சுளீர் கேள்விகள்! ‘சுருக்’ பதில்கள்! – சாவித்திரி கண்ணன்

- சாவித்திரி கண்ணன்

இருதயராஜ், திருப்போரூர், செங்கல்பட்டு

பி.ஜே.பி எப்போது மத துவேஷத்தைக் கைவிடும்?

கசாப்புக் கடைக்காரருக்கு எப்போது ஜீவகாருண்யம் தோன்றும் எனக் கேட்பது போல உள்ளது. பிழைப்பும்,தொழிலும் இது தான் என்றான ஒருவரை மாற்றுவது ரொம்ப கஷ்டம்.

சுரேஷ் குமார், கும்பகோணம் தஞ்சாவூர்

தமிழக அரசும் பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகத் தோன்றுகிறதே?

பத்திரிகை சுதந்திரத்தில் அரசு தலையிடும் அவசியத்திற்கே இடம் கொடுக்கவில்லை! பத்திரிகை முதலாளிகளே சலுகைகள், விளம்பரப் பணத்திற்கு ஆசைப்பட்டு சாஷ்டாங்கமாக விழுந்து தங்கள் சுதந்திரத்தை அடகு வைத்து விடுகின்றனரே!

பாலமணி,சென்னை

ஆன்மிகம் , அரசியல் மற்றும் பொருளாதாரத்துறை இந்த மூன்றிலும் சீர்திருத்தத்தை ஏற்படுத்த வலுவான சமூக கூட்டமைப்பு (civil society union ) உருவாகாத வரை இந்த மூன்று துறையிலும் இருப்பவர்கள் மக்களை ஏச்சு பிழைப்பு நடத்துவார்கள். மக்களை ஒன்றிணைத்து யாருக்கும் பாதிப்பு இல்லாமல் ஒத்துழையாமை போராட்டம் செய்து, மாற்றத்தை உருவாக்குவது என்பது தான் மானுடத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் சமூக ஆர்வலர்கள், மக்கள் இயக்கங்கள் மற்றும் ஊடக துறையினருக்கு முன் இருக்கும் மிக பெரிய சவால். இது பற்றி உங்கள் கருத்து ?

மக்கள், மக்கள் இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகத் துறையினர் ஆகியோருமே ஊழல்மயமாக்கப்பட்டு உள்ளனர். எந்த மாற்றமும் யாருக்குமே பாதிப்பு இல்லாமல் சாத்தியமில்லை. ஏச்சுப் பிழைப்பவர்கள் எதிரிகளாக மாறவே செய்வார்கள்! பொது நலன் மீதான அக்கறை, உழைப்பு மீதான மரியாதை என்பதை குழந்தைப் பருவத்தில் இருந்தே வீட்டிலும், வெளியிலும் சொல்லி வளர்த்தெடுக்காத ஒரு சமூகத்தை திருத்துவது என்பதே சவால் தான்

தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு

தமிழ்நாட்டில் கஞ்சா, போதை பழக்கம் அதிகம் அதிகரித்து இருப்பதை போன்று தெரிகிறதே என்ன காரணம் ?

ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒழுங்காக மாமுல் போகிறது என்பதன் அறிகுறியே இது!

சிபி,பேரளையூர்,கடலூர்  

ஜக்கி வாசுதேவ் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமிக்கவில்லை தமிழக அரசு கூறியிருப்பது?

சாமியாருக்கும், சர்க்காருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது என்று பொருள் கொள்க!

நெடுஞ்செழியன், பாலப்பள்ளம்,கன்னியாகுமரி

கோவை குண்டுவெடிப்பில் கைதான இஸ்லாமியக் கைதிகளை விடுவிப்பதில் என்ன சட்ட சிக்கல்? அல்லது பாஜகவிற்கு பயப்படுகிறார்களா?

