எஸ். ராமநாதன், திருச்செந்தூர்
எந்த தைரியத்தில் மதுரை ஆதீனம் இந்தப் போடு போடுகிறார்?
யேங்கப்பா..! என்னா வாய்க் கொழுப்பு! ‘சாமியாரா? சண்டியரா?’ என சதேகமே வந்துவிட்டது!
தமிழக ஆட்சியாளர்களின் பலவீனமும், ஒன்றிய ஆட்சியாளர்களின் உசுப்பலும் தான் இதற்கு காரணம்! ஜெயலலிதா ஆட்சியில் மதுரை ஆதீனக் கோவில்களிலும்,மடத்திலும் முறைகேடுகள் நடப்பதை சுட்டிக் காட்டி ‘ மதுரை ஆதினத்தை கலைத்துவிட்டு கோயில்களை அற நிலையத் துறை எடுத்துக் கொள்ளும்’ என ஆணையிட்டார்.
அவ்வளவு தான் ஆடிப் போனார் அருணகிரி! ”அம்மா தாயே பராசக்தி ..”என சரணடைந்தார்!
உண்மையில் இந்த மதுரை ஆதீனம் ஒரு பிள்ளைப் பூச்சி! எடுப்பார் கைப்பிள்ளை!
ஆட்சியாளர்கள் சிங்கமாக இருந்தால் சிறுநரிகள் எல்லாம் கைகட்டி வாய் பொத்தி நிற்கும்!
ஆட்சியாளர்கள் எருமை மாட்டுத் தோலுடன் சொரணையும், சுயமரியாதையும் இல்லாது இருந்தால் சிற்றெரும்புகளும் சீண்டிப் பார்க்கும்!
அ.அறிவழகன், மயிலாடுதுறை
மதுரையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தால் நடந்து முடிந்துள்ள துறவியர் மாநாடு குறித்து..?
அது துறவிகளுக்காக நடத்தப்பட்ட மாநாடாகத் தெரியவில்லை! தமிழ் சமூகம் தாங்கி நிற்கும் சமூக நல்லிணக்கத்தை துறக்கச் செய்ய கூட்டப்பட்ட மாநாடகத் தான் நடந்து முடிந்துள்ளது!
துறவிகள் அரசியல் பேசாமல் வேறு யார் பேசுவார்கள் என சாமியார்களை பேச வைக்கும் சதித் திட்டத்தின் தொடக்கமாகத் தான் இதை நான் பார்க்கிறேன்.
முதுகெலும்பில்லாத முதல்வர்! மூர்க்கமாக வளரும் இந்துத்துவா!
இது குறித்த சிறு பிரக்ஜையாவது தமிழக ஆட்சியாளர்களுக்கோ, எதிர்கட்சிகளுக்கோ இல்லாமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தீபக் ,கோபிச் செட்டி பாளையம், ஈரோடு
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 100 அதிகரித்துள்ளதே ஒன்றிய பாஜக அரசு?
சொல்லும்,செயலுக்கும் சம்பந்தமில்லாத அரசு. விவசாயிகளின் விளை பொருள்களுக்கு 100% விலை உயர்த்தி தருவோம் என சொல்லிவிட்டு தொடர்ந்து எட்டாண்டுகளாக ஏமாற்றி வருகிறது. உயர்த்தப்பட்ட ரூ 100 என்பது விலைவாசி உயர்வுக்கும்,பண வீக்கத்திற்குமான ஈட்டுத் தொகை தானேயன்றி, நியாயமான விலை ஏற்றமல்ல!
முருகானந்தன், பழங்காநத்தம், மதுரை
சிதம்பரம் தீட்சிதர்கள் தமிழ்நாட்டு அரசாங்கத்தை விட பவர்புல்லானவர்களா?
எல்லோர் மனதிலும் இந்த கேள்வி எழுகின்ற வண்ணம் அரசு அதிகாரம் பலவீனப்பட்டு உள்ளது. செத்தவன் கையில் கொடுத்த வெத்தலை பாக்கு போல!
‘மடியில் கனமில்லை’ என்றால், தீட்சிதர்கள் கணக்கை காட்டி இருப்பார்களே! தில்லுமுல்லு செய்திருப்பதால் தான் தீட்சிதர்கள் மறுக்கிறார்கள்! சிதம்பரம் கோயிலில் அறநிலையத் துறை அதிகாரிகள், பணியாளர்களுக்கு ஏற்பட்ட அவமானம் அவர்களுக்கானது மட்டுமல்ல, ஒட்டு மொத்த தமிழக மக்களுக்குமானதே!
