மரணத்தின் விளிம்பில் மக்கள் நீதி மையம்!

- சாவித்திரி கண்ணன்

கமலஹாசனின் விக்ரம் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த சினிமா தோல்விகளுக்கு பிறகு அரசியல் செய்த கமலஹாசன் இளம் நடிகர்கள் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோருடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தன்னை மீண்டும் புதுப்பித்துக் கொண்டார். ஆனால், அரசியலில் இருந்து வெகு தூரம் விலகிப் போகிறார்!

தன்னைத் தானும் உணர்ந்து பிறருக்கும் நம்பிக்கை அளிப்பவரே தலைவர். தைரியம் இல்லாமல் இன்செக்யூரிட்டி உணர்வில் உழல்பவர்கள் தலைவர்கள் ஆக முடியாது! கமலஹாசனின் விக்ரம் படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் டிஸ்டிரிபூசன் செய்துள்ளது. ஒரு விழாவில் ”கமலிடம் நான் மிரட்டி வாங்கியதாக சொல்கிறார்கள்.அவரை மிரட்ட முடியுமா?” என்றார் உதய நிதி! கமல் அசட்டுத்தனமாக அப்போது சிரித்துக் கொண்டார். உண்மையில் கமலுக்கு முதலில் உதயநிதிக்கு அதை தரும் எண்ணமே இல்லை. ஆனால்,ரெட்ஜெய்ண்டிலில் இருந்து வாங்க விரும்புவதாக தெரிவிக்கப்பட்டவுடன் குழம்பி போனார். பிறகு அவரை மிரட்ட வேண்டிய எந்த அவசியமும் இல்லாமல் அவரே எதற்கு ரிஸ்க் என்று ஒரளவு லாபகரமாக பேசி வியாபாரத்தை முடித்துக் கொண்டார். ஆனால், இன்றைக்கு படத்திற்கு நல்ல அபார வரவேற்பு ஏற்பட்டு உள்ளதை கேள்விப்பட்டு”நாமே டிஸ்டிரிபூஷன் செய்து இருக்கலாம் போல..” என நட்பு வட்டாரத்தில் பேசியுள்ளார்.

சினிமாவில் இளம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பா.ரஞ்சித் தன் தயாரிப்பு படங்களை ரெட் ஜெயண்ட்டுக்கு கொடுப்பதில்லை. அவரை நிர்பந்தப்படுத்தும் தைரியம் ரெட் ஜெயண்ட்டுக்கும் இல்லை. ஆனால், சினிமாவில் அரை நூற்றாண்டுக்கும் மேல் பழம் தின்று கொட்டை போட்ட கமலுக்கு அந்த தைரியம் இல்லை என்பது தான் யதார்த்தம்! எம்.ஜி.ஆர், கருணாநிதி முதல்வராக இருக்கும் போது உலகம் சுற்றும் வாலிபன் படத்தை வெளியிட முடியாமல் பல தடங்கல்களை ஏற்படுத்திய போது துணிச்சலாக அதை எதிர்கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்தார் என்பது வரலாறு.

கமலஹாசனுக்கு சினிமா மீண்டும் கை கொடுத்துள்ள நிலையில் இனி முழு கவனத்தையும் அதில் வைக்கப் போகிறார் என்பது கட்சிக்காரகளுக்கும் தெரிந்துவிட்டது. அவர் கட்சி அலுவலகத்திற்கு வந்தே பல மாதங்கள் ஆகிறதாம்! கட்சி ஏறத்தாழ அஸ்த்தனமத்தை நோக்கி சென்று கொண்டுள்ளதாக கட்சியினரே புலம்ப தொடங்கியுள்ளனர். சிலர் சைலண்டாக ஒதுங்கிவிட்டனர்.

கமல் அரசியலுக்கு வந்த நிலையையும் நான்கு ஆண்டுகள் பிக்பாஸில் பங்கு பெற்றுக் கொண்டே கட்சி நடத்திய விதத்தையும் ஒரு பிளாஷ் பேக்கில் பார்ப்போம்;

ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் தானாக அதிரடியாக அரசியலுக்கு வந்தார் கமலஹாசன். படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர், அரசியலுக்கு வர தயக்கப்பட்டு நின்ற புதியோர் சிலர் கமல் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். ஆனால், தலைவரும் நானே, பொதுச் செயலாளரும் நானே என தன்னை அறிவித்துக் கொண்டார் கமல்! பின்னர் முதல் பொதுக் குழு கூட்டி தன்னை நிரந்தரத் தலைவராகவும் அறிவித்துக் கொண்டார். மேடையில் தனக்கு மட்டுமே சேர் போட்டுக் கொண்டு அனைத்து நிர்வாகிகளையும் கீழே அமர வைத்தார்.

ரஜினியிடம் விரக்தி அடைந்தவர்கள் தன் கட்சிக்கு வருவார்கள் என எதிர்பார்த்தார். அப்படி எதுவும் நடக்கவில்லை.

வரலாறு காணாத வகையில் கட்சியில் சேர்ந்தவர்கள் பலரும் சில மாதங்களிலேயே தலை தெறித்து வெளியேறிய நிகழ்வுகள் தொடர்ந்தன!

திராவிட இயக்க பற்றாளர் செளரிராஜன் கம்யூனிச சிந்தனையாளர் பாரதி கிருஷ்ணகுமார், பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தன், தொழில் அதிபர் சரத்பாபு என முதல்கட்டமாக சிலர் விலகிச் சென்றனர். அடுத்தாக நிறுவன பொதுச் செயளாராக இருந்த அருணாசலம் என்பவர் விலகி பாஜகவில் சேர்ந்தார்! சி.கே.குமாரவேல், முருகானந்தம்,கமீலா நாசர்… என விலகினர்.

