பறவைகள் வாழவியலாத பூமியில் மனிதனுக்கு இடமில்லை…!

-செழியன். ஜா

உங்கள் வீடு உங்களுக்கு மட்டும் சொந்தமில்லை…

ராமமூர்த்தி சொந்தமாக ஒரு இடத்தை வாங்கினார். அதை தன் உறவினர்கள், நண்பர்களுக்கு மகிழ்ச்சியாக சொன்னார். சட்டப்படி அந்த இடம் அவருக்கு மட்டுமே சொந்தம். அதில் வேறு யாரும் உரிமை கொள்ளவோ, வசிக்கவோ உரிமை இல்லை என்பதை சட்டம் உணர்த்தும். ஆனால் இயற்கை நீதிப்படி ராமமூர்த்தி வாங்கிய இடத்தில் உள்ள மரத்தில் பறவைகள் கூடு கட்டியிருக்கும், அணில்கள் தாவி ஓடும், தரையில் இருந்த  ஓணான் ஒன்று மரத்தில் ஏறும், செடிகளை சுற்றி வண்டுகள், பூச்சிகள் பறந்துக் கொண்டு இருக்கும், பட்டாம்பூச்சிகள் வட்டமடித்து ராமமூர்த்தி அருகில் வரும், அவ்வப்பொழுது குரங்குகள் வந்து செல்லலாம், இடம் ஒதுக்குபுறமாக இருந்தால் பாம்புகள் நடமாட்டம் இருக்கும், எலி வலை அமைத்து ராமமூர்த்தியை எட்டி பார்த்து மீண்டும் உள்ளே செல்லும், தவளை  ராமமூர்த்தி காலை தாவி செல்லும்  இப்படி எந்த இடம் நமக்கு மட்டும் சொந்தம் என்று சொன்னோமோ அதை இந்த பூமியில் வாழும் பல வகை உயிரினங்களும் கேட்காமலே சொந்தம் கொண்டாடும்.

மிகப் பாதுகாப்பாக வீடு கட்டினாலும் வீட்டின் சுவற்றில் பல்லியும், தரையில் எறும்புகளும், சமையலறையில் கரப்பாண்பூச்சிகளும் வாழும். சட்டம் எப்படி நமக்கு மட்டும் சொந்தம் என்று சொல்கிறது. எந்த உயிரினங்களும் இல்லாத இடத்தில் மனிதன் வாழ முடியாதா? சட்டப்படி நமக்கு சொந்தமான இடத்தில் இவ்வளவு உயிரினங்கள் வாழ்வதை தடை செய்ய முடியாதா?

நண்பர் வாங்க முடிவு செய்து உள்ள இடத்தை என்னை அழைத்து சென்று காண்பித்தார்.. சுற்றி முழவதும் பார்த்தேன். எங்கும் ஒரு புள்ளினங்கள் கூட இல்லை. நண்பரிடம் சொன்னேன் இங்கு பறவைகள் பார்க்க முடியவில்லையே அதனால் இங்கு இடம் வாங்க வேண்டுமா? யோசியுங்கள்  என்று  தியடோர் பாஸ்கரன் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். புள்ளினங்கள் வாழாத இடத்தில் மனிதன் வாழ முடியாதா? பறவைகளை விட மனிதன் உயர்ந்தவன் இல்லையா ?

Coot

மனிதன் இந்த பூமியில் தோன்றுவதற்கு முன்பே பல ஆயிரம் வருடங்கள் பறவைகள் இந்த பூமியில் வாழந்து வந்தன. மனிதன் தோன்றிய பிறகும் ஆயிரக்கணக்கான பறவை வகைகள் வாழந்து வருகின்றன. இயற்கை சமன்பாட்டின்படி மனிதர்களை சார்ந்து வாழும் வகையில் எந்த உயிரினங்களும்  உருவாக்கவில்லை.  ஆனால் மனிதன் நிச்சயம் பல உயிரினங்களை சார்ந்து வாழும் நிலையில் உள்ளான்.