‘முதுகெலும்பில்லாத முதல்வர் தானே…’ என்று ஏகத்துக்கும் எகிறுகிறார்கள்! சேகர்பாபுவும் எவ்வளவு தான் இறங்கிப் போவார்!
போதாக்குறைக்கு தமிழக பாஜக தலைவர்கள் வேறு இந்த பித்தலாட்டத்தை ஊக்குவிக்கிறார்கள்!
மு.ரவிச்சந்திரன், விழுப்புரம்
மதுரையில் விஜய் ரசிகர்கள் மதுரை ஆதீனத்திற்கு எதிராக சீறீ எழுந்துள்ளார்களே?
ஒரு ஆன்மீகத் துறவி சொல்லிக் கொள்பவர் ஒரு சினிமா நடிகரது ரசிகர்களின் சீற்றத்திற்கு ஆளாகும் அளவுக்குக் கீழ் இறங்கி செயல்பட்டு அவமானப்பட்டு உள்ளார்!
இருப்பதிலேயே மதுரை தான் விஜய்க்கு அதிக ரசிகர்களைக் கொண்ட மாநகரமாகும்! சொந்த ஊரில் சொந்தக் காசில் தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட மதுரை ஆதீனம், இனி வெளியில் எங்கு தலை காட்டினாலும் விஜய் ரசிகர்களை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும்!
ராமன், அல்சூர்,பெங்களூர்
இலங்கையில் அதிபர் பதவியில் இருந்து கோத்தபய விலகமாட்டேன் என சொல்லி இருக்கிறாரே?
ரத்தம் உறீஞ்சி ருசி பார்த்து விட்ட அட்டைப் பூச்சியை அடித்துப் போட்டுத் தான் மிதிக்க வேண்டும்!
எம். நல்லசாமி, நாமக்கல்
நுபூர் சர்மா விவகாரத்தில் பேயறைந்தது போல ஆகிவிட்டார்களே ஒன்றிய ஆட்சியாளர்கள்?
உலகில் இருநூறு கோடி மக்களால் போற்றி வணங்கப்படும் இறை தூதர் முகமது நபி அவர்களை இஷ்டத்திற்கு அவதூறு செய்தால் சும்மா விடுவார்களா?
இந்த அவதூறை எந்த ஒரு நாடும் ஏற்காது எனும் போது இஸ்லாமிய நாடுகள் கொந்தளிப்பது இயற்கை தானே! இன்று ஐயோ ஷாக் அடிக்கிறதே என அலறுகிறார்கள்!
இஸ்லாமிய நாடுகள் இது வரை அமைதி காத்து வந்தன! இப்போது உங்க பொருள்கள் எதுவும் எங்களுக்கு தேவையில்லை என முடிவு எடுத்துவிட்டனர். இது இந்திய பொருளாதாரத்தை ஆட்டம் காண வைத்துவிடும். பெட்ரோலிய இறக்குமதியை நிறுத்திவிட்டால் இந்தியா ஸ்தம்பித்துவிடும். அங்கு வேலை செய்யும் லட்சக்கணக்கான இந்தியர்களை வீட்டு அனுப்பிவிட்டால் இந்தியாவின் நிலைமையை விவரிக்கவே முடியாது. பாஜகவின் வெறுப்பு அரசியல் சர்வ தேசிய அளவில் செல்லாக் காசாகிவிடும்!
எஸ்.ராகவன், நங்கநல்லூர்,சென்னை
அரிசி, கோதுமை உள்ளிட்ட வேளாண் ஏற்றுமதியில் ரூ3.79 லட்சம் கோடியை எட்டியுள்ள இந்திய அரசின் சாதனையையாவது பாராட்டுவீர்களா?
இந்தியாவில் சுமார் 30% மக்கள் இன்னும் ஒரு வேளை உணவோடு வாழும் போது வெளி நாடுகளுக்கு இவ்வளவு அதிகமான அளவில் ஏற்றுமதி செய்து சில பணக்காரர்கள் கொழுப்பதற்கு துணை போவது சாதனையா? பசி இல்லாத பாரதத்தை உறுதி செய்த பிறகு உணவு பொருள்கள் ஏற்றுமதி செய்தால் யார் ஆட்சேபனை செய்ய முடியும்!
