கிறங்கடிக்கும் கிரிப்டோ கரன்ஸி மோசடிகள்!

-செழியன் ஜானகிராமன்

பாஜக அரசு கிரிப்டோ கரன்ஸியை அங்கீகரித்ததில் இருந்து நாடு முழுவதும் இந்த மோசடிகள் அரங்கேறுகின்றன! பல்லாயிரக்கணக்கானோர் பரிதாபமாக ஏமாறுகின்றனர்! கிரிப்டோ கரன்ஸியில் முதலீடு செய்து, அபாரமான வட்டியாம்! காந்தப் படுக்கை, ஈமு கோழி மோசடிகள் வரிசையில் தற்போது கிரிப்டோ கரன்சி!

நாம் சம்பாதிக்கும் பணத்தை வங்கியில், சேமிப்பு கணக்கில்  வைத்தால் தற்பொழுது ஒரு லட்சம்  ரூபாய்க்கு மாதம் 550 ரூபாய் வட்டியாக வருகிறது. இது மிகக் குறைந்த தொகையாகத் தெரியும். வங்கி நம்மிடம்  இருந்து வாங்கிய பணத்தை 8 சதவிகிதத்திற்கு வீட்டுக் கடன், வாகன கடன், தொழில் கடன், நகைக் கடன் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் நமக்கு 550 கொடுக்கிறார்கள்!  மிதி 250 ரூபாய் வங்கி ஊழியர்கள் சம்பளம், மற்ற அனைத்து செலவுகளையும் செய்கிறார்கள். இப்படித்தான் ஒரு நிதி நிறுவனம் இயங்கும். இப்படித்தான் இயங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விதிமுறை இயற்றி உள்ளது.

வங்கி போல் இயங்கும்  பல  நிதி நிறுவனங்களை  இப்பொழுது பார்க்கப் போகிறோம். அதில் சில  மோசடி நிதி நிறுவனங்கள் எப்படி இயங்குகிறது? எப்படி மக்களைச் சமாளித்து பணம் சுருட்டுகிறார்கள்? மாட்டாமல் எப்படித் தப்பிக்கிறார்கள்? ஆபத்து இங்குதான்  ஒளிந்து கொண்டுள்ளது.

வங்கிக்கு என்று தனியாகப் பணம் கிடையாது. மக்களிடம் பலவித வழிகளில் பெறுகிறது. இதே வழிமுறையை தான் சில நிதி நிறுவனங்கள் பின்பற்றும். ஆனால் மக்களிடம் ஆசையைத் தூண்டும் வார்த்தைகள் பேசி பணத்தை வாங்கும்.  ஒரு லட்சத்திற்கு 550 ரூபாய் வட்டி வங்கி கொடுக்கிறது என்றால், இந்த மோசடி நிதி நிறுவனங்கள் மாதம் 5,000, 10,000, 20,000 வட்டி கொடுப்பதாகச் சொல்லும்.

ஒரு சில மாதங்களில் உங்கள் முதலீடு பல மடங்காகத் திரும்பிவரும் என்று உறுதி கொடுப்பார்கள். அதற்கு ஏற்ப ஏற்கனவே பணம் பெற்று வரும் சில வாடிக்கையாளர்களைப் பேச வைப்பார்கள். அவர்களின் வங்கிக் கணக்கை காண்பிப்பார்கள். எங்கள் நிறுவனம்  முறையாக லைசென்ஸ் வாங்கி உள்ளதாகப் பல சான்றிதழ்களை நம் முன் விரித்துப் பார்க்கச் சொல்வார்கள்.

இதனால் எப்படிக் கொடுக்கிறார்கள்  என்று நம்மை யோசித்து பார்க்க விடமாட்டார்கள். அதிகப்படியான வட்டி நம் மூளையை மழுங்கடித்துவிடும். அவர்களின் பணிவான நடத்தை சிறிதும் சந்தேகத்தை ஏற்படாமல் நம்மை மயக்கிவிடும்! இதில் பணத் தட்டுப்பாட்டில் இருக்கும் நடுத்தர மக்கள் தான்  முதலில் விழுகிறார்கள்.  இந்த வகை மோசடித் திட்டங்களுக்கு பொன்சி(Ponzi) திட்டம் என்று பெயர். நமது ஒன்றிய பாஜக அரசு கிரிப்டோ கரன்சியை அங்கீகரிததினால் தான் இது போன்ற மோசடிகள் அரங்கேறுகின்றன!