பறவைகள் அனைத்தும் ஒரே ஒரு வாரம் பூச்சிகளை சாப்பிடமாட்டோம் என்று முடிவு எடுத்தால் பூமியில் மனிதன் வாழ முடியாது. வீட்டை விட்டு வெளியே வரக்கூட முடியாத நிலை ஏற்படும். எங்கும் பூச்சிகளே பறந்து கொண்டு இருக்கும்.. கதவை திறக்க முடியாத நிலை உண்டாகிவிடும். உண்மையில் மனிதன் நிலை இதுதான்.  நம்மை கடித்து கொண்டு இருக்கும் கொசுக்களை முழுவதும் அழிக்க முடியாதபொழுது மற்ற பூச்சிகளை நம் வீட்டில், தெருவில் இருந்து அழிக்க முடியுமா ? இங்குதான் பறவைகள் பயன்பாடு தொடங்குகிறது. பூச்சிகளை இரையாகச் சாப்பிட்டு  மனிதனுக்கு மிகப் பெரிய நன்மையை செய்கிறது. ஆனால் அவற்றை பல விதங்களில் தொந்தரவு செய்து நம் வாழிடத்தில் இருந்து அகற்றி வருகிறோம்.

இப்படி பறவைகளை நம் வாழிடத்தில்  வாழும் நிலையை உருவாக்க தவறினால் பூச்சிகள், கொசுக்கள்  எண்ணிக்கை கூடும். அது நோய்களை உருவாக, பரவ வாய்ப்பாக அமைந்துவிடும்.

நகரமயமாக்கல் என்று சொல்லை பிடித்துக் கொண்டு மனிதன் இடத்தை வாங்கி கொண்டே செல்கிறான். இப்படி வாங்கிய இடத்தில்  வாழும் உயிரினங்கள் எந்த நிலையில் உள்ளது என்று அறிந்துக் கொள்ள பல வாரங்கள் சென்னை மாநகரத்தை சுற்றி வந்து குறிப்புகள் எடுத்தோம். மிக அபாயகரமான நிலையே சென்னை உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தது.

ஒரு காலைப்பொழுது நீர்நிலைகளை தவிர்த்து, கட்டடங்கள் நிறைந்து இருக்கும் வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் சுற்றி வந்தோம். வண்டியை அங்கிருந்த காலிமனை  முன்பு நிறுத்திவிட்டு நடக்க தொடங்கியத்தில், சிறிது தூரத்தில் கோழி ஒன்று  வீட்டின் முன்பு மேய்வது போல் இருந்தது. வீட்டு கோழி என்று நினைத்தேன். உற்று நோக்கியத்தில் அவை தாழைக்கோழி (Moorhen) என்று தெரியவந்தது.

தாழைக்கோழி- சுவரில் நடைபயிற்சி

மிக மிக ஆச்சரியம்! நீர் நிலைகளில் பார்க்க முடிகிற தாழைக்கோழி, ஒரு வீட்டின் முன்பு மேய்ந்து கொண்டிருக்கிறது. சரி வழிதவறி வந்திருக்கும்  என்று நினைத்து நடந்தால், அங்கு இருந்த மற்ற வீடுகளின் சுவர் மற்றும் அருகில் இருக்கும் காலி மனைகள் போன்ற இடத்திலும் வலம் வந்து கொண்டிருக்கிறது. கிராமத்தில் வீட்டை சுற்றி வளர்ப்பு கோழிகள் மேய்வதை பார்த்திருக்கலாம். அதே நிலைதான்  இங்கே  தாழைக்கோழிகளுக்கும்.

பள்ளிக்கரனை சதுப்பு நிலம்,  பெரும்பாக்கம் சதுப்பு நிலம்  போன்ற இடங்களில் தாழைக்கோழிகள் இருக்கும். அதுவும் எண்ணிக்கையில் குறைந்த அளவே. மூன்று, நான்கு மேல் பார்க்க முடியாது. ஆனால் இங்கு இருபதுக்கு மேல், அதில் பல தாழைக்கோழிகள் தன் குட்டிகளுடன் வீடுகள் அருகில் சுற்றி கொண்டிருக்கிறது. மிக பரிதாபமான நிலை என்றுதான் சொல்லவேண்டும். 

