பாஜக அரசின் பகடைக் காய்களா? காஷ்மீர் பண்டிட்டுகள்!

ச.அருணாசலம்
??????????

அடுத்தடுத்து காஷ்மீர் பண்டிட்டுகளின் படு கொலைகள்! ”காஷ்மீரின் சமூக உறவுகளை புரிந்து கொள்ளாமல், அரசியல் உள் நோக்கங்களுக்காக ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் செய்யும் அரசியலே இன்று நாங்கள் மீண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, வெளியேறும்படி தள்ளப்பட்டு உள்ளோம்” என்கிறது காஷ்மீர் பண்டிட்  கங்க்ரஷன் சமிதி !

காஷ்மீரில் கடந்த ஒரு மாதத்திற்குள்ளாக 10 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதில், 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்களாவர். மீண்டும் காஷ்மீர் பண்டிட்டுகள் மீதான தாக்குதல்கள் ஆரம்பித்துள்ளது! இதைத் தான் பாஜக அரசு விரும்பியதா..? என்ற சந்தேகம் காஷ்மீர் பண்டிட்டுகள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது.

பாஐக மற்றும் ஆர் எஸ் எஸ் கூட்டம் காஷ்மீர் பிரச்சினையை எப்போதுமே ஒரு அரசியல் பிரச்சினையாக நினைக்கவில்லை. தொடக்க முதலே அவர்கள் இப் பிரச்சினையை ஒரு மத சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவே, சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையாகவே பார்த்தனர், அணுகினர் . காஷ்மீர் பிரச்சினை ஒரு மாநில மக்களின் அரசியல் உரிமைகள், கலாச்சார உணர்வுகள் மற்றும் உரிமைகள் சம்பந்தப்பட்டது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவும் இல்லை, ஏற்றுக் கொள்ளவும் இல்லை.

”காஷ்மீர் என்றாலே கலவர பூமி, முஸ்லீம்கள் என்றாலே தீவிரவாதிகள், பாகிஸ்தான் ஆதரவாளர்கள்” என்ற பரப்புரையை பாஜகவும் பெரும்பாலான ஊடகங்களும் – பத்திரிக்கைகள் மற்றும் டி.வி. சேனல்கள் – தொடர்ந்து மேற் கொண்டது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாக அமைந்ததே ஒழிய, காயங்களை குணப்படுத்தவில்லை.

”காஷ்மீரில் சுற்றுலா பயணிகள் குவிகின்றனர், இனி புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை சீசன் தொடங்க உள்ளது. அமைதியும் சகஜ நிலையும் மீண்டும் காஷ்மீரத்தில் திரும்பி உள்ளது….” என்று பலவாறாக கதைக்கப்பட்ட கூற்றுக்களை பொய்யாக்கும் வண்ணம் காஷ்மீர் பண்டிட் வகுப்பை சார்ந்த காஷ்மீர் இந்துக்கள்  “நாங்கள் காஷ்மீரைவிட்டு வெளியேறுகிறோம், எங்களுக்கு வழி விடுங்கள்” என்று கதறுகின்றனர் .

காஷ்மீர் பண்டிட்டுகளின் கோபம் அனைத்தும் ஒன்றிய பாஜக அரசு மீது திரும்பியுள்ளது. அவர்களின் வீதி போராட்டங்களின் கோஷங்கள் ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுனர் மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சகத்திற்கு எதிராக உள்ளது!

‘காஷ்மீர் பண்டிட் பிரிவு மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு தீர்வு காண்கிறோம்’ என்பதன் பெயரில், ‘இவர்களது வாழ்வை வளப்படுத்தவும் நாடு திரும்பவும் உதவுகிறோம்’ என்ற பெயரில் பாஜக அரசு 2019 ஆகஸ்ட் 5ல் காஷ்மீர் மாநில தனி அந்தஸ்தை ரத்து செய்து , அரசியல் பிரிவு 370 கொடுத்த பாதுகாப்பை விலக்கி உத்தரவிட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் உடைக்கப்பட்டு இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு சிறுமைபடுத்தப் பட்டது.

ஆனால், அதே பண்டிட் வகுப்பினர், ”இன்று நிரந்தரமாக காஷ்மீரை விட்டு நாங்கள் வெளியேறுகிறோம்” என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன?

