சாவித்திரி கண்ணன் பதில்கள்!

எஸ்.ராமநாதன், திருச்செந்தூர், தூத்துக்குடி

ஆத்திகமும், நாத்திகமும் சேர்ந்ததே திராவிட மாடல் ஆட்சி என்கிறாரே அமைச்சர் சேகர் பாபு?

பாஜகவும், திராவிடர் கழகமும் கலந்ததே திராவிட மாடல் ஆட்சி எனச் சொல்ல வருகிறாரா…?

இன்னும் என்னென்ன உளறல்களை எல்லாம் நாம் கேட்க வேண்டுமோ..?

எல்லாம் தினமணி வைத்திய நாதனின் சகவாச தோஷம்!

சரவணப் பெருமாள், ஓசூர், கிருஷ்ணகிரி

எட்டாண்டு பாஜக அரசின் சாதனை என்ன? வேதனை என்ன?

கற்பகதருவான பொதுத் துறை நிறுவனங்களை எடுத்து தனியார்களுக்கு தாரை வார்ப்பது!

பண மதிப்பிழப்பு செய்து இந்திய பொருளாதாரத்தை சிதைத்தது! பலரையும் நடுத் தெரு நாராயணன்களாக ஆக்கியது!

நன்றி; ரெட்டிட்.காம்

இந்திய ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்தது!

மத்திய அரசின் அதிகாரங்களை அதிகப்படுத்தி, மா நிலங்களின் உரிமைகளை பறித்தது! கல்வித் துறையில் எளியோர் ஏற்றம் பெறுவதை தடுக்கும் சூதாக, நீட் போன்ற தேர்வுகளை அமல்படுத்தி கல்வி வியாபாரிகள் செழிக்க வழி சமைத்தது!

ஜி.எஸ்.டி என்ற பெயரில் மாநில வருவாயை கபளீகரம் செய்து, மக்களையும்,வியாபாரிகளையும் கசக்கிப் பிழிந்தது.

லட்சக்கணக்கில் சிறு, குறுந்தொழில்கள் நசிந்து அழிந்தது! எளியோரின் வாழ்வாதாரம் சிதைந்தது!

விவசாயத்தை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க சதா சர்வ காலமும் திட்டமிடுவது.

விவசாய சட்டங்களை எதிர்த்த போராட்டத்தில் 700 விவசாயிகளின் உயிர்களை காவு வாங்கியது!

கார்ப்பரேட் நிறுவனங்கள் சம்பளக் குறைப்பு, ஆட் குறைப்பு என்ற வகையில் செயல்பட அனுமதித்தது

தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு தந்த சட்டங்களையெல்லாம் நீர்த்துப் போகச் செய்தது! முதலாளிகளின் சுரண்டலுக்கு வழி சமைத்தது!

மத துவேஷம், வெறுப்புணர்வுகளை வளர்த்தெடுப்பது…!

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்! மொத்தத்தில் அவர்கள் சாதனைகளாக அறிவித்துக் கொள்பவை எல்லாம் நம் வேதனைகள்!

என்.அபிராமி, நங்கநல்லூர், சென்னை

ஒரு தனி நபர் நல்ல எண்ணத்துடன் சிதைந்து போன கோயிலை சீர் செய்ய நன்கொடை வசூலித்தது குற்றமா? அதுவும் ஆப் மூலமாக வெளிப்படையாகத் தானே  வசூல் நடந்தது! இந்தக் கைது இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதை அறிவீர்களா?