சார்லஸ் பொன்சி

1882 ஆம் ஆண்டு இத்தாலியில் பிறந்தவர் சார்லஸ் பொன்சி ! இவர், 1920 காலகட்டத்தில் தரப்படும் பணத்திற்கு 90 நாட்களுக்குள்  நூறு சதவிகிதம் லாபம் தருவதாகக் கூறி பல நூறு கோடிகள் வசூலித்தார். ஆனால், சில வருடங்களில்  திருப்பி கொடுக்க முடியாமல் நிறுவனம் சரிந்தது. அன்றிலிருந்து இது போன்ற திருப்பி கொடுக்கவே  முடியாத திட்டங்களை  பொன்சி திட்டம் என்று அழைக்கிறார்கள்! நாம் பார்க்கும் இந்த திட்டமும் பொன்சி வகைதான்.

மோசடி மன்னன் சார்லஸ் பொன்சி

தற்பொழுது நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால் மாதம் 10,000 முதல் 30,000 வரை வட்டி கொடுப்பதாகச் சொல்லி களத்தில் இறங்கி உள்ளன பல மோசடி நிதி நிறுவனங்கள். வட்டி விகிதம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறும்.  என்னிடம் சொன்ன சில நண்பர்கள் மாதம் ஒரு லட்சத்திற்கு 25,000 கொடுப்பதாக சொன்னார்கள். இன்னொருவர் மாதம் 8,000 ரூபாய் கொடுக்கிறார்கள் நானும் ஒரு லட்சம் போட்டு உள்ளேன் என்றார்.

பொன்சி வகை திட்டங்கள் எப்படி இயங்குகிறது என்று பார்க்கலாம் 

வங்கி, மக்களுக்குக் கொடுக்கும் வட்டிக்கு அவை மற்றவர்களுக்குக் கடன் கொடுத்து அதிலிருந்து வரும் பணத்தில் வாடிக்கையாளர்களுக்கு வட்டி கொடுக்கிறது என்று பார்த்தோம். ஆனால், பொன்சி திட்டங்களை  இயக்கும் நபர்கள்  நம் பணத்தை க்ரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகச் சொல்கிறார்கள். ஓர் லட்சம் முதலீடு செய்தால் 50,000 எங்களுக்கு லாபம் வரும் அதில் உங்களுக்கு 25,000 ரூபாய் தான் கொடுக்கிறோம் என்று சொல்வதை நாம் ஆராய்ந்து பார்க்க மாட்டோம்.

இதே வகை மோசடி நபர்கள் பத்து வருடங்கள் முன்பு forexல்  அதாவது மற்ற நாடுகளின் கரன்சியில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவதாகச் சொன்னார்கள். நமக்குப் பரவலாகத் தெரிந்த ஈமு கோழி, காந்தப்படுகை போன்ற திட்டங்களை மறந்து இருக்க மாட்டோம்.

எது சொன்னால் நமக்கு புரியாதோ, குழப்பம் வருமோ.. அதைத்தான் சொல்வார்கள். கொஞ்சம் கூட அதைத் தெளிவுபடுத்திக் கொள்ள நாம் விரும்புவதில்லை.  நமக்குத் தேவை அதிகப்படியான வட்டி மட்டும்தான். அதில்தான் கவனம் இருக்கும்.

அவர்கள் பணம் வாங்கிய உடன் நம் நம்பிக்கை இன்னும் அவர்கள் மீது அதிகமாகிவிடும். காரணம், நம் பணம் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. சரியாக அவர்கள் சொன்ன தேதியில் முதல் தவணை கொடுத்து விடுவார்கள். நாம் கொடுத்த  ஒரு லட்சத்திலிருந்து தான்  பத்தாயிரம் அல்லது சொன்ன தொகை   கொடுக்கிறார்கள் என்று நாம் உணரமாட்டோம். லாபத்தில் கொடுப்பதாக நினைத்துக் கொள்வோம்.

