சொகுசான வேலை, நல்ல சம்பளம் என்று தகவல் தொழில் நுட்ப வேலை கருதப்படுகிறது. ஆனால், திணிக்கப்படும் வேலைப் பளூ, நிர்பந்திக்கப்படும் ராஜீனாமா, appraisal என்பதான அநீதி, மதம், சாதி, இனம், பால் என்பதன் பேரால் நிலவும் பாரபட்ச அணுகுமுறைகள்… போன்றவை குறித்து சொல்கிறார் ஐ.டி.தொழிற்சங்கத் தலைவர் அழகுநம்பி வெல்கின்.
இந்தியாவில், சென்னையில்தான் முதலில் மே நாள் ஊர்வலம் நடந்தது. ஆசியா கண்டத்தில், முதலில் பாண்டிச்சேரியில்தான் எட்டுமணிநேர வேலை சட்டமானது. இந்தியாவில், சென்னையில்தான் முதலில் கணிணியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிறகுதான் பெங்களூர், பூனா நகரத் தகவல் தொழில்நுட்பத் தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரண்டனர்.
நல்ல சம்பளம் வழங்கப்படுவதாக சொல்லப்படும், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு சங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அவசியம் ஏன் வந்தது ?
2014, 2015 ஆண்டுகளில், தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களை வேலைநீக்கம் செய்வது நடந்தது. இத்தகைய வேலைநீக்கம் கண்மூடித்தனமாக நடந்தது. ஆயிரக்கணக்கானோர் வேலை நீக்கம் செய்யப்பட்டனர். எனவே சங்கம் பற்றிய விழிப்புணர்வு தொழிலாளர்கள் மத்தியில் வர ஆரம்பித்தது. 2017 ம் ஆண்டு டிசம்பரில் இந்தச் சங்கத்தை பதிவு செய்தோம். Union of IT & ITES Employees (UNITE) என்பது எங்கள் சங்கப் பெயர். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் பொறியாளர்கள் மட்டுமின்றி, BPO, இ – சேவை மையம் போன்றவைகளில் பணிபுரியும் போன்ற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களில் ( IT Enabled Services) பணிபுரிபவர்களும் இதில் உறுப்பினர்களாக உள்ளன. இ- சேவை மையங்களில் பணிபுரிபவர்கள், ஒரு நாள் வேலைநிறுத்தம் கூட செய்தார்கள். இப்போது எங்கள் சங்கம் சிஐடியு- வுடன் இணைக்கப்பட்டுள்ளது.
எங்கள் சங்கத்தை பதிவு செய்யவே, நாங்கள் தொழிலாளர் துறையுடன் போராட வேண்டியிருந்தது. சங்கத்தை பதிவு செய்வதை அரசு விரும்பவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள எல்லா மாவட்டங்களிலும் இருந்து தடையில்லா சான்று வந்தால்தான் சங்கத்தை பதிவு செய்வோம் என்றனர். அதையும் செய்தோம், இதுவரை 300 க்கும் மேற்பட்ட தாவாக்களுக்கு தீர்வு கண்டுள்ளோம்.
இத்துறையில் 30 சதம் பெண்கள்; அவர்களுக்கு ஏற்படும் பாலியல் சீண்டல் போன்ற தொல்லைகள் வெளியில் தெரிவதில்லை. குறைந்தபட்ச சம்பளம், நல்ல பணிச்சூழல் போன்ற இயல்பான சட்டப்பூர்வ உரிமைகள் கூட மறுக்கப்படும் போது சங்கத்திற்கான தேவை இருக்கத்தானே செய்கிறது. வாரத்திற்கு 30 மணி நேர வேலை என்று கோரி வருகிறோம்; வேலை முடிந்தபிறகு, தொலைபேசியில் கூப்பிடக்கூடாது என்பதை ஒரு உரிமையாகக் கோருகிறோம்.
ஏற்கனவே தொழிற்சங்க தலைவர்கள், இத்துறையில் சங்கத்தை உருவாக்க முயற்சி எடுத்தார்கள். இப்போது அங்கு பணிபுரியும் நாங்கள் சங்க உருவாக்கத்தில் பணியாற்றி வருகிறோம். FITE ( Forum for IT Employees) போன்ற வேறு சில சங்கங்களும் உள்ளன.
கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களில் இப்போது தான் சங்கம் வந்துள்ளது. இந்தியாவில் TCS, Cognizant போன்ற நிறுவனங்களிலும் கூட சங்கத்தை அமைத்துள்ளோம்.
நன்கு படித்த, மத்திய தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை சங்கமாக அணிதிரட்டுவது சிரமமாக இல்லையா ?
சில ஆண்டுகளுக்கு முன்பு, கிண்டி, ஒலிம்பியா வளாகத்தில் இருந்த வெரிசான்(Varizon) நிறுவனம் 900 பேரை வேலை நீக்கம் செய்ய முடிவெடுத்தது. வேலைக்கு வந்தவர்களை கூப்பிட்டு, ஏழு நிமிடத்தில் ராஜினாமா கடிதத்தில் கையெழுத்துப் போட நிர்பந்தித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் குண்டர்கள் நின்று கொண்டு மிரட்டினார்கள். இதற்காக முதல் நாள் இரவு, தனித்தனியான கேபின்களை, கேமராக்கள் இல்லாதவாறு உருவாக்கியிருந்தனர். எங்கள் புகாரின் பேரில், ஆய்வுக்கு வந்த தொழிலாளர்துறை அதிகாரிகளும் ஏதோ கடமைக்கு என்று வந்தனர். நடந்த முறைகேட்டை கண்டுபிடிக்கவில்லை. அவர்களாகவே வேலையை விட்டு விலகிவிடுவதாக எழுதிக்கொடுத்துள்ளனரே என்று தெரிவித்தனர். ஒவ்வொருவரும் 5,10 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள். நன்றாக பணிபுரிந்தவர்கள் என சான்றுபெற்றவர்கள். வேலையை நம்பி வாகனக் கடன், வீட்டுக் கடன் பெற்றவர்கள். நாங்கள் சங்கம் அமைத்து கோரிக்கை வைத்த பிறகு இதுபோன்றவை குறைந்தது.
Cognizant, Hexaware நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்கையில் நியாயமாக செயல்பட்டன. வேலை வாய்ப்புப் பெற ஆலோசனை (Career Guidance) வழங்கின. வேலைக் கிடைக்கும் வரை 6 மாதம், ஒரு வருடம் வரை சம்பளம் அளித்தன. மாற்று வேலைக்கு பயிற்சி அளித்தன. HCL போன்ற நிறுவனங்களில் வேலை பெற உதவின.
இப்படி திடீரென்று மொத்தமாக வேலைநீக்கம் செய்யப்படுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் ?
2008 ல் பொருளாதாரத் தேக்கம் வந்த பிறகு நிலமை சரியாகவில்லை. ஒவ்வொரு நாடும் தன் நாட்டு பொருளாதார நலனுக்கு ஏற்ப கொள்கைகளை (Protectionist Policy) உருவாக்க ஆரம்பித்து விட்டன. நமக்கு வட அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இருந்து வேலை கிடைக்கிறது. அவை விலை குறைப்பு (Cost Cutting) என்று செயல்பட ஆரம்பித்தன. அமெரிக்க அதிபர் டிரெம்ப் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக பேச ஆரம்பித்தார். Brexit மாநாட்டில் இதேபோல தனது நாட்டு நலனை முன்வைத்து இங்கிலாந்து பேசியது. இதுபோன்ற ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளை சர்வதேச நிதியம் (IMF) ஒத்திசைவான மெதுவான உற்பத்தி (Synchronized Slow down) என்று 2020ல் வெளிப்படையாக ஒத்துக்கொண்டது. அதாவது அவர்களுக்கு சில சதவீதங்களில் இலாபம் குறையும்; அதற்காக இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும். இதைக் கேட்பதற்கு நமது நாட்டு சட்டங்கள் தோதாக இல்லை. இதைப்பற்றி அரசு கவலைப்படவில்லை. நிறுவனங்களுக்கு அக்கறை இல்லை. அதன் பிறகு கொரோனா வந்தது.மேலும் பாதிப்பு ஏற்பட்டது.
