சேமிப்பும், முதலீடும் ஒரு வாழ்வியல் கலை!

-செழியன் ஜானகிராமன்

எப்படி சேமிப்பது? எப்படி பாதுகாப்பாக முதலீடு செய்து வளர்த்து எடுப்பது? என்பது தெரியாத காரணத்தாலேயே பல துன்பவியல் சம்பவங்கள்,தற்கொலைகள் நிகழ்கின்றன! உண்மையில் சேமிப்பு என்பதை அறியாமலே வாழ் நாள் முழுக்க கடனாளியாக வாழ்ந்து மடிபவர்களும் உண்டு..!

நாம் சிக்கனம் செய்து சேமித்து வைத்திருக்கும்  பணத்தை என்ன செய்யலாம் என்றால், சீட்டுப் போடுங்கள் என்று நண்பர்கள், உறவினர்கள்  சொல்வார்கள்.

நாமும் நம் பகுதியில் சீட்டு பிடிப்பவர்களிடம் கட்ட தொடங்குவோம். இன்று நம் மக்களின் முக்கிய முதலீடு சீட்டுக் கட்டுவதாக உள்ளது. தமிழ்நாட்டில் ஒரு முறையாவது சீட்டுக் கட்டாதவர்களைப் பார்ப்பது அரிது.. அந்த அளவுக்கு சீட்டு நிறுவனம் குறித்து எந்த விதிமுறைகளும் அறிந்து கொள்ளாமல் நம்ம ஏரியா என்ற ஒரே  காரணத்திற்காக  சீட்டுக் கட்டத் தொடங்குகிறோம்.

பெண்களில் அதிகமானோர் சேமிப்பு பணத்தில் ஒரு கிராமாவது  தங்கம் வாங்கி சேர்த்து வைப்பார்கள். கிராமங்களில் உள்ள மக்களுக்கு முதலீடு என்பது தங்கம் வாங்கி சேகரிப்பது தான்.

இதைத்தவிர, பெரிய முதலீடு என்றால், நில புலங்களை வாங்குவதாகும். இது அனைவராலும் முடியாது என்றாலும், சேமித்த கொஞ்சம் அதிகப் பணத்தை என்ன செய்யலாம் என்று யோசிக்கும்போது நிலம் வாங்கிப் போடுங்கள் பிற்காலத்தில் நல்ல விலைக்கு விற்கலாம் என்று கூட இருப்பவங்க சொல்வார்கள்.

சீட்டு-தங்கம்-நிலம் இவைதான் முதலீட்டு முறைகள் என்று பெரும்பாலானோர் நினைத்து உள்ளனர். , இதைத் தவிர எண்ணற்ற முதலீட்டு முறைகள் உள்ளன. அவை பலருக்கும் தெரிவதில்லை இதனால் அதிகம் தெரிவது மோசடி முதலீட்டு முறைகள் தான். தினமும் எங்கேயோ யாரிடமோ பணம் கொடுத்து ஏமாறுபவர்களை நாளிதழ்களில் படித்துக் கொண்டு இருக்கிறோம்.  அப்படி பலரும் பணத்தை இழப்பதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், அரசாங்கம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்யாததே முக்கிய காரணம் ஆகும்.

ஒரு உண்மையைப் பார்த்துவிட்டு அடுத்த நிலைக்குச் செல்வோம்.

அதிக கடன் சுமையிலும், மோசடி முதலீட்டுத் திட்டங்களிலும் பெரும்பாலானோர் ஏன் மாட்டிக் கொள்கிறார்கள் என்று யோசித்து உள்ளோமா?

மனிதனின் தொடக்கம் முதல் கடைசி வரை அதிகம் உறவாடப் போவது பணம் மற்றும் , கடனிடம்தான்.  ஆனால் அதைக் கடைசி வரை சரியாக நிர்வாகம் செய்யத்  தெரியாமல்  அன்றிலிருந்து இன்று வரை இருப்பது தான் உண்மை.