பார்த்தசாரதி,சென்னை
திமுகவின் இணைச் செய்தி தொடர்பாளர் ராஜிவ் காந்தி பெரியார் பிராமணர்களை இனப் படுகொலை செய்யச் சொன்னதாக சொன்னாராமே?
பெரியார் இருக்கும் காலத்தில் பிராமணர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக மிக காத்திரமாக எவ்வளவோ பேசி இருக்கிறார்! அவரது பேச்சின் விளைவாக ஒரே ஒரு பிராமணராவது கொல்லப்பட்டதாக செய்தி உண்டா? மகாத்மா காந்தி கொல்லப்பட்ட போது, அவர் கொலையில் கோட்சே உள்ளிட்ட ஏழு பிராணர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்ற தகவல் அறிந்து வட இந்தியா எங்கும் பிராமணர்கள் இருந்த இடங்களை எல்லாம் தேடி சென்று வீடுகளை மக்கள் அடித்து நொறுக்கினர். பார்க்கும் பிராமணர்களை எல்லாம் தாக்கினார்கள். அப்போது பெரியார் தமிழகத்தின் தன் நிகரில்லா தலைவராக இருந்தார். பிராமணர்கள் மீது பெரியாருக்கு உண்மையிலேயே வன்மம் இருந்திருக்குமானால், இந்த சம்பவத்தை அதற்கு சாதகமாக பயன்படுத்தி இருப்பார்! பெரியார் மனதில் அப்படி ஒரு நினைப்பு கூட இருந்தது இல்லை. காந்தி இறந்த போது தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிராக சிறு அசம்பாவிதங்கள் கூட நடக்கவில்லை.
நன்றாக மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்! பார்ப்பனர்களை எதிர்ப்பது வேறு, பார்ப்பனீயத்தை எதிர்ப்பது வேறு! தமிழகத்தில் ஒரு போதும் பிராமணர்களுக்கு எதிராக உயிர் பறிக்கும் வன்முறைகள் நடக்காது. அதுவும், இன்றைய திமுக ஆட்சியாளர்கள் பார்ப்பனர்களுக்கு மிக இணக்கமாகவே ஆட்சி செய்கிறார்கள்!
ராஜலஷ்மி, கும்பகோணம்
விக்ரம் படத்தை அனைத்து மீடியாக்களூம் உச்சி மோர்ந்து பாராட்டும் போது அறம் இதழ் மட்டும் விளாசித் தள்ளுவது அறமாகுமா?
அன்பே சிவம் என்று அற்புதமான படம் தந்த போது, நாம் கமலஹாசனை உச்சி மோர்ந்து பாராட்ட தவறவில்லை! ஆனால், வன்முறை கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் விக்ரம் படத்தை கமலஹாசன் போன்ற கலைஞர் ஒருவர் தயாரிப்பது ஏற்புடையதல்ல! பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் எதிர்கால இளம் தலைமுறையையே பகடைக் காயாக்குவதா?
அண்ணாத்துரை, ஆத்தூர், சேலம்
திமுக அரசு பசுக்களுக்காக மாபெரும் கோசாலை ஆரம்பிப்பதை எப்படி பார்க்கிறீர்கள்?
பல கோணங்களில் இது அத்தியாவசியமான ஒன்றாகும்!
மாடு வளர்ப்பவர்கள் அதற்கு பால் சுரப்பு நின்று, வயதான நிலையில் அதை பராமரிக்க முடியாமலும், தங்களை இதுகாறும் தங்கள் குடும்பத்தை வாழ வைத்த மாட்டை இறைச்சி கூடம் எனும் கொலைக் களத்திற்கு ஒப்புக் கொடுக்க முடியாமலும் தவிக்கும் ஏராளமான நிகழ்வுகளை நான் பார்த்துள்ளேன். அவர்கள் நிம்மதியாக இந்த கோசாலைக்கு கொண்டு வந்துவிடுவார்கள்!
மாட்டின் சாணமும், மூத்திரமும் ஈடு இணையற்ற மாபெரும் இயற்கை உரமாகும்! கோசாலையில் கிடைக்கும் இவற்றைக் கொண்டு ரசாயன உரப் பயன்பாட்டால் உயிர்ப் பிழந்துள்ள நிலத்தைக் கூட மீட்டுவிடலாம்! பஞ்ச காவ்யா போன்ற இயற்கை உர உற்பத்திக்கும் இவை பெரிதும் பயன்படும்!