தமிழக ஆட்சியாளர்கள் முதலில் மனச் சிக்கலில் இருந்து விடுபட்டாலே சட்ட சிக்கலையும் விடுவித்து விடலாம்! பாஜக மீதான பயமே மனச் சிக்கலுக்கான காரணம்!

மாயா, ஜீன்னாகத்

2024 பாராளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் எப்படி இருக்கும் என நினைக்கிறீர்கள்?

எந்தக் கட்சிக்கு பாஜகவை எதிர்ப்பதில் உண்மையான ஈடுபாடும், வலுவும் உள்ளது என்பதை முடிவு செய்வதில் தமிழக மக்களிடையே பெரும் குழப்பம் நிலவும்.

பாபு, புதுக்கோட்டை

இந்த ஓராண்டில் தமிழக அரசு சாதித்தது என்ன ? சறுக்கியது என்ன?

சறுக்கு விளையாட்டு மட்டும் தான் ஸ்டாலினுக்கு பிடிக்கும் போல!

லஷ்மணன், பெங்களூர்

திமுகவின் ஒரு வருட ஆட்சி எப்படி உள்ளது தங்கள் பார்வையில்?

அதிமுக ஆட்சியின் வழிமுறைகளை அப்படியே பின்பற்றுகிறார்கள்!

ஜெய புஷ்பம், திண்டுக்கல்

இப்போது ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த அரசுக்கு மாற்றாக அனைவருக்கும் உகந்த அரசை தேர்ந்தெடுக்க என்ன வழி? எவ்வளவு காலம் ஆகும்?

ஒரு பேரழிவை நோக்கி நாட்டு மக்களை நடத்திச் சென்று கொண்டுள்ளது பாஜக அரசு. அதை தடுத்து நிறுத்தவோ, பாஜகவை வீழ்த்தவோவான பலம் வாய்ந்த எதிர்கட்சி தற்போது வரை தென்படவில்லை. பேரழிவிற்குப் பின் தான் ஞானம் பெறப்படும் சூழல் உருவாகுமோ என்னவோ..?

தயாளன், தாம்பரம்,செங்கல்பட்டு

கொட நாடு வழக்கு எந்த நிலையில் உள்ளது..?

திரிசங்கு நிலையில் உள்ளது. உண்மையை வெளிக் கொணர்வதில் ஆட்சியாளர்களுக்கு உள்ள உறுதிப்பாட்டை பொறுத்து தான் வழக்கின் வேகமும், தீர்ப்பும் அமையும்.

ஜோதிலிங்கம், சிவகாசி, விருதுநகர்

கட்சியின் அடிமட்டத் தொண்டனுக்கு இந்த ஆட்சியின் பலன் சிறிதும் சென்று சேரவில்லையே?

தாங்கள் அள்ளித் தின்னும் போது சிந்தி விழுவதை பொறுக்கிக் கொண்டு திருப்தி அடைந்து கொள்ளட்டும் அடிமட்டத் தொண்டர்கள் என நினைக்கின்றனர் தலைமையில் உள்ளவர்கள்!

சுரேஷ்குமார், கும்பகோணம், தஞ்சாவூர்

சமீபத்திய பங்கு சந்தை ஊழல் வெகுஜன கவனம் பெறவில்லை காரணம் ஊடகமா? எதிர் கட்சிகள் சரியான முறையில் முன்னெடுக்கவில்லையா?

பங்கு சந்தை ஊழலைப் பொறுத்தவரை சகல கட்சிகளும், ஊடகங்களும் பங்கு பெறும் ஊழலாகவும் அது நடந்துள்ளது என்பதே காரணம்! பங்கு சந்தை வியாபாரம் என்பதே ஒரு அங்கீகரிக்கப்பட்ட சூது தான்!

சோ. கார்த்திகேயன், சென்னை

மது விற்பனையை அரசே நடத்துவது ஏற்க தக்கதாக இல்லை. மீண்டும் தனியாரிடம் செல்ல வாய்ப்பு உள்ளதா ?

