநிதி குடும்ப அரசியல் பற்றி அப்பா, மகன்,பேரன் என அரசியல் ஆதிக்கம் செய்வதை கேள்வி கேட்டு ஒரு வசனம் டேராக இடம் பெற்றது தெரிய வந்ததும் ரிலீஸ் மீண்டும் தடைபட்டது. பல அலைக்கழிப்புக்கு பிறகு விடிய,விடிய பஞ்சாயத்து நடந்தது! அந்த வசனம் வரும் பகுதியை ஒலி நீக்கி ஒளிபரப்ப உத்திரவாதம் தந்து அதிகாலை மூன்று மணிக்கு பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டு ரிலீசுக்கு அனுமதித்தனர்.

அஜித்தின் வலிமை படம் 2020 லேயே வெளியாகி இருக்க வேண்டியது. கொரானா காலம் அதன் ரிலீசை தள்ளிப் போட்டது. வலிமைக்கு முன் கூட்டியே பணம் தந்து தவமாக தவம் கிடந்து காத்திருந்தனர் விநியோகஸ்தர்கள்! ஆனால், தீடீரென்று அதை தங்களுக்கு விநியோக உரிமை கேட்டது ரெட் ஜெயிண்ட். கிட்டதட்ட இரண்டரை ஆண்டுகளாக காத்திருந்த விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், கர்ணன் படத்திற்கு நேர்ந்த கதி தங்களுக்கு நேர வேண்டாம் என ரெட் ஜெயண்ட்டுக்கு விட்டுக் கொடுத்தனர்.

தற்போது கடைசியாக கமலஹாசனின் விக்கிரம் 2 படம்! இந்தப் படத்திற்கு நீண்ட நாட்கள் முன்பே பைனாண்ஸ் தந்து வி நியோக உரிமை பெற்றவர் மதுரை கோபுரம் பிக்சர்ஸ் அன்புச் செழியன். ஆனால், கடைசி நேரத்தில் அதிரடியாக களம் இறங்கி ரெட் ஜெயிண்ட் மூவீஸ் தட்டிப் பறித்துக் கொண்டது. அதுவும் உதய நிதி துபாய் பயணத்தில் இருந்த போது அங்கிருந்து போன் செய்து கமலஹாசனுக்கு அழுத்தம் தந்து இதை பெற்றுள்ளார். கமலஹாசனை பொறுத்த வரை அவர் ”அன்புச் செழியனிடம் நான் பணம் வாங்கிவிட்டேன். ஆகவே, நீங்கள் அவரிடம் தான் பேச வேண்டும். அவர் உங்களுக்கு தர ஒப்புக் கொண்டால் ஆட்சேபனை இல்லை” என தெரிவித்தார். அதனால், அன்புச் செழியனை சரிகட்டி படத்தை வாங்கிவிட்டது ரெட் ஜெயிண்ட்! அதிமுக ஆதரவாளராக அறியப்பட்டவரும்,பல வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பவருமான அன்புச் செழியன் ஆட்சியாளர்களை எதிர்த்து தொழில் செய்ய முடியாது என்பதால், கொடுப்பதை வாங்கிக் கொண்டு அமைதியாகிவிட்டார்.

இப்படியாகத் தான் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், சுந்தர் சியின் அரண்மனை 3, விஜய்யின் பீஸ்ட், சிவ கார்த்திகேயனின் டாண், வெளிவரவுள்ள ஆர்யாவின் படம் ஆகிவற்றை தட்டி தூக்கியுள்ளது ரெட் ஜெயிண்ட்! பெரிய பட்ஜெட், முக்கிய நடிகர்கள் படங்கள் தான் விநியோகஸ்தர்களுக்கு வாழ்வு தருபவை. அதை வைத்துக் கொண்டு தான் மேற்கொண்டு இயங்குவார்கள் ஆனால். பெரிய படங்கள் எதையும் மற்றவர்களுக்கு விட்டு வைக்க மாட்டேன் என ரெட் ஜெயிண்ட் அனைத்தையும் அள்ளிச் சென்று விடுவதானது தமிழ் சினிமா வட்டாரத்தில் அனைவருக்குமான தொழில் செய்யும் சுதந்திரத்தின் மீது விழுந்த பலமான அடியாகவே கருத முடிகிறது.

ரெட் ஜெயிண்ட் வைத்தது தான் சட்டம்;

படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய நகர்புறத்தில் மல்டி பிளக்ஸில் இரு தரப்பும் 50;50 என ஒப்பந்தம் செய்வது வாடிக்கையாக இருந்தது. ஆனால், ரெட் ஜெயிண்ட் மூவீஸ் அதை தனக்கு 70 சதமும் தியேட்டர்காரர்களுக்கு 30 சதமாகவும் குறைத்துவிட்டது. அதோடு ஸ்பெஷல் ஷோவிற்கு என்றால், 80 சதவிகிதம் கேட்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சில தியேட்டர்காரர்கள் எங்களுக்கு ஸ்பெஷல் ஷோவே வேண்டாம் என ஒதுங்கிக் கொண்டனர்.

இப்படி நகர் புறத்தில் சொல்ல முடிவது போல ஊரக பகுதிகளில் சொல்ல முடியவில்லை தியேட்டர்காரர்களால்! அவர்களிடம் 80 சதவிகித வசூலை நிர்பந்திக்கிறது ரெட் ஜெயிண்ட்! அது மட்டுமின்றி ஜி.எஸ்.டி 18% மற்றும் உள்ளூர் வரி 4% ஆகியவற்றையும் முறையாக கணக்கு காட்டாமல் ஏமாற்றி லாபம் பார்க்கும் வகையில் அந்த கணக்கில் வராத பணத்திலும் தியேட்டர்காரர்களிடம் கறாராக பேரம் பேசி பணத்தை புடுங்கிக் கொள்வதாக தியேட்டர்காரர்கள் புலம்புகின்றனர். நியாயமாக பார்த்தால், அந்த வரிப்பணத்தை ஒழுங்காக அரசுக்கு செலுத்த வைப்பது தானே ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் உதயநிதி செய்திருக்க வேண்டியது! இவர்களின் யோக்கியதைக்கு இது தான் சான்று!

ஆக யாரோ கஷ்டப்பட்டு படம் எடுக்க வேண்டும். யாரோ பெரும் முதலீடு செய்து தியேட்டர்களை கட்டி இருக்க வேண்டும். ஆனால், கொள்ளை லாபம் மட்டும் நோகாமல் நான் அள்ளிச் செல்ல வேண்டும் என்பது தான் ரெட் ஜெயிண்ட் மூவீஸின் தாரக மந்திரம். சினிமா தொழிலில் நீண்ட காலமாக இருப்பவர்கள் எல்லாம் மறுத்துப் பேச தைரியமின்றி, ஆட்சியாளர்களை பகைத்தால் இருக்கும் தொழிலையும் இல்லாமல் ஆக்கிவிடுவார்கள் என்ற பயத்தில் மனப் புழுக்கத்துடன் உள்ளனர் சினிமா துறையினர்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time