அம்பானிக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறதா இந்தியா…?

சாவித்திரி கண்ணன்

பாஜக அரசு ஆட்சி பொறுப்பேற்றது முதல் ஒரு காரியத்தை கண்ணும்,கருத்துமாகச் செய்கிறது எனில்,அது அரசுத் துறை நிறுவனங்களை அழித்து அம்பானியை வாழ வைப்பதாகும்! இதை ஏதோ எடுத்தேன்,கவிழ்த்தேன் என நான் எழுதவில்லை!அம்பானிக்கு சேவை செய்வதையே தன் பிறவிப் பயனாக பாஜக அரசு கருதி,தொண்டுழியம் செய்வதற்கும் மேலாக அம்பானிக்காக இந்திய பொதுத்துறை நிறுவனங்களை அழித்துக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனையாகும்!

கொரானா காலத்திலும் கூட – 140 கோடி மக்கள் ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த நிலையிலும் கூட – அம்பானி மட்டுமே அபார லாபம் ஈட்டினார் என்றால், இந்த காலகட்டத்தில் மட்டுமே அம்பானியின் சொத்து மதிப்பு 2,77,000 கோடிகள் அதிகரித்துள்ளன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்! அதாவது ஊரடங்கு காலகட்டத்தின் ஒவ்வொரு நிமிஷத்திற்கும் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அம்பானி கம்பெனி லாபம் பார்த்துக் கொண்டிருந்தது! இந்திய அரசே இந்த காலகட்டத்தில் பொருளாதாரத்தில் ஆட்டம் கண்டு கொண்டிருக்க,அம்பானியோ,இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தலையில் கால்பதித்து ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட அம்பானி நிறுவனங்களுக்குத் தான் அரசுத் துறை வங்கிகள் 1,25,000 கோடிகள் கடன்களாக அள்ளி வழங்கியுள்ளன!

அம்பானிக்கும்,மோடிக்கும் உள்ள நட்பு இன்று,நேற்றல்ல, மோடி குஜராத் முதல்வராக இருக்கும் காலத்திலேயே அரும்பியது எனலாம்!

2012 குஜராத் முதல்வராக இருந்த போது தொடங்கியே மோடி தனது  நண்பர்களான அம்பானி குழுமமும், அதானி குழுமமும் 1500 கோடி லாபம் பெறும் வகையில் நிதி ஆதாரங்களை தவறாக பயன்படுத்தினார். இதை முதன்முதலாக கண்டுபிடித்து  மத்திய அரசின் முதன்மை தணிக்கையாளர் (CAG)  அம்பலப்படுத்திய போது, அதை ஊடகங்கள்  கண்டுகொள்ளவில்லை.

மோடி குஜராத் முதல்வரானதும் அரசின் பெட்ரோலியம் கார்ப்பரேஷனை (GSPC) 2009 ஆண்டிலிருந்து படிப்படியாக அழித்தார்.,அதானி, எஸ்ஸார், அம்பானி குரூப்களுக்கு சாதகமாக அதை மாற்றினார். தணிக்கை ரிப்போர்ட் சொல்வது என்னவென்றால் GPSC தனது எரிவாயுவை மிகக் குறைந்த விலையில் அம்பானிக்கும், அதானிக்கும் விற்றுள்ளது. இதனால் அரசுக்கு ஐயாயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.

மோடியை வைத்து குஜராத்தை சுரண்டியது போல், இந்தியாவையே சுரண்ட ஒரு திட்டத்தை அம்பானி தீட்டினார். அதன் காரணமாக 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கும் விளம்பரத்திற்கும் 5000 கோடியை செலவு செய்தார்.

வங்கக் கடலில், 11,000 கோடி மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான ஒ.என்.ஜி.சி எரிவாயு வயல்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் க்கு மாற்றப்பட்டது. அங்கு ரிலையன்ஸ் சட்டவிரோதமாக எரிவாயு எடுக்க தொடங்கியது.பெருவாரியான ஊடகங்கள் இதை மறைத்துவிட்டன! ஒரு சில ஊடகங்களே இதை எழுதின!

