தமிழ் சினிமாக்கள் பேசத் தயங்கும் அரசியல் களம்!

-பீட்டர் துரைராஜ்

சமகால அரசியல்,சமூகம் குறித்து ஒரு தெளிந்த பார்வையுடன் எடுக்கப்பட்டுள்ள படம் தான் ஜன கண மன! காவல் துறையின் என்கெண்டர், கல்வி நிறுவனங்களில் நடக்கும் பாகுபாடுகள், ஊடக மற்றும் சோஷியல் மீடியாக்களின் போக்குகள், அனல் பறக்கும் நீதிமன்ற வாதங்கள் என்பதாக வந்திருக்கும் தரமான படம்!

“என் மாணவர்கள் தான் என் அடையாளம்” என்று அர்ப்பணிப்போடு கற்பிக்கும் பல்கலைக்கழக பேராசிரியையான சபா மரியம் தீ வைத்துக் கொளுத்திக் கொல்லப்படுகிறார்! பேராசிரியையின் எரிக்கப்பட்ட உடலை காவல்துறை கண்டுபிடிக்கிறது. அன்று இரவே, பேராசிரியை வன்புணர்வு செய்து கொளுத்தப்பட்டதாக எல்லா ஊடகங்களும் பேசுகின்றன. இந்த வன்செயலை செய்தவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என மாணவர்கள் போராடுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட காவல் அதிகாரியை உள்துறை அமைச்சர் ‘தேர்ந்தெடுத்து விசாரிக்கச் சொல்கிறார்.

மகளை இழந்த தாயிடம் “முப்பது நாட்களில் கொலையாளியைப் பிடிப்பேன்” என்று உறுதியளிக்கிறார் காவல்துறை அதிகாரான சஜன் குமார். காவல் அதிகாரியாக சூரஞ் வெஜ்சர மூடு அற்புதமாக நடித்துள்ளார். இவர் ஏன் எப்போதும், இறுக்கமாக முகத்தோடு இருக்க வேண்டும்,  என்ற ஐயத்திற்கு விடை இறுதியில் கிடைக்கிறது. கதையின் முதல் பகுதி காவல்துறை விசாரணை, கைது, என நகர்கிறது.

ஹைதராபாத் நகரில் ஒரு இளம்பெண் மீது நடந்த வன்புணர்வு சம்பவத்தில் நான்கு பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அதே போல இதிலும் என்கவுண்டர் நடக்கிறது ! “இன்ஸ்டண்ட் காபி போல,   இன்ஸ்டெண்ட் நீதி” வழங்குவதை எதிர்க்கும் வழக்கறிஞராக அர்விந்த் சுவாமிநாதன் இருக்கிறார்.  வழக்கறிஞர் பாத்திரத்தில் பிருத்விராஜ்  நடித்துள்ளார். ஒரு கால் ஊனமுற்றவர்  இவர்  நமது நீதிபரிபாலன முறை குறித்து பல கேள்விகளைக் கேட்கிறார்.குற்றவாளி யாராக இருந்தாலும் காவல்துறை என்கவுண்டர் செய்யுமா? அல்லது என்கவுண்டர் என்பது அடித்தட்டு குற்றவாளிகளுக்கு மட்டுமா ? என்கிறார்!

இதனை ஒரு அரசியல் படம் என்று தான் சொல்ல வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை இருக்கிறது. இந்தப் படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி  இயக்கியுள்ளார். இது  இவருக்கு இரண்டாவது படம்.

15 நிமிடத்திற்கு ஒரு வன்புணர்வு நடக்கையில் சபா மரியத்தின் கொலை மட்டும் தேசியச் செய்தியாக மாறியது எப்படி ?  தேசியச் செய்தி ஆகவில்லை என்றால், இது குறித்து நடவடிக்கை எடுத்திருப்பீர்களா என மகளிர் ஆணையத் தலைவியை வழக்கறிஞர் கேள்வி கேட்கிறார். இப்படி ஒரு சம்பவம் செய்தியாகிறது என்பதும், அல்லது அதே போன்ற வேறொரு சம்பவம் ஏன் செய்தியாவதில்லை என்பதும் யோசிக்க வேண்டிய ஒன்று.

ஷாரிஸ் முகம்மது என்பவர் வசனம் எழுதியுள்ளார். ‘பெரும்பான்மையினர் விரும்புகிறார்கள் என்பதால் உணர்ச்சி வேகத்தில்  முடிவெடுக்கலாமா ?  ஆங்காங்கே வரும் பொருத்தமான காந்தி வசனங்கள், கதையின் ஒரு அங்கமாக மாற்றிள்ளது.

