காவல்துறையின் கருணையோ கருணை…!

-சாவித்திரி கண்ணன்

வாகன ஓட்டிகள் மீது சென்னை பெருநகர காவல்துறைக்கு திடீரென பொத்துக் கொண்டு அக்கறை வந்துவிட்டது! எப்படியாவது சாலை விபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றியே தீருவது என கங்கணம் கட்டி களத்தில் இறங்கிவிட்டனர். அடடா, அவர்களின் கருணைக்கு எல்லை ஏது?

சென்னையில் இன்று எங்கெங்கும் போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகன ஓட்டிகளை வழிமறித்து ஓரம் கட்டி ஜரூராக பண வசூல் செய்தனர். எல்லாம் மக்கள் உயிர் மீதுள்ள அளப்பரிய அக்கறை தான் போங்கள்! நம்புவதும், நம்பாததும் உங்கள் விருப்பம்!

சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் தலைமை மிக கருணையே உருவானதல்லவா? மக்கள் சாலை விபத்துகளில் பலியாவதை கண்டு அவங்க இதயம் பொறுக்கவில்லை. உடனே ஒரு ஆணை பிறப்பித்து விட்டாங்க. இரு சக்கர வாகனங்களின் பின்னால் அமர்ந்து உட்காருபவர்கள் இனி கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்தே ஆக வேண்டும்!

‘அவ்வளவு தான்! அடித்தது ஜாக்பாட்’ என்பதாக இன்று சென்னை முழுக்க வழிப்பறி செய்யும் கொள்ளையர்கள் போல சென்னை போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை வழிமறித்து வசூல் வேட்டை நடத்திவிட்டனர். இன்றைக்கு அபராதம் கட்டிய பல பேர் ”இந்த அறிவிப்பே எங்களுக்கு தெரியாதே..” என்றது தான்! ”அட அறிவித்தாலும் அறிவிச்சீங்க, அறிவித்த இரண்டே நாளில் அமலாக்குவேன் என்றால் எப்படி? பின்னால் உட்காருபவர்களுக்கான ஹெல்மெட் வாங்க ஒரு சிறிய கால அவகாசம் தரக் கூடாதா?” என கேட்காதவர்கள் இல்லை. எல்லோரும் நொந்து கொண்டே தான் அபராதம் கட்டி உள்ளனர்.

ஆமாம் ஏன் காவல்துறை கால அவகாசம் தரவில்லை. தந்தால் மக்கள் அனைவரும் வாங்கிவிடுவார்களே அப்புறம் எப்படி வசூல் வேட்டை நடத்த முடியும் என கணக்கிட்டார்களா தெரியவில்லை! ஏன் ஒருவார கால அவகாசம் தந்திருந்தால் அதற்குள் என்ன குடிமுழுகி போய் விடப் போகிறது? மக்கள் உயிர் மீது அளவு கடந்த அக்கறை தீடீரென பொத்துக் கொண்டு வந்து விட்டதால் அவர்களால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை போலும்!

சின்னஞ் சிறு குழந்தைகளுக்கு கூட ஹெல்மெட்டை மாட்டிவிட்டு இன்றைக்கு பெற்றோர் கூட்டிச் சென்றனர். ”முரண்டி பிடித்து பார்த்து முடியாமல் பிள்ளைகளும் கடைசியில் மாடிக் கொண்டன. இல்லாகாட்டி நாம தான சார் போலீசுக்கு படியளக்கணும்! அதுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தர்றேன் போட்டுக்கோன்னு சொல்லியாவது போட வைக்கிறதுல தான நம்ம சமர்த்தியம் இருக்கு” என்றார் ஒருவர்!

சரி பின்னால் உட்காருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற முடிவுக்கு இவர்கள் சொல்லும் நியாயம் என்ன?

கடந்த 5 மாதங்களில் இரு சக்கர வாகனம் மூலமாக 841 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் 741 இருசக்கர வாகன ஓட்டிகள் என்றும், 127 பேர் பின் இருக்கையில் அமர்ந்து பயணித்தவர்கள் என சென்னை போக்குவரத்துக் காவல்துறை  கண்டுபிடித்துள்ளது.அதுவும் கடந்த ஐந்து மாதங்களில் இரு சக்கர வாகன விபத்தில் மொத்தம் 98 பேர் இறந்து விட்டார்களாம்.அதில் பின்புறம் உட்கார்ந்த 18 பேர் இறந்து விட்டதால் இந்த முடிவாம்! 18 பேரை காப்பாற்ற முடியவில்லையே என்ற ,குற்ற உணர்வு சென்னை பெருநகர போக்குவரத்து போலீஸ் கமிஷனரை உலுக்கி எடுத்திவிட்டது போலும்!

