சிறைவாசிகள் மனிதர்களாக கருதப்படுவதில்லை!

-பீட்டர் துரைராஜ்

வீரப்பனின் அண்ணன்,  மாதையன் 33 வருடங்களாக சிறையிலேயே இருந்து 74 வயதில் சமீபத்தில் இறந்து போனார்.இது போல முதுமையையும் நோய்களையும் சுமந்து கொண்டு மரணத்தை எதிர் நோக்கியுள்ளவர்களை ஏன் விடுதலை செய்ய முடிவதில்லை? சிறைச் சாலைகளில் ஏன் மனித உரிமைகளுக்கு மரியாதை இல்லை?

”மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆன பிறகு எனக்கு விடுதலை கிடைக்கும் என்று நம்பினேன். ஆனால் அந்த நம்பிக்கை பொய்த்துவிட்டது”, என்று இறப்பதற்கு சில நாட்கள் முன்பு சேலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக  வந்த போது, மாதையன் தன்னிடம் சொன்னதாக, நீண்டகால சிறைவாசியாக இருந்த அன்புராஜ் தெரிவித்தார்.

அன்புராஜ் சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில்,  கர்நாடக சிறையிலும், கோவை சிறையிலும் இருபது ஆண்டுகள் சிறையில் இருந்தவர். விடுதலையான பிறகு சிறைச்சாலை சீர்த்திருத்தங்கள் பற்றி பேசி வருகிறார்.

“சிறை வாழ்க்கையை எந்தத் திரைப்படங்களும் சரியாக சித்தரிப்பதில்லை. பொதுவாக  சிறை சார்ந்த எழுத்துகள், இலக்கியங்கள் குறைவு! சிறையில் இருந்து வந்தவர்கள், உள்ளே என்ன நடக்கிறது என்று பேசமாட்டார்கள். சிறையில் இருந்ததை அவமானமாகக் கருதுவார்கள். ஊடகங்களும் இது குறித்து எழுதுவதில்லை. அதனால்தான் பொதுமக்களின் பார்வையில் சிறைவாசிகள் மோசமானவர்களாக படுகிறார்கள். அவர்கள் மீது  பொதுமக்களுக்கு அனுதாபம் வருவதில்லை. எனவே, அரசும் விடுதலை, பரோல், நேர்காணல், சிறைத்துறை சீர்திருத்தம் போன்றவைகளில் மெத்தனமாக இருக்கிறது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், சிறை விதிகள் போன்றவை, முதல் விடுதலைப் போருக்குப் பிறகு (1857) இந்திய மக்களின் போராட்டங்களை அடக்குவதற்காக,  வெள்ளையர்களால்  கொண்டுவரப்பட்டவை. அந்த சட்டங்களின் அடிப்படையில்தான், விடுதலைக்கு பிறகும் சிறை நிர்வாகம் நடக்கிறது. இந்திய அரசியல் சட்டம் பேச்சு உரிமை,எழுத்து உரிமை  போன்ற அடிப்படை  உரிமைகளைக் கொடுத்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு ஏற்ப தண்டனைச் சட்டங்கள், சிறைச்சாலை விதிகள்  திருத்தப்படவில்லை. இதுதான் சிறைவாசிகள் தங்கள் உரிமைகளைப் பெறுவதில் மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளது.

ஆயுள் தண்டனை என்றால், வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நிலை. ஒருவர் எத்தகைய குற்றம் செய்தாலும், ஏழாண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை தேவையில்லை என்று மகாத்மா காந்தி கூறுவார். ‘சீர்திருத்துவது’ (Reformation) என்ற கொள்கைப்படி, வாழ்நாள் முழுவதும் ஒருவர் சிறையில் இருந்தால் அவர் எப்படி சமூகத்தோடு மீண்டும் இணைய முடியும் ?

மூன்று விதமான குற்றவாளிகள் உள்ளனர். உணர்வுபூர்வமான குற்றவாளிகள் – அதாவது சீட்டுக் கம்பெனி நடத்தி பொதுமக்களை ஏமாற்றியவர்கள், அரசாங்க கஜானாவை கொள்ளையடித்தவர்கள், வங்கிகளை ஏமாற்றி கடன் வாங்கியவர்கள். பெரும்பாலும் இது போன்றவர்கள் தங்கள் பணம், செல்வாக்கினால்  தப்பித்து விடுவார்கள். (சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் தொடர்புள்ளவராக  கைதானஆர்யன்கான் விடுவிக்கப்பட்டு உள்ளார்) தப்பித் தவறி சிறைக்குள் அடைக்கப்பட்டாலும், விரைவில் வெளியே வந்துவிடுவர். இவர்களின் எண்ணிக்கை சிறையில் சொற்பமாகவே இருக்கும்.

