மலேசியாவில் வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜக அரசு!

-கோலாலம்பூர் நக்கீரன்

மலேசிய இந்தியர்களில் 85% தமிழர்களாக உள்ளனர். ஆனால், இந்திய அரசு இங்கு ஏனோ அதிகாரிகளாக தமிழர்களை நியமிப்பதில்லை.தூதரகத்தை நாடும் தமிழர்களை வட இந்திய அதிகாரிகள் அலைக்கழித்தல், அவமானப்படுத்தல் தொடர்கிறது! மேலும், இவர்கள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ சித்தாந்தத்தை மலேசியா தமிழர்களிடம் திணிக்க துடிக்கிறார்கள்!

மலேசிய இந்தியர்களில் ஏறக்குறைய 85 விழுக்காட்டினர் தமிழராக இருந்தும் இந்தி மொழிக்காரர்களையும் மற்றவர்களையுமே இங்கு தூதராக அனுப்புவது இந்திய ஒன்றிய அரசின் வாடிக்கையாக இருக்கிறது. அத்துடன், தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உள்நாட்டுத் தமிழர்களாக இருந்தாலும் தூதரக சேவையை நாடும்பொழுதெல்லாம் அவர்கள் இந்திய அதிகாரிகளால் இரண்டாம்பட்சமாக நடத்தப்படுகின்றனர்; தேவையில்லாமல் கூடுதல் நேரம் காக்க வைக்கப்படுகின்றனர்; அலட்சியப்படுத்தப்படுகின்றனர்.

பெற்றோர் அல்லது முன்னோர் யாராவது இந்தியாவைச் சேர்ந்தவர்களாக இருந்தால், அதன் அடிப்படையில் இந்திய அரசு வழங்கும் ‘ஓஐசி’(Overseas Indian Citizenship) அட்டை கிடைத்தால், இந்தியாவிற்கு விசா இன்றி சென்று வரக் கூடிய சலுகை இங்கு ரொம்ப காலமாக உள்ளது! இதற்கு உரிய சான்றாதரங்களை காட்டி வாங்குவது என்பது இயல்பான ஒன்றாகத் தான் இது நாள் வரை இருந்தது. ஆனால், அந்த ஓ.ஐ.சி அட்டையைப் பெறுவது என்பது சமீபகாலமாக சவாலாக மாறியுள்ளது!

பொதுவாக ஓ.ஐ.சி பெறுவதற்கு அதற்கான விண்ணப்பப் படிவத்தை மலேசிய இந்தியத் தூதரகம் வடிவமைத்துள்ள இணையப் பக்கத்தில் கட்டம் கட்டமாக பூர்த்தி செய்துவிட்டு, அதில் கேட்கப்பட்டிருந்த  பத்திரங்களையும் பதிவேற்றம் செய்த பின், அந்த இணைய விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அசல் பத்திரங்கள், நகல்களுடன் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் அணுகும் போது அதை சரி பார்த்துவிட்டு சரியாக இருக்கும்பட்சத்தில்  தந்துவிடுவார்கள்!

ஆனால், தற்போதோ பயங்கர கெடுபிடி செய்கிறார்கள்! அலுவலகத்தில் கூட்டம் இல்லை என்றாலும் வெறுமே காத்திருக்க வைக்கிறார்கள்! அதட்டும் தொனியில் இல்லாத கேள்விகளைக் கேட்கிறார்கள்

முகத்தை சிடுசிடுவென வைத்துக் கொண்டு எரிச்சலோடு பேசுகிறார்கள்!

இணையதளத்தில் விண்ணப்பம் செய்த படிவத்தை சம்பந்தப்பட்டவர்கள் அங்கு  கொடுக்கச் சென்றால் ,அங்குள்ள அந்த அதிகாரி இடக்கையால் அலட்சியமாக வாங்கிக் கொண்டு, “Documents  எங்கே?” என அதட்டலாக கேட்பதிலேயே நம்மை அச்சுறுத்தி விடுகிறார்கள்!

”ம்ம்…எல்லா பத்திரங்களையும் எடுங்கள்” என உத்திரவிடும் பாணியில் தான் பேசுகிறார்கள்!

எல்லாவற்றையும் காட்டிய பின்பு அவர்கள் இப்படி கேட்பார்கள்!

”இணைய விண்ணப்பத்தின் போது ஏன் எந்தப் பத்திரத்தையும் பதிவேற்றம் செய்யவில்லை..?”