2020 ல் பஞ்சாயத்து தேர்தல் வந்தது! ஆனால், அந்த தேர்தலை ஜன நாயகமாக நடத்த பாஜக அரசு அனுமதிக்கவில்லை. பஞ்சாயத்து தேர்தல்களில் -அனைத்து எதிர்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்து சிறையிலடைத்தனர்! சிறை கொள்ளாமல் பலரை வீட்டுக்காவலில் வைத்த நிலையில் பஞ்சாயத்து தேர்தல்களை நடத்தி முடித்தனர்!

இது தான் பிரச்சினையின் ஆரம்பம்! போலியாக நடத்தப்பட்ட தேர்தல்களில் “தேர்வு” செய்யப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களை ஏற்க முடியாத நிலை மக்களுக்கு ஏற்பட்டது. இந்தச் சூழலில் தான் பஞ்சாயத்து தேர்தல்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சிலரை தீவிரவாதிகள் கொன்றனர். ஒருசில பண்டிட்  வகுப்பு  நபர்களும் கொல்லப்பட்டனர் . 1990 களில் நடந்த இனப் படுகொலைகளை மறக்க காஷ்மீர் பண்டிட் வகுப்பு மக்கள் விரும்பினாலும் , அப்பொழுது ஊரைவிட்டு ஓடாமல் இருந்த இடத்திலேயே வாழ்ந்துவந்த பிரபல மருந்தாளுநர் மக்கன்லால் பிந்துரூ சில தினங்களுக்கு முன் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பழைய விரும்பத்தாகாத நினைவுகளை பண்டிட்  மக்களிடையே ஏற்படுத்தியது.

மே மாதம் 12ம் தேதி  ராகுல் பட் என்ற வருவாய்துறை அதிகாரி அலுவலகத்திலேயே கொல்லப்பட்டார் ; ஜூன் 1 அன்று  ஆசிரியர்  ரஜினி பாலா  பணிக்கு செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டார்; ஜூன் 2 அன்று விஜய் குமார் என்ற வங்கி ஊழியர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

 1990களில் நடந்ததைப் போன்று துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் காஷ்மீர் தெருக்களில் இல்லை, பெரிய ஆர்ப்பாட்டங்கள் இல்லை, அரசியல் கிளர்ச்சிகள் இல்லை, ஊர்வலங்கள், போராட்டங்கள் இல்லை, ஏன், சிறுவர்கள் கூட இன்று கல்லெறிவதில்லை!  இன்னும் கூறுவதென்றால், முன்னாள் பிரிவினைவாதியும், இன்னாள் காந்தியவாதியுமான யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை கடந்த வாரம் வழங்கியதை கண்டிக்கும் வண்ணம் 24 மணி நேர அமைதியான கடையடைப்பு நடந்தாலும், கோஷங்கள் ஏதுமில்லை, வன்முறை சிறிதும் இல்லை. நகர்ப்புற வாழ்க்கை சகஜ நிலையிலும் அமைதியாகவும் நகர்கிறது எனலாம்! ஒரேயொரு வித்தியாசம் இந்த குறி வைத்து கொல்லும் சம்பவங்கள் தான்.

தீவிரவாதம் ஒடுக்கப்பட்டது, கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று ஆள்பவர்களும் ராணுவ அதிகாரிகளும் கூறினாலும், அது- தீவிரவாதம்- புதிய பரிமாணத்தை  எட்டியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.

பதினெட்டு காஷ்மீர் பண்டிட்வகுப்பு மக்கள் 2019 ஆகஸ்டு முதல் இன்றுவரை குறிவைத்து கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் நடந்த மூன்று கொலைகளுக்கும் TRF  The Resistance Front ( எதிர்ப்பு முன்னணி) என்ற அமைப்பினர் பொறுப்பேற்று உள்ளனர். இவர்கள் புதிதாக ஏற்பட்ட அமைப்பாக தோன்றுகிறது, அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் காஷ்மீர் பண்டிட்களுக்கு குறிப்பாக பிரதமர் நிவாரணத்திட்ட பயனாளிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக உள்ளது.

இந்திய அரசின் கைக்கூலிகளான, கூட்டாளிகளான (Collaborators)காஷ்மீர் பண்டிதர்கள், இந்துக்கள் காஷ்மீரத்தைவிட்டு உடனடியாக வெளியேற வேண்டும், வெளியேறத் தவறினால்  மரணம் நிச்சயம் என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால், இந்தப் படுகொலைகள் இந்துக்களை தாக்குவதோடு நின்றுவிடவில்லை என்பது உண்மை. முஸ்லீம் மதத்தை சார்ந்த டி.வி. புகழ் அம்ரீன் பாட், தனிப்படை அதிகாரியான முடாசிர் அகமது, பரூக் அகமது ஷேக் போன்றோரும் சமீபத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜூன் 2ந்தேதி குமார் கொலையை தொடர்ந்து முடாசிர் அகமதுவும் கொல்லப்பட்டுள்ளார் .