அரசாங்க பலத்தில் கொள்ளைகள், கமிஷன்கள், தில்லுமுல்லுகள் அனைத்தும் செய்து பழக்கப்பட்டுவிட்ட நிலையில்..ருசி கண்ட பூனை விட்டுத் தராது!

தனியாருக்காகத் தான் அரசாங்கமே நடக்கிறது! அரசாங்கத்தையுமே கூட தனியார் தான் நடத்துகின்றனர்.

செந்தில்குமார்,சென்னை

நாம் தமிழர் கட்சி பற்றிய தங்கள் கருத்து?

நம்பிக்கை ஏற்படவில்லை.

கு.தங்கவேல்,விருதாச்சலம்

நுபூர் சர்மாவை கைது செய்தால் இச்லாமியர்களின் போராட்டங்களோ,கலவரங்களோ இருக்காதே? ஏன் கைது செய்ய மறுக்கிறது பாஜக அரசு?

செய்த குற்றத்திற்கு தன்னைத் தானே தண்டித்துக் கொண்டு பிராயசித்தம் தேடும் அறவுணர்வை நீங்கள் பாஜகவிடம் தேடுகிறீர்கள்…!

ம.ஏழுமலை, திருத்துறைப் பூண்டி

வேற்றுமையில் ஒற்றுமை என்பதைத் தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது என்கிறாரே ஆளுனர் ஆர்.என்.ரவி?

இரண்டாம் உலக்ப் போரில் ஐந்து கோடி உயிர்கள் பலியாகக் காரணமான ஹீட்லரும் அகிம்சையைத் தான் வலியுறுத்தினார் என்பதை ஏற்றுக் கொண்டால், இந்தக் கூற்றையும் ஏற்கலாம்!

கேழ்வரகில் நெய் வடிகிறது என்றானாம், கேட்பவர்களை எல்லாம் கேனையனாக நினைக்கும் ஒருவன்.

என்.அபிராமி, நங்கநல்லூர் சென்னை

ஹரிவராசனம் பாடல்  நூற்றாண்டுகள் ஆனதை ஒட்டி நடத்தப்படும் கொண்டாட்டங்கள் பற்றி?

 

இந்திய மன்னர்களுக்கு எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பது பற்றி ஈராயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாகவே கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் சொல்லி உள்ளது.

பொதுமக்களை எப்பொழுதும் முட்டாள்களாக வைத்திருக்க பக்தி மயக்கத்தில் அவர்களை ஆழ்த்துவதே சிறந்த வழி என்கிறார் கெளடில்யர். மக்களை பக்தி போதையில் ஆழ்த்த கிடைக்குக் எந்த சிறிய வாய்ப்பையும் மிகப் பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்!

மற்றபடி மறைக்காமல் சொல்லிவிடுகிறேன். இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்! ஜேசுதாசின் குரலில் இதைக் கேட்கும் போது சுகமாக இருக்கிறது. முதல் நான்கு வரிகளுக்கான அர்த்தத்தை தேடினேன். எவன் ஒருவன் நல்ல நோக்கங்களுக்காக எதிரிகளை அழித்து நடனமாட வல்லவனோ அவனை சரணடைகிறேன் என்கிறது பாடல்!

கு.மஸ்தான், ராணிப்பேட்டை

சமீபத்தில் பி.பி.சி நிருபர் சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் ஈசா யோகா மையக் கட்டிடங்கள் கட்டப்பட்டது தொடர்பான கேள்வியை கேட்ட போது ஜக்கி வாசுதேவ் பொறுமை இழந்து கோபப்பட்டு உள்ளாரே?

பி.பி.சியின் இளம் நிருபர் சுபகுணம் பணிவோடும், சமூக பொறுப்புணர்வுடனும் தான் கேள்வி கேட்டார். குற்றமுள்ள மனது குபுக்கென்று வெளிப்பட்டுவிட்டது. சன்யாசியே என்றாலும், உண்மை சுடத்தானே செய்யும்!

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time