உண்மையில் இது அவசியமே இல்லாத கேள்வியாகும்!

காரணம், இந்தியத் தூதரகத்தின் இணையப் பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள விவரத்தையும் பத்திரங்களையும் வழங்காவிட்டால், விண்ணப்படிவத்தையும் யாருமே பூர்த்தி செய்ய முடியாது; இந்தியத் தூதரகத்திற்கு நேரில் செல்வதற்கான சந்திப்புறுதியும் கிடைக்காது.

அப்படி இருந்தும், ”ஏன் எந்தப் பத்திரத்தையும் பதிவேற்றம் செய்யவில்லை” என்று பொய்யாக அதட்டுகிறார்கள்!.

அங்கு செல்லும் விண்ணப்பதாரர்களை, இரு கைகளிலும் கடப்பிதழ், பிறப்புப்பத்திரம், திருமண சான்றிதழ் உள்ளிட்ட அசல் பத்திரங்கள், நகல்களை ஏந்தியபடியே நிற்க வைக்கிறார்கள்!

“இந்தியத் தூதரகத்தின் இணையப் பக்கத்தில் உள்ள வழிகாட்டு நெறிமுறைப்படி  கட்டம் கட்டமாக விண்ணப்பப் படிவத்தை நிறைவு செய்தது, அதில் கேட்கப்பட்ட படம், கையெழுத்து மாதிரி உட்பட அனைத்துப் பத்திரங்களையும் பதிவேற்றம் செய்துவிட்ட நிலையிலும், அவர்கள் திருப்தி அடைய மறுக்கிறார்கள்!

ஆங்கிலத்தில் நாம் பதிவேற்றம் செய்திருப்பதைக் கண்டு அவர்கள் எரிச்சல்படுகிறார்கள்! ஏன் மலாய் மொழியில் பதிவேற்றம் செய்யவில்லை என அதட்டுகிறார்கள்! உண்மையில் ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்ய எந்தத் தடையும் இல்லாத நிலையில்,  ”ஒரு இந்திய அதிகாரி மலாய் மொழியில் ஏன் பதிவேற்றம் செய்யவில்லை” என கேட்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

மலேசியாவில் மொழி அரசியல் எதுவுமில்லை. ஆனால், அங்குள்ள வட இந்திய அதிகாரிகள் தமிழக மொழி அரசியலை மனதில் கொண்டு, அதாவது தமிழகத்தில் இந்தி எதிர்க்கப்படுவதை கருத்தில் கொண்டு, தமிழர்கள் இந்திய தூதரகம் வரும் நேரங்களில் தங்கள் வன்மத்தைக் காட்டுகிறார்கள்!

மலேசியாவைப் பொறுத்த வரையில் தமிழ் வாடிக்கையாளர்கள்  தூதரகம் வராவிட்டால்  அந்த அதிகாரிகளுக்கெல்லாம் அங்கு வேலையே இல்லை. அப்படி இருந்தும், ஏன் இப்படி எரிச்சலுடன் நடந்து கொள்கிறார்களோ..?

இது குறித்து அவர்களிடம் கேட்டால் பாதுகாவலர்களை அழைத்து விண்ணப்பதாரர்களை வெளியேற்றச் செய்கிறார்கள்!

ஆயிரக் கணக்கில் மலேசிய ரிங்கிட்டைப் பெற்றுக் கொண்டு ஓஐசி-கான விண்ணப்பப் படிவத்தை ஏற்பதற்குப் பதிலாக, என்ன விளக்கம் சொன்னாலும் செவிமடுக்காமல் மறுத்து, பாதுகாவலர் மூலம் விரட்டும் அளவுக்கு அகம்பாவமும் ஆணவமும் கொண்ட சம்பந்தப்பட்ட  பணியாளர்களை கோலாலம்பூர் இந்தியத் தூதரகம் உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்.

பொதுவாக, மலேசியத் தமிழர்கள் என்றால், இந்திய அரசுக்கு ஒரு இளப்பமான பார்வை உண்டு.

வெ.1,300 வருமானத்தைவிட விண்ணப்பிக்கும் தமிழர்களை பாதுகாவலர் மூலம் விரட்டி அடிப்பது அவர்களுக்கு மேலாகத் தெரிவதை, இதன் வெளிப்பாடாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது.