நீங்கள் எதிர்கொள்ளும் முக்கியமான சவால்கள் என்ன ?
பொறியியல் படித்த மாணவன் முதலில் எதிர்கொள்ளுவது வேலை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது தான். இதை கல்லூரியில் யாரும் சொல்லித்தருவதில்லை. வேலையை விட்டு நிற்பதாக இருந்தால் ஐந்து இலட்சம், பத்து இலட்சம் நிறுவனத்திற்கு தர வேண்டும் என்று ஒப்பந்தம் போடச் சொல்கிறார்கள். இரண்டு, மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தால் அதற்கான அனுபவச் சான்றிதழ் தர மாட்டார்கள். கல்லூரிச் சான்றிதழை வாங்கி வைத்துக் கொள்வார்கள். எனவே சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். தொழிலாளர்களை அவர்கள் அலுவலகங்களில் சென்று சந்திக்க முடியாது. இது அதிக எண்ணிக்கையில் பாலியல் சீண்டல் பதிவாகும் துறை. ஆட்களை வேலைக்கு எடுக்கும்போதும், வேலையை விட்டு தூக்கும்போதும் அவர்களின் மொழி,மதம், இனம், பால் சார்ந்த காரணிகளை வைத்து முடிவெடுக்கிறார்கள். நவீன கொத்தடிமை இந்தத் தொழிலில் நிலவுகிறது.
BPO (Business Process Outsourcing), KPO ( Knowledge Process Out sourcing) ( இ வெளியீடு, மருத்துவசேவை போன்றவை) களில் பணிபுரிபவர்களும் எங்கள் சங்கத்தில் இருக்கிறார்கள்.இது தவிர டேடா எண்டிரி ஆபரேடர்களுக்கு என தனி சங்கத்தை (Tamilnadu Data Entry Operators Union) உருவாக்கியுள்ளோம். அரசாங்கத்தின் இ- சேவை மையம், எல்காட், அரசு கேபிள் டிவி போன்ற ஆறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கு கிட்டத்தட்ட மாதம் ஏழாயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. குறைந்த பட்ச ஊதியமாக மாதம் ரூ.28,000 வழங்க வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற தொழிற்தாவா நிலுவையில் உள்ளது. இப்போது அரசு இசேவை மையங்களையே தனியாருக்கு கொடுக்க எண்ணி வருகிறது. இதை எதிர்த்து வருகிறோம்.
நீங்கள் எதிர்கொள்ளும் தொழில்சார் நோய்கள் என்ன ?
உட்கார்ந்தே வேலை செய்வதால் முதுகு வலி, கழுத்து வலி போன்றவை ஏற்படுகின்றன. சாத்தியமற்ற வேலைப்பளுவை திணிக்கின்றனர். உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்ற அழுத்தம் உண்டாகிறது. அது முடியாதபோது, ஊழியர்களை மற்றவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்கள். இதனால் மனநலம் பாதிக்கப்படுகிறது. என்னதான் உயர்படிப்பு படித்திருந்தாலும், நிறுவனத்தின் உயர் பொறுப்பில் இருந்தாலும் நமது மனநிலையில் இன்னமும் நிலபிரபுத்துவ மனப்பான்மை தான் உள்ளது. அது பணித்தளங்களில் வெளிப்படுகிறது. பணித்தளங்களில் ஏற்படும் மன அழுத்தங்களின் காரணமாக இளவயதில் மாரடைப்பு ஏற்படுகிறது. ஆனால், தொழிலாளர் துறை மனநலத்தை (Mental Health) ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. மன அழுத்தங்களால் ஏற்படும் மரணங்கள் இயற்கையானதாகக் கருதப்படுகின்றன.
அங்கு நிலவுகிற மதிப்பீட்டு முறை பற்றி என்ன சொல்கிறீர்கள் ?
