எலிக்கு பயந்த புலியாய் போன திமுக அரசு!

-சாவித்திரி கண்ணன்

இந்த ஆண்டு பல்லக்கு பவனியை மிகக் கோலாகலமாக பாஜக தலைவர்களை வைத்து நடத்தியுள்ளனர்! ஆனால், 2020 ஆம் ஆண்டு இதே தருமை ஆதினம் பல்லக்கு விவகாரத்தில் எழுந்த எதிர்ப்பு காரணமாக பின்வாங்கி பல்லக்கை தவிர்த்து,காரிலும் நடந்துமாகச் சென்றார்! அதிமுக ஆட்சியில் எதிர்ப்புக்கு பணிந்தவர், திமுக ஆட்சியில் சாதித்தது எப்படி?

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனம். இந்த ஆண்டு இது வரையிலும் இல்லாத அளவுக்கு வெகு விமரிசையாக பட்டிணப் பிரவேசம் எனப்படும் பல்லக்கு பவனியை நடத்தி காட்டியுள்ளது. ஊரே திணறிப்போகும் அளவுக்கு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன! வெளியூரில் இருந்து நிறைய பேர் வரவழைக்கப்பட்டு அவர்கள் மடத்திற்கு உரிமையுள்ள கல்வி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு பலமாக சாப்பாடு, பலகாரம் தந்து உபசரிக்கப்பட்டு உள்ளனர். அதீதமாக கோடிக்கணக்கில் செலவு செய்து ஊரையே திருவிழா மன நிலைக்கு கொண்டு சென்றுள்ளது தருமை ஆதீனம்!

சரி மக்களை மகிழ்ச்சிபடுத்துவது நல்லது தானே! என்று தோன்றலாம்! ஆனால், இவ்வளவுக்கும் பின்னணியில் உள்ள அறுவெறுக்கத் தக்க அரசியலை கவனித்தால் மக்கள் எவ்வாறெல்லாம் ஏமாற்றப்படுகிறார்கள் என புரிந்து கொள்ளலாம்!

இது பல்லாயிரம் கோடி சொத்து மதிப்புள்ள ஒரு குறுநில மன்னர் ஆன்மீகத்தின் பெயரால் தன் அதிகாரத்தை கேள்விக்கு இடமில்லாமல் நிலை நாட்டும் வைபவமேயன்றி வேறல்ல! ஒருவரல்ல, இருவரல்ல சுமார் 70 நபர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஆதீனத்தை நாள் முழுக்க சுமந்து நான்கு மாடவீதிகளிலும், முக்கிய வழிபாட்டுத் தளங்களுக்கும் சென்றனர்! இதில் பாஜக தலைவர்கள் அண்ணாமலை, ஹெச்.ராஜா போன்ற அரசியல் தலைவர்களும் உள்ளூரில் உள்ள அனைத்து கட்சிப் பிரமுகர்களும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டு உள்ளனர்.

ஆதினத்துடன் அண்ணாமலை,ஹெச்.ராஜா,உமா ஆனந்த்

இவர்கள் முன்னையில் ஆதினம் தெய்வமாக கருதப்பட்டு அவருக்கு பூஜை,பூனஸ்காரம் அனைத்தும் செய்து பலவித மலர்களில் அவரை அர்ஜித்து பூஜித்து அலங்கார தோற்றத்தில் வெள்ளிப் பல்லக்கில் ஏற்றி பவனி வந்துள்ளனர். வழி நெடுக அவரை கடவுளாக நினைத்து மக்கள் வழிபடும் வண்ணம் நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது!

இந்த நிகழ்ச்சியை செய்தியாக வெளியிட்ட அனைத்து பிரபல ஊடகங்களும், ஆதினகர்த்தர் மாசிலாமணியை தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்..’என்று நீள விளித்து தான் எழுதினர் என்பதில் இருந்து பத்திரிகைகளையும் சேர்த்தே இவர்கள் பல்லக்கு தூக்க வைத்துவிட்டனர் எனப் புரிந்து கொள்ளலாம்!