கு.மஸ்தான், ராணிப்பேட்டை
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர்கள் மாநாட்டை தமிழக அமைச்சர்கள் புறக்கணித்து உள்ளார்களே?
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் வகையில் இந்த மாநாட்டை புறக்கணித்தாக சொல்லி உள்ளார்கள்! அப்படியானால், அந்த எதிர்ப்பில் உள்ள நியாயத்தை அகில இந்தியாவும் உணரும் வகையில் விளக்கி சொல்ல, அந்த நிகழ்வை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் நம்பிக்கையோடு முழுமையாக பயன்படுத்தி தான் வெற்றி காண முடியும்.
கருப்பசாமி, அருப்புக் கோட்டை
அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் சகட்டுமேனிக்கு பள்ளிக் குழந்தைகள் 19 பேரை சுட்டுக் கொன்று உள்ளாரே?
இது போன்ற சம்பவங்கள் நிறையவே அங்கு நடக்கின்றன! ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கானோர் துப்பாக்கி சூட்டில் உயிர் இழக்கின்றனர்! ஆனபோதிலும் தனி நபர்களுக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ளும் உரிமையை ரத்து செய்யும் ஆன்மபலம் எந்த அமெரிக்க அரசுக்கும் இது வரை இல்லை! காரணம், துப்பாக்கித் தயாரிப்பு நிறுவனங்களின் பணபலம்!
Also read
வேல்முருகன்,சுங்குவார் சத்திரம், காஞ்சிபுரம்
பெண்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் அறிவித்ததில் இருந்து பெண்களிடம் சில ஓட்டுநர்களும், நடத்துனர்களும் கோபத்தை காட்டுகிறார்களே..?
சமீபத்தில் ஒரு பத்து வயது சிறுமி பேரூந்தில் ஏறிய நிலையில், தாயானவள் ஏறுவதற்குள் நடத்துனர் விசில் அடிக்க பேரூந்தை எடுத்துவிட்டார் ஓட்டுனர். அந்த பெண் குழந்தை தாய் ஏறவில்லை என அழுகிறது! ஆயினும் பேருந்தை நிறுத்தவில்லை. கீழே நின்ற தாய் குழந்தையை பறி கொடுத்த தவிப்பில் கைப்பயை கீழே போட்டுவிட்டு கதறியபடி பேரூந்தை பின் தொடர்ந்து ஓடி இருக்கிறார். இதை பார்த்த இளைஞர்கள் சிலர் பேருந்தை இரு சக்கர வாகனத்தில் விரட்டி பிடித்து நிறுத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் ஓட்டுநரும், நடத்துனரும் பணி இடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். சில நேரங்களில் பேருந்து நிறுத்ததில் பெண்கள் அதிகம் நிற்பதைக் கண்டால் பஸ் நிற்காமல் போய் விடுவதாகவும் பெண்கள் கூறுகிறார்கள். இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.
குறிப்பு;
https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8
கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.
தோழர் ஓர் அறப்போராளியான தாங்கள் இப்படி எழுதலாமா .. ஒருமுறை முதல்வரைச்சந்தித்து தாங்கள் உங்கள் பக்க கருத்தை சொல்லலாம் தானே . நீதித்துறை முதல் சாதாரண கடைக்கோடி ஊழியன் வரை யாரால் இயக்கப்படுகின்றான் என்பது தாங்கள் அறியாததா என்ன. அப்படி இருக்கும்போது முதல்வரை இப்படி சொல்லலாமா..
அறச்சீற்றம் மிக்க நாம் நேசிக்கும் சாவித்திரி கண்ணன் கைக்கோல் தவறாக பதிவிடாது என்றே இன்றும் ஈழத்தமிழராகிய நாம் நம்புகின்றோம். அத்துடன் நீங்கள் சவுக்கு சங்கர் இல்லை என்பதையும் நாம் அறிவோம். நாங்கள் உங்கள் குழுமத்தின் புலம்பெயர் வாசகர்கள். வாழ்த்துக்கள் தோழர் பணிசிறக்க..
/மகாத்மா காந்தி கொல்லப்பட்ட போது, அவர் கொலையில் கோட்சே உள்ளிட்ட ஏழு பிராணர்கள் சம்பந்தப்பட்டு உள்ளனர் என்ற தகவல் அறிந்து வட இந்தியா எங்கும் பிராமணர்கள் இருந்த இடங்களை எல்லாம் தேடி சென்று வீடுகளை மக்கள் அடித்து நொறுக்கினர். / Oh..