2016 ஆம் ஆண்டு ரிலையன்ஸ் ஜியோ ஆரம்பிக்கபட்டு, பி.எஸ்.என்.எல் நிறுவனம் படிப்படியாக அழிக்கப்பட்டது. அதன் உடமைகள், அலைகற்றைகள் அம்பானிக்கு சாதகமாக மாற்றப்பட்டன.உதாரணத்திற்கு பி.எஸ்.என்.எல்லின் 66,600 செல்லிடப் பேசி டவர்களை ரிலையன்ஸ் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது பாஜக அரசு!

4 ஜி அலைக்கற்றை அறிமுகப்படுத்தப்பட்ட போது,அதை அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லுக்கு ஒதுக்க மறுத்து ரிலையன்ஸ் ஜியோவிற்கு வழங்கியது பாஜக அரசு! இதனால், ஜியோ தனது சேவையை சிறப்பாக மேற்கொள்ளவும்,அரசு நிறுவனம் மக்கள் ஆதரவை இழக்கவும் துணை போனது மோடி அரசு! அத்துடன் பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் சுமார் 78,000 பேர் ஒரே நாளில் விருப்ப ஓய்வு தந்து வெளியேற  நிர்பந்திக்கப்பட்டனர். கிட்டதட்ட சரிபாதி ஊழியர்களை அரசு நிறுவனம் இழந்த துர்பாக்கியமான புதிய வரலாறை இந்தியா கண்டது!அந்த ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய பணம் இன்று வரை முழுமையாக தரப்படவில்லை! பி.எஸ்.என்.எல்லின் ஒப்பந்த ஊழியர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தனர்! ஒரு தனி முதலாளிக்கு சேவை செய்ய ஆலமரம் போல விழுதுகள் விட்டு கிளை பரப்பி நின்ற அரசு நிறுவனம் அராஜகமாக அழிக்கப்பட்ட வரலாற்றை பாஜக எழுதியது.

தொலை தொடர்பு துறையில் சட்டவிரோதமாக மூன்று மாதத்திற்கும் மேல் இலவசமாக சேவை வழங்கியது ஜியோ! இது அரசுக்கு பல ஆயிரம் கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியது. ஜியோவின் இலவச சேவையை அனுமதித்து, கோடிக்கணக்கான பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்களை ஜியோவிற்கு மடை மாற்றியது மத்திய அரசு . பி.எஸ்.என்.எல் மட்டுமல்ல, ஏர்டெல்,வோடோ போன் ஆகிய பல நிறுவனங்கள் பலவீனப்பட மத்திய அரசின் அதிகாரம் பயன்படுத்தப்பட்டது.இதை ஒப்பிடும் போது 2ஜி அலைக்கற்றை ஊழல் ஒரு ’ஜுஜீபி’ என்று தான் சொல்ல வேண்டும்.

மிகச்சிறிய முதலீட்டுடன் தொடங்கப்பட்ட ஜியோவிற்கு  பல நூறு கோடி கடன் அரசுத்துறை வங்கிகள் மூலமாக வழங்கப்பட்டது.

ஆனால் ஒன்றரை லட்சம் கோடி சொத்துமதிப்பு கொண்ட பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பாஜக அரசு  பிச்சைக்காரனாக்கிவிட்டது மோடி அரசு!

இதைப் போன்று பல பொதுப்பணித்துறை நிறுவனங்களை கார்பரேட்களுக்காக அழிக்க அழித்துக் கொண்டுள்ளது மோடியின் அரசு.

