மதக் கலவரத்திலும் மனிதத்தை உயிர்பிக்கும் படம்! 

-பீட்டர் துரைராஜ்

குஜராத் படுகொலைகளை  மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் பர்சானியா.சமகால மதவெறி அரசியலை மிகுந்த பொறுப்புணர்வோடு காட்சிபடுத்தியுள்ளது. காஷ்மீர் பைல்ஸ்க்கு மாற்றான மகத்தான மனித நேய கலைபடைப்பு! தொலைந்து போய் தேடப்படுவது சிறுவன் மட்டுமல்ல, மனிதமும் தான்!

குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் பல்வேறு மதங்களின் மிடில்கிளாஷ் குடும்பங்கள் சேர்ந்து வாழும் அப்பார்ட்மெண்ட்ஸ்!. சைரஸின்  நான்கு உறுப்பினர்களைக் கொண்ட எளிய குடும்பமும் அங்கே வசிக்கிறது. திரையரங்க ஆபரேட்டரான சைரஸ் ஒரு நல்ல மனிதாபிமானி! சைரஸ் ஷெர்னாஸ் தம்பதிக்குப் பன்னிரெண்டு வயது பர்சான் என்ற மகனும், பத்து வயது தில்சான் என்ற மகளுமாக இரு குழந்தைகள்!

‘பர்சானியா’- வில் ‘கட்டடங்கள் சாக்லேடினால் இருக்கும். கூரையில் அல்வா இருக்கும். ஓடும் ஆறு சர்பத்தாக இருக்கும்’; 12 வயது  சிறுவன், பர்சான், பள்ளியில் இருந்து  திரும்பி வரும்போது,  தனது தங்கையிடம்  விவரிக்கும் கற்பனை உலகம்தான் ‘பர்சானியா’. வகுப்பிலேயே கிரிகெட் வருணனை கேட்கும் துருதுருப்பான சிறுவன்;  அப்பாவிற்கு கவிதை சொல்லும் சிறுவன்;  எதிர்காலத்தில் இவன் என்னவாக வேண்டுமானாலும் வருவான். இப்படிப்பட்ட ஒரு மகன் திடீரென்று  இல்லையென்றால், அந்தக் குடும்பம் என்ன ஆகும் ? அந்தச்  சிறுவனைத் தேடும் குடும்பத்தின் கதைதான் இது.

இந்துக்கள், இஸ்லாமியர்கள் இன்ன பிற மத, இனத்தைச் சேர்ந்தவர்கள் யாவரும் இயல்பாக இணக்கத்துடன்  வாழ்ந்து கொண்டிருந்த அந்த பெருநகருக்கு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பேரழிவைக் கொண்டு தருகிறது.

2002 ல் நடைபெற்ற கலவரங்களின்போது, பர்சான் காணாமல் போகிறான். அவனது உடலும் கிடைக்கவில்லை. என்ன ஆனான் என்றும் தெரியவில்லை. கையறு நிலையில், பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.

கதை ஒரு பார்சி குடும்பத்தில் நடக்கிறது. நசிருதீன் ஷா  அப்பாவாக நடித்துள்ளார். பண்பட்ட நடிகரான இவர், துக்கத்தை தேக்கி வைத்து, தன்னிரக்கத்தால் அலையும் அப்பா பாத்திரத்தில் தத்ரூபமாக நடித்துள்ளார். பார்வையாளர்களின்  மனதைப் பிழிகிறார்.

அவரது மனைவியாக, சரிகா  நடித்துள்ளார். ஒரு குடும்பத் தலைவியாக, குடியிருக்கும் காலனியின் மற்ற பெண்மணிகளோடு சுமுகமான உறவைப் பேணுகிறாள். கலவர நேரத்தில் தன் பெண் குழந்தையை காப்பாற்றும் தருணத்தையும், தன் மகனை தொலைத்த தருணத்தையும் மிக உணர்ச்சிகரமாக வெளிப்படுத்தி இருப்பார்!  2005 ஆம் ஆண்டு வந்த இந்தப் படத்திற்கு சிறந்த இயக்குநர் பிரிவில் ராகுல் தொலக்கியாவிற்கும், சிறந்த நடிகை பிரிவில் சரிகாவுக்கும் தேசிய விருது அளிக்கப்பட்டது.

படத்தின் தொடக்கத்தில், காலனி வாழ்க்கை (குஜராத் குல்பர்கா வீட்டு சொசைட்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்) இயல்பாக நகர்கிறது. சில நாட்களாக சமையல் வாயு கிடைப்பதில்லையே என்று சொல்கிறார் ஒருத்தி. (அவை ஏன் என்று பிறகு தெரியவரும்). இந்துக்களின் வீடுகளில் மட்டும் காவிக்கொடி ஏற்றி வைக்கப்படுவது சாதாரணமாகக்  காட்டப்படும். பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில்,  காவலர்கள் இருக்கும்போதே,  அதில் யாரும் முஸ்லிம் மாணவர்கள் இருக்கிறார்களா என்று நடுவழியில் நிறுத்திக் காவித்துண்டு போட்ட நபர்கள் கேட்பார்கள். இசுலாமியர்கள் நடத்தும் கடைகள், வியாபார நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் நாளிதழில்  வெளிவரும். இப்படி காட்டப்படும் ஒவ்வொரு காட்சிகளும்,  பிற்பாடு நடைபெற இருக்கும் பெரும் சம்பவத்தின் முன்னேற்பாடுகளே ! ஆனால், மக்கள் தக்க எதிர்வினை ஆற்றுவார்கள் என்று தொலைக் காட்சியில் தூண்டிவிடுகிறார் முதல் அமைச்சர்! பிறகு தன்னெழுச்சியாகத் தான் அனைத்தும் நடந்தது என பூசி மெழுகுவார்!  இப்படியாக ஒரு வரலாற்று சம்பவத்தை ஆவணத்தன்மையுடன், மிகைபடுத்தாமல் கலை நேர்த்தியுடன் எடுத்துள்ளனர். திரைக்கதை இயல்பாக நகர்ந்து செல்லும்.

