தாஜ்மகாலில் ராம் மற்றும் சூலம் குறியீடுகள் இருப்பது எப்படி?

-செழியன் ஜானகிராமன்

தாஜ்மகால் இருக்கும் இடம் யாரிடம் இருந்து எப்படி வாங்கப்பட்டது? அங்கு இந்து கோயில் இடித்து கட்டப்பட்டதா? ராம் மற்றும் சூலம் குறியீடுகள் உள்ளனவே? தொல்லியல் ஆய்வுகள் சொல்வது என்ன? அங்குள்ள ரகசிய அறைகளில் என்னென்ன உள்ளன? இந்திய தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் தயாளன் நேர்காணல்!

ஷாஜகான் முறைப்படி இந்த இடத்தை வாங்கினாரா

மத்தியப்பிரதேசத்தில் ஷாஜகான் மனைவி மும்தாஜ் இறந்த நிலையில் உடலை 6 மாதம் அங்கேயே பாதுகாத்து வைத்து இருந்தனர். மும்தாஜுக்கு  உலகம் போற்றும் நினைவுச் சின்னம் கட்ட வேண்டும் என்ற தேடலில், யமுனை நதி பகுதியில் இன்று தாஜ்மஹால் அமைந்த பகுதி பிறை வடிவ தோற்றத்தில் உள்ளதை ஷாஜகான் பார்க்கிறார். முகலாயர்களுக்கு பிறை முக்கியத்துவம் கொண்டது என்பதால் இந்த இடத்திலேயே கட்டலாம் என்று முடிவு செய்தார்

ஆனால், அந்த இடம் ஜெய்ப்பூர் மகாராஜாவுக்குச் சொந்தம் என்று தெரிகிறது. பேரரசனான ஷாஜகான் இந்த இடத்தை கேட்தால் ஜெய்ப்பூர் மகாராஜாவுக்கு மிகுந்த சந்தோசமாக. பரிசாகவே இந்த இடத்தை கொடுக்கிறார். ஆனால் ஷாஜகான் பரிசாக அதை வாங்க மறுத்து, அதற்குப் பதில் தன்னுடைய அழகிய நான்கு கட்டடத்தைக் கொடுத்து வாங்கிக் கொள்கிறார். இதற்காக  இரண்டு அரசர்களுக்கும் இடையே போடப்பட்ட முறையான ஒப்பந்தம் இன்றும் ஜெய்ப்பூர் அருங்காட்சியகத்தில் உள்ளது.

தாஜ்மகால் குறித்த வெளிவராத விஷேசத் தகவல்கள் உண்டா?

பல சுவாரசியமான விஷயங்கள் உண்டு. 19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் தாஜ்மஹாலை ஒரு செல்வந்தருக்கு விற்றுவிடுகிறது. தாஜ்மஹாலை வாங்கியவர் தாஜ்மஹாலை இடித்து அதில் உள்ள மார்பில்  கற்களை  விற்கும் நோக்கத்தில் வாங்கியதில் அது சாத்தியமில்லை என பிறகு தான் அவருக்குத் தெரிகிறது! ஆகவே அப்படியே தாஜ்மகாலை ஆர்வமின்றிவிட்டுவிட்டார்!

முகலாயர்கள் வீழ்ச்சி அடைந்த பிறகு 100 வருடங்கள் மேல் தாஜ்மகால் பராமரிப்பு இல்லாமல் அடர்ந்த புதர்கள் மண்டி சிறு கவனிப்பும் இல்லாமல் விடப்பட்டது. 1810ஆம் ஆண்டுதான் பிரிட்டிஷ் அரசு இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்கிறது.

தாஜ்மகால் கட்டிடத்தின் ஒரு பகுதியில் சூலம் மற்றும் ராம் போன்றவை பொறிக்கப்பட்டு உள்ளதாக சொல்கிறார்களே..?

உண்மை தான்! 50 வருடங்கள் முன்பு ஓக்(Oak) என்பவர் தாஜ்மகால் இந்து கோவில்கள் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரமாய் இந்தக் குறியீடுகளைத் தான் காட்டினார்.
ஆனால், அது நிராகரிக்கப்பட்டது. காரணம், தாஜ்மகாலைக் கட்டும் பணிகள் அனைத்திற்கும் இந்தியாவில் உள்ள இந்துப் பணியாளர்கள் தான் பயன்படுத்தப்பட்டனர். பணியின் முடிவில் இவர்கள் தங்கள் குறியீடுகளை அங்கு பதித்தார்கள். அந்தக் காலங்களில் பொதுவாகப் பணியாளர்கள் தங்கள் பணியின் முடிவில் அவரவர் தெய்வ நம்பிக்கை குறியீடுகளை தாங்கள் உருவாக்கும் கட்டிடங்களில் பொறிப்பதில் வழக்கமாகவோ அல்லது ஒரு ஐதீகமாகவோ கொண்டிருந்தனர்! அதனால் தான் இதை தாஜ்மகால் மட்டுமல்லாது அந்த காலக் கட்டிடங்கள் அனைத்திலும் இவற்றைப் பார்க்கலாம்!  அதனால் இவற்றை சாதகமான ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.

பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் யாராவது அங்கு இந்து ஆலயம் இருந்தது என்று குறிப்பிட்டு உள்ளார்களா?

தாஜ்மஹால் கட்டத் தொடங்கிய முதல் நாளில் இருந்து கடைசி வரை ஒவ்வொரு நாட்களின் செயல்பாடுகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஷாஜகான் கூடவே இரண்டு வரலாற்று ஆசிரியர்கள் உண்டு. அதில் அப்துல் ஹமீத் லகோரி (Abdul Hamid Lahori) ஒருவர்.  இவர் ஷாஜகானின் தின வாழ்க்கையை அப்படியே பதிவு செய்துள்ளார். .தாஜ்மஹால் கட்டுவதற்கான கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, அவற்றை எவ்விதம், எப்படிக் கொண்டு வந்தனர் என்ற குறிப்புகள் உள்ளன! இப்படி சகலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது என்பதே தாஜ்மகாலின் சிறப்பாகும்!

ஷாஜகான் காலத்தில் ஐரோப்பிய பயணிகள் ஏராளமானோர் இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். அவர்களும் தாஜ்மஹால் கட்டப்பட்ட விதம் குறித்து ஆய்வு செய்து எழுதி உள்ளார்.

பிரிட்டிஷ் ஆய்வாளர்களும் நிறையவே ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வுகளில் எந்த இடத்திலும் இந்து கோவிலை இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டது என்று சொல்லப்படவில்லை. இன்றும் அத்தனை பதிவுகளும் உள்ளது.

ஐரோப்பிய பயணி பீட்டர் முண்டி(Peter Mundy) என்பவர் எழுதிய சுவாரசியமான செய்தி ஒன்று உண்டு. ஒரு முறை தாஜ்மகால் கட்டும் இடத்தில் பெரிய புகை ஏற்படத் தொடங்கியது. என்ன என்று புரியாமல் பார்க்கத் தொடங்கினேன். நூற்றுக்கணக்கான எருமை வண்டிகளில் மார்பில் கல்லைக் கொண்டு வரும் மண் தரையில் இருந்து வெளிப்பட்ட தூசுப் படலம் அந்தப் பகுதியையே சற்று நேரத்திற்கு பார்க்கவியலாமல் செய்ததாக அவர் எழுதியுள்ளார்!

இப்படி தாஜ்மகால் கட்டப்பட்ட காலத்தின் பதிவுகள் ஏராளமாக உள்ளன! இவையெல்லாம் நேரடிப் பதிவுகள் ஆகும். அதற்கு பீட்டர் முண்டி பதிவுகளே சாட்சி. அவரும் தன் ஆய்வில் எந்த இடத்திலும் இந்து கோவில் இடித்து தாஜ்மகால் எழுப்பப்பட்டதாக குறிப்பிடவில்லை. அவர் மட்டுமல்ல, வரலாற்றில் யாருமே அப்படி குறிப்பிடவில்லை.

தாஜ்மஹாலின் உள்ளேயுள்ள  22 அறைகளில் சிவன் சிலைகள் உள்ளன. அந்த அறைகளை திறந்து ஆய்வு செய்ய வேண்டும்! பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே?

உத்திர பிரதேசம் மாநிலத்தில் தாஜ்மஹால் குறித்து ஏதாவது ஒரு செய்தி தினமும் நாளிதழில் வந்து கொண்டு இருக்கும். நான் பணிபுரிந்த வருடங்களிலும் அப்படி வந்தது. அதனால் தாஜ்மஹால் குறித்து முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று  முடிவு செய்தேன். அப்படி ஆய்வு செய்து புத்தகமாகவும் Taj Mahal and Its Conservation என்ற பெயரில் கொண்டு வந்தேன். புத்தகத்தில் தாஜ்மஹால் எப்படி உருவானது, பிறகு என்ன மாறுதல்கள் ஏற்பட்டன என்பது  குறித்து முழுமையாக எழுதி உள்ளேன்.

