செல்வாக்கானவர்கள் சிறையில் இருப்பதில்லை!

-சாவித்திரி கண்ணன்

போதைப் பொருட்கள் பயன்பாடு தொடர்பாக ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் குற்றமற்றவராக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டு உள்ளார். குற்றச்சாட்டு எதுவும் நிரூபிக்கப்பட வில்லையாம்! அப்பாவியான அவர் மீது தவறாக குற்றம் சாட்டி வழக்கு புனையபட்டதாம்! வாரே வா! சூப்பர்!

ஆர்யன்கானின் நண்பர்கள் அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்முன் தமாசா ஆகியோர் போதைப்பொருள் தொடர்பான சதியில் ஈடுபட்டதற்கான எந்த வித ஆதாரமும் இல்லை என்று தீர்ப்பு நகலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மூன்று பேரும் கப்பலில் பயணம் செய்தனர் என்பதற்காக அவர்கள் போதைப்பொருள் சதியில் ஈடுபட்டதாக கருதிவிட முடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி மும்பையில் இருந்து, சுற்றுலாத் தலமான கோவாவிற்கு நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான், அவருடைய நண்பர்கள் சிலருடன்  ஆடம்பர சொகுசு கப்பலில் சென்றுள்ளார். சம்பந்தப்பட்ட கப்பலில்  போதைப் பொருள் தடுப்புப் பிரிவுஅதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட் பயன்பாடு உறுதியானது. அதன்பேரில் கப்பலில் பயணித்த ஆர்யன்கான் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 20 பேர் அக்டோபர் 3 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.   ஆர்யன் கானுக்கு மருத்துவமனையில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆர்யான் கான் கைது செய்யப்பட்டது அக்டோபர் 3 ஆம் தேதி. அவரது கைது அறிக்கையில்  போதைமருந்து உட்கொண்டார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது!

இந்த விவகாரத்தில் 21 நாட்களில் ஆர்யன் கானுக்கு பிணை கிடைத்தது. தொடர்ந்து இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் பணியை முன்னெடுத்தது போதைப் பொருள் தடுப்புப் பிரிவு. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லாததாக காரணம் காட்டி  விடுவிக்கப்பட்டார். பொதுவாக இது போன்ற ஒரு வழக்கில் பிணை கிடைக்காது.

இந்த நிலையில், போதை பொருள் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் சஞ்சய் குமார் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆர்யன் கான் மற்றும் மோஹக் தவிர குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அனைவரிடமும் போதைப்பொருள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. என்டிபிஎஸ் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 14 பேர் மீது புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு நபர்களுக்கு எதிரான புகார், ஆதாரம் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளதானது இந்த வழக்கை தொடர்ந்து கவனித்து வருபவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஒரு சில மாதங்களுக்கு முன்பு, ஆர்யன் கான் தொடர்பான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகத்தின்  சாட்சியான பிரபாகர் சைல், மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் மர்மமான முறையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. கப்பலில் நடந்த  ரெய்டின் போது இருந்த இரண்டு சாட்சிகளில் ஒருவர் கோசாவி  மற்றொருவர் அவரது உதவியாளர் பிரபகரன் சைல். கோசாவி விசாரணை அதிகாரிகளுக்காக ஆர்யன்கானிடம் பேரம் பேசி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்டதை அவரது உதவியாளரான பிரபாகரன் சைல் தான் அம்பலப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோசாவி,                                                பிரபாகர் சைல்

அதாவது போதை மருந்தை ஆர்யன்கான் பயன்படுத்தியது உண்மை! அவரை வழக்கில் இருந்து தப்புவிக்க விசாரணை அதிகாரிகளே பேரம் பேசினார்கள் என்பது உண்மை என்பது பிரபாகரன் சைல் வாக்குமூலத்தில் தான் உறுதிப்பட்டது. அந்த பிரபாகர் தான் மர்மமான முறையில் இறந்தார். ஆனால், அவர் மாரடைப்பால் இறந்ததாக போலீசார் கூறினர்.

இது மட்டுமின்றி ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் பேதை பொருள் பயன்படுத்திய வழக்கிலிருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மும்பை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரி சமீர் வான்கடே விடுவிக்கப்பட்டார். பிறகு அவர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

சமீர் வான்கடே ஒரு ஊழல் பேர்வழி.ஆகையால் தான் அவர் ஆர்யன்கானுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மட்டும் நடத்திவிட்டு அவரை தப்புவிக்க தோதாக சிறு நீர் மற்றும் ரத்த பரிசோதனைகள் செய்யாமல் தவிர்த்தார். இதற்காக அவர் எட்டு கோடி லஞ்சம் வாங்கியதாக பிராபகர் சைல் கூறி இருந்தார். அப்படி உண்மை சொன்னவர் இன்று உயிரோடு இல்லை என்பது கவனிக்கத்தக்கது!