பாவம் அவர் என்ன செய்வார்! மிக மென்மையான இதயம் படைத்தவர் அல்லவா? ஆனால் ஒரு விசித்திரம் என்னவென்றால் அவர் இதயம் எப்போது இளகிய நிலையில் இருக்கும்? எப்போது கெட்டி தட்டி மரத்து போய்விடும் என்பது தான் தெரியவில்லை.

மக்கள் பயன்படுத்தும் பல சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் நிறைய சாலை விபத்துக்கள் நடக்கின்றன! ஒரு சின்ன மழை கூட சாலைகளை பல் இழிக்க வைத்துவிடுகின்றன! அதில் இறங்கி ஏறிய நிலையில் பல பேர் வைகுண்டத்திற்கே போய் சேர்ந்துவிட்ட நிகழ்வுகள் கொஞ்சமா? நஞ்சமா? புதிதாக போட்ட சாலைகள் உடனே குண்டும், குழியுமாக உருமாறி பயணிக்கும் மனித உயிர்களை பறிப்பது சம்பந்தமாக அந்த சாலையை மிக மோசமாக போட்ட காண்டிராக்டரை கைது செய்துவிட முடியுமா என்ன? அவரை கைது செய்தால் அப்புறம் அவர் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு கமிஷன் கொடுக்க நேர்ந்தது என போட்டு உடைத்துவிட்டார் என்றால் என்னாவது?

சாலை விபத்துகளுக்கு மற்றுமொரு முக்கிய காரணம், முக்கிய நெடுஞ்சாலைகளில் டாஸ்மாக் கடைகள் என்பதாகக் கூறி பாமக தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தமிழகத்தில் 285 கடைகளை அப்புறப்படுத்த ஆணையிட்டது! இந்த டாஸ்மாக் கடைகள் தான் சாலைகளில் பயணிக்கும் குடிமகன்களை ஈர்த்து விபத்துகளுக்கும், ஏராளமான உயிர் இழப்புகளுக்கும் காரணமாக்குகின்றன என்றது நீதிமன்றம்!

அப்புறம் என்ன நடந்தது? ‘அடடா..எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என அடித்து பிடித்து டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்தி விட்டார்களா என்ன?’ அப்படி செய்திருந்தால் நாம் இவர்களை கோயில் கட்டி கும்பிட்டு இருப்போமே! கோர்ட்டிடம் கணிசமான கால அவகாசம் பெற்று மெயின் ரோட்டை ஒட்டி இருக்கும் சாலையில் அதே மதுக்கடையை திறந்துவிட்டு, நெடுஞ்சாலையில் அம்புக் குறியிட்டு டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை காட்டினார்கள் பல இடங்களில்! பிறகு என்ன நினைத்தார்களோ தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக பெயர் மாற்றம் செய்து மீண்டும் கல்லா கட்டிவிட்டனர்.

யார் செத்தால் என்ன? சிதைந்தால் தான் என்ன? டாஸ்மாக் வியாவாரம் மட்டும் குறைஞ்சிடக் கூடாது ஏன்னா அது கவர்மெண்டுக்கே அவப் பெயராயிடுமாம்!

ஹெல்மெட் தயார்ப்பாளர்கள், விற்பனையாளர்கள் காட்டில் ஒரே அடை மழை தான்! இன்றைக்கு வரிசை கட்டி வாங்கிச் சென்றனர் மக்கள்! அதுவும் காசில்லாதவங்க கூட கடனை உடனை வாங்கி நொந்து கொண்டே வாங்கினாங்க! இன்னா சார் பண்றது! வாங்கி போடாக்காட்டி தெனமும் இந்த பிணம் தின்னும் கழுகுகளாக சாலையில் நின்று நம்மை கொத்திவிடுவார்களே வெள்ளை காக்கிகள்! இன்றைக்கு ஹெல்மெட் வியாபார விவகாரங்களும் இந்த உரியவர்களின் கவனத்திற்கு போயிருக்கும்! என்னத்தை சொல்வது? அதிகாரம் என்பதே எளிய மக்களீன் துஷ் பிரயோகத்திற்கானது தான் என புரிந்து கொண்ட அதிகாரவர்க்கம் இருக்கும் வரை நம்மை போன்ரவர்கள் புலம்ப மட்டுமே முடியும்!

மற்றொரு முறை நமது சென்னை பெருநகர காவல்துறையின் மக்கள் உயிர் மீதான மகத்தான கரிசினத்திற்கு கோடானு கோடி நன்றிகளை உரித்தாக்கி விடுவோம்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time