பாலியல் தொழிலை அங்கீகரிக்கிறதா நீதிமன்றத் தீர்ப்பு!

-பீட்டர் துரைராஜ்

‘ஒரு பெண் தன்னார்வத்துடன் கொள்ளும் பாலியல் உறவு குற்றமாகாது, சட்டத்திற்கு புறம்பாகாது, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை கண்ணியக் குறைவாக யாரும் நடத்தக் கூடாது’ என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது! மிக நுட்பமாக புரிந்து கொள்ளப்பட வேண்டிய இந்த தீர்ப்பு குறித்து சில பெண் ஆளுமைகளின் கருத்து!

”என்னமோ கற்பு, கற்பு என்று கதைக்கிறீர்களே, இது தான் ஐயா பொன்னகரம்” என்று ஒரு புகழ்பெற்ற கதை முத்தாய்ப்பாக முடியும். அடிபட்டு கிடக்கும் தன் கணவனுக்கு பால், கஞ்சி வாங்குவதற்காக, அம்மாளு இருளில் ஒதுங்கி முக்கால் ரூபாய் சம்பாதிப்பாள். புதுமைப்பித்தன் 1934 ல் எழுதிய கதை ‘பொன்னகரம்’.

புதுமைப்பித்தன் காட்டிய பரிவுணர்வை உச்சநீதிமன்ற நீதிபதி எல்.நாகேசுவர ராவ் தலைமையிலான அமர்வு பாலியல் தொழிலாளர் மீது வெளிப்படுத்தி உள்ளது. ‘சம்மதத்தோடு நடைபெறும் பாலியல் தொழில் குற்றமாகாது. அதற்காக பாலியல் தொழிலாளர்களை கைது செய்யக் கூடாது’ என்று உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தின் கீழ் தீர்ப்பளித்துள்ளது.

மேற்குவங்கத்தைச் சேர்ந்த புத்ததேவ் கர்மேஸ்கர் தாக்கல் செய்த வழக்கில் பிரதீப் கோஷ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று உச்ச நீதிமன்ற நீதிபதி எல். நாகேஷ்வரராவ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பு நீதிமன்ற வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும்!

பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுபவருக்கு உடனடியாக சட்ட உதவிகளும்,மருத்துவமும் வழங்க வேண்டும்.

விருப்பத்திற்கு மாறாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பெண்கள் குறித்து ஆய்வு செய்து அவர்களை குறிப்பிட்ட காலத்திற்குள் விடுவிக்க வேண்டும். கைது, ரெய்டு, மீட்பு நடவடிக்கைகளின் போது அவர்களின் புகைப்படங்கள் அச்சில் வராமலும், வீடியோவில் அடையாளம் காட்டாமலும் கவனமாக காவல்துறை கையாள வேண்டும்.

கண்ணியமாக வாழும் உரிமை, அரசியல் அமைப்புச் சட்டப்படி, பாலியல் தொழிலாளர்களுக்கும் உள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வரும் ஒரு பாலியல் தொழிலாளி, புகார் அளித்தால், அதனை மற்ற புகார்களைப் போலவே கருதி  குற்றவியல் சட்டமுறைப்படி நடக்கவேண்டும். பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளை அவர்களிடம் இருந்து பிரிக்கக் கூடாது’’ என்றும் கூறியுள்ளது.

பாலியல் தொழிலை வறுமையில் இருந்து மீள்வதற்கும், வேறு வேலைகள் கிடைக்காத நிலையில் செய்து வாழும் படியாகவும் தள்ளப்பட்ட லட்சோப லட்சம் பெண்களை பாதுகாப்பது குறித்து தான் நீதிமன்றம் அக்கறை காட்டியுள்ளது! அதே சமயம் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபட வைத்து நிறுவனமயமாகச் செய்யப்படும் விபச்சாரத்தை குற்றம் என்றே கூறியுள்ளது! இந்த தீர்ப்பு பலவிதமான எதிர்வினைகளை உருவாகியுள்ள நிலையில், ”இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’’ என்று சிலரிடம் கருத்து கேட்டோம்.

