ஒற்றைத் தலைமை உடனடி சாத்தியமா..?

-சாவித்திரி கண்ணன்

அரசியலில் நல்லவர்கள் அல்ல, வல்லவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும். வல்லமையை வளர்த்துக் கொண்டார் எடப்பாடி! அதே சமயம் பலவீனமானவர் என்றாலும், புறம் தள்ள முடியாதவர் பன்னீர் செல்வம்! பொதுக் குழுவில் என்ன நடக்கும்? பொதுக் குழுவிற்கு பின் அதிமுக என்னவாகும்?

அதிமுகவில் ஒற்றைத் தலைமைக்கான குரல் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஒரு உறைக்குள் இரு கத்திகள் இருக்க முடியாது என்பது நிதர்சனம். ஒரு கத்தி மட்டுமே ஒரு உறைக்குள் போடவும், எடுக்கவும் சுலபமானது! ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் சந்தர்ப்பவசத்தால் தலைவர்கள் ஆனவர்களே! சந்தர்ப்பவசத்தில் கிடைத்த அதிர்ஷ்டத்தை சாதகமாக வளைத்து நிலை நிறுத்திக் கொள்வதில் இபிஎஸ் தான் அதிக முனைப்பு காட்டி வந்தார்! ஒபிஎஸ் சந்தர்ப்பவாதியாகவே காலம் தள்ள விரும்பிவிட்டார். ஆக, அது தான் இன்று அவர் தலைமைக்கு சவாலாகிவிட்டது.

பழனிச்சாமி தலைவரல்ல, சித்தாந்தவாதியுமல்ல, பேச்சாளருமல்ல, எழுத்தாளருமல்ல, சிறந்த நிர்வாகியுமல்ல! அவரது பலம் என்பது அதிகாரத்தின் மொழியை நன்கு புரிந்து கொண்டது தான். சசிகலாவின் நம்பிக்கையை வென்றெடுத்த பழனிச்சாமிக்கு, பாஜக தலைமையின் நம்பிக்கையையும் வென்றெடுக்க அதிக காலம் ஆகவில்லை. கட்டமைக்கப்பட்ட கட்சியின் கட்டுக் கோப்பும், நிர்வாக பலம் மிகுந்த அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவருக்கு கைகொடுத்தன!

தன்னை மிரட்டி அதிகாரம் செய்து கொண்டிருந்த டி.டி.வி தினகரனை காலம் பார்த்து கழட்டிவிட்டார்! சசிகலாவிடம் இருந்து விலகிச் செல்வதே கட்சிக்கும், ஆட்சிக்கும் பாதுகாப்பைத் தரும் என புரிந்து கொண்டார். கடந்த காலங்களில் எவ்வளவோ கப்பம் கட்டி சசிகலாவிற்கு விசுவாசத்தை காட்டிவிட்டோம். அது போதும், என முடிவெடுத்தார்.

பன்னீர் செல்வம் எப்போதும் ‘எடுப்பார் கைப்பிள்ளை’! ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போதே பாஜக, அந்த கைப்பிள்ளையை கையில் எடுத்துக் கொண்டது! அதனால் தான் அதிர்ந்து போன சசிகலா எடப்பாடியை தன் தளபதியாக்கிக் கொண்டார். ஆனபோதும், பாஜகவின் திட்டப்படி பன்னீரே ஜெயலலிதா மறைவையடுத்து உடனடி முதல்வராக்கப்பட்டார். பாஜக சொன்னபடி எல்லாம் ஆட்சி செய்தார். தமிழக அரசின் வேலை வாய்ப்பில் வட மாநிலத்தாரும் நுழையும் வண்ணம் டி.என்.பி.எஸ்.சி தேர்வில் திருத்தம் செய்தார். ஜெயலலிதா தடுத்து வைத்திருந்தவற்றை எல்லாம் தாராளமாக எடுத்து நிறைவேற்றி பாஜக தலைமையை குளிர்வித்தார்.

இந்தச் சூழலில் தான் சசிகலாவின் முதல்வர் கனவு முந்திக் கொண்டு வெளிப்பட்டது. அதை விரும்பாத பாஜக அவரை சிறைக்கு அனுப்பியது. ஆன போதிலும், அவர் பன்னீருக்கு வாய்ப்பு போகாமல், எடப்பாடியை முதல்வராக்கிவிட்டே சிறை சென்றார்.