அவர் ஆப் மூலமாக வசூலித்தது மிகக் குறைவே! அதன் பிறகு தனிப்பட்ட முறையில் தனி நபர்களை சந்தித்து பல கோடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார்! சிதைந்து போனக் கோயிலை சீர் செய்ய நினைப்பவர் அற நிலையத் துறையோடு கைகோர்த்து அதை செய்திருக்கலாம்! அந்தக் கோயில் சம்பந்தப்பட்ட உள்ளூர்காரர்களை சேர்த்திருக்கலாம்! இவரை மிகவும் நம்பிய உள்ளூர்காரர்கள் பல கோடி வசூல் செய்துவிட்டு ஓரிரு லட்சங்களே கோவிலுக்கு தரமுடியும் என்றதால், இவர் ஏமாற்று பேர்வழி என உறுதி செய்த பிறகு புகார்கள் தந்துள்ளனர். அற நிலையத் துறையிடம் தன் சொந்தப் பணத்தைக் கொண்டு கோவிலை புனரமைக்க விரும்புவதாக பொய் தகவல் தந்துள்ளார்! மிகப் பெரிய மோசடிப் பேர் வழியே கார்த்திக் கோபிநாத் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகவே, இதில் கடவுள் பெயரைச் சொல்லி களவாடியவனை கையும் களவுமாக பிடித்தற்காக இந்துக்கள் சந்தோஷப்படலாமே தவிர வருத்தப்பட ஏதுமில்லை!

முருகானந்தன், பழங்காநத்தம், மதுரை

எல்லா சாதிகளும் தங்களை ஆண்ட பரம்பரை என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்களே?

ஆண்ட பரம்பரை என்பது, ‘அதிகாரத்தை செலுத்தி மக்களை அடக்கி ஆண்ட வம்சம்’ என பொருள்படும். இது பெருமைக்குரியதல்ல! அதனால் தான் அதை முறியடித்து ஜனநாயக யுகம் மலர்ந்தது! இன்னும் ”ஆண்ட பரம்பரை..பேண்ட பரம்பரை” என்பவர்களே..! வரலாற்றை நோண்ட ஆரம்பித்தால் நாம் அனைவருமே பார்ப்பனிய கருத்தாக்கத்தால் வீழ்ந்த பரம்பரையே! விழித்துக் கொள்வோம்! ”ஆள்வதில் இல்லை பெருமை! அரவணைத்து வாழ்வதில் தான் பெருமை” என அறிவோம்.

வேல்முருகன்,சுங்குவார் சத்திரம்,காஞ்சிபுரம்

பத்திரிகையாளர்களை அவமரியாதையாகக் பேசிய அண்ணாமலை குறித்து?

கேட்கப்பட்ட கேள்விக்கு அண்ணாமலையிடம் பதில் இல்லை.

அதை நாசூக்காக கையாளும் பக்குவமும் இல்லை.

அவரது இயலாமை மற்றும் குற்றவுணர்வு அங்கு ஆத்திரமாக மாறிவிட்டது!

பத்திரிகையாளர்களை அவமானப்படுத்துவதாக அவர் பேசியவை அவர் தன்னைத் தானே அவமதித்துக் கொண்டவையே!

கோடிக் கோடியாக ஊடக நிறுவன முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுத்து, தங்களுக்கு ஆதரவாக எழுதவும், பேசவும் வைத்துள்ள ஒரு தேசியக் கட்சியின் தமிழகத் தலைமை தான் இந்தப் பேச்சை பேசுகிறது! அந்த வகையில் ஊடக நிறுவனங்களை ‘கரப்ட்’டாக்கி வைத்துள்ள இவர்களே பெரிய அயோக்கியர்கள்! கோடிகளில் ஊடக முதலாளிகளை குளிப்பாட்டிவிட்டு, அவர்களால் அனுப்பட்ட எளிய பத்திரிகையாளர்களைப் பார்த்து ரூ 200, ரூ 500 என கிண்டல் அடிப்பது என்ன மாதிரியான நியாயம்?

பலதரப்பட்ட குணாம்சங்களைக் கொண்ட பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர் கொள்வதும், அவர்களில் நல்லோர்களை நண்பர்களாக்கிக் கொள்வதும் ஒரு அரிய கலையாகும்! அந்தக் கலையை அறிந்திடாதவர்கள் அரசியல் தலைவராகத் தொடர முடியாது!