“பாலியல் தொழில் கூட ஒரு தொழில்தான் என்று தீர்ப்பு கூறுகிறது. ( தீர்ப்பில் அவ்வாறு இல்லை) அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. மனித சமுதாயத்திற்கு தேவையான ஒன்றை உற்பத்தி செய்வதுதான்  தொழில். பாலியல் தொழில் என்பது ஒரு ஆக்கப்பூர்வமான உழைப்பு இல்லை. பெண்களை நுகர்வுப் பண்டமாக பார்ப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எப்படி வறுமையின் காரணமாக ஒருவன் திருடினான் என்பதை ஒப்புக்கொள்ள முடியாதோ. அதே போல பாலியல் உறவை ஒரு தொழில் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

கொற்றவை

ஆண் – பெண் விகிதம் சமுதாயத்தில் குறைவாக இருக்கிறது. எனவே, பாலியல் தொழிலை  அங்கீகரிக்கலாம் என்ற வாதமும் தவறு. அப்படியானால் பழைய காலத்தில் இருந்தது போல இரண்டு பேரை திருமணம் செய்யலாமா ? தேவதாசி முறையின் அடுத்த வடிவம்தான் பாலியல் தொழில். முதலாளித்துவத்தின் கையாலாகாதத்தனம் தான் பாலியல் தொழில்” என்று தடாலடியாக பேசினார்  ‘உழைக்கும் மகளிர்’ உள்ளிட்ட நூலை மொழிபெயர்த்த எழுத்தாளரான கொற்றவை.

“பாலியல் தொழிலை ஒரு தொழில் என்று உச்சநீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை. இப்போதும்  பாலியல் தொழில் விடுதி வைத்திருப்பது குற்றம் தான். விருப்பத்தின் பேரில் பாலியல் தொழில் செய்வது குற்றமில்லை. அதற்காக காவல்துறை ஒருவரை கைது செய்யக் கூடாது என்று கூறியுள்ளது. ஆனால்  விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு நடந்ததா? அல்லது கடத்தி வந்த பெண்களை வைத்து விபச்சாரம் நடந்ததா? என்பதை பிரிக்கும் எல்லைக்கோடு என்பது தெளிவற்றதாக உள்ளது.

பிருந்தா சீனிவாசன்

இந்தியாவில் கிட்டத்தட்ட ஒன்பது இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் (பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள மாற்றுப் பாலினத்தவரும் சேர்த்து) உள்ளனர். இவர்களுக்கு இந்த தீர்ப்பு ஓரளவு நிவாரணத்தைத் தரும். ஆனால் காவல்துறையினர் இந்த தீர்ப்பை எப்படி அமலாக்குவார்கள் என்று சொல்ல முடியாது. உதாரணமாக,  குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கும் போஸ்கோ சட்டம்   குறித்து காவல் துறையினருக்கு இன்னும் போதுமான விழிப்புணர்வு  இல்லை. பாலியல் தொழிலுக்கு ஒரு பெண் ஏன் செல்கிறாள் என்பதற்கான  அடிப்படையான காரணத்தை இந்தத் தீர்ப்பு ஆராயவில்லை. மத்திய அரசும், மாநில அரசும் பாலியல் தொழிலாளர் வாழ்வுரிமைக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார் மகளிர் உரிமை குறித்து எழுதி வரும் பத்திரிகையாளரான பிருந்தா சீனிவாசன்.

“ஒன்றிய அரசின் கீழ் உள்ள  நிர்பயா நிதியத்தில் பணம் உள்ளது. அதனை பாலியல் தொழிலாளர்களின் வாழ்வுக்கு,  சுகாதார காப்பீட்டிற்கு, மனநலத்திற்கு, குழந்தைகளின் கல்விக்கு செலவழிக்க வேண்டும்.

சில சம்பவங்களை நான் கள ஆய்வின் போது பார்த்து இருக்கிறேன். காவல் துறையினர் பாலியல் தொழிலாளர் புகாரை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாலியல் தொழிலாளி வாடிக்கையாளரால் பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால், அதை விட,  காவல் துறையினரால் பாதிக்கப்படுவது அதிகம். எனவே, இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை நான் வரவேற்கிறேன்.