இத்தனைக்கும் பின்னணியில் ஆதீனத்தின் செல்வச் செழிப்பை மேலும் அபிவிருத்தி செய்து கொள்ள இனி எல்லாம் எளிதில் தடங்கலின்றி கைகூட வேண்டும் என்பதே நோக்கமாகும். இன்னும் சில கல்லூரிகள் ஆரம்பித்து கல்லா கட்டலாம். இன்னும் சில அரசு நிலங்களை ஆக்கிரமித்து கல்யாண மண்டபம் கட்டலாம். குத்தகை பணத்தை உயர்த்தி விவசாயிகளை பிழிந்து எடுக்கலாம்! எவனும் எதிர்த்து பேச முடியாமல் வாய் அடக்கலாம். உண்மையில் ஆதினம் என்ற வடமொழிச் சொல்லுக்கான தமிழ் அர்த்தம் உரிமை என்பதாகும்! பல்லக்கு பவனி என்பது ஆன்மீகத்தின் பெயரிலான அதிகார உரிமையை நிலை நாட்டும் வழி முறையாகும். இதனால் தான் இதை நிறுத்த வேண்டும் என நீண்டகாலமாக திராவிடர் கழகமும்,பொதுவுடமை கட்சிகளும், முற்போக்கு அமைப்புகளும் குரல் கொடுத்து வருகின்றன.

சமபந்தியைத் தவிர்த்து தனித்து படு தடபுடல் விருந்து உண்ணும் துறவி!

இந்த ஆதீனத்தின் ஆதீனகர்த்தராக இருந்த சண்முகம் கடந்த 30 அண்டுகளாக எதிர்ப்பு காரணமாக பல்லக்கு தூக்கலை கைவிட்டிருந்தார் என்பது கவனத்திற்கு உரியதாகும். அவர் மறைவையடுத்து இந்த புதிய ஆதினமான மாசிலாமணி  2019 டிசம்பர் 13 ம் தேதி தான ஆதீனகர்த்தராக பதவியேற்றார். பதவி ஏற்றதில் இருந்தே இவர் பல்லக்கு பவனிக்கு பெருவிருப்பம் காட்டி வந்தார்! திருப்பனந்தாளில் உள்ள காசி மடத்துக்கு சொந்தமான அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு இவர் பல்லக்கில் பவனி வரப் போவதாக அறிவித்து இருந்தார்!

அதற்கு எதிராக மனிதனை மனிதர்களை கொண்டு பல்லக்கு தூக்கும் முறை எனும் பழமையான அடிமை முறையை கண்டித்து, வரும் போது போராட்டம் நடத்தப்படும் என திராவிடர் கழகம் அறிவித்திருந்தது.

தருமபுர ஆதீனத்தை பல்லக்கில் வைத்து தூக்கியவரின் தோளில் தழும்பு!

2020 பிப்ரவரி 12 ம் தேதி திருப்பனந்தாள் காசிமடத்திற்கு வருகை தரவிருந்த நிகழ்வை ஒட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து “மனிதர்களை சுமக்கும் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் செய்யக்கூடாது மீறி செய்தால் திராவிட கழகம் சார்பில் கறுப்புக் கொடி காட்டி முற்றுகை போராட்டம் நடத்துவோம் என நூற்றுக்கும் மேற்பட்ட திராவிடர் கழக நிர்வாகிகளும், நீலப்புலிகள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் அவரவர் கட்சி கொடிகளுடன் திரண்டிருந்தனர்.

2020ல் தருமை ஆதின பல்லக்கு பவனிக்கு எதிராக தி.க

அந்த அறிவிப்பில் ஆடிப் போனதால், முதலில் பல்லக்கு பவனி அறிவித்து இருந்த தருமை ஆதீனம்  கடும் எதிர்ப்பு இருப்பதை உணர்ந்து ஆரம்ப நிலையிலேயே பின்வாங்கிவிட்டார். சம்பந்தப்பட்ட கோவில்களுக்கு காரில் சென்றார் மாடவீதிகளில் நடந்தே வந்தார். இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவையாகும்!

அப்போது தருமை ஆதீன வட்டாரத்தில் பத்திரிகையாளர்கள் பல்லக்கு பவனியை அவர் கைவிட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய போது, ”பட்டின பிரவேசம் நடைபெற்றால் போராட்டம் நடத்தப்படும் என்ற தகவல் தருமபுரம் புதிய ஆதீனகர்த்தருக்கு தெரிந்தது, அவரும் சுயமரியாதையோடு பயணித்தவர் என்பதால், அது மரபாகத்தான் ஏற்றுக்கொண்டேனே தவிர, கட்டாயப்படுத்தவில்லை, பல்லக்கினால் விவகாரம் வரும் என்றால், அதை தவிர்த்துவிடலாம் எனக் கூறினார். ஆகவே இந்த வருடம் பட்டினப்பிரவேசம் பல்லாக்கு இல்லாமல் இனிதே முடிந்துள்ளது.”எனத் தெரிவித்தனர். இந்த செய்தி பத்திரிகைகளிலும் வெளியானது.

