இந்தியாவிற்குள் தான் பாஜகவின் வெறுப்பு அரசியல் பாச்சா பலிக்கும்! இறை தூதரான நபிகள் நாயகத்தைக் கேவலமாகப் பேசியதால் 57 நாடுகளின் இஸ்லாமிய கூட்டமைப்பு ,வளைகுடா நாடுகள், மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவை கடுமையாக கண்டித்தவுடன் பாஜக அரசு அதிர்ந்தது! ஏனென்றால், அதன் விளைவுகள் நினைத்துப் பார்க்க முடியாதவை!
பிரபல “டைம்ஸ் நௌ”-Times Now- டி.வி. சேனலில் கடந்த மே மாதம் 26ந்தேதி ஒரு விவாதம் – தி கியான் வாப்பி ஃபைல்ஸ் என்ற தலைப்பில் – ஒளிபரப்பானது. இதில் பங்கெடுத்த திருமதி. நுபூர் சர்மா என்ற பா ஜ கவின் தேசிய செய்தி தொடர்பாளர் முஸ்லீம் மக்களால் பெரிதும் போற்றப்படும் நபிகள் நாயகத்தை தரந்தாழ்ந்து, கேவலமாக தரக்குறைவாக ஆபாசமாக வருணித்து வசை பாடினார். இஸ்லாம் மதத்தை குறித்தும் மிக இழிவாக விமர்சித்தார். இதையே அட்சரம் பிசகாமல் டெல்லி பாஜ கட்சி செய்தி தொடர்பாளர் நவீன் குமார் ஜிண்டால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
இந்த அருவருக்கத்தக்க கேவலமான செயலை “அல்ட் நியூஸ் ” முகம்மது ஜுபேர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார். முஸ்லீம்களை பழிப்பதும் இழிவாக நடத்துவதும், வழக்கமானது தானே! இதில் என்ன விசேஷம் என சிலர் நினைக்கலாம் .
ஆனால் அமைதியாக இருந்து கொண்டு இப்படி எல்லாம் சிலரை தூண்டிவிடும் மோடியின் தந்திரம் எப்படியெல்லாம் விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை பாருங்கள். வசைபாடிய திருமதி. நுபுர் சர்மாவின் எண்ணற்ற பாலோயர்களில் நரேந்திர மோடி முதன்மையானவர், அடுத்த முக்கிய நபர் அமீத்ஷா தான்.
நுபுர் சர்மாவின் இந்த இழிவான பேச்சை அம்பலத்திற்கு திரு. முகம்மது ஜுபேர் கொணர்ந்தபின் நாடு முழுவதும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்தன, ஆனால் பா ஜ க தலைமையிலிருந்து கண்டனக் குரல் வரவில்லை, மாறாக உள்துறை அமைச்சர் அமீத் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். பாஜகவின் ட்ரோல் கும்பலோ முகமது ஜுபேர் மீது சேற்றை வாரி இறைத்து வசை பாடியது. எருமை மாட்டுத் தோலளர்களுக்கு எதுவும் உறைக்கவில்லை ஜூன் 5ந்தேதி வரை.
ஆம், ஜூன் 5 அன்று முதலில் கட்டார் நாடும் பின் குவைத் நாடும் அதற்குப் பின் ஐக்கிய அரபு நாடுகள், சௌதி அரேபியா இரான் , மலேசியா, இந்தோநேஷியா என உலகெங்கிலும் இருந்து கண்டனங்களும் எச்சரிக்கையும் எழுந்தன. அந்தந்த நாடுகளில் இருந்த இந்திய தூதர்கள் அழைக்கப்பட்டு அவர்களிடம் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
மாநிலங்களவையின் தலைவரும் , துணை குடியரசு தலைவருமான திரு. வெங்கையா நாயுடு கட்டார் நாட்டிற்கு விஜயம் செய்து அதன் தலைநகர் தோகாவில் இருக்கும் பொழுது தான் இந்தக்கண்டன கடிதம் இந்திய தூதரிடம் கொடுக்கப்பட்டுள்ளது! எல்லா விதிகளுக்கும் புதுப்புது வியாக்கியானமும் விளக்கமும் கொடுக்கும் வெங்கையா இதற்கு என்ன கூறப் போகிறார்?
எழுந்த கண்டனங்களை அடுத்து அதன் பின் விளைவுகளை கருதி இந்திய அரசு அவசர அவசரமாக ஒரு சப்பைக் கட்டை முன் வைத்துள்ளது.
பாஜ கவின் பொதுச்செயலாளர் (?) அருண்சிங் பெயரில் ஒரு அறிக்கை நுபூர் சர்மா மற்றும் நவீன் குமார் ஜின்டால் ஆகியோரை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிவிட்டார்களாம்! அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கும், கட்சிக் கொள்கைக்கும் சம்பந்தமில்லையாம்! இப்படி பொத்தாம் பொதுவான அறிக்கை வெளியிட்டு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முயன்றார்கள்!
