சேமிப்பின் அவசியமும், சிக்கலில்லாத முதலீடும்! -1

-செழியன் ஜானகிராமன்

பணத்தை சேமிப்பது ஒரு கலை! பண முதலீட்டில் ஏமாற்றங்களைத் தவிர்ப்பது அதைவிட பெரிய கலை! இங்கு நம் அரசாங்கம் பாதுகாப்பான சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் செய்துள்ள வாய்ப்புகள் என்னென்ன? அதைக் கடந்து நாம் என்ன செய்ய முடியும்.. ஒரு அலசல்!

பணத்தை சேமிக்கத் தான் நாம் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். ஆனால், முதலீடு செய்ய கஷ்டப்பட  வேண்டியதில்லை. இருந்தாலும், காலம் முழுவதும் உழைத்துக் கொண்டு இருக்கிறோமே தவிர, எளிதாகச் செய்யக் கூடிய முதலீட்டை 95 சதவிகிதம் மக்கள் செய்வதில்லை.

பலரும் பணத்தைச் சேமித்தால் போதும் அவையே நம் எதிர்காலத்தை பாதுகாக்கும் என்று நினைத்து விடுக்கின்றனர். ஆனால், சேமிப்பு மட்டுமே நம்மைக் காப்பாற்றாது. என்பதைத்தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

முதலில் சேமிப்பு-முதலீடு இரண்டிற்கான வித்தியாசம் தெரிந்து கொள்ள வேண்டும்.. நம் சமூகம் உங்கள் வருமானத்தில் கொஞ்சம் பணத்தை மிச்சப்படுத்திச் சேமியுங்கள் என்று கற்றுக் கொடுத்துள்ளது. நம் முன்னோர்களும் இதை வலியுறுத்திச் சொன்னார்கள்.

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பம் தன் சம்பாத்தியத்தில்  குறைந்தது 10 சதவிகிதம் சேமிக்க வேண்டும்.  பெண்கள் சிறு தொகையை அஞ்சறை பெட்டியில் போட்டு வைப்பார்கள். ஆண்கள் பீரோவில், பெட்டியில் வைப்பார்கள். அடுத்த மாதம் இது போல் சேமிக்க மீண்டும் உழைக்க வேண்டும். ஆக, உழைத்தால் மட்டும் தான் சேமிக்க முடியும்!  ஆனால், இவர்கள்  ஏன் எளிதாக செய்யக் கூடிய முதலீட்டை அதன் பிறகு யோசிப்பதில்லை?

விலைவாசி உயர்வை உங்கள் சேமிப்புடன் இணைத்துப் பார்க்க வேண்டும்.  அது தெரிந்துவிட்டால் சேமிப்பு மட்டும் நம்மைப் பாதுகாக்காது என்று புரியவரும்.

சேமிப்புமுதலீடு என்ன வித்தியாசம் ?

மாதம் ஆயிரம் ரூபாய் என்று  12 மாதம் எடுத்து பீரோவில் வைத்தால் வருடம் முடிவில் பன்னிரெண்டாயிரம் ரூபாயாக இருக்கும். பீரோவில் இருக்கும் பன்னிரெண்டாயிரம் ரூபாய் எவ்வளவு வருடங்கள் ஆனாலும் பன்னிரெண்டாயிரம் மட்டுமே மதிப்பு. காரணம் அந்த பணம் உங்கள் பீரோவில்  இருப்பதால் .யோசித்துப் பாருங்கள். ஆறு மாதம் முன்பு வாங்கிய பொருட்கள் தற்பொழுது அதே விலை கொடுத்தா வாங்குகிறோம்? நிச்சயம் விலை ஏறி இருக்கும். ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிய பொருள் ஒரு வருடத்தில் கொஞ்சமாவது விலை ஏறி இருக்கும். அதாவது, வாங்கும் பொருள் ஒன்றுதான் ஆனால் பணம் அதிகமாக கொடுத்து வாங்குகிறோம்.

பெட்ரோல்-டீசல், கேஸ்  விலை உயர்வு இதற்குச் சிறந்த உதாரணம். இந்த விலை உயர்வுதான் பணவீக்கம்(Infltation) என்று அழைக்கப்படுகிறது.

பொருட்களின் விலை உயர்கிறது! ஆனால், பீரோவில் உங்கள் ஆயிரம் ரூபாய்,  ஆயிரமாகவே இருக்கிறதே! அவையும் உயர வேண்டும் அல்லவா? பீரோவில் வைத்து இருந்தால் எப்படி உயரும்?

