இந்தியா பிரிட்டிஷாருக்கு அடிமைப்பட்டிருந்த காலத்தை விடவும் தற்போது தான் நம் நாட்டில் அன்னியப் பொருட்களின் ஆதிக்கமும்,அன்னியக் கலாச்சாரத்தின் தாக்கமும் அதிகமாக இருக்கின்றன. அன்று நம் மீது வலிந்து திணிக்கப்பட்ட அன்னியப் பொருட்களை மறுத்தும்,எரித்தும் நம் முன்னோர்கள் போராட்டம் நடத்தினார்கள்.ஆனால், இன்றோ, நாமே நம் மீது அன்னியக் கலாச்சாரத்தையும்,அன்னியப் பொருட்களையும் திணித்துக் கொள்கிறோம்!
குறிப்பாக சிறுதொழில்களையும்,சிறு வியாபாரிகளையும் அழிக்கும் அன்னிய பொருட்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளன.
நமது வீட்டு சமையலறையில் உள்ள பிரிட்ஜ்,வாசிங் மெசின் தொடங்கி ஹாலில் மாட்டியுள்ள கடிகாரம்,உட்காரும் சோபா, பெட்ரூமில் படுக்கை விரிப்பு,பூஜை அறையில் உள்ள பிள்ளையார் பொம்மை,பாத்ரூமில் பக்கெட்,ஷவர்..என எல்லாவற்றிலும் சீனப் பொருட்கள் நீக்கமற நிறைந்துள்ளன! இது மட்டுமின்றி அலுவலகத்தில் பயன்படுத்தும் மேஜை, நாற்காலிகள், ஏர்கண்டிசன்,லேப்டாப்,ஆப்பிள் கம்யூட்டர்,பிரிண்டிங் மெசின் ஆகிய அனைத்திலும் சீனா சிரிக்கிறது. குழந்தைகள் பயன்படுத்தும் பொம்மைகள்,இளைஞர்கள் அணியும் ரீபாக் ஷீக்கள்,செருப்புகள்,டீ சர்ட்ஸ்,கூலிங் கிளாஸ்,பெண்கள் அணியும் வளையல்கள்,பொட்டு ஸ்டிக்கர்,சேலைகள்..அனைவரும் பயன்படுத்தும் செல்போன்கள்…அவ்வளவு ஏன்? துறவிகள் பயன்படுத்தும் யோகா மேட் கூட சீனத் தயாரிப்பாக உள்ளது. அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பு தந்த தகவல்படி சுமார் 3,000 பொருட்களை நாம் சீனாவிடமிருந்து இறக்குமதி செய்கிறோம்.
அன்னிய நாட்டின் ஆக்டோபஸ் கரங்கள்!
இரண்டாயிரமாவது ஆண்டில் சீனாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதியான பொருட்களின் மதிப்பு வெறும் மூன்று பில்லியன்கள் தான்! 2008 ல் இது 51 பில்லியனாகியது.2019 ல் இது 92.7 பில்லியனாகிவிட்டது. தற்போதைய நிலையில் இந்தியாவில் சீனா முதலீடு செய்யாத துறை என்ற ஒன்றை கண்டுபிடிப்பதே கஷ்டம்! அந்தளவிற்கு தன் ஆக்டோபஸ் கரங்களால் சிறு தொழில்கள் முதல் பெரும் தொழில்கள் வரை அது ஆக்கிரமித்துள்ளது! எலக்ட்ரானிக் பொருட்கள் என்று சொல்லப்படும் மின்னணு பொருட்களின் தேவையில் 75% சீனா தான் பூர்த்தி செய்கிறது.இந்திய நிறுவனங்களான வோல்டாஸ் மற்றும் பஜாஜ் எலக்டிரிகல்ஸ் ஆகியவை கூட மூலப் பொருட்களை சீனாவிடமிருந்தே பெறுகின்றன! சீனாவிலிருந்து ஆண்டுக்கு 4.5 லட்சம் கோடி ரூபாய்க்கு மின்னணு சாதனங்கள் இறக்குமதியாகிறது.
Also read
செல்போன் சந்தையில் சீனாவின் ஆதிக்கம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. நமது நாட்டு செல்போன் நிறுவனங்களுமே கூட சீனாவிலிருந்து ஸ்பேர்பார்ட்ஸ் இறக்குமதி செய்து தயாரிக்க முடியும் என்ற நிலையுள்ளது நமது நாட்டின் தாயரிப்பு செல்போன்களை மக்கள் விரும்பாமல் சீனாவின் தயாரிப்புகளையே வாங்குகின்றனர்.அதனால் தான் சீனாவின் செல்போன் நிறுவனங்கள் விளம்பரத்திற்காக மட்டுமே இந்தியாவில் இரண்டாயிரம் கோடிகள் வரை செலவு செய்கின்றனர். நமது சந்தையில் உள்ள பத்து ஸ்மார்ட்போன்களில் எட்டு சீனாவுடையது தான்! குறிப்பாக ஓப்போ,ஜியோமி,விவோ ஆகியவை சீனாவுடையதாகும். மற்றும் எந்த செல்போனிலும் உள்ள ஐ.சி.சிப்புகள், குறைகடத்திகள் ஆகியவை சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றன! நமது அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்றும் தனியார் நிறுவனமான ஏர்டெல் ஆகியவையும் கூட தங்கள் இணையதளத்தின் வேகத்தை அதிகரிக்க சீனாவின் ’ஹீவா’ நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளன. அலுவலகங்கள்,திருமண மண்டபங்கள், தெருக்கள்..என சகல இடங்களிலும் பயன்படுத்தும் சி.சி.டி.வி.கேமராக்கள் பெருமளவு சீனத் தயாரிப்புகளே!