வெறும் மதக்கலவரமாக மட்டும் இந்தப் படம் இருக்காது. அவர்கள் குடியிருக்கும் காலனியை கலவரக்காரர்கள் சூழும்போது, அதுவரை சகோதர நெருக்கத்தோடு பழகியவர்கள், வருவது ‘தன் மதத்துக்காரர்கள்’ என்று அறிந்து ஆசுவாசம் அடையும் போது ஏற்படுவது அறவீழ்ச்சி. மறைந்து இருக்கும் ஒரு முஸ்லிம் பெண்ணுக்கு,  தன்னுடைய காவித்துண்டை கொடுத்து காப்பாற்றும் கலவரக்காரனிடம் வெளிப்படுவது மனிதாபிமானமே! தன் நண்பன் காணாமல் போனதால்,  முஸ்லிம் வீடுகளை அடையாளம் காட்டியவனிடம் வெறுப்பைக் காட்டும் சிறுவன் என பல சின்னஞ்சிறு சம்பவங்கள் நெகிழ்ச்சியாக உள்ளன. பொறுக்கித்தனம் செய்த கயவன், தான் செய்த நிகழ்வுகளுக்கு மனம் வருந்துகிறான். அதே சமயம் படித்த, நல்ல உடை உடுத்திய, வசதியான ஒருவன், வீடு எரிக்கப்படுவதை தடுக்காமல்  வேடிக்கைப் பார்த்த காவல் அதிகாரிகளுக்கு ஆதரவாகப் பேசுகிறான். அறம் சார்ந்த பார்வைக்கும் ஒருவனுடைய வசதிக்கும் – கல்விக்கும் சம்மந்தமில்லை என்பதை காட்டியுள்ளார் இயக்குநர்.

இதற்கிடையில், அமெரிக்காவில் இருந்து காந்தியை ஆய்வு செய்ய வந்திருக்கும் ஒரு அமெரிக்க இளைஞன் இந்தக் கொடுமையைக் கண்டு குமுறுகிறான். குடித்துக் கொண்டு அல்லது தன்னை சமூகத்தில் இருந்து தனிமைப் படுத்திக் கொண்டு, அல்லது முடிந்தால் வன்முறை மூலம் எதிர்கொள்ள யத்தனிக்கிறான்.(இதுதான் வழக்கமாக நடக்கும்) ஆனால் அவனை காந்திய வழியில் பயணிக்க வைக்கிறார்  ஆசிரமத்துக்காரர்.( காந்தி பிறந்தது குஜராத்).  தனக்கு வரும் மிரட்டல்களையும் எதிர்கொண்டு, பாதிக்கப்பட்ட தாயை, மனித உரிமை ஆணையத்தில் சாட்சியம் அளிக்க வைக்கிறான். விரக்திக்கு இடையிலும் நம்பிக்கை, மதவெறிக்கு மத்தியிலும் காந்தியம் என்பதை இந்தப்படம் அழகியலோடு காட்டுகிறது. படத்தில் நீதி போதனை இல்லை. படத்தை பார்க்கும்போது சோர்வு ஏற்படவில்லை.

சமகால அரசியலைப் பேசும் படம். மிகுந்த  பொறுப்புணர்வோடு  இதனை ராகுல் தாலோகியா (Rahul Dholakia) இயக்கியுள்ளார். இது ஆங்கிலப் படம். அரசு தடை விதிக்கவில்லை. இது IMDb  தரவரிசையில் 7.5 புள்ளிகள் பெற்றுள்ளது. கதை இயல்பாக நகருகிறது. மிகை வசனம் இல்லை. மிகை நடிப்பு இல்லை. தவறான தகவல் இல்லை.

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’  பார்க்கச் சொல்லி பிரதமர் மோடி பரிந்துரைத்தார். பாஜக ஆளும் மாநிலங்கள் அந்தப் படத்திற்கு வரிவிலக்கு அளித்தன. உண்மைக்கு மாறாக, வெறுப்பு அரசிலை தூண்டும் நோக்கத்தில் தவறான புள்ளி விபரங்களை அள்ளிவீசி  ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ எடுக்கப்பட்டது! அதனால் அந்த படத்தை சிங்கப்பூர் அரசு தடை செய்தது. ஆனால், இந்தப் படத்தை பார்ப்பதன் மூலம், ”இனி ஒரு மதக் கலவரம் ஏற்படக் கூடாது” என்ற உணர்வே அனைவருக்கும் மேலோங்கும்!

காஷ்மீர் ஃபைல்ஸ் படத்தை பார்க்கச் சொல்லும் பிரதமர், குஜராத்தில் நடைபெற்ற கலவரங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பர்சானா’ படத்தைப் பற்றி என்ன சொல்கிறார்  என்று கேள்விகள் எழுந்தன. எனவே, இந்தப் படம் குறித்த விவாதங்கள் மேலெழுந்தன. ‘குஜராத் திரையரங்க உரிமையாளர்கள் இந்தப் படத்தை தடைசெய்தனர்’ என்று சொல்கிறார்  பத்திரிகையாளரான ராணா அயூப். ”எளிய மக்கள், மனிதத்தை கைவிட மாட்டார்கள்” என்பதை உரத்துச் சொல்லும் படம் இது. இந்தப் படத்தை ஹாட் ஸ்டாரில் பார்க்கலாம். யூ டியூபிலும், காணக்கிடைக்கிறது.

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time