ஆர்யன்கானிடம் கைதின் போது போதை பொருள் இல்லை .ஆனால், அவரது நெருங்கிய கூட்டாளி அர்பாஸ் தன் காலனியில் சாராஸ் என்ற போதை மருந்தை மறைத்து வைத்திருந்தார் என்று வழக்கில் கூறப்பட்டு இருந்தது. ஆர்யன்கானும் தான் போதை மருந்து உட்கொண்டதை ஒப்புதல் வாக்குமூலமாக தந்து இருந்தார். அந்த ஒப்புதல் வாக்கு மூலத்தை அவரது ஜாமீன் மனு கோரிக்கையின் போது இணைக்கப்படவில்லை என்பதை நீதிபதியே சுட்டிக் காட்டி உள்ளார். விசாரணை அதிகாரி பதிவு செய்ததாக கூறப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது இணைக்கப்படவில்லை என்பதால் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அறிக்கையை நம்ப முடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளதை அவதானித்தால் ஆர்யன்கான் விடுதலை செய்யப்படுவதற்கு தோதாக எல்லாம் நடந்து உள்ளது என உணரலாம்!

ஒப்புதல் வாக்கும்மூலம் ஏன் இணைக்கப்படவில்லை? இப்படி இணைக்கப்படாமல் தவிர்த்தற்காக யாருக்கு எவ்வளவு பேரம் கொடுக்கப்பட்டதோ?

ஆர்யன்கானின் போனில் இருந்த வாட்ஸ் அப் மெசேஜில் அவரது தோழி ஒருவர் ஒரு குறிப்பிட்ட போதை மருந்தை குறிப்பிட்டு அதில் இரண்டு டோஸ் தந்தால் தான் உன்னுடன் பேசுவேன் என்றல்லாம் குறிப்பிட்டு இருந்தார். இது போன்ற உரையாடல்கள் மற்றும் அவர் போதை மருந்து உட்கொள்ளும் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ஆகியவற்றை ஆதாரமாக விசாரணை அதிகாரிகள் தந்து இருந்ததனர். ஆனால், நீதிபதி தனது இறுதி தீர்ப்பில் ஆர்யன்கானின் வாட்ஸ் அப் உரையாடல்களை சோதனையிட்டதையே சட்டத்திற்கு புறம்பான செயல் என்று கண்டித்துள்ளார் விசாரணை அதிகாரிகளை! இது உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஆக, செல்வாக்கானவர்கள் என்றால், சட்டமும், நீதிமன்றமும் எவ்வளவு பரிவை வெளிப்படுத்தும் என்பதை நாம் உணர்ந்து கொள்ளும் வாய்ப்பாகவும் இந்த வழக்கு உள்ளது.

போதைப்பொருள் தடுப்பு சட்டம் இந்தியாவில் கொண்டு வரப்பட்டது 1985ல்தான். சஞ்சய்தத் தான் இதில் முதன் முதல் கைதான நடிகர்! பாலிவுட் நடிகர்கள், டெக்னிஷியன்கள் பலருக்கும் போதை மருந்துகளை பயன்படுத்தும் பழக்கம் இருப்பது புதிய விஷயமல்ல! ஷாருக்கான் தன் வீட்டிலேயே சர்வசாதரணமாக டிரக் எடுப்பார். அர்ஜின் ராம்பால் அவரோடு சேர்ந்து கொள்வார். இதெல்லாம் பல மீடியாக்களில் தொடர்ந்து பேசப்பட்டவையே! அவரது மகன் ஆர்யன்கானுக்கு உள்ள போதைப் பழக்கம் பாலிவுட்டில் மிகவும் பிரசித்தமாகும்!

சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை விவகாரத்தில் எவ்வளவோ உண்மைகள் அம்பலப்பட்டன! ஆனால், யார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது? யார் தண்டிக்கப்பட்டனர்…? அதை கங்கனா ரனாவத்தைக் கொண்டு பாஜக அரசியல் செய்து திசை திருப்பியது.

சட்டத்தின் வழியில் அனுமதிக்கப்பட்ட குற்றவியல் நடைமுறைகள் மூலம் தகுந்த சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் ஆர்யான்கான் குற்றமிழைத்துள்ளார் என்று நிரூபித்து தண்டனை வழங்கும் துணிச்சலும், நேர்மையும் பாஜக அரசுக்கு கிடையாது. ஷாருக்கான் என்ற சூப்பர் ஸ்டார் மகன் மீது பழி சுமத்தினால், அவர் தனக்கு ஆதரவான ஊடகங்கள் பலத்துடன் பல முக்கிய பாஜக தலைவர்களின் வீட்டுப் பிள்ளைகள் மீதும் நடவடிக்கை கேட்டு குரல்கள் எழுப்பும் பிரச்சாரத்தை மறைமுகமாக முன்னெடுப்பார்! அதனால், ஆகமட்டும் பணத்தை கறந்தாச்சு. இந்தமட்டுக்கு அலைக்கழித்தது போதும் விட்டுவிடலாம் என முடிவு செய்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time