சீனா தான் இந்தியாவை இயக்கி கொண்டுள்ளதா?
இந்தியமக்களில் சுமார் 25 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தும் ஏ.டி.எம் எனப்படும் பணப்பரிவர்த்தனை சீனாவின் தயவில் தான் நடக்கிறது. மேலும் இன்று நடுத்த வர்கத்தினர் பயன்படுத்தும் ’ஓலோ’ எனப்படும் ஆட்டோ,டாக்சி இயங்கு நிறுவனம், ‘ஸ்விக்கி’,’சொமேட்டோ’ எனப்படும் ஓட்டல்களில் இருந்து உணவு தருவித்து தரும் நிறுவனம்.’பிக்பாஸ்கெட்’ எனப்படும் மளிகை சாமான்கள் வாங்க பயன்படுத்தும் ஆப், ‘பிளிப்கார்ட்’ எனப்படும் எந்தவிதமான பொருள்களையும் கடைக்குச் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே தருவித்து தரும் நிறுவனம்,’டென்செண்ட்’ எனப்படும் குழந்தைகள் செல்போனில் விளையாடும் ’பப்ஜி’ போன்ற விளையாட்டுகள்,பலரும் பயன்படுத்தும் ’டிக்டாக்’ செயலி ஆகிய அனைத்தும் சீனநிறுவனங்களின் முதலீட்டிலும்,தொழில் நுட்பத்திலும் நமக்கு கிடைத்தவைகளே!
உயிர் காக்கும் மருந்துகள்!
’பார்மா’ எனப்படும் மருந்து தயாரிப்பில் இந்திய நிறுவனங்கள் உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன என்றாலும் இந்த மருந்துகளை தயாரிக்கும் மூலப்பொருட்களில் பெருமளவு சீனாவிடமிருந்தே பெறப்படுகின்றன! முக்கியமாக உயிர்காக்கும் மிக முக்கிய மருந்துகள் என 12 மருந்துகளை இந்திய அரசாங்கம் பட்டியலிட்டு உள்ளது.சீனாவிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள் இல்லாமல் நாம் இவற்றை தயாரிக்கவே முடியாது என்பது தான் யதார்த்தம்! மருந்துகளை தயாரிக்கும் மூலப்பொருட்களில் 85% சீனாவிலிருந்து தருவிக்கப்படுகிறது ஒரு சில மாதங்கள் நமக்கு இவை சீனாவிலிருந்து வராமல் போனாலும் கோடிக்கணக்கிலான இந்திய நோயாளிகள் நிலை மிக மோசமாகிவிடும்!
அரசுத் துறையிலும் அன்னிய ஆதிக்கம்!
நமது அரசின் ஸ்மார்சிட்டி திட்டங்கள் அனைத்திலும் சீன நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளது! இந்தியாவின் தொலை தொடர்பு சாதனங்கள்,கம்பியில்லா தொலை தொடர்பு சாதனங்கள்,4ஜி டவர்கள்,அணுசக்திக்கு தேவையான இயந்திரங்கள், கச்சா பொருட்கள்,சோலார் உற்பத்திக்கான இயந்திரங்கள், ராணுவத்திற்கான ஒருசில தளவாடங்கள் ஆகிவற்றுக்கு நாம் சீனாவையும்,அமெரிக்காவையும் சார்ந்துள்ளோம்! இந்தியாவில் விவசாயிகள் பயன்படுத்தும் உரங்களில் 25 சதவிகிதம் சீனாவிடமிருந்தும் மேலும் 25 சதவிகிதம் மற்ற பல நாடுகளில் இருந்தும் இறக்குமதியாகின்றன.இந்தியாவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மற்றும் களைகொல்லி மருந்துகள் பெருமளவு வெளி நாட்டில் இருந்து தான் இறக்குமதியாகின்றன.ஆக,இந்திய விவசாயமே அன்னிய நாட்டைச் சார்ந்து தான் இயங்க முடியும் என்ற அவல நிலையில் உள்ளது.
உணவுக் கலாச்சாரம் உருக்குலைந்தது
இந்தியாவில் பயன்படுத்தும் சமையல் எண்ணெய்யில் மூன்றின் இரண்டு பங்கு வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகிறது. நமது நாடு நிலக்கடலை உற்பத்தியில் உலகிலேயே இரண்டாவது பெரிய நாடாக இருந்தும்.அவை பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டுவிடுகின்றன. நமது நாட்டின் உணவு கலாச்சாரத்திற்கே பொருந்தாத பாமாயில்,ரீபைண்ட் ஆயில் ஆகியவை மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. செக்கில் ஆட்டி நல்லெண்ணெய்,கடலை எண்ணெய்,தேங்காய் எண்ணெய் ஆமணக்கு எண்ணெய், இலுப்பை எண்ணெய்…அகியவற்றை ஆங்காங்கே வழங்கி வந்த சிறு உற்பத்தியாளர்கள் காலபோக்கில் காணாமலடிக்கப்பட்டனர்.அவற்றை மீண்டும் புதுப்பித்தால் தான் நாம் ஆரோக்கியமாக வாழமுடியும். அதன் மூலம் சிறு உற்பத்தியாளர்களையும் வாழ வைக்க முடியும்.சிறு உற்பத்தியாளர்கள்,சிறு வியாபாரிகள் ஆகியோர்களை மையமாகக் கொண்ட பொருளாதார, சமூக கட்டமைப்பை வலுப்படுத்தும் ஆட்சியாளர்களே நமது தேவையாகும்.
(சுதேசி வணிகர் முழக்கம் இதழுக்காக எழுதியது)
Leave a Reply