கதை நடக்கும் மத்திய  பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவியின் பெயர் கௌரி. ( ஒரு வேளை கௌரி லங்கேஷ் நினைவாக வைக்கப்பட்டிருக்கலாம்). அவர் தன் ஆசிரியை மரணத்திற்கு நீதி கோரி போராடுகிறார். எனவே,  பல்கலைக்கழகத்திற்கு உள்ளாகவே தாக்கப்படுகிறாள். காவி உடை அணிந்த குண்டர்கள், காவல்துறை யினரோடு சேர்ந்து மாணவர்களைத் தாக்குகிறார்கள். அவள் அணிந்துள்ள முக்காடு, அவளுடைய உடை, பாவனை, எதிர்வினை என அனைத்தும் ஜமாலிய பல்கலைக் கழக மாணவியை ஒத்து இருக்கின்றன.

திரைப்படத்தின் இறுதிப் பகுதியில் துணைவேந்தரின் அரசியல், ஆய்வு மாணவர் படும் அல்லல், தலித் மாணவர்களின் தற்கொலைகள், பாலியல் சீண்டல், தரம் என்ற பெயரில் நிலவும் சாதியம் என்பவை  பேசப்படுகின்றன.”90 களில் கர்நாடகா, ராம்நகரில் மதக்கலவரம் நடந்தது. எனவே ராம்நகர் என்ற பெயரை வைத்திருக்கலாம்” என்கிறார் பத்திரிகையாளர் விஜயசங்கர். படத்தின் கதைக்களம் தமிழக பார்டரை ஒட்டு இருப்பதால் படத்தில் நிறைய தமிழ் வசனங்கள் உள்ளன.இது படத்தை நன்கு புரிந்து கொள்ள உதவுகிறது!

படம் இரண்டே முக்கால் மணிநேரம்; நெட்பிளிக்சில் ஓடுகிறது. ஐஎம்டிபி 8.5 மதிப்பெண் கொடுத்துள்ளது.

பேராசிரியையாக மம்தா மோகன்தாஸ் நடித்துள்ளார். தலித் சிறுமிக்காக துணை வேந்தரிடம் வாதிடுவதாகட்டும், பாலியல் சீண்டல் செய்த பேராசிரியரை எதிர்ப்பதாகட்டும் நன்கு நடித்துள்ளார். சபா மரியம் என்ற  இஸ்லாமியப் பெண்ணாக அற்புதமாக நடித்துள்ளார். இஸ்லாமிய வெறுப்பு மேலோங்கி வரும் இக்காலக் கட்டத்தில், நீதி கோரியதனால் பாதிக்கப்படும் ஒரு பெண்ணாக ஒரு இஸ்லாமிய பாத்திரத்தை இயக்குநர் வைத்துள்ளார்.

பிருத்விராஜிற்கு  ‘சினிமாத்தனமான’ கடந்த காலம் இருக்கிறது. நீதிமன்ற காட்சிகள் சில இடங்களில் அதீதமாக உள்ளன என்றாலும், இந்த கதாபாத்திரத்தின் வழியே உலுக்கி எடுக்கும் கேள்விகளைக் கேட்டு வலுவாக நீதியை நிலை நாட்டி கதாநாயக அந்தஸ்த்தை தொடுகிறார். கதை வேகமாக நகர்கிறது!

அருந்ததி ராய் எழுதிய Ministry of Utmost Happiness என்ற நாவலில் இந்தியாவில் நடந்த அனைத்து ஒடுக்குமுறைக்குள்ளான  சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கும். தமிழகத்தில் நடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு, உணவுக்காக அடித்தே கொல்லப்பட்ட கேரளாவின் மனு என்ற அப்பாவி ஏழை இளைஞன், வட இந்தியாவில் மாட்டிறைச்சியின்  பெயரால் நடக்கும் மனித தன்மையற்ற படுகொலைகள், இந்தியாவில் வேரூன்றியிருக்கும் சாதிய, மதப் பாகுபாடுகள் குறித்த வசனங்கள்..என சமகால சமூக அரசியலை படம் சிறப்பாக கவனப்படுத்துவது பார்வையாளர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

கதையில் இந்தியாவின் எல்லா இடங்களிலும் நடந்துள்ள சமகால அரசியல் சம்பவங்கள் கோர்க்கப்பட்டுள்ளன.இயக்குநரான டிஜோ ஜோஸ் ஆண்டனி பாராட்டுக்குரியவர். அதனால் இப் படத்தின் பெயர் ‘ஜன கண மன’ என இருக்கிறது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என சொல்லப்படுகிறது!

இந்தப் படத்தில் ஆழமான அரசியல் அழகியலோடு பேசப்பட்டுள்ளது. வெட்டு, குத்து, ரத்தம், கொலைகள் என இடையறாத வன்முறைகளை எடுத்துக் கொண்டாடும் தமிழ் சினிமா படைப்பாளிகள் ஏன் இது போன்ற ஒரு படத்தை தரத் தயங்குகிறார்கள்? இந்தப் படத்தை ‘Political thriller என்றும் சொல்லலாம், ‘Courtroom thriller’ என்றும் சொல்லலாம்’ என்கிறார் பத்திரிகையாளரான முரளிதரன்.

பட விமர்சனம்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time