பாக்தாத் திருடர்களும், பச்சையப்பன் அறக்கட்டளையும்!

-ம.வி.ராசதுரை

35 ஆயிரம் கோடி சொத்துக்குரிய பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகம் சர்ச்சைக்கு பேர் போனது! பேராசிரியர் பணிக்கு லட்சக்கணக்கில் லஞ்சம், வாடகை வசூலில் மோசடி, அரசியல்வாதிகளின் தலையீடுகள்..என கதி கலங்கி கிடக்கும் நிர்வாகத்திற்கு தற்போது தேர்தல் நடத்துவதற்கு அரசியல் அழுத்தம் தரப்படுகிறது! தேர்தல் நடத்த என்ன தடை?

தமிழ் நாட்டிலேயே மிகப் பெரிய அறக்கட்டளையாக 35,000 கோடி பெறுமான சொத்துக்களோடு திகழ்வது பச்சையப்பன் அறக்கட்டளை! மிகப் பெரிய செல்வந்தரும்,வள்ளலுமான பச்சையப்பன் தன் கடும் உழைப்பால் சேர்த்த செல்வங்களை பொது நலன் சார்ந்து கல்விக்கு பயன்படுத்த உயில் எழுதி வைத்துள்ளார்!

பச்சையப்பர் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் செயல்படும்  பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செல்லம்மாள் கல்லூரி உள்ளிட்ட ஆறு கல்வி நிறுவனங்கள் வாயிலாக பல லட்சம் ஏழை மாணவர்கள் உயர் கல்வி பெற்றுள்ளனர். குறைந்த கட்டணத்தில் பல்லாயிரம் இளைஞர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகியுள்ளனர். 180 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட பச்சையப்பன் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் தற்போது 30 ஆயிரம் மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். 1,000 ஆசிரியர்களும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் 500 பேரும் பணியாற்றுகிறார்கள்.

பச்சையப்பன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற வேண்டிய தேர்தல்.  2018 க்குப் பிறகு  நடைபெறவில்லை. தற்போது,சென்னை உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி எஸ்.ராஜு  மற்றும் செயலர் சி. துரைக்கண்ணு ஆகியோர் இதை நிர்வகித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட வேண்டும். தடைகள் அகற்றப்பட்டு அறங்காவலர் குழு தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும். அதுவரை தனி அலுவலர் ஒருவரை தமிழக அரசு நியமிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர் ராமதாஸ், விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல்வாதிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தன்னிச்சையுடன் செயல்படுவதாக தற்போது உள்ள நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டியுள்ளனர்.

தொடக்கத்திலிருந்தே நீதிமன்ற வழிகாட்டுதலில் செயல்பட்டுவந்த அறக்கட்டளையின் அறங்காவலர்கள் எண்ணிக்கை 9  ஆகும். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை  தேர்தல் நடைபெற்று புதிய அறங்காவலர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

2013 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தால் அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியாக டி.என். சேஷன் நியமிக்கப்பட்டார். அவர் நடத்தி வைத்த  தேர்தலில் வெற்றி பெற்ற அறங்காவலர்கள்  காலகட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. வாடகைதாரர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு அறக்கட்டளைக்கு இழப்பை ஏற்படுத்தியது, பினாமிகளைப் பயன்படுத்தி சுய லாபம் அடைந்தது இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். முக்கிய குற்றச்சாட்டுகளில் ஒன்று, லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் பெற்றுக் கொண்டு 250  பேராசிரியர்களை  நியமித்தாகும்!

இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அக்கறையுள்ள முன்னாள் மாணவர்களால் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நீதியரசர் சண்முகத்தை அறக்கட்டளையின் இடைக்கால நிர்வாகியாக நியமித்து, இந்த புகார்களை விசாரிக்க உத்தரவிட்டது.

நீதியரசர் சண்முகம்  விரிவாக விசாரணை நடத்தி பல்வேறு குற்றங்களை உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின்படி , 2013-18 காலகட்டத்தில்  தேர்வுசெய்யப்பட்ட 250 ஆசிரியர்களில் 152 பேர்  தகுதியே இல்லாதவர்கள் எனக் கூறியுள்ளார்.

கடந்த 2014 முதல் 2016-க்குள் நிகழ்ந்துள்ள இந்த நியமனங்களில் தொலைதூரக் கல்வியில் படித்தவர்கள், தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி பெறாதவர்கள், பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள தகுதி இல்லாதவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அனுபவமே இல்லாதவர்களுக்கு எல்லாம் உதவிப் பேராசிரியர் பதவியில் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, பதவி வழங்கப்பட்டுள்ளது.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘அறக்கட்டளையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கும், புகழுக்கும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது’ என்று உயர் நீதிமன்றமே வேதனைப்பட்டது!

