பேரறிவாளன் விடுதலை! நீதித்துறையின் பேராண்மை!

-சாவித்திரி கண்ணன்

31 ஆண்டு சிறைவாசம்! 20 ஆண்டுகளாக காத்திருப்பில் வைக்கப்பட்ட கருணை மனுக்கள்! முடிவெடுக்காமல் மத்திய அரசுகள் காட்டிய மாபெரும் மெத்தனம்! ஆட்சியாளர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் தெளிவான ‘பொலிடிக்கல் வில் பவர்’ இல்லாமை ஆகியவற்றின் விளைவே நீதிமன்ற தீர்ப்பு!

சரியான நேரத்தில் உச்ச நீதிமன்றம் தெளிவாக முடிவெடுத்துள்ளது. இன்றைக்கு உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் அன்றே இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி வி.ஆர்.கிருஷணய்யர் போன்றோரும், சதாசிவம் போன்றோரும் வெளிப்படுத்திய ஆதரவான கருத்துக்களே அடித்தள காரணமாகும் என்பதை நாம் நினைவு கூர்ந்தே ஆக வேண்டும்.

இந்த தீர்ப்பின் போது உச்ச நீதிமன்றம் வெளிப்படுத்திய வார்த்தைகள் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறத் தக்கவை;

30 ஆண்டுகள் முடிந்து விட்டன. பேரறிவாளன் நன்னடத்தையில் பிரச்னை இல்லை. அவரை விடுதலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது? நீங்கள் முடிவெடுக்கவில்லை என்றால், நீதிமன்றம் விடுதலை செய்யும் என ஏற்கெனவே தெரிவித்துள்ளோம்.

மேலும் ‘குடியரசுத் தலைவரோ, ஆளுநரோ, என்ன அதிகாரம் இருந்தாலும், அரசியல் சாசனத்தை மீறி யாரும் செயல்பட முடியாது. ஆளுனரின் அணுகுமுறை கூட்டாட்சி தத்துவத்தை சீர் குகலித்திடும் வகையில் உள்ளது. அரசியலைப்பு, சட்டத்திற்கு மேல் ஒருவரும் கிடையாது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு எங்களால் உத்தரவிட முடியாது. ஆனால் இந்த வழக்கில் அரசியல்சாசன அடிப்படையில் தீர்ப்பை வழங்க முடியும்,”

என்று நீதிபதிகள் தெரிவித்தவை பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டியவை!

இன்றைக்கு விடுதலை ஆகி இருக்கும் பேரறிவாளனை மீசை துளிர்விட ஆரம்பித்த காலத்தில் இருந்து பார்த்து வருபவன் நான்! அவனை சுருக்கமாக ‘அறிவு’ என்று தான் நாங்கள் அழைப்போம். அன்புத் தம்பி பேரறிவாளனின் குடும்பமே பெரியார் தொண்டு செய்வதற்கே தங்களை அர்ப்பணித்த குடும்பம். அவர் தந்தை குயில்தாசனையும், அன்னை அற்புதம் அம்மாவையும் பெரியார் திடல் நிகழ்வுகளில் தான் பெருமளவு பார்த்துள்ளேன்.

தம்பி அறிவு போட்டோகிராபி கற்றுக் கொள்ள சுபா போட்டோ நியூசில் பணிக்கு வந்த போது தன்னுடைய வெகுளித்தனமான பேச்சால் எங்களுக்கு நெருக்கமாகிவிட்டான். கொள்கை பற்றாள குடும்பதை சேர்ந்தவன் என்பதால், ஈழ விடுதலை போராளிகள் மீது இயல்பான ஒரு ஈர்ப்பு அவனிடம் இருந்தது. அந்த வகையில் சுபா நீயுஸ்க்கு வரும் விடுதலை புலிகள் இயக்க நண்பர்கள் முத்துராஜா போன்றவர்களோடும் நெருக்கம் பாராட்டினான். அறிவைப் போலவே தான் ஹரிபாபுவும்!

விடுதலை புலிகள் இயக்க நண்பர்கள் மிகவும் கமுக்கமானவர்கள். தங்களுக்கான தேவைகளை நம்மிடம் நன்றாக கேட்டு வாங்கிக் கொள்வார்கள். ஆனால், எந்தக் காரணம் கொண்டும் வெளிப்படையாக பேசவே மாட்டார்கள்! ”ஏன்? எதற்கு?” எனக் கேட்டாலே அப்படிப்பட்டவர்களிடம் கொஞ்சம் விலகி நின்றுவிடுவார்கள். ஆகவே, எதற்கு அவர்களை தர்மசங்கப்படுத்த வேண்டும், அவர்களின் நட்பை இழக்க வேண்டும்..என்றே சின்னச் சின்ன உதவிகளை கேட்கும் போது செய்து கொடுப்பது எங்களைப் போன்றவர்களின் வழக்கம்!