குட்டி தாழைக்கோழி பற்றி இங்கு சொல்ல வேண்டும். பெரிய தாழைக்கோழி புல் தரையில் நின்று, தன்  அலகை கொண்டு இறக்கையை சரிசெய்து கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் இருந்த குஞ்சுகள் முதலில் நம் கண்களுக்கு புலப்படவில்லை. பிறகு ஒன்று மட்டும் தன்  தலையை நிமிர்த்தி உள்ளேன் ஐயா என்றதை, கவனித்துவிட்டேன்.

அடடே, நீங்களும் இருக்கிறீர்களா  என்று சொல்வதற்குள், இன்னும் இரண்டு குஞ்சுகள் தலையை தூக்கின. நான்  கேமராவை தூக்கினேன். விடு ஜூட் என்று கிடு கிடு என்று அதன் தாயிடம் சென்றுவிட்டன. இவை கொஞ்சம் வளர்ந்த குட்டிகள் என்பதால் உஷாராகிவிட்டன.  மற்றொரு இடத்தில் நன்கு வளராத குஞ்சு ஒன்று ஒரு மிதவை மேல் நின்றிருந்தது. அருகில் சென்றாலும், பெரியதாக நகரவேயில்லை என்பது ஆச்சரியம்! ஆனால் உண்மை என்பது போல் இருந்தது. சிறிது உற்று கவனித்தால் அதன் கால்  அடிபட்டது போல் காணப்பட்டது. எப்படி என்பதை கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளேன். 

காலில் அடிபட்ட குஞ்சு

அங்கு வசிப்பவர்களுக்கு தாழைக்கோழிகள் பற்றிய நினைப்பு சிறிதும் இல்லை. வழக்கம்போல் செல்கிறார்கள். தெருவில் சுற்றி திரியும் நாய்களை பார்த்து ஒதுங்கி செல்வதுபோல், தாழைக் கோழிகள் பார்த்தும் கடந்து செல்கிறார்கள். பறவை நோக்குபவர்களுக்கு இந்தப் பறவை பார்த்தல் எந்த அளவு மகிழ்ச்சி உருவாகும் என்பது இங்கு வசிப்பவர்களுக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை.  தாழைக்கோழி பறவையின் நெற்றியில் உள்ள சிகப்பும், முனையில் மஞ்சள் நிறமும் கூட இங்கு வசிப்பவர்களை கவரவில்லை. இதே போல் பறவைகளை பார்த்ததில்லை என்கிற எண்ணம் கொஞ்சம் இருந்தாலும் ஒரு நிமிடம் கவனிப்பார்கள். அப்படி எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை.

இருந்தாலும்  தாழைக்கோழிகள் அவர்களுடன்தான் வசிக்கிறது. உண்மை சொல்ல வேண்டும் என்றால் மனிதர்கள்தான்  அதன் இடத்தில் வசிக்கிறார்கள். மனிதர்கள் கவனிக்கவில்லையென்றாலும் தாழைக்கோழி அவர்களை கவனித்து, அவர்கள் வீடு கட்டாத இடத்தில் தன்  கூட்டை அமைக்கிறது. மற்றும் இங்கும் வீடு  கட்டிவிடுவார்களோ என்று பயந்து பயந்து தன் குட்டிகளை வளர்கிறது. தங்கள் கூடு அருகில் மனிதர்கள் விடு கட்டிவிட்டாலும் அவர்களிடம் சண்டைக்கு போவதில்லை. ஒதுங்கி வேறு இடத்திற்கு சென்று விடுகிறது. அங்கேயும் மனிதர்கள் வந்தால்,  அப்பொழுதும் எதிர்த்து ஒரு குரலும் கொடுப்பதில்லை. ’’ஓடினாள், ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே  ஓடினாள்..’’ என்கிற வசனம் போல் ஓடிக் கொண்டே இருக்கின்றன. அவை ஒருபோதும் மனிதர்களிடம் சண்டைக்கு வருவதே இல்லை. இதுதான் மனிதர்களுக்கு மிக வசதியாக இருந்துவிடுகிறது. தன் இடத்தில்  ஓர் அடி கூட விட்டுத்தராத மனிதனிடம் பல ஆயிரம்  வருடங்கள் வாழ்ந்த இடத்தை எந்தவித சிறு முணுமுணுப்போ இல்லாமல் இழந்து அங்கிருந்து நகர்ந்து சென்றுவிடுகின்றன! காலப்போக்கில் அந்த பறவை இனமே அழிந்துவிடுகிறது..