பழனிச்சாமியும் பாஜகவின் பாதம் தாங்கும் அரசியலலைத் தான் செய்தார், என்ற போதிலும் கட்சியின் பாதுகாப்பிலும் ஒரு கண்ணாக இருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் பன்னீரின் பரிந்துரையையும் பொருட்படுத்தாமல் பாஜகவிற்கு அள்ளித் தராமல் கிள்ளித் தந்தது ஒரு சாமார்த்தியம் தான்!

சட்டமன்ற தேர்தலின் போது அனைத்து தொகுதி வேட்பாளர்களுக்கும் பணத்தை அள்ளித் தந்ததாகட்டும், ஓய்வு ஒழிச்சல் இல்லாத பிரச்சாரத்தில் ஆகட்டும் அவர் கட்சியின் தேவையை நிறைவேற்றினார். ஆனால், இதில் எல்லாம் பன்னீர் படுமோசமாகப் பின் தங்கினார் என்பது மட்டுமல்ல, சொந்த மாவட்டமான தேனீயில் கட்சியின் சக வேட்பாளர் வெற்றிக்குக் கூட பணம் செலவழிக்காமல் பம்மிக் கொண்டார். விளைவு, தேனீ உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிமுக படு தோல்வி கண்டது! பன்னீரே வெற்றியைத் தொட படாதபாடுபட வேண்டியதாகி விட்டது! அத்துடன் தேர்தலில் அதிமுகவின் தோல்வியை எடப்பாடியின் தோல்வியாக சித்தரிக்க முயன்றார். கட்சியில் தனக்கு ஏற்ப்பட்டு வரும் பின்னடைவை ‘சசிகலா’ என்ற பூச்சாண்டி காட்டி, சரி செய்ய நினைத்தார். பன்னீர் முயற்சிகள் எல்லாமே படுதோல்வியில் முடிந்தன!

எதிர்கட்சித் தலைவராகும் வாய்ப்பையும் இழந்தார். சசிகலா ஆதரவு நிலையால் தம்பியை இழந்தார். முனுசாமி தொடங்கி மைத்தேரயன், மாபா. பாண்டியன், புகழேந்தி ..என அனைவர் நம்பிக்கையையும் படிப்படியாக இழந்தார். இன்று கிட்டத்தட்ட தனிமரமாய் நிற்கிறார்.

இந்தப் பொதுக் குழுவே எடப்பாடி பழனிச்சாமியின் பலத்தை எடுத்துக் காட்டத் தான் நடத்தப்படுகிறது. அதற்கான காய் நகர்த்தலை கடந்த சில மாதங்களாகவே திட்டமிட்டு செய்துள்ளார் பழனிச்சாமி! பொதுக் குழுவில் எடப்பாடி தன் பலத்தைக் காட்டும் போது பன்னீர் பணிந்து தான் போக வேண்டும் என்ற நிலை தோன்றிவிட்டது! ஆகவே, எடப்பாடி பழனிச்சாமியை அனுசரித்துப் போகும் அரசியலுக்கு சட்டென்று மாறிக் கொண்டால், அவரது அடுத்தகட்ட பயணம் இடையூறு இல்லாமல் போகும். எதிர்த்துக் கொண்டால், அந்தப் பயணம் சவாலாகிவிடும். இது தான் இன்றைய யதார்த்தம்.

அதே சமயம் பன்னீர் செல்வத்தை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்’ என எடுத்து எறிந்துவிட முடியாது பழனிச்சாமியால்! கடந்த இரு தசாப்தங்களாக தமிழ் மக்களிடையே நன்கு அறிமுகமான மனிதர். மற்றும் முக்குலத்து சமூகத்தின் ஆதரவை ஒரளவேனும் பெற்றுள்ளவர். பாஜகவின் செல்லப் பிள்ளையாகவும் இருக்கிறார். பன்னீரை வெளியேற்றுவது கட்சிக்கு ஏகப்பட்ட சட்டச் சிக்கலையும் உருவாக்கிவிடும். ஆகவே, பன்னீரை பக்கத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் பழனிச்சாமிக்கு உள்ளது. ஆகவே, உடனடியாக பன்னீரை பதவி இறக்கம் செய்ய நினைப்பது அவருக்கு பெரும் பாதகத்தையே தரும். இதை படிப்படியாகத் தான் செய்ய முடியும்!