அந்த வகையில் தான் தம்பி ஹரிபாபு ராஜிவ்காந்தி நிகழ்வை அவர்களுக்காக கவரேஜ் செய்யச் சென்றான். அந்த கவரேஜுக்கு அன்றைய தினம் சுபா சுந்தரம் சாரிடம் கேமரா வாங்க நானும், ஹரிபாவும் சென்ற போது அவர் அங்கு இல்லை. ஆகவே நண்பர் வைட் ஆங்கிள் ரவிசங்கரிடம் கூட்டிச் சென்று கேமரா வாங்கி தந்து வழி அனுப்பி வைத்தேன்.

போட்டோகிராபர் ஹரிபாபு

”ராஜிவ் காந்திக்கு தனு அக்கா சந்தன மாலை போடணுமாம். எங்க போய் வாங்கறது” என கெட்டவனிடம் மவுண்ட் ரோடு காதியில் வாங்கி செல்ல வழி காட்டினேன், ராஜிவ் காந்தி தான் அடுத்த பிரதமராக வருவார். ஆகவே, அவரை நிறைய குளோசப் எடுத்து வருகிறேன் தோழர் என்று சொல்லிச் சென்றவன் வரவே இல்லை மரணித்தே போனான். மனித வெடி குண்டாக தன் கூடவே தனு வந்து இருக்கிறார் என்ற செய்தி அவனுக்கு தெரியாத காரணத்தால், அவனும் ஸ்பாட்டிலேயே மரணமடைந்தான் நல்ல வேளையாக அவன் உயிரோடு இல்லை. அவன் உயிரோடு இருந்திருந்தால் அவனும் ராஜிவ் கொலையாளிகளில் ஒருவராக குற்றம் சுமத்தப்பட்டு பேரறிவாளன் போல சிறையில் தான் வாழ்ந்திருப்பான். அவனுடைய நியாயம் யார் காதுக்கு கேட்டிருக்கும்?

பேரறிவாளனை போன்ற நிலை தான் கொலையில் சம்பந்தப்பட்ட நளினிக்கும், அவர் தாயார் பத்மா மற்றும் சகோதரர் பாக்கியநாதனுக்கும்! விடுதலைப் புலி இயக்கத்தவர்கள் அவ்வப்போது வந்து பேசி இளைப்பாறிச் செல்லும் இடமாக பத்மா அம்மாவின் வீடு இருந்தது. நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது இடையே எங்களுக்கு ஏதாவது சாப்பிட எடுத்து வரும் நளினியின் தாயார் பத்மா அம்மா, ”ஆமா, நீங்கள்ளாம் அடிக்கடி பிரபாகரன், நெடுமாறன் என்கிறீர்கள் அவங்கள்ளாம் யாரு?” என்றார் ஒரு நாள்! அப்போது முத்துராஜா இருவர் படத்தையும் காட்டினார். அதில் பிரபாகரனைப் பார்த்து ”இவர் தான் நெடுமாறனா?” என அவர் கேட்ட போது அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

அந்த பத்மா அம்மாவும் இந்த வழக்கில் கைதாகி அநியாயமாக எட்டாண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார். தனுவுக்கு தலைவலி மாத்திரை தந்தது தான் அவர் மீதான குற்றச்சாட்டு! இதே போல சம்பந்தமில்லாமல் எட்டாண்டுகள் சிறை அனுபவித்தவர் அண்ணன் சுபா.சுந்தரம்.

இந்த வழக்கில் கைதானவர்களை ரத்த உறவு என்பதை கடந்து சிறையில் சென்று சந்தித்து பேசியது அன்றைய தினம் நான் ஒருவன் தான்! அப்படி செங்கல்பட்டு சிறை, புழல் சிறைச்சாலை, பூந்தமல்லி சிறைச்சாலை, வேலூர் சிறைச்சாலை என பல சிறைகளுக்கு சென்று முதல் பத்தாண்டுகள் வரை அவர்களை நான் சந்தித்து வந்தேன். அப்போது அறிவையும் சந்தித்து பேசியுள்ளேன்.