அப்படி 2020 ஆம் ஆண்டில் பின்வாங்கி ஆதினம் அதை அன்றே கைவிட்ட நிலையில் மீண்டும் தற்போது அறிவித்ததற்கு பின்னணியில் இருக்கும் அரசியல் தான் கவனிக்கத் தக்கது. பொதுவாக தமிழ்கத்தில் இருக்கும் ஆதீனங்களிலேயே தமிழுக்கு மிகவும் எதிரான செயல்பாடுகளை கொண்ட ஆதினம் என இந்த ஆதீனத்தை தமிழ் அமைப்புகள் கூறி வருகின்றனர். அதற்கு காரணமாக மடத்திற்கு சொந்தமான கோவில்களில் தமிழுக்கு முக்கியத்துவம் தராமல் சமஸ்கிருதத்திற்கு மட்டுமே பெரும் முக்கியத்துவம் தரப்படுவது முக்கிய காரணம். இந்தப் பின்னணியில் தான் தமிழக கவர்னர் இந்த மடத்தின் அழைப்பை ஏற்று வருகை தந்தார்! இதன் மூலம் அவர் தனக்கு மத்திய பாஜக அரசின் ஆதரவு இருக்கிறது என்பதை நிலை நாட்டும் விதமாகத் தான் நின்று போன பல்லக்கு பவனியை மீண்டும் நடத்த திட்டமிட்டு அறிவித்தார்.

”இந்த முறை அப்படி நடத்தினால் போராடுவோம்” என்று அறிவித்த திராவிடர் கழகம் திமுக ஆட்சியில் இருப்பதை கருத்தில் கொண்டு நம்பிக்கையுடன் கோட்டாட்சியருக்கு மனு கொடுத்து பல்லக்கு பவனியை தடுக்கும்படி வேண்டியது. அவரும் அந்த கோரிக்கையை சீர் தூக்கிப் பார்த்து மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்வை தடை செய்வதாக அறீவித்தார். மற்றபடி அந்த பட்டிணப் பிரவேசத்தை காரில் சென்று நிகழ்த்த தடையில்லை. ஆனால், இதை தமிழக பாஜக கையில் எடுத்து அரசியல் செய்தது.மதுரை ஆதீனத்தை தூண்டிவிட்டது. மற்ற ஆதீனங்களையும் தூண்டிவிட்டது!

இந்த சூழலில் தான் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், மயிலாடுதுறை தருமபுர ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் சந்தித்து பட்டினப் பிரவேசம் தொடர்பாக கோரிக்கை விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து யாரும் எதிர்பாராதவிதமாக மக்களின் பொது கருத்திற்கு எதிராக பல்லக்கு பவனிக்கு விதித்த தடையை நீக்கினார் ஸ்டாலின்.

2020 தி.க,வி.சி.க, நீலபுலிகள் இயக்கங்களின் போராட்டத்திற்கு பயந்து பின்வாங்கிய போது அவருக்கு ஆதரவு தெரிவிக்க அன்றைய பாஜக முன்வரவில்லை. தமிழக அதிமுக ஆட்சியாளர்களும் ஆதீனத்திற்கு துணை நிற்க வில்லை! பல்லக்கு பவனி நிறுத்தப்பட்டது ஒரு விவாத பொருளாக மாறவில்லை. ஆதீனம் அடங்கிப் போனார்.

ஆனால், தற்போது திமுக அரசின் பலவீனத்தை நன்கு பயன்படுத்தி பாஜக துணையுடன் பல்லக்கு பவனியை அதி ஆடம்பரமாக நடத்தி விளம்பரப்படுத்திக் கொண்டார் தருமை ஆதீனம்!

திமுக அரசே பல்லக்கு பவனிக்கு துணை போனதால் வழக்கம் போல இதை எதிர்த்து போராட்டம் நடத்தும் தி.க. களத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திகவும், கம்யூனிஸ்டுகளும் அறிக்கைகளோடு நிறுத்திக் கொண்டனர். பல்லக்கு வீதி உலாவுக்கு தடை விதிக்கக் கோரி மயிலாடுதுறையில் மக்கள் அதிகாரம், மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், விடுதலை சிறுத்தைகள் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  20 பெண்கள் உள்பட 97 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் செய்தியை பெரும்பாலான பத்திரிகைகள் இருட்டிப்பு செய்துவிட்டதோடு, ஆதினத்தின் பல்லக்கு பவனியை பெருமிதத்துடன் எழுதின! ஆக, ஒரு விவகாரத்தை உறுதியுடன் தடுக்க அரசு துணியாத காரணத்தால், படு பிற்போக்கான ஒரு கலாச்சாரம் வலுப்பெற்று இன்னும் பல மடங்களிலும் நடத்தும் துணிச்சலை பெற்றுத் தருவதாகிவிடும்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time