இந்த அறிக்கையில் தாக்குதலுக்கு உள்ளான இஸ்லாம் மதத்தை பற்றியோ, நபி நாயக அடிகள் விமர்சிக்கப்பட்டது பற்றியோ எதுவும் கூறாமல் மழுப்பபட்டுள்ளது.
இந்த அறிக்கையை குறிப்பிட்டு கத்தார் நாட்டிற்கான இந்திய தூதர், “இந்த கருத்துக்களுக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் சம்பந்தம் இல்லை. அவை ஓரஞ்சாரமாக உள்ள உதிரி சக்திகளின் கருத்துக்கள் ” என்று எழுத்து பூர்வமாக கத்தார் அமைச்சகத்திடம் பதிலளித்து உள்ளார் என்பது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

இத்தகைய கருத்துக்கள் வெளியான உடன் அதை எதிர்த்து உள் நாட்டில் (இந்தியாவில்) உள்ள நடுநிலையாளர்களும் , எதிர்கட்சியினரும் கண்டனக்குரல் எழுப்பிய போது வாய்மூடி மௌனியாக இருந்தது மோடி அரசு. இன்னும் சொல்லப்போனால் அவ்விருவரையும் பாராட்டி சிலாகித்தது பா ஜ கவின் ஐடி. செல் . கல்லெறிந்தனர் என்ற போலி குற்றச்சாட்டில் முஸ்லீம் வகுப்பினரின் வீடுகளை “புல் டோசர்” மூலம் தரைமட்டமாக்கிக் கொண்டிருந்தன பாஜ கவின் அரசுகள் . விவகாரம் எல்லை மீறிச் சென்று விட்டதால் ஆடிப்போய் இன்று ஈனக்குரலில் தங்களது எதிர்வினையை ஆற்றியுள்ளது இந்திய அரசு.
ஆனாலும், இந்தியா ராஜ தர்மத்தை செவ்வனே கடைப்பிடிக்க வேண்டுமென்று கத்தார், சௌதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
மேலும் அனைத்து நாடுகளும் 57 நாடுகளை கொண்ட இஸ்லாமிய கூட்டமைப்பும் ,வளைகுடா கூட்டமைப்பு நாடுகளும், ஓமன், ஜோர்டான் யுஏஇ நாடுகளும் இந்தியாவை கடுமையாக கண்டித்தனர். அனைத்து மதத்தினரும் அமைதியுடனும் சமாதானத்துடனும் வாழ இந்தியா வழிவகைகள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்தியா நடந்த சம்வங்களுக்காக பொது மன்னிப்பு PUBLIC APOLOGY கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
சகிப்புத்தன்மைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் வேற்றுமையில் ஒற்றுமை பாராட்டும் தன்மைக்கும் பேர் போன இந்திய அரசு இன்று பாரதீய ஜனதா கட்சியினரின் சிறு மதியாலும் அதை ஊட்டி வளர்த்த இன்றைய ஆட்சியாளர்களின குறு மதியாலும் மாண்பிழந்து மன்னிப்பு கேட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது வேதனையே!
தாமதப்பட்ட இந்திய அரசின் செயலால் இன்றைய ஆட்சியாளர்களின் நேர்மையற்ற அரசியலும் இரட்டை வேடமும் இன்று அம்பல்பட்டு போயுள்ளது.
கடந்த பத்து நாட்களுக்கு முன் அமெரிக்க வெளியுறவு செயலாளர் அந்தோணி பிளிங்கன் , “இந்தியாவில் சிறு பான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன அரசு பாரபட்சமின்றி சிறுபான்மையினருக்கு உரிமைகளும் பாதுகாப்பும் வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டதை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் கிண்டலடித்து “மேற்கத்திய நாடுகள் நாடுகளுக்கிடையில் வாக்கு வங்கி அரசியல் செய்யக்கூடாது ” என்று கூறினார் .
ஆனால், இன்று அலறிப் புடைத்துக்கொண்டு இந்தியா பேச வேண்டிய நிர்ப்பந்தம் என்ன?
இன்று இந்தியா இருக்கின்ற பாரதூரமான மிக மோசமான பொருளாதார சூழலில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் அரபு நாடுகளில் இருந்து வேலையிழந்து நாடு திரும்புவதும்,ஆண்டிற்கு அவர்கள் ஈட்டும் 80 பில்லியன் அந்நிய செலவாணியும் எட்டாக்கனியாக போய்விடும் என்ற பயம்தான் மோடியை ஆடவிட்டுள்ளது. தற்போது பல இஸ்லாமிய நாடுகளில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்கள் இந்தியப் பொருள்களை விற்க மறுத்துள்ளன! இதனால் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பல நூறு கோடிகள் பேரிழப்பு ஏற்பட்டு உள்ளது.
இனி உள்நாட்டில் கோட்சேயை தூக்கிப்பிடித்தும் வெளிநாடுகளின் மகாத்மா காந்தியின் மகத்துவம் பற்றி பேசியும் இரட்டை வேடம் போட முடியாது!