ஒவ்வொரு நிறுவனமும் ஒரு தொழிலாளரின் திறனை குறிப்பிட்ட காலத்தில் மதிப்பீடு (appraisal) செய்கிறார்கள். இந்த முறையானது, குறிப்பிட்ட சதவீதத் தொழிலாளர்களை திறனற்றவர் என்பதாகக் கூறி வெளியேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. நிறுவனத்தின் லாப கணக்கிற்கு ஏற்ப முடிவெடுக்கப்படுகிறது. இப்போது உள்ள முறையில் எப்படி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சதவீத தொழிலாளர்களை வருடந்தோறும் வெளியே அனுப்புவார்கள் (attrition rate). அதாவது ஐந்து ஆண்டு காலத்தில் அந்த நிறுவனத்தில் பழைய ஆட்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முழுமையாக பணி முடித்தவர்களுக்கு ஓய்வுபெறும் விழா நடத்தவிட மாட்டார்கள்!
முதன்முறையாக அமெரிக்காவில், பிட்ஸ்பர்க் நகரில் HCL நிறுவனம், மதிப்பீடு முறையில் ஒரு நல்ல ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. அதன்படி யாரையும் திறனற்றவர் என்று சொல்ல முடியாது. எத்தனை சத ஊழியர்கள் மிகச் சிறப்பாக, சிறப்பாக, சுமாராக வேலை செய்தவர்கள் இருக்க வேண்டும் என்பது போன்ற கணக்கீடுகளை சங்கத்தோடு பேசி முடிவெடுக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர். இந்த மாதிரி (Model) மற்ற இடங்களிலும் கடைபிடிக்கப்பட வேண்டும்.
திறனை மேம்படுத்தும் திட்டம் (Performance Improvement Plan) என்று கூறுகிறார்களே ?
இது நிர்வாகம் குறிப்பிட்ட தொழிலாளியிடம், குறிப்பிட்ட திறனை மேம்படுத்திக் கொள்ளுமாறு முன் வைக்கும் திட்டமாகும். அதாவது, அந்த நிறுவனத்தில் சில ஆண்டுகள் நன்முறையில் பணியாற்றியிருப்பார். அவரைக் கூப்பிட்டு, இந்தத் திறனை வளர்த்துக்கொள், இல்லையென்றால் வேலையை விட்டுப் போய்விடுகிறேன் என்பதை ஒத்துக்கொள்ள வைப்பதாகும். இந்த முறைக்கு தொழிலாளர்கள் ஒத்துக்கொள்ள கூடாது என தொழிலாளர்களை அறிவுறுத்தி வருகிறோம்.
Also read
இந்தத் துறையில் புதுப்புது வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளில் இருந்து வந்தவை. அவை என்ன என்பதை நாங்கள் கண்டு கொள்ளவே பல மாதங்கள் ஆகும். அவை அனைத்தையும் இரகசியம் என்று சொல்லி விடுவார்கள். நிறுவனத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரிகள் ( CEO, COO, CTO போன்ற பதவிகளில் உள்ளவர்கள்) தங்கள் சம்பளம் மட்டுமின்றி, சில நூறு கோடிகளை இலாபமாக எடுத்துச் செல்வார்கள். அவை 30 சதம், 40 சதம் கூட வரும். ஆனால் அதில் பணிபுரிபவர்களுக்கு 5சதம், 7 சதம் என்றுதான் உயர்வு கொடுப்பார்கள். இவையெல்லாம் அநீதிதானே !
தொழிலாளர் துறையோ, தகவல் தொழில்நுட்ப துறையோ சட்ட அமலாக்கத்தில் (enforcement) பின்தங்கியே உள்ளன. புதிய தொழிலாளர் சட்டம் எங்களை மிகத் திறமையான தொழிலாளர்கள் (Highly Skilled) என்று சட்ட வரையறைக்குள் சேர்த்துள்ளது. நாங்களும் புதிய தொழிலாளர் சட்ட விதி உருவாக்கத்தில், மத்திய மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளைக் கொடுத்துள்ளோம்.
( பம்மல்- நாகல்கேணி தமிழ்சங்கம் என்ற பாரம்பரியமான அமைப்பை நிறுவிய மறைந்த நா.வை.சொக்கலிங்கம் அவர்களின் பேரன்தான் அழகுநம்பி வெல்கின் என்பதை அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டது)
நேர்காணல்; பீட்டர் துரைராஜ்
Leave a Reply