தாழைக்கோழி, நீலத் தாழைக்கோழி, நாமக்கோழி போன்ற மூன்று பறவைகளும் உருவில் ஒன்று போலவே இருக்கும். சிறு சிறு வேறுபாடுகள் மட்டுமே. இங்கு இந்த மூன்று வகை பறவைகளும் பார்த்தேன்.

Snipe

நாம் தாழைக்கோழியை விட்டு தற்காலிகமாக நகர்ந்து, கொஞ்சம் அந்த இடத்தின் பூகோளத்தை  பார்த்துவிடுவோம்.

15 வருடங்கள் முன்பு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் தொடர்ச்சியாகவே இந்த இடம் இருந்துள்ளது. 2004 வருடம் முதல் ரியல் எஸ்டேட்  மிக பெரிய அளவில் வளர்ந்தபொழுது இங்கும் கட்டிட்டங்களும் பெருகியுள்ளன. அதன் தாக்கத்தை இங்கு நன்கு உணரலாம்.

வீடு, அதற்கு அடுத்து காலிமனை அந்த காலிமனை  நீரால் சூழப்பட்டுள்ளது மற்றும் அதற்கு அடுத்து ஒரு வீடு  என்று விட்டு விட்டு காணப்படுகிறது.  ஒரு வீட்டிற்கு அடுத்து உள்ள மிக பெரிய இடத்தில்  நீர் சூழ்ந்து உள்ளது. வீட்டில் இருந்து வெளியே வருபவர்கள் நீரில்தான் கால் வைக்கவேண்டும். மழை இல்லாதபொழுதே இப்படி என்றால், மழைக்காலத்தில் மிக மோசமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை

நீர்நிலை மீது வீடுகள் 
இந்த  இடம் விற்பனைக்கு இல்லை?

இங்கு உள்ள மொத்த  இடமும் பறவைகளுக்கும், சிறு உயிரினங்களுக்கும் சொந்தமானவையாகும்! ஆனால் பல காலி மனைகளில் இந்த இடம்  இன்னின்னாராருக்குச் சொந்தம்  என்று பலகைகள் உள்ளன. படிக்க மட்டும் பறவைகளுக்கு தெரிந்து இருந்தால் இது நாங்கள், எங்கள் முன்னோர்கள், முன்னோர்களுக்கு முன்னோர்கள் வாழந்த இடம். இந்த இடமே  மனிதர்களுக்கு தான்  என்பது போல் பலகையா வைக்கிறீர்கள் என்று சிரித்து இருக்கும்.

பல பறவைகள் அங்கு உள்ள வீட்டுச் சுவற்றை வாழிடமாக கொண்டு வாழ்ந்து வருகின்றன.. பறவைகளுக்கு இது மிக அவலமான நிலையாகும்!

புதர்சிட்டு(Pied Bushchat) ஒன்று தனியாக அமர்ந்து இருந்தது. நானும் பல இடங்களில் பார்த்து உள்ளேன். புத்தர் சிட்டு தனியாகவே அமர்ந்து நீண்ட தியானத்தில் இருக்கிறது. இங்கேயும் புதர் சிட்டு, புத்தர் போல் அமர்ந்து இருந்தது. அதன் மனதில் என்ன எண்ணங்களோ ?

அங்கு இருந்து சிறிது தூரத்தில் கதிர் குருவி(Prinia) ஒன்று பறந்து வந்து அதன் அருகில் அமர்ந்தது. ஆனால் சுற்றும், முற்றும் பார்த்துவிட்டு பறந்து விட்டது. ஆனால் நம்ம புத்தர் (புதர் சிட்டு) அசையவேயில்லை. சுவற்றின் மற்றொரு பக்கம், இரண்டு வெண் புருவ வாலாட்டி(White browed wagtail) அமர்ந்து, சிகை அலங்காரம் செய்து கொண்டிருந்தன. தன் அலகை கொண்டு இறக்கையை கோதுவது, உடலை குலுக்கி சிலிர்ப்பது என்று காலை உடற்பயிற்சியும் சேர்த்தே செய்து கொண்டிருந்தன.