வங்கி தான் வாங்கும் வாடிக்கையாளர் பணத்தைப் பலருக்குக் கடன் கொடுத்து அதில் வரும் வட்டியில் நமக்குக் கொடுக்கிறார்கள். அதே வங்கி நம்மிடம் வாங்கிய பணத்தை யாருக்கும் கொடுக்காமல் லாக்கரில் வைத்து இருந்தால் நமக்கு எப்படி வட்டி கொடுப்பார்கள்?  வங்கி தன் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் கொடுக்க முடியும்?

வங்கி செய்வது தான்  முதலீட்டு வகை ஆகும். அந்த முறையை நாமும் செய்யத் தொடங்க வேண்டும். அதற்காக மற்றவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டும் என்று இல்லை. அதைத் தவிர, நிறைய முறைகள் அரசு நமக்கு உருவாக்கிக் கொடுத்து உள்ளது.

முதலீடு என்றால் என்ன?

பணத்தைச் சேமிக்கிறதுக்காக நாம் உழைக்க வேண்டும். நாம் சேமித்த பணம், விலை அதிகமாகும் பொருட்களை வாங்கும் அளவு  நமக்காக வளர வேண்டும்.

பணம் எப்படி வளரும்?  உங்கள் பணம் நீங்கள் செய்யும் முதலீடு வகையில் உங்களுக்காக வளரும்!

உதாரணம் கொண்டு பார்த்தால் எளிதில் புரிந்துவிடும்.

பீரோவில் பணம் வைப்பதற்குப் பதில் வங்கி FD(Fixed Deposit) போடலாம், குறைவான வட்டி வரும் என்றாலும், நீங்கள் சேமித்த பணம் உங்களுக்காக பெருகி சிறிது சம்பாதிக்கும்.

பரஸ்பர நிதியில் (Mutual Fund) முதலீடு செய்தால் கொஞ்சம் அதிகம் சம்பாதிக்கும். வங்கி போன்று நிலையான வருமானம் கொடுக்காது.  குறையலாம்-ஏறலாம்.  ஆனால், வங்கி வட்டியை விட அதிகம் சம்பாதிக்கும்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் உங்கள் பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதால் ஏறிக் கொண்டே போகும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், நீண்ட வருடங்கள் காத்திருந்தால் லாபம் வரவே அதிக வாய்ப்பு.

தினச் செலவுகள், மாதச் செலவுகள், மருத்துவச் செலவுகள் இவற்றுக்கு வேண்டிய பணத்தை மட்டும் பீரோவில் வைத்து இருங்கள். இதைத் தவிர்த்து மீதி இருக்கும் பணம் முழுவதும் முதலீடு செய்து விடுங்கள்.

நம் நாட்டில் அரசு அனுமதியுடன் நிறைய முதலீடு முறைகள் உண்டு. அரசே நிறையச் சேமிப்பு முறைகளையும் உருவாகியுள்ளது ஆனால், பெரும்பாலான மக்களுக்கு இவை எதுவும் தெரிவதில்லை, தெரிந்து கொள்ளவும் விரும்புவதில்லை. அரசும் இதற்கு பெரிதாக முயற்சி எடுப்பதில்லை  அதனால்தான் வட்டி அதிகம் கொடுக்கும் மோசடி கும்பலிடம், சீட்டு மோசடி, க்ரிப்டோகரன்சி மோசடி செய்யும் நபர்களிடம் மாட்டிக் கொள்கிறார்கள்.

அதனால் நாம் முழுமையாக அரசு உருவாக்கிய முதலீடு முறைகள், வங்கிகள் உருவாக்கிய முதலீடு முறைகள், பரஸ்பர நிதி முறைகள் போன்றவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்பான முதலீடுபுரிந்து கொள்ளப்பட்ட  முதலீடு

பொதுவாக அனைவரும் ஒரே குரலில் சொல்வது நாங்கள் சேமிக்கும் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதாக இருக்கும். ஆனால், உண்மையில் நீங்கள் செய்ய வேண்டியது பாதுகாப்பான முதலீடு அல்ல. புரிந்து கொள்ளப்பட்ட முதலீடே ஆகும்.

அது என்ன புரிந்து கொள்ளப்பட்ட  முதலீடு?

நாம் என்ன செய்கிறோம் என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். யாரிடம் பணம் கொடுக்கிறோம் , அவர்கள் அந்த பணத்தை எங்கு முதலீடு செய்கிறார்கள், அரசு அனுமதி வாங்கி உள்ளார்களா? அவர்களின் விதி முறைகள் என்ன? இதில் உள்ள ரிஸ்க் என்ன? போன்ற விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு நம் பணத்தைக் கொடுக்க வேண்டும். இது தான் புரிந்து கொள்ளப்பட்ட முதலீடு ஆகும்.