அதுமட்டுமின்றி ‘இந்த நியமனங்கள் அனைத்தும் அடிப்படையிலேயே தவறானவை’ என்று உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டி, 234 பேர் நியமிக்கப்பட்டதில் 60 பேர் மட்டுமே தகுதியானவர்கள் என்பது, ஓர் அறக்கட்டளை எந்த அளவுக்கு ஊழலில் திளைத்துள்ளது என்பதற்கு உதாரணமாகியுள்ளது!

இந்த 2013 -18 காலத்தில் நடைபெற்ற குற்றங்கள் மிகக் கொடுமையானது. ரூபாய் 15 இலட்சம் முதல் 40 லட்சம் வரை லஞ்சம் வாங்கிக்கொண்டு 250 ஆசிரியர்களை நியமித்திருக்கிறார்கள். மிகப் பெரும் தொகை வசூலாகியுள்ளது.

இதற்கெல்லாம் அறங்காவலர்களாக இருந்த ஐசரி கணேஷ், எஸ்.ஜெயச்சந்திரன், ஆர்.பிரபாகரன், வி.ராமநாதன்,கே.ஹேமநாத், வி.துரைமோகன் மற்றும் முன்னாள் கல்வி அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் தான் இந்த மோசடிகளுக்கு காரணம் என பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன! பெரும் தொகை ஊழல் பணம் இந்த அறங்காவலர்களுக்கும் அவர்கள் வாயிலாக  ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர்களுக்கும் சென்றுள்ளதாக  பொதுதளத்தில் வருத்தத்துடன் விவாதிக்கப்படுகிறது. இந்தக் கல்லூரிகளில் பணிபுரிவோருக்கும் இதில் தொடர்பு உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது.

இது பற்றிய முழு விவரங்களையும் ஆவணப்படுத்தி நீதிமன்றத்தில் நீதியரசர் சண்முகம் கொடுத்துள்ளார்.

பச்சையப்பன் அறக்கட்டளையில் என்ன தான் நடக்கிறது..? என்பதை அறிய  நிர்வாகச் செயலர்     சி‌. துரைக்கண்ணு அவர்களை சந்தித்துப் பேசினோம்.

நம்முடைய “அறம்” இதழுக்கு அவர் அளித்த பேட்டி:

” நான் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த குழுவின் மூலம் இந்த செயலர் பதவிக்கு வந்தவன். இந்த பதவிக்காக என்னைப் போல 70 பேர் விண்ணப்பித்த நிலையில் என்னை தேர்ந்தெடுத்தனர்.

நீதிமன்றம் பணித்துள்ள வேலைகளை செய்து வருகிறேன். அறக்கட்டளையின் சொத்தாட்சியர் ஆக உள்ள நீதிபதி முருகன் அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே எந்த ஒரு வேலையும் இங்கு நடைபெறுகிறது.

அண்மையில் தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒரு சுற்றறிக்கை வெளியிட்டு கடந்த 10 ஆண்டுகளில் உதவிப் பேராசிரியராக சேர்ந்தவர்களின் கல்வி, மற்றும் அனுபவ சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளதில் இந்த நபர்கள் கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள்.

இன்னொரு முக்கியமான குற்றச்சாட்டு, விடுதி மாணவர்கள் டெபாசிட் செய்த தொகை 35 லட்சத்தை கையாடல் செய்தது. மாணவர்கள் ஒவ்வொருவரும் கொடுத்த 9,500 ரூபாய் டெபாசிட் தொகையை படிப்பை முடித்து அவர்கள் திரும்ப கேட்ட போது நிர்வாகம் கொடுக்கவில்லை. மாணவர்கள் தந்த  புகார்கள் அடிப்படையில் அப்போதைய  விடுதிவார்டன், சூப்பிரண்டு மற்றும் கல்லூரி ஊழியர்கள் மூன்று பேர் கையாடலில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இவர்கள் மீது முதல்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இது கிரிமினல் குற்றம் என்பதால் காவல் துறையிலும் புகார் அளித்துள்ளோம்.

எனக்கு என்ன வருத்தம் என்றால், பாரம்பரியமிக்க இந்தக் கல்வி நிறுவனம் ஒரு பட்டப் படிப்புக்கு நிர்ணயித்துள்ள கட்டணம் ரூபாய் 13,000 தான். இதே படிப்புக்கு அருகில் உள்ள தனியார் கல்லூரியில் ஒன்றரை லட்சம் ரூபாய் வாங்குகிறார்கள். மாணவர்கள் இங்கு வராமல் அங்கு போவதற்கு என்ன காரணம்? காரணங்களை ஆராய்ந்து களைய வேண்டாமா?