மகேந்திரன் தயார்படுத்தி வைத்திருந்த கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியை அவரிடமிருந்து அதிரடியாக பறித்து தன்னை நிறுத்திக் கொண்டார். மக்கள் நீதிமையத்திற்காக பல கோடிகள் செலவு செய்த தொழிலதிபர் மகேந்திரன்,சரத்பாபு, சி.கே.குமாரவேல்.. போன்றோர் விலகினார் மகேந்திரனுடன் பத்மபிரியா,சந்தோஷ் பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் விலகினர். ஏராளமான மாவட்ட செயலாளர்கள் விலகினர்.

தீடீரென்று கட்சியில் சுரேஷ் ஐயர் என்பவர் வந்து ஆதிக்கம் செலுத்தினாராம். சில வியாபார நிறுவனங்களும் ஆதிக்கம் செலுத்தியதாம். கமலஹாசன் என்ன நினைக்கிறார்? எப்படி முடிவெடுப்பார் என யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வெளிப்படைத் தன்மை இல்லாமல் கமுக்கமாக செயல்பட்டதாக நிர்வாகிகள் வேதனை தெரிவித்தனர்!

தன் கட்சியில் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஏன் விலகிச் செல்கின்றனர் என கமலஹாசன் கிஞ்சித்தும் சிந்திக்கவோ, தன்னை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவோ இல்லை.

”விருப்பம் உள்ளவர்கள் இங்கே இருக்கலாம். விருப்பம் இல்லாதவர்கள் உடனடியாக இப்பொழுதே வெளியேறலாம். இதோ கதவுகள் திறந்தே இருக்கின்றன”

என இரக்கமில்லாமல் பேசினார்! பொதுவாக ஓர் அரசியல் தலைவர் இப்படி பேசுவதில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தலைமைப் பண்பு! தள்ளி நிறுத்தி பார்ப்பது, பாகுபாடு காட்டுவது, சந்தேகப்படுவது, ஒன்றிணைய முடியாமல் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொள்ளல், தன்னை எளிதில் சந்திக்க முடியாதவராக அதிகாரபடுத்திக் கொள்ளல்… ஆகிய பண்புகளால் அவரை நேசித்தவர்களை எல்லாம் காயப்படுத்தி வெளியேற்றினார்

“யாரும் முழு நேரமாக கட்சியில் வேலை செய்ய வேண்டாம். அது அவசியமும் இல்லை. பார்ட் டைமாக கட்சிப் பணி ஆற்றினாலே போதும்.” என்று கட்சி நிர்வாகிகளிடம் பேசினார். ஒரு சிறிய குழுவாவது முழு நேரமாக பணியாற்றினால் மட்டுமே ஒரு அரசியல் இயக்கம் வளரும். தலைவர் தொடங்கி அனைவருமே பகுதி நேரமாக மட்டுமே பணியாற்றக் கூடிய ஒரு அரசியல் கட்சி உலகத்தில் எங்குமே கிடையாது.

விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கமல் கட்சியுடன் சில நாட்கள் தொடர்பில் இருந்தார். அவரும் தன்னை விடுவித்துக் கொண்டார். விஞ்ஞானி பொன்ராஜ் பல கனவுகளுடன் வந்தார். அவராலும் சுதந்திரமாக இயங்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டார். பழ.கருப்பையா ஒரு பேட்டியில் இப்படி சொன்னார். ”என்னை கட்சியின் ஆலோசகராக கமல் நியமித்தார். ஆனால், அவர் என்னிடம் இது வரை எதுவுமே ஆலோசனையே செய்ததில்லை” என்பதாக! பின்னர் அவரும் ‘இந்த அலங்கார பதவி எதற்கு’ என விலகிவிட்டார்!

சங்கி என்ற பெயரைக் கேட்டாலே  தமிழ் சமூகம் அதிர்ச்சியும், பயமும் கொள்ளும் நிலையில் ‘சங்கி’யா சொலூஷன்ஸ்’ எனும் பெயரில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அந்த நிறுவனத்துக்கு சுரேஷ் ‘ஐயர்’ என, தனது பெயரிலேயே சாதியை பெருமிதமாகக் குறிப்பிட்டுக் கொள்ளும் ஒரு நபருக்கு தலைமை பொறுப்பை கொடுத்தார்! உண்மையில் கமல் கட்சியின் முக்கியத் தூணாக நான்கு பிராமணர்கள் செயல்பட்டதாகவும் அவர்கள் கையில் தான் கட்சியின் லகான் இருந்ததாகவும் சமீபத்தில் வெளியேறிய கட்சி நிர்வாகி தெரிவித்தார்.

கமல்ஹாசன் பாஜகவின் மதவாத அரசியலை எதிர்க்கவில்லை. விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்கவில்லை. தற்போதைய தமிழக ஆட்சியாளர்களின் ஊழல்களை தட்டிக் கேட்கும் துணிச்சலும் இல்லை. உண்மையில் தற்போதைய நாட்டு நடப்புகளை அவர் சரியாக அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதும் இல்லை. அதற்கு நேரமும் இல்லை. ஆனால், முதலமைச்சர் ஆசை மட்டும் இருந்தது! கமலஹாசனின் அரசியல் வியாபாரம் இங்கு செல்லுபடியாகவில்லை. ஆகவே, அவர் கடையைக் கூட மூடாமல் நடையைக் கட்டிவிட்டார் சினிமாவை நோக்கி!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time