மத்திய பாஜக அரசால் பொறுப்பற்ற நடவடிக்கைகளே இன்று காஷ்மீரில் நிலவும் அரசியல் சமூக சூழ்நிலைகளே இத்தகைய தீவிரவாதிகளை உருவாக்கி அவர்கள் புதுப்புது உத்திகளை கையில் எடுக்க காரணமாகின்றன!  இதன்விளைவாக பெருங் கலக்கத்திற்கு ஆளாயிருக்கும் பண்டிட்  சமூக மக்கள் பொறுமையிழந்து இன்றைய ஆட்சியாளர்களை சாடியுள்ளனர். காஷ்மீர் பண்டிட்  கங்க்ரஷன் சமிதி Kashmir Pandit Sangrashan Samithi KPSS  என்ற காஷ்மீர் பண்டிட்டுகள் அமைப்பு ”மோடி அரசு கடைப்பிடிக்கும் காஷ்மீர் கொள்கைதான் தங்களது அனைத்து இன்னல்களுக்கும் காரணம்” என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை முஸ்லீம் மக்களை உள்ளடக்கிய தனிக்கலாச்சாரமிகுந்த காஷ்மீர் மக்கள்மதத்தின் பேரால் ஏற்படுத்தப்பட்ட பாகிஸ்தானுடன் இணையாமல் மதச்சார்பு இன்றி அனைவருக்கும் சம உரிமைகள் வழங்கிய இந்திய சட்டம் சார்ந்த ஜனநாயகத்தில் தம்மை இணைத்துக் கொள்ள சில நிபந்தனைகள் விதித்து அதை இந்தியா ஏற்றுக் கொண்டதன் பேரில் இந்திய ஒன்றியத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்த உண்மையை ஏற்காமல், ”தனி அந்தஸ்து எதற்கு?, தனி உரிமை எதற்கு?” என்று குதர்க்க வாதம் பேசிய சியாமா பிரசாத் முகர்ஜி பேரினவாத்த்தையும் பெரும்பான்மைவாத்தையும 1954ல் முன் வைத்தார் . ஆனால் அன்று நிராகரிக்கப்பட்ட அவரது மத துவேசம் 2014ல் “புத்துயிர்” பெற்றது.

2014 முதல் 2019 வரை பல முகமூடிகள் அணிந்து ஜம்மு காஷ்மீர் ஆட்சியிலும் பி டி பி கட்சியுடன் இணைந்து பா ஜ  கட்சி பங்கு பெற்றது.

2019ல் நாடாளுமன்ற தேர்தலில் கிடைத்த வெற்றிக்குப்பின் மகபூபா ஆட்சியை கவிழ்த்துவிட்டு மாநிலத்தின் முழு நிர்வாகத்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த மோடி அரசு ஆகஸ்ட் 5ந்தேதி அரசியல் பிரிவு 370ஐ ரத்து செய்து காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிளந்து யூனியன் பிரதேசங்களாக சிதைத்தது.

தனது திட்டத்தை நிறைவேற்ற இரு வகையான அணுகுமுறையை மோடி அரசு மேற்கொண்டது.  ஒருபுறம் அனைத்து எதிர்ப்புகளையும் , மாறுபட்ட எண்ணங்களையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியதாகும்! மறுபுறம் மாநில நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் காஷ்மீரிகளை ஒதுக்கிவிட்டு  காஷ்மீரல்லாதவர்களையும் , வேறு மாநிலத்தவரையும் அப் பதவிகளில் அமர்த்தியதாகும்!

இதன்மூலம் ஜனநாயகம், பேச்சுவார்த்தை, சட்டரீதியான,மனிதாபிமான அணுகுமுறைகளுக்கு விடை கொடுத்து முரட்டு போக்கை (Muscular Attitude )காஷ்மீர் பிரச்சினையில் கடைப் பிடித்தது மோடி அரசு. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் ராணுவத் துருப்புகள் உள்ள இடம் காஷ்மீராக மாறியும் நிலைமை சீராகவில்லை. இதற்கு மேலும் வலுவூட்டும் விதமாக அரசு நிர்வாக மற்றும காவல்துறைகளில் காஷ்மீரிகளை களையெடுத்தது காஷ்மீர மக்களுக்கும் அதன் அரசு நிர்வாகத்திற்கும் இடைவெளியை அதிகப்படுத்தியது.