பாதுகாப்பு என்று ஒரு வாசகத்தை மட்டும் எடுத்துக் கொள்ளாமல், நீங்கள் செய்யும் முதலீடு முழுவதும் தெரிந்து கொண்டீர்களா? புரிந்து கொண்டீர்களா? என்று பாருங்கள்.

இன்சூரன்ஸ் முகவர் சொல்வதால் மருத்துவ பாலிசி எடுக்கிறோம்! ஆனால், அந்த பாலிசியின் நன்மைகள் என்ன? எந்த நோய்க்கு கிளைம் உண்டு அல்லது இல்லை எனத் தெரிந்து கொள்ளாமல் மருத்துவ பாலிசி எடுத்தால் போதும் அனைத்து நோய்களுக்கும் நாம் மருத்துவம் எடுத்துக் கொள்ளலாம் மற்றும்  இன்சூரன்ஸ் நிறுவனமே தொகையைக் கட்டிவிடும்  என்று நினைத்து விடுகிறோம்.  ஆனால், உண்மையில் அப்படி இல்லை என்று நீங்கள்  மருத்துவமனையில் சேரும்பொழுதான் தெரியவரும். .

மருத்துவமனையில் சேரும் போது தான் இதற்கெல்லாம் பணம் தர மாட்டோம் நீங்களே செலுத்த வேண்டும் என்று இன்சூரன்ஸ் நிறுவனம் சொல்லும். உங்கள் பாலிசியிலேயே அதெல்லாம் குறிப்பிட்டு உள்ளோம், முகவர் சொல்லியிருப்பாரே என்று சொல்லி இன்சூரன்ஸ் நிறுவனம் கையை விரிக்கும் பொழுதுதான் நாம் ஏமாற்றப்பட்டிருக்கோம் என்று தெரியவரும்.  அந்த நேரம் நாம் விவாதம் செய்து கொண்டு இருக்க முடியாது. முகவரை அழைத்து சத்தம் போட்டுக் கொண்டு இருக்க முடியாது.

கடன் வாங்கி மருத்துவமனையில் தொகையைக் கட்டி வெளியே வருவோம். ஆக, இந்த பாலிசியை நாம் சரியாகப் புரிந்து கொள்ளாததே முக்கிய காரணம் ஆகும். பெரும்பாலான முகவர்கள்  கமிஷன் அதிகம் கிடைக்கும் வகையில்  விற்பனை செய்வார்கள். நாமும் அவரை நம்பி எடுப்போம். பொதுவாக யாரையும் நம்பி எடுப்பதைவிட எடுக்கும் பாலிசி, செய்யும் முதலீடு  முழுவதும் நமக்குத் தெரிந்து உள்ளதா?  என்று பார்த்து வாங்க வேண்டும்.

முதலீடு வகைகள்

இந்தியாவில் முதலீடு செய்யும் 95 சதவிகிதம் மக்கள் வங்கி FDயில் பணம் போடுவதையே விரும்புகிறார்கள். பாதுகாப்பு, நிலையான வட்டி முக்கிய காரணம் ஆகும். வங்கி பாதுகாப்பு என்பதில் உண்மை என்றாலும், ஒரு வேளை வங்கி திவாலாகி மூடும் நிலை உருவானால், நீங்கள் போட்டுள்ள பணம் ஐந்து லட்சத்திற்கு குறைவாக இருந்தால் திரும்ப கிடைக்கும். அதுவே எவ்வளவு அதிகமாக இருந்தாலும், ஐந்து லட்சத்திற்கு மேல் தரமாட்டார்கள்!

பொதுத்துறை வங்கி,  அஞ்சலகம்  மத்திய அரசு நிறுவனங்களாகும்! அதனால், மக்களுக்கு பாதுகாப்பாக உணர்கிறார்கள். பாதுகாப்பு தான்! ஆனால், அதையும் தாண்டி இருக்கும் பல முதலீடு முறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் இருக்கும் அனைத்து முதலீடு முறைகளும் தொடர்ந்து பார்க்கலாம்.

உங்களுக்கு ஏற்ற முதலீட்டை நீங்களே தேர்ந்து எடுங்கள்

சேமித்த பணத்தில் விலை  உயரும் பொருட்களை வாங்க முடியாது. அதனால் சேமித்த பணத்தை முறையாக முதலீடு செய்து அதன் மூலம் வரும் வருமானத்தைக் கொண்டு பொருட்கள் விலை உயர்ந்தாலும் வாங்க முடியும். இதன் மூலம் விலைவாசி உயர்வை நம்மால் சமாளிக்க முடியும்.

சேமிப்போம்-முதலீடு செய்வோம். தொடர்ந்து பேசுவோம்..!

கட்டுரையாளர்;செழியன் ஜானகிராமன்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time