உள்நட்டில் ஜனநாயகத்தை சிதைத்தும், பத்திரிக்கையாளர்களை சிறையிலடைத்தும் வெளிநாடுகளில் சென்று உலகின் பெரிய குடியரசின் ஜனநாயக நாட்டின் தலைவன் நான் என மார்தட்ட முடியாது. ஆரத்தழுவும் அசிங்கம் (Hug Diplomacy) இனி எடுபடாது.
இது ஒருபுறமிருக்க, இந்த கருத்துக்கள் ஓரஞ்சாரத்தை சார்ந்த உதிரிகளின் கருத்து (Fringe Elements) எங்கள் கருத்தல்ல..’’ என்று இந்திய அரசு கூறுவதை எப்படி எடுத்துக்கொள்வது? இதே கருத்துக்களை தானே பாரதிய ஜனதா கட்சியும், ஆர்.எஸ் எஸ் . கூட்டமும் கூறுகின்றன?
யாரை எதிர்க்க வேண்டும் என்ற தெளிவான இலக்குடன் களமிறக்கப்படும் இந்த கீழ்நிலை வெறியர்களின் செயலுக்கு உறுதுணையாக ஆட்சி அதிகாரமும் ஆளுங்கட்சியின் பணபலமும் உள்ளது.

இந்த நிலையில் காசி விஸ்வநாத் -கியான்வாப்பி விவகாரம், மதுரா கிருஷணர் கோவில் விவகாரம் மிகப் பெரிய வாய்ப்புகளை இந்த வகுப்புவாத சக்திகளுக்கு வழங்குகிறது.
கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி பீடத்தில் இருந்து அனைத்து அமைப்புகளிலும் தனது ஆட்களை சங்கப் பரிவாரம் நிறைத்திருந்தாலும் ராமர் கோவில் விவகாரம் போன்று ஒரு இயக்கத்தை இவர்களால் நடத்த முடியாது; ஒரு இயக்கம் எதிர்ப்பதற்கு ஒரு மையம் வேண்டும் இன்று நிலைமை அவ்வாறில்லை.
Also read
எனவே, எந்தவிதமான ஒருங்கிணைந்த திட்டம் பாஜக தலைக்கு இல்லாவிட்டாலும் விதைத்த வகுப்பு வாதமும் வெறுப்பு அரசியலும் இன்று தன்னெழுச்சி பெற்று புதுப்பது விஷசெடிகளாக முளைக்கின்றன. நீதி மன்றங்களும் நீதிபதிகளும் பேதலித்து உள்ளனர்.
எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக் கொள்ளலாம் என்ற நிலைதான் இன்றைய இந்தியாவின் சமூக சூழல் உள்ளது! கலவரத்தை தூண்டியவர்கள் ஒருநாளும் அதை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது. அது மூண்டுவிட்டால் செக்கு எது சிவலிங்கம் எது என்று வித்தியாசம் பாராமல் அனைத்தையும் சாம்பலாக்கும் .
அதனால் தானோ என்னவோ, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் “சிவலிங்கத்தை தேடி ஒவ்வொரு மசூதிக்கும் செல்லக்கூடாது” என்று இந்து தீவிர பக்திமான்களை கேட்டுக் கொண்டுள்ளார் போலும்.
அவருக்கு ஞானோதயம் வந்து இதைக் கூறுகிறார் என்று யாரும் எண்ணத் தேவையில்லை. கலவரங்களை பற்றி மிக அதிகம் தெரிந்த அமைப்பின் தலைவர் என்பதால் இந்த எச்சரிக்கையோ அல்லது வேண்டுகோளையோ அவர் விடுத்திருக்கலாம் அல்லவா?
கட்டுரையாளர்; ச.அருணாசலம்
இன்னும் எத்தனை காலம் தான் மதத்தை வைத்து அரசியல் செய்ய முடியும். கண்டிப்பாக இந்த நிலை மாறும்.
//எப்பொழுது வேண்டுமானாலும் பற்றிக் கொள்ளலாம் என்ற நிலைதான் இன்றைய இந்தியாவின் சமூக சூழல் உள்ளது! கலவரத்தை தூண்டியவர்கள் ஒருநாளும் அதை கட்டுக்குள் வைத்திருக்க இயலாது.//
நுபுர் ஷர்மா திடீரென நபியை இழிவு படுத்தி விட்டாரா???நபியை பற்றி அவர் கூறியதில் உண்மையில்லையா??? அந்த விவாதத்தில் முதலில் சிவலிங்கம் பற்றி இழிவாக பேசிய முஸ்லீம் பற்றி உனக்கு தெரியாதா???அறம் நீ நடுநிலை செய்தியாளனா???உனக்கு நன்கொடை வழங்க வேண்டுமா??? நா அறமா இல்லை அரை மெண்டலா…???உன்னை போன்ற பிராடு செய்தி நாங்கள் படிக்கனுமா??? எஸ்.ஆர்.பாரதி கூறிய ரெட் லைட் ஊடகம் நீதான். தமிழக இந்துக்கள் விழிப்படைந்து விட்டோம்டா…!!!