காங்கிரஸ் காலத்தில் புலம்பெயர்ந்த இந்து காஷ்மீர் பண்டிட்கள் மறுவாழ்விற்கு உதவ ஏற்படுத்தப்பட்ட நிவாரண திட்டத்தின்படி பல உதவிகள் வழங்கப்பட்டன! ஆனால், மோடி அரசு அமைந்து எட்டு வருடங்கள் ஆகியும், இந்து காஷ்மீர் பண்டிட்டுகளுக்காக எந்த நிவாரணமும் அளிக்கவில்லை , எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.

காஷ்மீர் தடாலடி நடவடிக்கைகளை முன்னிறுத்தி பாஜக பல மாநில தேர்தல்களில் ஆதாயம் அடைந்தது வேண்டுமானால் பக்த பெருங்கோடிகளுக்கு இனித்திருக்கலாம். ஆனால், காஷ்மீர் மக்கள் இந்தியா முழுமையிலும் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு கீழ்த்தரமாக எவ்வித உரிமைகளுக்கும் தகுதியில்லாதவர்களாக நடத்தப்பட்டனர் . இது காஷ்மீருக்கும் இந்தியாவிற்கும் இடையேயான பிணைப்பை பெருமளவு சேதப்படுத்தி உள்ளது!

வேறு மாநிலங்களில் தங்கி பயிலும் காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்படுவதும், சிறுமைபடுத்தபடுவதும் ஆளும்கட்சியினரின் ஆசியுடன் நடந்தேறியது. இத்தகைய வெறுப்பு அரசியலை விதைக்கும் பாஜக , காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை தனது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியது! அது காஷ்மீரில் மேலும் பதட்டத்தை உருவாக்கி பரஸ்பர இணக்கத்தை சீர் குலைக்கவே உதவியது.

அரசியல் பிரிவு 370ஐ விலக்கியதன் மூலம் காஷ் மீர் பண்டிட்கள் வீடு திரும்புவர் ராணுவ நடவடிக்கைகள் மூலம் காஷ்மீர் எதிர்ப்பாளர்களையும் தீவிரவாதிகளையும் ஒடுக்கிய பின்னர் அமைதி பள்ளத்தாக்கிற்கு திரும்பும் என்று தம்பட்டமடித்த பாஜக இன்று செய்வதறியாது முழிக்கிறது.

காஷ்மீர் பண்டிட்கள் மோடி அரசின் முரட்டுத்தனமான அடக்குமுறை அரசியலை முதலில் பெரிதும் வரவேற்றனர்! ஆனால், இன்று தங்களது வாழ்விற்கும் உயிருக்கும் மோடி அரசால் உத்தரவாதம் வழங்க இயலாது என்ற பின் காஷ்மீரை விட்டு வெளியேற துடிக்கின்றனர், அதற்காக போராடி வருகின்றனர். பாஜக அரசின் பகடைக் காயாக இருக்க அவர்கள் விரும்பவில்லை!

தொகுதிகள் சீரமைப்பின் மூலம் (Delimitation) மூலமும் வேறுசில வழிகள் மூலமும் ஜம்மு பகுதியை முதன்மை படுத்தவும் முஸ்லீம் மக்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளதாக்கு பகுதியை (Kashmir Valley) சிறுமைப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, அவை முடியும் தருவாயில் உள்ளன, அதைத்தொடர்ந்து பண்டிட்டுகளும் இந்துக்களும் பெருமளவு குடியேற வேண்டும். அதுவே நமது இலக்கு என்று பாஜக ஆர் எஸ் எஸ் கூட்டம்  அதை நோக்கி திட்டமிட்டு காய்கள் நகர்த்துவதற்கு எதிர்வினையாக காஷ்மீர் தீவிரவாதிகள் பண்டிட்களை தாக்கி வருகின்றனர்.

எதிர்கட்சிகளின் ஆலோசனைகளையும் அனுபவம் நிறைந்தவர்களின் கருத்துக்களையும் புறந்தள்ளி தனது குறுகிய அரசியல் ஆதாயம் ஒன்றையே குறியாக கொண்டு, சேணமிட்ட மட்டக் குதிரையாய்  மோடி அரசு நடந்து கொள்வது மாறும் போது தான் காஷ்மீரில் நிலைமை சீராகும்!

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time