நீர்காகம்(Coromorant) ஒன்று இதை எதையும் கவனிக்காமல், இந்த சுவற்றை ஒட்டி  யாரும் வீடு கட்டிவிட கூடாது என்ற யோசனையில் இருந்தது. அங்கு இருந்து சிறிது தூரத்தில் நடுத்தர அளவுள்ள கொக்கு(Intermediat Egret) ஒன்று பறந்து வந்து அமர்ந்தது.

குருகு பறவையை பார்ப்பது கடினமே. மிகுந்த கூச்ச சுபாவம் என்பதால் மனிதர்களைக் கண்டால் தலை மட்டுமல்ல, உடலையும் காட்டுவதில்லை. ஆனால் குருகு இங்கு குறுக்கும், நெடுக்கமாக வலம்  வந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே ஒரு குட்டி குருகுவை பார்த்துவிட்டேன். ஆச்சரியம் என்ற நினைப்பில் சுற்றிவந்ததில் வளர்ந்த, வளராத என்று நிறைய குருகுகள் நடந்து வருகின்றன, பறந்துகொண்டிருக்கின்றன, வேடிக்கைபார்த்து கொண்டிருக்கின்றன!

வளர்ந்த நீண்ட கதிர்களில், கருப்பு தலை சில்லை(Black headed munia), தன் குடும்பத்துடன் வாழக்கை நடத்துவதை பார்த்தேன். ஒரே ஆனந்தம் அதன் குடும்பத்தில்! ஆங்கிலத்தில் பறவைகளின் பெயர்கள் வருடம்தோறும் மாறிக்கொண்டே இருக்கும். கருப்பு தலை சில்லை இப்பொழுது மூன்று நிற சில்லை(Tricoloured munia) என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. 

இப்படி அங்கு உள்ள வீட்டை  சுற்றி, வீட்டு சுவரில் பறவைகள் வாழ்ந்து வருகின்றன. வாழ்கின்றன என்று சொல்வதைவிட காலம் தள்ளுகின்றன என்பதே சரியாக இருக்கும்.

பறவை இறப்பு

திரும்பி வரும் வழியில் ஒரு வீட்டின் முன்பு கூழைக்கடா(Pelican) ஒன்று இறந்து இருந்ததைப் பார்த்து அருகில் சென்றதில், அவற்றின் கால் வாகன விபத்தில் முறிந்து அதனால் பறந்து எங்கும் அமர முடியாமல், நடக்க முடியாமல், இரை  தேட முடியாமல் இப்படிப் பல முடியாமல் போனதால் இறந்து உள்ளது. வண்டிகளும், கார்களும் போகும் சாலை என்பதால் விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உண்டு.

ஆரம்பத்தில் தாழைக்கோழி குஞ்சு ஒன்று காலில் அடிபட்டுள்ளது என்று குறிப்பிட்டு பின்பு விவரிக்கிறேன் என்று நிறுத்தி இருந்தேன். இப்பொழுது உங்களுக்கு புரிந்திருக்கும் அதற்கு எப்படி அடிபட்டிருக்கும் என்று. 

இறந்த கூழைக்கடா

பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் பறவைகள் மிக முக்கியம் என்று பார்த்தோம்! ஆனால் இங்கு நிலைமை மிக பரிதாபமாக இருப்பதால் இன்னும் சில வருடங்கள் இந்த இனம் இங்கு இல்லாமல் போய்விடும். பூச்சிகள் எண்ணிக்கை உயரவே செய்யும். சென்னை நகரம் மட்டும் என்று இல்லை தமிழகத்தில் நகரமயமாதல் என்ற செயல் மனிதஇனத்தை வளர்கிறதோ இல்லையோ, நிச்சயம் பறவை இனத்தை அழிகிறது….!

நாம் நன்கு நினைவில் நிறுத்தி கொள்ளவேண்டிய விஷயம். உங்கள் வீடு உங்களுக்கு மட்டும் சொந்தம் இல்லை. அங்கு மற்ற உயிரினங்களும் வாழ்ந்து நீங்களும் வாழவேண்டும். இது தான் இயற்கையின் சட்டம்!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time