அறக்கட்டளை சொத்துக்களில் வாடகைக்கு இருப்போரிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு உரிய தொகையை பெறாமல்  மிக குறைந்த தொகையை வசூலித்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு, உயர் நீதிமன்றத்தின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 100 கோயில்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கொடுத்து வருகிறோம்.வருமானம் சீராக இருந்தால் தானே இது போன்ற காரியங்களுக்கு தொய்வின்றி உதவ முடியும்.

சீர்கேடுகளைக் களைவதற்காக நீதிமன்றம் எனக்கு வழங்கியுள்ள  பணிகளை திறம்பட செய்வேன். அதை நிறைவேற்றும் பொறுப்பில் இருந்து பின் வாங்கவே மாட்டேன்.

குறுக்கு வழியில் கல்லூரி நிறுவனத்துக்குள் புகுந்துகொண்டு இருப்பவர்களுக்காக சிலர் பரிந்து பேசுவது வேதனையாக இருக்கிறது . வீட்டுக்குள் புகுந்த திருடன்   குடியும், குடித்தனமுமாக ஆகிவிட்டான். இனி விட்டு விடலாம் என்று சொல்வது போல உள்ளது! தேர்தல்கள் தள்ளிப் போவதற்கு நான் காரணமல்ல, நீதிமன்றம் தான் இதில் முடிவு எடுக்க முடியும். புதிய அறங்காவலர்கள் பொறுப்புக்கு வந்தவுடன் என் பணி நிறைவுக்கு வந்து விடும்.’’

இவ்வாறு சி.துரைக்கண்ணு கூறினார்.

இந்த முறைகேடுகள் குறித்து திமுக எதிர்கட்சியாக இருந்த போது கொந்தளித்து அறிக்கை வெளியிட்டது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எந்தவிதமான அக்கறையுமின்றி உள்ளது!

# நீதிமன்றம் இந்த குற்றச்சாட்டுகள் மீது  கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பச்சையப்பர் அறக்கட்டளை சொத்துக்களை சூறையாடிவர்களை அம்பலப்படுத்தி அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து தண்டிக்க வேண்டும்.

# போலி சான்றிதழ் கொடுத்து ஆசிரியராகி லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் தகுதியற்றவர்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

பச்சையப்பன் அறக்கட்டளை தொடங்கிய காலத்திலிருந்து குறிப்பிட்ட காலம் வரை கண்ணியமானவர்கள் அறங்காவலர் பதவியை அலங்கரித்து உள்ளனர்.

ஊழல் அரசியல்வாதிகளின் கடைக் கண் பார்வை என்றைக்கு இந்த அறக்கட்டளை மீது பட்டதோ.., அன்று ஏற்பட்ட தொற்று இன்று  உச்ச கட்டத்தை எட்டி நிற்கிறது. ஒன்றுமில்லாதவர்கள் அறங்காவலர்கள் ஆகி கோடீஸ்வரர்களாக வெளியே சென்று உள்ளனர்!

கடந்த நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சூறையாடப்பட்டு இருக்கவேண்டிய பச்சையப்பரின் சொத்துகளை கட்டிக் காத்து அது ஆன்மீகப் பணிகளுக்காகவும்,  ஏழை எளிய மாணவர்களின் கல்வி பணிக்காகவும் பயன்பட வைத்து மகத்தான பணியாற்றியது நீதிமன்றம் தான். வருங்காலத்திலும் நீதிமன்றத்தால் மட்டுமே  அரசின் உதவியுடன் அதைச் செய்ய முடியும். முன்னாள் மாணவர்கள் இன்றைக்கு  பெரும் பக்கபலமாக இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் பொக்கிஷங்களில் ஒன்றான பச்சையப்பர் அறக்கட்டளையை பாதுகாக்கும் கடமை தமிழக மக்களுக்கும் உண்டு. அந்த விழிப்புணர்வு மக்களிடம் வந்து விட்டால் கறை படியாத  கரங்களை கொண்டவர்கள் மட்டுமே இங்கு அறங்காவலர்களாக வரத் துணிவர்.

கல்வி வணிக மயமாகி விட்ட நிலையில், இது போன்ற உன்னத நிறுவனங்களை பேணிப் பாதுகாப்பது அனைவருடைய சமூக கடமையாகும்.

பச்சையப்பன் அறக்கட்டளையில் மேற்கொள்ளப்படும் களையெடுப்பு ,நாட்டில் இதுபோன்ற உள்ள அறக்கட்டளைகளில் உள்ள களைகளும் நீங்குவதற்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழுட்டும்.

கட்டுரையாளர்; ம.வி.ராசதுரை

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time