கண்ணப்பன், சேத்தியா தோப்பு, கடலூர்

இந்தியர்களின் கனவுகளுக்கு சிறகு கொடுத்தவர் மோடி என்கிறாரே அமித்ஷா?

இந்தியர்களின் என்ற இடத்தில் ‘கார்ப்பரேட்டுகள்’ எனப் பொருள் கொள்க!

கு.மஸ்தான், ராணிப் பேட்டை

காங்கிரஸ் சார்பிலான மாநிலங்களவை வேட்பாளர் தேர்வில் அதிருப்தி தலைதூக்கி உள்ளதே?

தூக்கத் தான் செய்யும்! இன்னும் முதிய தலைவர்களை தூக்கி சுமக்கும் கட்சியாயிற்றே! இளம் திறமையாளர்களை தொடர்ந்து புறக்கணித்து நாற்பதாண்டுகளுக்கும் மேலாக பதவிகளில் தொடர்பவர்களே நாற்காலிகளை தொடர்ந்து ஆக்கிரமிக்க துடித்தால் எப்படி?

எம்.சத்தீஸ், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு

காங்கிரஸ் தலைவர் ஆச்சார்ய பிரமோத் கிருஷ்ணன் டிவிட்டரில் ”குலாம்நபி ஆசாத், தாரிக் அன்வர், சல்மான் குர்ஷித் ஆகியோர் கட்சியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தவம் இருந்தனர். ஆனால், மாநிலங்களைவை தேர்தலில் அவர்கள் பலி கொடுக்கப்பட்டனர். திறமையை ஒடுக்குவது கட்சியின் தற்கொலைக்கான வழியாகும்” என்கிறாரே?

அட, பதவிச் சுகம் அனுபவித்தது தான் தவமா? பேஷ்! பேஷ்!

இந்த மாதிரியான பேச்சுக்களை கேட்டால் நமக்கே தற்கொலை உணர்வு வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

பதவியில் மட்டுமே ஒட்டிக் கொள்ள விரும்பும் இப்படியானவர்களை ஒடுக்காமல் விட்டு வைத்திருந்தால், அது தான் கட்சியை தற்கொலைக்கு தள்ளிவிடும்!

தீபக், கோபிச் செட்டி பாளையம், ஈரோடு

ஜிஸ்கொயர் – ஜீனியர் விகடன் சமாச்சாரத்தில் என்ன தான் நடந்தது?

‘தமிழக ரியல் எஸ்டேட் துறையில் ஜீ ஸ்கொயர் ஒரு ஆக்டோபஸாக அனைத்தையும் விழுங்கி வருகிறது’ என்பது உண்மை! அதை அம்பலபடுத்தி எழுதிவிடாமல் இருக்க அவர்களும் தி இந்து, விகடன் உள்ளிட்ட பத்திரிகைகளுக்கு லட்சக்கணக்கில் விளம்பரங்களை அள்ளித் தந்தார்கள் என்பதும் உண்மை!

விளம்பரங்களால் நிர்வாகம் தானே பலன் பெறுகிறது. எங்களுக்கும் படியளக்க வேண்டாமா? உங்களைப் பற்றிய புகார்கள் எங்களிடம் வந்து குவிந்துள்ளது என ஜீ.வியில் உள்ளவர்கள் ஜீ ஸ்கொயரை பிளாக்மெயில் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில், ‘முதலமைச்சர் மருமகனுக்கு தொடர்புள்ள நிறுவனம் என்று தெரிந்தும் எங்களை பிளாக்மெயில் செய்வதா?’ என கொந்தளித்து தங்கள் செல்வாக்கை நிரூபிக்க எப்.ஐ.ஆர் போட வைத்துள்ளது ஜீ ஸ்கொயர்!

எம். நல்லசாமி, நாமக்கல்

பிரதமர் மோடியின் சென்னை வருகை, நடந்த நிகழ்வுகள், சர்ச்சைகள் தொடர்பான உங்கள் பார்வை என்ன?