பள்ளி பாடங்களில் அனைவருக்கும் அறிவியல், வரலாறு, கணக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது.  இந்த பாடங்களைப் படித்த அனைவரும் இன்று பல கடன் சிக்கல்களிலும், முதலீடு சரியாகச் செய்யத் தெரியாமலும், மோசடி திட்டங்களில் சேர்ந்திருப்பதைப் பார்க்க முடியும். நமக்கு நன்கு தெரிந்தவர்களே இது போல  இருப்பதைப் பார்த்து இருப்போம்.

உண்மையில் பள்ளி -கல்லூரி  மாணவர்களுக்கு  முதலில் என்ன கல்வி வேண்டும் ?

நம் நாட்டின் வரலாறு, அறிவியல், கணக்கு நிச்சயம் மாணவர்களுக்குத் தெரிந்து இருக்க வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது ஆனால் இவற்றையெல்லாம் விட அதி முக்கிய பாடமாகப் பண நிர்வாகம், நிதி மேலாண்மை, கடன் திட்டங்கள், பட்ஜெட் போடுவது, சேமிப்பு-முதலீடு, எவையெல்லாம் மோசடி திட்டங்கள் ..என இவையல்லவா சிறு வயதிலிருந்தே கற்றுக் கொடுக்க வேண்டும்.

அப்படி கற்றுக் கொடுக்காததால் பள்ளி-கல்லூரி படிப்பு முடிந்து வேலைக்குச் சென்று முதல் மாதம் வாங்கும் சம்பளத்தை எப்படி நிர்வாகம் செய்வது என்பதே பல நபர்களுக்கு தெரிவதில்லை என்பதுதான் உண்மை.

வேலைக்கு சேர்ந்த  சில மாதங்களிலேயே வங்கியில் கடன் வாங்குவது, கிரெடிட் கார்டு கடன், வீட்டுக் கடன், வாகன கடன் என்று வாங்கி ஒரு சில வருடத்தில் மூன்று அல்லது நான்கு கடன்கள், பல கிரெடிட் கார்டுகள்  என்று பெரும் கடன் சிக்கலில் மாட்டத் தொடங்கி விடுகிறார்கள்.

இன்று சென்னையில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர் கிரெடிட் கார்டு கடன் சிக்கலில் மாட்டி உள்ளவர்கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.  ஏகப்பட்ட கிரெடிட் கார்டு வாங்கி அனைத்து செலவுகளுக்கும் அதிலேயே செலவழித்து  பணம் கட்ட வேண்டிய தேதியில் கட்டாமல் அதற்கு வட்டி, வட்டிக்கு வட்டி என்று கடனில் தத்தளிப்பவர்கள் நிறையவே உண்டு.

பலர் பலவித ஆடம்பர செலவு செய்து மாத கடைசியில் அடுத்த சம்பளத்தை எதிர் நோக்க தொடங்கி விடுகின்றனர்

அதனால் ஒருவர் பள்ளியில்-கல்லூரியில் எந்த பாடங்கள் வேண்டுமென்றாலும், எடுத்துப் படிக்கட்டும். ஆனால் அனைத்து மனிதர்களுக்கும்  நிச்சயம் நிதி மேலாண்மை தெரிந்து இருக்க வேண்டும்.  அதற்கு நிதி கல்வி அவசியம்.

வருமானம் இல்லை என்பதால் ஒருவர் கடனை கட்டாமல் இருக்க முடியாது அல்லவா?

நிதி மேலாண்மை தெரியாததால் சிரமப்படுகிறார்கள். குறிப்பாகப் பெற்றோர்களுக்கே தெரிவதில்லை! அதனால்  பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுக்க முடிவதில்லை.