அண்மையில், ஏதோ அதிசயமாக குருமூர்த்தி என்ற பெயருள்ளவர் இங்கு தூதராக வந்தார். பெயரைக் கேட்டதும் மகிழ்ந்த மலேசியத் தமிழர்கள், எப்படி ஒரு தமிழரைத் மலேசியத் தூதராக அனுப்ப இந்திய ஒன்றிய அரசு சம்மதித்தது என்று ஆச்சரியப்பட்டு போனோம்! கடைசியில் குருமூர்த்தி ஓர் ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர் என்ற உண்மை தெரிய வந்து அதிர்ந்தோம்.

இவர் கோலாலம்பூர் தூதரக சேவை முடிந்தபின் அவர் இப்பொழுது, ஐநா மன்றத்தில் தமிழர்களைப் புறக்கணிக்கும் பாஜக-இந்துத்துவ அரசின் நிரந்தர பிரதிநிதியாக இருக்கிறார்.

தலைநகர், பிரிக்ஃபீல்ட்சில் நேதாஜி மையத்தில் இந்தியத் தூதரகத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகள் பெரும்பாலும், மலேசியத் தமிழர்களுக்கும், தமிழ் மொழிக்கும் அந்நியப்பட்டதாகவே இருக்குமாறு வடிவமைக்கப்படுகிறது..

புது டில்லியில் இருக்கும் ஒன்றிய அரசு, பொதுவாக தமிழர்களுக்கு எதிராகத்தான் இருக்கும். இத்தகையப் போக்கு, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தை விட, கடந்த 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் மிக மோசமாக இருக்கிறது.

இந்தியாவில் கூட இல்லாத அளவுக்கு மில்லியன் கணக்கில் வாழும் தமிழர்களை மதிக்கும் வகையில் மலேசிய அரசு, ஒரு தமிழருக்கு கேபினட் தகுதியில் அமைச்சர் பதவி வழங்கி இருக்கிறது. உலகம் முழுக்க தமிழர்கள் வாழ்ந்தாலும் மலேசியாவில் மட்டுமே ஒரேயொரு தமிழர் முழு அமைச்சராக இருக்கிறார்.

அத்துடன் இந்தியாவில் பாஜக ஆட்சி அமைந்தது முதல், மலேசியாவிலும் ஆர்எஸ்எஸ் இயக்க நடவடிக்கை அதிகரித்துவிட்டது.

மலேசியத் தமிழ்ப்பள்ளி பாட நூலில் பெரியாரைப் பற்றியும் பெருஞ்சித்திரனாரைப் பற்றியும் சிறிய அளவில், ஒரு பக்கத்திற்கு மட்டும் ஓர் அறிமுகம் என்ற மட்டத்தில் இடம் பெற்றிருந்ததைக் கூட பொறுக்க முடியாத இங்குள்ள ஆர்எஸ்எஸ்காரர்கள், மலேசியக் கல்வித் துறையில் பணியாற்றும் தமிழ் அதிகாரிகளையும் தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரையும் ‘கால்நக்கி’கள்  என்றனர்.

இதையெல்லாம் மலேசியக் கல்வித் துறையும், மத்தியக் கூட்டரசும் எப்படி பொறுத்துக் கொண்டுள்ளன என்பது வியப்பாக இருக்கிறது.

தவிர, புது டில்லியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சி வந்த பின், மலேசியாவில் திருவள்ளுவர், பாரதியார், கண்ணதாசனுக்கெல்லாம் ஆர்எஸ்எஸ் காரர்கள் விழா எடுக்கின்ற சாக்கில்  நூதனமாக தங்கள் இந்துத்துவ சித்தாந்தத்தை நுழைக்கிறார்கள்! நெற்றியில் திருநீற்றுப் பட்டையும், கழுத்தில் ருத்திராட்ச மாலையும் காவி ஆடையும் அணிந்த காவிச் சாமியாராக திருவள்ளுவர் படத்தை முகப்பில் அச்சிட்டு திருகுறள் விளக்க நூல் என்ற பெயரில் பத்துமலை திருமுருகன் திருத்தலத்தில்  இலவயமாக வழங்குகின்றனர்.

ஆக, பாஜகவின் மோடி அரசு தங்கள் இந்துத்துவ அஜந்தாவையும், வெறுப்பு அரசிலையும் கடல் கடந்து வாழும் இடங்களிலும் கொண்டு செலுத்துகிறது! இதற்கெல்லாம் எப்போது விடிவு கிடைக்குமோ?

கட்டுரையாளர்; கோலாலம்பூர் நக்கீரன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time