கீதா நாராயணன்

பாலியல் தொழிலை குற்றமற்றதாக்கியது (Decriminalise)  நல்லது தான். ஆனால், அதனை ஒரு தொழிலாக (Pofession) ஏற்றுக் கொள்ள முடியாது. ஒரு தொழிலில் சம்பளமும், கண்ணியமும் இருக்க வேண்டும். இந்த தொழிலில் கண்ணியம் இல்லை. அப்படி இருந்தும் வறுமை காரணமாகவே, விளிம்பு நிலை மகளிர் இதில் ஈடுபடுகின்றனர். எனவே, வறுமையை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாய்லாந்தில், சுற்றுலாவின் ஒரு பகுதியாகவே பாலியல் தொழில் இருக்கிறது. இதனால் மன நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நேபாளத்தில் இருந்து சிறு வயது பெண்களை அழைத்து வந்து தில்லியிலும், மும்பையிலும் இந்தத் தொழிலில் ஈடுபடுத்துவர். இவர்களுக்கிடையில் இருக்கும் தொடர்புகள் அதிகம். எனவே ஒருத்தி அவள் தன் விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலைச் செய்தாள் என்பதை சொல்ல வைப்பது எளிது.

பாலியல் தொழிலாளர் தமது உடல்வலியைக் குறைக்க மது, போதை போன்ற பழக்கத்திற்கு ஆளாவது இயல்பாக இருக்கும். இதனால் சிறுவயதிலேயே அவர்கள் குழந்தைகளும் மதுப் பழக்கத்திற்கு ஆளாகிவிடுவர். பாலியல் தொழிலாளர்களுக்கான சங்கம் வெளிப்படையாக இயங்க முடியாது. எனவே, அவர்கள் பிரச்சினைகள் வெளியே தெரிவதில்லை. பாலியல் தொழிலாளர்களுக்கென சிறப்பான திட்டத்தை அரசு அறிவிக்க வேண்டும் ” என்றார் ஆய்வாளரான கீதா நாராயணன்.

கோரிக்கைக்காக ஊர்வலம் நடத்திய பாலியல் தொழிலாளர்கள்!

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் தங்களுக்கு நிவாரணம் கோரி உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதன் விளைவாக மேற்சொன்ன தீர்ப்பு வந்துள்ளது. இந்த வழக்கின்  விசாரணை தொடர்ந்து நடைபெறும். ஏற்கனவே பாலியல் தொழிலாளர் குறித்து ஆராய ஒரு குழுவை ஒன்றிய அரசு அமைத்துள்ளது. அந்த அறிக்கை மீது ஒன்றிய அரசு முடிவெடுக்கவில்லை. இந்நிலையில் உச்சநீதிமன்றம் இவ்வாறு இடைக்கால தீர்ப்பளித்து உள்ளது.

குறைந்த பட்ச ஊதியத்தை அனைவருக்கும் உறுதி செய்தல், அனைவருக்கும் இலவசக் கல்வி, மருத்துவ வசதி, வீட்டு வசதி, ஓய்வு ஊதியம் போன்ற மக்களின் ஆதாரத் தேவைகளை உறுதி செய்யும் ஒரு சமுதாயம்தான் வறுமைக்காக ஒருவர் பாலியல் தொழிலில் ஈடுபடுவதை தடுக்கும்.

உச்சநீதிமன்றம் தற்போது வழங்கியுள்ள தீர்ப்பு நீண்ட நெடுங்காலமாக இந்த சமூகம் பாலியல் தொழிலில் ஈடுபடுவர்கள் குறித்த பார்வையை மாற்றியுள்ளது. இதனை முழுமையாக அமலாக்குவதும், கீழ்மட்டம் வரையில் கொண்டு சேர்ப்பதும்  மத்திய, மாநில அரசுகளின் வேலை. எது குற்றம்? எது குற்றமில்லை என்பது குறித்த தெளிவை காவல் துறையினருக்கு தர வேண்டும். அதற்கு அழுத்தம் தர வேண்டியது இங்குள்ள சிவில் அமைப்புகளின் கடமை! உச்சநீதிமன்ற நீதிபதிகளான எல்.நாகேசுவரராவ், பி.ஆர். கவாய், ஏ.எஸ்.கோபண்ணா நவீன சிந்தனையுடன் தீர்ப்பளித்துள்ளனர். இது எத்தகைய மாற்றங்களை கொண்டு வரும் என்பது போகப் போகத்தான் தெரியும்.

கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time