தாஜ்மஹால் மூன்று அடுக்குகளை கொண்டது. முதல் அடுக்கு, இரண்டாவது அடுக்கு, அதற்கு மேல் தான் தாஜ்மஹால் கட்டப்பட்டுள்ளது.  இதில் முதல் அடுக்கு sandstone அடுக்கு என்று குறிப்பிடப்படும். இந்த அடுக்கில் பெரிய அறை, சிறிய அறை, ஹால் போன்ற சில அறைகள் உள்ளன! ஆனால். எந்த அடிப்படையில் 22 அறைகள் உள்ளதாகச் சொல்கிறார்கள் எனத் தெரியவில்லை. உண்மையில் அவ்வளவு எண்ணிக்கையில் அங்கு அறைகள் இல்லை.

டெல்லியில் இருந்து கப்பல் மூலம் வரும் அரசு குடும்பத்தினர் தாஜ்மஹால் பின்புறம் இறங்கி இந்த முதல் அடுக்கில் உள்ள அறைக்குச்  சென்று சிறிது ஓய்வு எடுப்பது, முகம் கழுவது என்று பயன்படுத்துவார்கள். பிறகு இரண்டாவது அடுக்கு சென்று அதன் பின் தாஜ்மஹால் கட்டிடத்திற்கு செல்வார்கள். இதற்காகத்தான் அந்த அறைகள் பயன்பட்டனவே தவிர அங்கு வேறு எந்த பொருட்களோ, சிலைகளோ இல்லை என்பதற்கு நிறையத் தரவுகள் உள்ளது. நானே பல முறை இந்த அறைகளுக்குச் சென்று பார்த்துள்ளேன்! அந்த வகையில் அங்கு எந்த சிலைகளையும் நான் பார்த்தது இல்லை.

அப்படியென்றால் ஏன் பொதுமக்கள் பார்வைக்கு அறைகளை திறந்து விடுவதில்லை?

கீழ் அடுக்கில் உள்ள அறைகளுக்கு செல்ல மிகக் குறுகிய வழிதான் உண்டு. ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும்  உள்ளே செல்ல முடியும். அந்த  அளவுதான்  பாதை  உள்ளது. மற்றும் யமுனை நதி தண்ணீர் உள்ள வந்துவிடக் கூடாது என்று அறைகளில் ஜன்னல் கதவுகள் மூடியே இருக்கும். இந்த பகுதியை டார்க் ரூம் (Dark Room) என்று சொல்வோம்.

ஒரு நாளைக்குத் தாஜ்மகாலைப் பார்க்க ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் மக்கள் வரை வருகிறார்கள் அவர்களை, ஒருவர் மட்டுமே உள்ள செல்ல முடிகிற இந்த மிகக் குறுகிய வழியில் அறையைப் பார்வையிட அனுமதித்தால் என்ன ஆகும்?  நெருக்கடி ஏற்ப்பட்டு பல மனித உயிர்கள் மடியும்.

வரலாறு எழுதுபவர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள் வித்தியாசம் உண்டு. இதில் வரலாற்றை எழுதுபவர்கள் கொஞ்சம் யோசித்து இப்படி நடந்து இருக்கலாம் என்றும் எழுதலாம் ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் அனைத்திற்கும் ஆதாரம் காட்ட வேண்டும். அப்படித்தான் எங்களுக்குக் கற்பிக்கப்பட்டுள்ளது. அதனால் நான் செய்த ஆய்வுகள் அனைத்திற்கும் முழுமையான ஆதாரங்கள் உண்டு. அப்படி இந்து கோவிலை இடித்து தாஜ்மஹால் கட்டப்பட்டதற்கான ஆதாரம் சிறிதும் இல்லை. அங்கே எந்த ஓர் அறையிலும் எந்த ஓர் சிலையும் இல்லை.

தாஜ்மகால் பாதுகாப்பாக  உள்ளதா

உண்மையில் உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகள் வழியாகத் தாஜ்மஹால் பாதுகாத்து உள்ளது. நான் இருந்த காலகட்டத்தில் ஏராளமா கட்டங்கள் தடுத்து நிறுத்தியது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தான்.

தாஜ்மஹால் சுற்றி எந்த வித புகைவிடும் வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. ஒரு கிலோமீட்டர் முன்பே இறங்கி பேட்டரி வாகனம் மூலம் தாஜ்மஹால் பார்க்க வர வேண்டும். பெரிய விஐபி என்றாலும் இதே முறைதான்.

எந்த தொழிற்சாலையும் அருகில் கட்ட அனுமதி இல்லை. இப்படி நிறைய விதிமுறைகள் உண்டு. அதனால்தான் 400 வருடப் பழமையான கட்டடம் பழமை மாறாமல் உள்ளது. இதை அடுத்தடுத்த தலைமுறைகளும் பார்த்து இன்புறும் வண்ணம் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்பதே என்னைப் போன்ற தொல்லியல் ஆய்வாளர்களின் ஆசை!

நேர் காணல் ; -செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time