எட்டாண்டுகள் சிறைவாசத்திற்கு பிறகு நளினியின் தாயார் பத்மாவும், சகோதரர் பாக்கியநாதனும் விடுதலை ஆனபோது எங்கள் இல்லத்தில் தான் இரு மாதங்கள் தங்கி இருந்தனர். ராஜிவ் கொலை பற்றித் தெரியாமலே தான் தனு, சிவராஜன், முருகன் ஆகியோருடன் புறப்பட்டு ஸ்ரீ பெரும்புதூர் சென்றதாகவும், குண்டு வெடிப்புக்கு பிறகு கூட சற்று நேரம் கழித்து அவர்களோடு செல்லும் போது தான் தெரிய வந்தது என நளினி சொன்னார்! இதையே பிரியங்கா வந்து சந்தித்த போது தான் தெளிவுபடுத்தியதாகவும் நளினி தெரிவித்தார்.

உண்மையில் பேரறிவாளன் விடுதலைப் புலிகள் இயக்கத்தவர்களோடு உணர்ச்சிகர மனநிலையில் பழகி வந்தானே அன்றி அவர்களின் நோக்கங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. பேரறிவாளன் விவகாரத்தில் விசாரணை அதிகாரியே நீதிமன்றத்தில் இதை பிற்பாடு தான் தெளிவுபடுத்தினார். அற்புதம் அம்மா இடையறாது பெருமுயற்சி செய்தார்!

ஆரம்பத்தில் அற்புதம் அம்மாளை திராவிடர் கழகம், திமுக உள்ளிட்ட அனைவரும் கைவிட்டுவிட்டனர்! கலைஞர் ஆட்சியில் நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக்க மட்டுமே கலைஞர் பரிந்துரைத்தார்.

நாம் மிகவும் மதிக்கின்ற குடியரசுத் தலைவர்கள் கே.ஆர். நாராயணன் மற்றும் அப்துல்கலாம் ஆகியோர் இருவருமே தங்கள் பதவிக்காலம் முழுக்க ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைதானவர்கள் தொடர்பில் ஒரு தெளிவுக்கு வரமுடியாமல் கருணை மனு மீது நடவடிக்கையே இல்லாமல் காலம் தாழ்த்தினர் என்பதில் இருந்து இதில் எந்த அளவுக்கு அதிகார வர்க்கத்தின் தவறான பார்வை இருந்துள்ளது என அறிந்து கொள்ளலாம்!

இந்திய அதிகார வர்க்கம் இதை தனித் தமிழ் நாட்டோடு சம்பந்தப்படுத்தி புரிந்து கொண்டது. இவர்களின் மீதான கருணையும், விடுதலையும் இந்திய கூட்டாட்சி அமைப்பின் சேதாரத்திற்கு வழிவகுக்கும் என கண்மூடித்தனமாக அதிகார வர்க்கம் நம்பியது. ஒரு பத்திரிகையாளனாக நான் விசாரணை அதிகாரிகள், நீதித் துறை வட்டாரத்தில் பேசிய வகையில் இதைத் தான் உணர்ந்தேன்.

காந்தி, ராஜிவ் கொலைக் குற்றவாளிகள் ஒரு ஒப்பீடு!

எழுவர் விடுதலை விவகாரத்தில் உண்மையிலேயே ஜெயலலிதா ஆர்வம் காட்டவில்லை. 2014 ல் நீதிபதி சதாசிவம் அவர்கள் இதில் மாநில அரசே முடிவெடுக்கலாம் என தீர்ப்பில் சொன்னதை வைத்து அதிரடியாக ஒரு அரசியல் ஸ்டண்ட் செய்தார். ஆனால், அவர் நினைத்து இருந்தால் மத்திய அரசுடன் இணக்கமாக பேசி, புரிய வைத்து, அவர்களையும் இசைவு தெரிவிக்க வைத்து இருக்கலாம். ஜெயலலிதாவின் அதிரடி அரசியலால் இந்த பிரச்சினை மத்திய மாநில அரசுகளுக்கு இடையிலான ஈகோ பிரச்சினையாகிவிட்டது.

கடைசியாக தேவைக்கும் அதிகமாகவே தண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவரை அரசாங்கம் சிறையில் வைத்திருப்போம் என்பது அரசாங்கத்தை குற்றவாளியாக்கிடும். ”இதை நாங்கள் வேடிக்கை பார்க்க முடியாது”என உச்ச நீதிமன்றம் துணிந்து அரசையே கண்டித்தது வரலாற்று சிறப்பாகும். பேரறிவாளன் விடுதலை மட்டும் போதுமானதல்ல, ஏழுவரில் மற்ற ஆறுபேரும் விடுதலை ஆக வேண்டும். அதற்கு இந்த தீர்ப்பு வழிவகுக்க வேண்டும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time