பல பொதுத்துறை நிறுவனங்களை ( BSNL, BHEL, ONGC, HAL, SAIL, BPCL, Air India..) உருவாக்கிய நேரு, அவற்றை நவீன இந்தியாவின் ஆலயங்கள் என்றார். ஏனென்றால், பொதுத்துறை மூலம் மக்களுக்கு சேவை தரமுடிவது ஒருபுறமென்றால்,அவற்றின் மூலமாக ஏராளமான வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டன. இதனால்,அரசுக்கு அதிக வருவாயும் வந்தது!, அதைவைத்து பல சமுகநல திட்டங்கள் செயல்படுத்த முடிந்தன. ஆனால் இப்போது எல்லாவற்றையும் தனியாருக்கு விற்றுக்கொண்டு வருகிறது பாஜக அரசு!. நன்றாக இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிற பஞ்சமா பாதகம் அரங்கேறிக் கொண்டுள்ளது.

அம்பானியின் நிறுவனங்கள் அனைத்துமே பொதுத்துறை நிறுவனங்களை அழித்து வளர்க்கப்பட்டவைகளே! அப்படிப்பட்ட அம்பானி நிறுவனங்களின் பட்டியலே இவை!:

#  BSNL – Reliance JIO

#  BPCL – Reliance Petroleum

#  LIC – Reliance Insurance

#  ONGC – Reliance Gas

#  HAL – Reliance Naval and engineering Ltd

#  APMC – Reliance Retail

#  Airports, Railways, Power, Ports – Reliance Infrastructure

அதிரடியாக ஒரு நாள் நள்ளிரவில்  தொடங்கப்பட்டது ’ ரிலையன்ஸ் டிபன்ஸ்’. இதற்கு இத் துறையில் முன் அனுபவம் கிடையாது! ஒரு தொழிற்சாலை  கிடையாது. வெறும் லெட்டர் பேட் நிறுவனமான  இதற்கு தான், ரபேல் விமானம் செய்யும் ஆர்டர் கொடுக்கப்பட்டது. பல ஆண்டுகளாக அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனமான ஹல்(HAL) ஓரம் கட்டப்பட்டது. புதிதாக ரஷ்யா, ஸ்பெயின் நாடுகளிடம் போடப்பட்ட ஒப்பந்தங்களிலும் ரிலையன்ஸ்க்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவும் முயற்சித்தது பாஜக அரசு!

தற்போது மும்பையை சூறையாடுவதற்கு அம்பானியின் Reliance Infrastructureக்கு  வாய்ப்பு தரப்பட்டது போல, அதானிக்கும் கொள்ளையடிக்க வழி ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு! அதானி மின்சார நிறுவனம் மும்பை புறநகர்ப் பகுதிகளுக்கு வந்த பிறகு, அங்கு மின்சார கட்டணம் இரட்டிப்பாகியுள்ளன என மும்பை மக்கள் கொந்தளிக்கிறார்கள்!

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக அரசு பதவிஏற்ற 2014 ஆம் ஆண்டு அம்பானியின் சொத்து மதிப்பு 1,68,000 கோடியாக இருந்தது.தற்போது அது 6,58,400 கோடியாக வளர்ந்துள்ளது! அதானியின் சொத்து மதிப்பு 50,400 கோடியாக இருந்தது.அது தற்போது,1,40,200 கோடியாக வளர்ந்துள்ளது!

’’தனியார் நிறுவனங்களே கூடாது’’ என நான் கண்மூடித்தனமாக வாதாடவரவில்லை! நேர்மையான முறையில் தனியார்மயமாக்கலை ஊக்குவிப்பதில் தவறில்லை! ஆனால், தனியார் நிறுவனங்கள் செழிக்கவும்,அரசுத் துறை நிறுவனங்களை அழிக்கவுமான அணுகுறை மக்களுக்கு செய்யும் துரோகமாகும்! மாபெரும் இந்தியாவை அம்பானி,அதானி போன்ற ஆலகாலவிஷமுள்ள பாம்புகளுக்கு இரையாக்கிக் கொண்டுள்ளது பாஜக அரசு!

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time