மோடியின் சென்னை வருகையை, ஒன்றிய அரசின் அறிவிப்புகளை தமிழகத்தில் பாஜக வளர்ச்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்த துடித்த அத்துமீறல்கள் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டன! அரசு நிகழ்ச்சியில் பாஜக வைத்த பேனர்கள், கட் அவுட்கள், கொடிகள், பாஜக துண்டை போட்டபடி பலர் கூட்டமாக வந்தது எல்லாம் ஒரு பக்கம் என்றால், நிகழ்ச்சி முடிந்த பிறகு முதலமைச்சர் வைத்த கோரிக்கைகளை, வெளிப்படுத்திய ஆதங்கங்களை குறித்து அண்ணாமலை பேசிய பேச்சுக்கள் ஆணவத்தின் உச்சமாகும்!

மற்றபடி இந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் ஏதோ கூச்ச உணர்வுடன் விலகி நின்றதையும் காண முடிந்தது! ஸ்டாலினுடைய ஆளுமை பண்பின் போதாமையை அது வெளிச்சமிட்டுக் காட்டியது. மற்றபடி அவர் தயாரித்து எடுத்து வந்து படித்த உரை சிறப்பானதே!

கருப்பசாமி, அருப்புக் கோட்டை

ஜீ ஸ்கொயர் விவகாரத்தில் பாரம்பரியமான விகடனின் நிறுவன அதிபர் சீனிவாசன் மீது எப்.ஐ.ஆர் பதிந்தது அதிகார அத்துமீறல் தானே?

நானும் முதலில் அவ்விதம் தான் நினைத்தேன். ஆனால், ஜீ.வி.ஆசிரியர் குழுவில் சிலரது பிளாக்மெயில் ஜர்னலிசம் குறித்த ஏகப்பட்ட புகார்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி தவறானவர்களுக்கு முட்டுக் கொடுத்துள்ளார் சீனிவாசன்!

கடந்த காலங்களில் எப்பேர்ப்பட்ட ஆளுமைகள், எழுத்தாளர்கள் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்துள்ளனர்  என எண்ணிப் பார்த்து இன்றைய நிதர்சனத்தையும் பார்க்கும் போது நம்ப முடியாத பேரதிர்ச்சியே ஏற்படுகிறது!

”அறிவார்ந்தவர்கள், நேர்மையானவர்கள் எல்லாம் ஆசிரியர் குழுவிற்கு தேவை இல்லை. அடிவருடிகளே போதும்…” என தெளிவாக முடிவெடுத்தே சீனிவாசன் செயல்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே, இப்படிப்பட்ட பிளாக்மெயிலுக்கு தன் பத்திரிகையில் தொடர்ந்து இடமளித்து வந்த சீனிவாசன் குற்றவாளியே!

எஸ்.எஸ்.வாசன் காலத்தில் வரலாறு படைத்தது விகடன்!

பாலசுப்பிரமணியம் காலத்தில் பல பாராட்டுகளை வாங்கி குவித்தது!

சீனிவாசன் காலத்திலோ விகடன் சீரழிவின் உச்சத்தை தொட்டுள்ளது!

70 ஆண்டுகளாக தன் முன்னோர் அரும்பாடுபட்டு உருவாக்கி வைத்திருந்த நல்ல பெயரை, கவுரவத்தை 20 ஆண்டுகளில் சிதைத்துவிட்டார் சீனிவாசன்! விகடனின் லட்சோப லட்சம் வாசகர்கள் படிப்படியாக அதனிடமிருந்து விலகிச் சென்றுவிட்டனர். விகடனின் இறுதி அத்தியாயத்தை எப்போதோ எழுத தொடங்கிவிட்டார் சீனிவாசன்!

குறிப்பு ;

கேள்வி கேட்க விரும்புபவர்கள் இந்த லிங்கை சொடுக்கி, உங்கள் கேள்வியை பதிவு செய்யலாம்!

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

 

 

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time