அண்ணன்- தம்பி தகராறு, வரப்புத் தகராறு, அரசியல் கைதிகள், தண்டிக்கப்பட்ட பிறகு மேல் முறையீட்டுக்கு  உச்சநீதிமன்றம் போக வசதியில்லாதவர்கள் என தன்னுணர்வின்றி சிறைக்கு வந்தவர்கள் என ஒருவகை.

இது போன்றவர்களை வெளியில் விடுவதால்  சமுதாயத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மூன்றாவதாக, சிறைக்குள் இருக்கும், பிக்பாக்ட் அடிக்கும் வழமையான குற்றவாளிகள். சிறையில் இவர்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும்

இந்திரா காந்தி காலத்தில், சிறைத்துறை சீர்திருத்தம் தொடர்பாக, ஆனந்த நாராயண முல்லா ஆணையம் அளித்துள்ள  சாதாரண பரிந்துரைகளைக்  கூட அரசு அமலாக்கவில்லை. இதனால்  சிறைவாசிகள் மட்டுமல்ல; சிறைவாசிகளின் மனைவி, குழந்தைகள் கூட பாதிக்கப்படுகிறார்கள். அதாவது, அடுத்த தலைமுறையும்  பாதிக்கப்படுகிறது.

சிறையில் அதிகாரி,  ராஜா போல முன்னே நடப்பார்; அவர் பின்னே கிட்டத்தட்ட இருபது பேர் நடப்பார்கள். தப்பித் தவறி யாரையாவது இடையில் பார்த்தால், கண்மண் தெரியாமல் அடிப்பார்கள். எனக்குத் தெரிந்து ஒருவனை தொப்புளில் லத்தியால் குத்தினர்; அதனால் சீழ் பிடித்து மரணமடைந்தார். அவருக்கு எய்ட்ஸ் இருந்தது, காசநோய் இருந்தது என்று எளிதாக சொல்லி விடுவார்கள். மற்றவர்களும் நம்பி விடுவார்கள்.

டெல்லி நிர்பயா வழக்கில் குற்றவாளியை தூக்கில் போட்டார்கள். வன்புணர்வு செய்யும் மனநிலை எங்கிருந்து அவனுக்கு வந்தது என்ற எந்தவிதமான உளவியல்பூர்வமான ஆய்வும் காவல்துறையிடம் இல்லை. இது போன்ற எத்தகைய ஆய்வும் நம்மிடம் இல்லை. அதானால் தான் ‘குற்றத்தை வெறு; குற்றவாளிகளை அல்ல’ (Hate the crime and not the Criminal) என்று சொல்லுவார்கள்.

நீண்ட கால சிறைவாசியின் விடுதலை கோரிக்கை என்பது ஓர் உரிமையாகக் கருதப்பட வேண்டும். ஆனால் இதனை ஒரு கருணை போல சிறை அதிகாரிகள் கருதுகின்றனர். நன்னடத்தை உள்ளவர்கள் மட்டுமே விடுதலையாவர் என்று கூறுகிறார்கள். சாப்பாடு நன்றாக இல்லை, கழிவறை சுத்தமாக இல்லை என்று சிறையில் குரல் எழுப்பினால் நன்னடத்தை சரியில்லை என்று குறிப்பேடுகளில் எழுதிவிடுவார்கள். அது அவரது  இயல்பான விடுதலையைப் பாதிக்கும். பரோல் முடிந்து ஆறு மணிக்கு வர வேண்டிய கைதி, ஆறு ஐம்பதுக்கு வந்தார், அதனால் தாமதாக வந்தார் (late surrender) என்று எழுதி விடுவார்கள்! பரோல் முடிந்து சிறைக்கு வந்து சேர்ந்த கைதியை, குடித்துவிட்டு சிறைக்கு வந்தார் என எழுதிவிட்டால் போச்சு அவரது எதிர்காலம்!, நன்னடத்தை சரியல்ல என குறிப்பு எழுதி நிரந்தரமாக சிறையில் வைத்துவிடுவார்கள். இது போன்ற குறிப்புகள் அவர் மீண்டும் பரோல் பெறுவதை பாதிக்கும்.