பாடங்களை கற்றுக் கொடுக்கும் பல ஆசிரியர்களுக்கும் நிதி, கடன் மேலாண்மை தெரியாது என்பது உண்மை. இல்லையென்றால் கோவிட் காலத்தில் முறையாகப் பணத்தை நிர்வாகம் செய்திருப்பார்கள். பலர் கடன் வாங்கி அதைத் திருப்பிச் செலுத்துவதற்கு இப்பொழுது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் எதிர்கொள்வது பணம், கடன். இவற்றை நிர்வாகம் செய்வதை கற்றுக் கொள்ளாமல் மற்ற பாடங்களைப் படித்துக் கொண்டு இருப்பதில் என்ன பயன்?

நேரடி பாடங்கள் – செயல்முறை(Practical) இரண்டும் கற்றுக் கொடுக்க வேண்டும்.  பல நிதி நிபுணர்களை அவ்வப் பொழுது வந்து கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தால் மிகச் சிறப்பாக மாணவர்கள் வளர்வார்கள்.

கடன் வாங்கி கட்ட முடியாமல் தற்கொலை செய்பவர்களை நினைத்துப் பார்த்தால், நிதி மேலாண்மை-கடன் நிர்வாகம் கல்வியின் அருமை நமக்குப் புரியவரும். வங்கிக்கு அதிகாரியாக இருப்பவர்களுக்கு கூட நிதி மேலாண்மை குறித்த புரிதல் இருப்பதில்லை. காரணம், இது ஒரு வாழ்வியல் பண்பாட்டுக் கூறாக இருக்கும் குடும்பத்தில் வளர்ந்தால் தான் இது புரியும்!

அனைவரும் வாகனம்  ஓட்ட கற்றுக் கொள்வதில்லையா?  டிரைவர் மட்டும் தான் கற்று கொள்ள வேண்டும் என்றா நினைக்கிறோம்?

அப்படித்தான் நிதி, கடன் மேலாண்மை MBA, CA படிப்பவர்கள் மட்டும் தான் கற்றுக் கொள்ளக் கூடிய பாடங்கள் என்று அரசாங்கம் நினைக்கக் கூடாது.

இதில் அரசாங்கம் கவனம் செலுத்தாததால் இதை பயன்படுத்தித் தான் மோசடி கும்பல்கள் மக்களை ஏமாற்றி பணத்தைக் கொள்ளையடிக்கின்றன! கந்து வட்டியில் மாட்டி பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.

இந்த உண்மையை உணர்ந்து நாம் சேமிப்பு-முதலீட்டு-தனிநபர் நிதி மேலாண்மை, கடன் நிர்வாகம்  பார்க்கத் தொடங்குவோம்.

நான்கு விதமான முதலீட்டு முறைகள்

1.அரசு உருவாக்கிய சேமிப்பு திட்டங்கள்

2.வங்கிகள் உருவாக்கிய சேமிப்பு திட்டங்கள்

3.அஞ்சலகம் சேமிப்பு திட்டங்கள்

4.செபி (SEBI) கண்காணிப்பில் இயங்கும் பரஸ்பர நிதி(Mutual Fund), பங்குச்சந்தை முதலீட்டு முறைகள்..

இந்த மூன்று பிரபல முதலீட்டு வகைகளைத் தெரிந்து கொண்டாலே நிதிச் சந்தையில் தெளிவாகச் செயல்படலாம். முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், பாதுகாப்பான முதலீடு என்பதை விடப் புரிந்து கொள்ளப்பட்ட முதலீடு மட்டுமே உங்களுக்குப் பலன் தரும்.

மேலே குறிப்பிட்டுள்ள பிரபல முதலீட்டு முறைகளைத் தவிர இன்னும் சில முதலீட்டு முறைகளும் உண்டு.