இரு தரப்புக்குமான போஸ்டர் யுத்தம்!

தன்னைக் காட்டிலும் அறிவிலும், சீனியாரிட்டியிலும் மூத்தவரான பேராசிரியர் அன்பழகனை கடைசி வரை மரியாதை கொடுத்து தனக்கு அணுக்கமாக வைத்துக் கொண்ட கருணாநிதியின் சாதுர்யமும், அன்பழகனைப் போன்ற கண்ணியத்திற்கு பழுதில்லாமல் தன் மரியாதையை தக்க வைத்துக் கொள்ளும் அனுசரணையும் இந்த இருவருக்கும் இருக்குமானால், பொதுக் குழு கூட்டம் பழுதில்லாமல் நடந்து முடியும்.

அரசியலில் எப்போதும் வல்லான் வகுத்ததே வாய்க்காலாகிவிடும். அண்ணா மறைந்த போது முன்னணித் தலைவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, கருணாநிதி முன்னுக்கு வந்தது எப்படி! அரசியலில் தகுதி, திறமை, சீனியாரிட்டி..எல்லாமே ஓயாத உழைப்பின் முன்பும், சாதுரியமான காய் நகர்த்தலின் முன்பும் சக்தி இழந்து போகும். இது தான் எடப்பாடி இன்று கட்சிக்குள் எழுச்சி பெற்று வந்துள்ளதற்கு காரணமாகும்.

ஆனால், அண்ணா திமுக என்ற கட்சி நிலைக்கவும், வருங்காலத்தை வசப்படுத்திக் கொள்ளவுமான ஒரு தலைமை உள்ளபடியே அந்தக் கட்சிக்கு இன்று இல்லை.

இன்றைக்கு அண்ணா திமுக என்ற கட்சி புத்துயிர் பெற வேண்டுமானால், அதன் முன்பு இருக்கும் ஒரே சவால் அது தன்னை பாஜகவிடம் இருந்து விடுவித்துக் கொள்வது தான்! சிறுகச் சிறுக தன்னை விழுங்கிக் கொண்டிருக்கும் பாஜகவிற்கு ஒப்புக் கொடுத்துக் கொண்ட பிறகு, அதனால் ஓங்கி வளர்வது என்பது ஒரு போதும் இயலாது. பாஜகவிற்கு ஆளும் திமுகவும் பணிந்துவிட்ட பிறகு பாஜகவை எதிர்ப்பதற்கான வெற்றிடத்தை யார் நிரப்புகிறார்களோ.., அவர்களே, தமிழக மக்களின் நம்பிக்கையையும் வென்றெடுக்க முடியும்.

அதிமுகவின் குழப்பங்களும், சண்டைகளும் பாஜகவிற்கு நல்ல பலன்களை பெற்றுத் தரும்! ஆகவே, அதிமுகவின் அழிவை அது வேடிக்கை பார்க்கும், அல்லது குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும்!

அடுத்ததாக ஆளும் திமுகவின் ஊழலை எதிர்க்கும் தார்மீகத் தகுதி இன்றைய அதிமுக தலைவர்களுக்கு இல்லை. இந்த தலைமைகளே திமுக அரசுக்கு படியளந்து தான் கைதில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டுள்ளன என்ற யதார்தத்தை புறம் தள்ள முடியாது! ஆக, அண்ணா திமுகவிற்கு புது ரத்தம் பாய்ச்சக் கூடிய கறைபடியாத கரம் கொண்ட தலைமை இல்லாதது ஒரு பெரும் பின்னடைவேயாகும்!

அநீதிகளை எதிர்க்கும் திரானி உள்ள இயக்கத்திற்கு மட்டுமே எதிர்காலம் உண்டு! பாஜகவை பாய்ந்து எதிர்க்கும் பலம், திமுகவை திரண்டு எதிர்க்கும் தினவு, ஊழல் தலைமைகளை ஓரம் கட்டி நம்பிக்கையான புதுத் தலைமை வருவது.. ஆகியன நடந்தால் மட்டுமே அதிமுகவிற்கு எதிர்காலம் உண்டு! இல்லையெனில், இனி வரும் காலத்தில் அதிமுகவே காலமாகிவிடும்!

-சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time