இந்திரா காந்தி படுகொலையின் போது நடந்த குண்டுவெடிப்பில், தண்டிக்கப்பட்ட சீக்கியர் ஒருவர், பிஜப்பூர் சிறையில் இனனமும் இருக்கிறார். அதற்கு அடுத்ததாக, அதிகக் காலம் இருந்தவர் மாதையன். தண்டனை நெறிகளுக்கு விரோதமாக, வெடி மருந்துச் சட்டத்தில் தண்டிக்கப்பட்டால் விடுதலையே கிடையாது; ஆயுதச் சட்டம், மதரீதியான வழக்கு, ஆதாயத்திற்கான கொலை போன்றவைகளில் தண்டிக்கப்பட்டாலும் விடுதலை கிடையாது என்று அரசு ஆணை போடுகின்றனர். சிறைத் துறை அமைச்சர் ரகுபதி, அதிமுக காலத்தில் என்ன அரசாணை வந்ததோ, அதை அப்படியே தேதியை மட்டும் மாற்றி வெளியிட்டு, கைதிகளின் விடுதலையை மறுத்துள்ளார். கர்நாடகத்தில் கைதிகள் விடுதலைக்காக இயக்கம் நடத்த கௌரி லங்கேஷ், நாடக ஆசிரியர் க்ரிஷ் கர்னாட் ஆகியோர் முன் முயற்சி எடுத்துள்ளனர். அத்தகைய இயக்கம் தமிழ்நாட்டிலும் உருவாக வேண்டும்.

மேலை நாடுகளில் சிறையில் இருந்தாலும், கணவன்- மனைவியோடு சில மணிநேரம் சேர்ந்து இருக்கலாம். உடலுறவுக்காகவல்ல! தம்பதிகள் ஒருவருக்கொருவர் பிரியத்தோடு பேசிக் கொள்ள முடியும். ஆனால் நமது சிறைகளில் 6 அடி இடைவெளியில் கம்பித் தடுப்புக்கு அப்பால்,  கும்பல் கும்பலாக பேசுவது என்பது என்னவொரு கடுமையான மன உளைச்சலைத் தரும் என்பதை யோசித்துப் பாருங்கள்.

சிறையில் இருந்து வெளியே வந்தவர்கள், போவதற்கு வீடு இல்லாமல் அல்லது அவர்களை  குடும்பம் ஏற்றுக் கொள்ளாததால், சமீப காலங்களில் 166 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

ஏனெனில், அவர்களுக்கு தேவையானதை அரசு செய்வதில்லை. சில அரசு சாரா அமைப்புகள் ஆட்டோ, மாடு போன்றவை வாங்கித் தந்து தொழில் நடத்த உதவுகின்றன. நார்வே, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தண்டிக்கப்பட்ட சிறைவாசிகள், வெளியில் ஆலைகளில் பணிபுரியலாம். வேலை முடிந்தவுடன் சிறைக்கு வந்துவிட வேண்டும். ஆனால் இங்கு  நாளொன்றுக்கு 50 ரூபாய், 40 ரூபாய் என சொற்பக் கூலியைத் தந்து, சிறைவாசிகள் உழைப்பைச் சுரண்டுகின்றனர். ஒருசில நாடுகளில், ஒரு மாதம் சிறைத் தண்டனை என்றால் அதில் சில நாட்கள் விடுப்பு எடுத்து வெளியில் செல்லலாம். தனது பணிகளை முடித்து விட்டு, மீண்டும் அதற்குச் சமமான நாட்கள் மீண்டும் சிறையில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. சிறையில் இருந்து வெளியில் சென்றால் நமது குடும்பத்தைப் பார்க்கலாம் என்ற நம்பிக்கை தான் சிறைவாசியை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கை இல்லையென்றால், சிறைவாசி மனநோயாளி ஆகிவிடுவான். எனவே அரசு, எந்தவித நிபந்தனைகளும் இன்றி, நீண்ட கால சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்”  என்று அன்புராஜ் கூறினார்.

அன்புராஜ்

மக்கள் சிவில் உரிமைக் கழகத்தைச் சார்ந்த வழக்கறிஞர் அபூபக்கர், தமிழக சிறைகளில் 20 வருடங்களுக்கு மேலாக, 38 பேர் சிறைகளில் உள்ளனர். இவர்கள் விடுதலைக் குறித்த ஆராய தமிழக அரசு அமைத்துள்ள ஆதிநாதன் குழு தனது வேலையை இன்னமும் தொடங்கவில்லை ” என்றார்.

“நீண்ட கால சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி கோவையில் அரங்கக் கூட்டம்  ஏற்பாடு செய்யப்படும்” என்று  கூறினார் பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் சிந்தனைக் களத்தைச் சார்ந்த வில்வம்.

‘நீண்டகால சிறைவாசிகளும் மனித உரிமைகளும்’ என்ற தலைப்பில் பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் சிந்தனைக்களம் ஜீன்- 4  அன்று நடத்திய இணைய வழிக் கருத்தரங்கில் அன்புராஜ் பேசியவற்றை தொகுத்து தரப்பட்டு உள்ளது.

தொகுத்து எழுதியவர்; பீட்டர் துரைராஜ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time