உடனே நம் நண்பர்கள், உறவினர்களுக்குச் சொல்லத் தொடங்குவோம். கூடவே, நமக்கு வந்து உள்ள பத்தாயிரத்தைக் காண்பிப்போம். அதைப் பார்க்கும் பத்தில் நான்கு பேர் இந்த திட்டத்தில் இணைய விரும்புவார்கள். உங்கள் மீது இருக்கும் நம்பிக்கை தான் முக்கிய காரணம். அவர்களை பெருமையுடன் நீங்கள்  அந்த நிறுவனத்தில் இணைத்து இருப்பீர்கள்!

இப்பொழுது அவர்களிடம் புதிதாக நான்கு நபர்களின் பணம் சேர்ந்து இருக்கும். அந்த நான்கு நபர்களுக்கும் சொன்ன தேதியில் மாத வட்டி கொடுத்துவிடுவார்கள். இப்படி நான்கு- ஐந்து மாதம் கொடுப்பார்கள். பிறகு மெல்லப் பேசத் தொடங்குவார்கள். ஒரு லட்சம் கொடுத்ததிற்கு மாதம் இவ்வளவு வட்டி  வாங்குகிறீர்கள் அதே ஐந்து லட்சம் கொடுத்து இருந்தால் எவ்வளவு வரும் என்று ஆசை வார்த்தை கூறுவார்கள். அவர்கள் சொல்லவில்லை என்றாலும், நாமே கொடுக்க தயாராக இருப்போம். கடன் வாங்கியாவது ஐந்து லட்சம் கொடுத்து விடுவோம்.

இப்படி புதிதாகச் சேரும் நபர்களிடம் மீண்டும், மீண்டும் பணம் வாங்குவார்கள். அவர்கள் பணத்தையே அடுத்த மாதம் கொடுப்பார்கள் அல்லது நம் பணத்தை அதற்கு முன்பு சேர்ந்தவர்களுக்கு கொடுப்பார்கள். நமக்கு அடுத்து புதியதாகச் சேர்பவர்கள் பணத்தைக் கொடுப்பார்கள்! இப்படி வலைப் பின்னல் போல் சென்று கொண்டு இருக்கும். அது ஒரு கட்டம் வரை தான் செல்லும் என்பது நம்மை விட அவர்களுக்கு நன்கு தெரியும்.

நம்முடைய மீதி பணத்தை வேறு எங்கேயோ முதலீடு அல்லது பதுக்கி வைத்து இருப்பார்கள். இவர்களால் அதிகபட்சம் 3 வருடம் வரை வாடிக்கையாளர்களைச் சமாளிக்க முடியும். அந்த அளவு திறமை  உள்ளவர்கள். பிறகு எந்த நேரமும் நிறுவனத்தை  மூடும் நிலை வரும் பொழுதான் பணம் கொடுத்த வாடிக்கையாளர்கள் முழித்துக் கொள்வார்கள். அதற்குள் கை மீறிச் சென்று இருக்கும்.

உலகில் எந்த முதலீடும் மாதம் 50, 100 மடங்கு லாபம் கொடுப்பதில்லை. அப்படி எந்த திட்டமும் இதுவரை இல்லை. முதலில் அனைவரும் சேமிப்பு-முதலீடு என்ன என்று கற்றுக் கற்றுக் கொள்ள வேண்டும். உலகம் முழுவதும் வங்கிகள் எவ்வளவு வட்டி கொடுக்கிறது என்று படிக்கத் தொடங்குங்கள். அடிப்படையான நிதி செயல்பாடுகளை அறிந்து கொள்வது மிக அவசியம்.

மோசடி  நிறுவனத்தை இந்த கேள்விகள் கேட்டுப் பாருங்கள் 

# ஏன் நாளிதழில் விளம்பரம் கொடுப்பதில்லை?

# சிறு வட்டி கொடுக்கும் வங்கி கூட நீண்ட விளம்பரம் கொடுக்கும் போது பெரிய வட்டி கொடுக்கும் நீங்கள் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்?

# உங்கள் நிறுவனம் அமைந்துள்ள கட்டிடத்தில் ஏன் இவ்வளவு வட்டி கொடுக்கிறோம் என்று விளம்பரப் பலகை வைப்பதில்லை. சம்பந்தமே இல்லாத பெயரில் ஏன் நிறுவனம் இயங்குகிறது?