#  அரசு வெளியிடும் கடன் பத்திரம், தங்கப் பத்திரம் முதலீடு,

#  பெரும் தனியார் நிறுவனங்கள் வெளியிடும் கடன் பத்திரம், வைப்புத் தொகை (Fixed Deposit) முதலீடு

இதில் இன்னும் சில நுணுக்கங்கள் உண்டு. அவற்றை இந்த முதலீடு முறையைப் பார்க்கும் போது விரிவாகப் பார்க்கலாம்.

இவை தவிர, நமக்கு அனைவருக்கும் நன்கு தெரிந்த தங்கம் வாங்குவது, நிலம் வாங்குவது, சீட்டுக் கட்டுவது, தங்கச் சீட்டுக் கட்டுவது போன்றவற்றில் உள்ள நன்மை, தீமைகளையும் தெரிந்து கொள்வோம்.

இங்குக் குறிப்பிட்டுள்ள அனைத்து முதலீட்டு முறையிலும் குறைவான ரிஸ்க்-குறைவான லாபம்,  அதிக ரிஸ்க் -அதிகம் லாபம் என்ற விதத்தில் செயல்படும்.

ஒவ்வொரு முதலீட்டு முறையை நீங்கள் எந்த அளவு புரிந்து கொள்கிறீர்களோ அந்த அளவு அதில் உள்ள ரிஸ்க் புரியும், லாபம் புரியும்  என்பதையும் நினைவில் கொள்வோம்.

இன்சூரன்ஸ் என்பது முதலீடா?.

இங்குக் குறிப்பிட்டுள்ள  முதலீட்டு முறையைப்  படிக்கும் பொழுது  ஒரு சந்தேகம் வரலாம்? சேமிப்பு-முதலீடு என்பதில் இன்சூரன்ஸ் வரவில்லையே ஏன் என்றும் யோசிக்கலாம்?

இன்று பலரும் இன்சூரன்ஸ் என்பது பணம் பெருக்கும் ஒரு முதலீடு முறையாக நினைத்து உள்ளனர். உண்மையில் அப்படி இல்லை  பணத்தைப் பெருக்க  இன்சூரன்ஸ் நிறுவனத்தை  உருவாக்கவில்லை.

உங்கள் குடும்பத்தை, தொழிலைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பாகும். ஆனால், இன்சூரன்ஸ் போட்டால் எதிர்காலத்தில் பண  பாதுகாப்பு என்று பலர் நினைத்து விடுகின்றனர்.

மாத வருமானத்தை நம்பி  இயங்கும் ஒரு குடும்பம் அதைச் சம்பாதிக்கும் நபருக்கு ஏதாவது இடையில் நடந்தால் அடுத்த மாதம் அந்த குடும்பத்திற்கு எப்படி பணம் வரும்? இதனால் கடன் வாங்க நேரிடலாம் அதைத் திருப்பி கட்டவே வாழ்நாள் சென்றுவிடும். இன்னும் பல குடும்பங்கள் வறுமையின் கோரப் பிடியில் சென்றுவிடும்.

இந்த நிலையைத் தவிர்க்கவே இன்சூரன்ஸ் உருவாக்கப்பட்டது. குடும்பத்தில்  சம்பாதிப்பவர் இல்லாததால் சம்பாதிப்பவர் டேர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance) திட்டத்தில் சேர்ந்து இருந்தால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சொல்லிய  முழு தொகையை  அந்த குடும்பத்திற்குக் கொடுத்து விடுவார்கள். அதனால் குடும்பம்  பணப் பிரச்சனையில் இருந்த பாதுகாக்கப்படுவார்கள்.

இதற்கு மட்டும் ஒருவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில்  டேர்ம் இன்சூரன்ஸ் எடுக்கலாமே தவிர எதிர்கால வாழ்க்கைக்கு என்று மற்ற இன்சூரன்ஸ் திட்டத்தில்  பணத்தை முதலீடு செய்வது அதிக லாபத்தைக் கொடுக்காது.

முதலில் அரசு உருவாக்கிய முதலீடு முறைகளை அடுத்துப் பார்ப்போம்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time