# தொலைக்காட்சியில் ஏன் திட்டங்களைக் குறித்துப் பேசுவதில்லை, துண்டு அறிக்கையை ஏன் நாளிதழில் இணைத்துக் கொடுப்பதில்லை?

# சிறு அறையில் சிலரை அழைத்து அவர்களிடம் மட்டும் திட்டத்தைச் சொல்லி பணத்தை ஏன் வாங்குகிறீர்கள்?

ஷேர் மார்க்கெட், பரஸ்பர நிதியில்,  அந்நிய நாட்டு கரன்சி,  க்ரிப்டோ கரன்சி போன்ற திட்டங்களில் முதலீடு செய்து இவ்வளவு பணம் மாதம் மாதம் கொடுப்போம் என்று யாரும் உத்தரவாதம் கொடுக்கக் கூடாது என்பது செபி (SEBI) விதிமுறை. இவர்கள் ரிசர்வ் வாங்கிகளுக்கு கீழ் வரமாட்டார்கள்! ஆனால், இந்த மோசடிப் பேர்வழிகள் உங்கள் பணத்தை க்ரிப்டோ கரன்சியில்  முதலீடு செய்து இவ்வளவு தருவோம் என்பதை விளம்பரம்  அறிவித்தால் உடனே மாட்டிக் கொள்வார்கள்!

பெரிய மோசடி நிறுவனங்கள்

1998ஆம் ஆண்டு அனுபவ் பிளாண்டேஷன் (Anubhav Plantations) நிறுவனம் பல கோடி மோசடி செய்து லட்சக்கணக்கான மக்களைச் சாலையில்  நிறுத்தியதை  மறந்து இருக்க மாட்டோம். நாடு முழுவதும் மிகப் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் இருந்தது.

2000 ஆம் ஆண்டு தொடங்கிய சாரதா குழுமம் குறுகிய காலத்தில் 2,500 கோடி ரூபாயை மக்களிடம் பெற்றது. ஆனால், அவர்கள் சொன்னது போல் திருப்பி கொடுக்க முடியாமல் 2013ஆம் ஆண்டு சரிந்தது.  மேற்கு வங்கத்தில் நடந்த இந்த மோசடி நாடறிந்த ஒன்றாகும்!

மேலே குறிப்பிட்ட இரண்டு மோசடிகளும் நாடு முழுவதும் பேசப்பட்டவை ஆகும். ஆனால் சிறு சிறு மோசடி திட்டங்கள் பரவலாக அறியப்படாமல் ஆங்காங்கே நடந்து கொண்டு இருக்கின்றன!  இங்கு தான் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சமீபமாக தமிழக  அரசால் முடக்கப்பட்ட ஆருத்ரா நகை நிறுவனம் ஒரு சிறந்த உதாரணம்.

பெரிய நிறுவனங்களை விட சில நபர்கள் இணைத்து இது போல் தமிழகத்தின் பல பகுதிகளில் மோசடி நிறுவனத்தை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்! இவர்களிடம் இன்னும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காரணம்! இவர்கள் நம் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து தேன் ஒழுக்க பேச்சு பேசுவார்கள்! ஏமாந்த பிறகே இவர்கள் மோசடி பேர்வழிகள் என்று உணர முடியும்!

ஒன்றை நினைவில் நிறுத்தி கொள்வோம். வங்கி கொடுக்கும் வட்டியை விட சில நிதி நிறுவனங்கள் ஒருசில சதவிகிதம் .உயர்த்தி கொடுக்கலாம். அதைத் தவிர பல மடங்கு வட்டி, சில மாதங்களில் உங்கள் அசல் இரட்டிப்பாகி விடும் என்பது உலகம் இருக்கும் வரை யாராலுமே கொடுக்க முடியாது. இது மாற்றமுடியாத உண்மை!

சமீபத்தில் தமிழக டிஜிபி கூட இந்த நிறுவனங்களிலிருந்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இதில் என்ன வேடிக்கையென்றால், பல காவலர்களே பொன்சி வகை மோசடி திட்டங்களில் முதலீடு செய்து ஏமாந்து உள்ளனர். அவர்கள் யாரிடம் புகார் கொடுப்பார்கள்?

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time