கர்நாடகா கர்ஜிக்கிறது! தமிழக அரசு தடுமாறுகிறது!

-சாவித்திரி கண்ணன்

பெரும்பாலான பெரிய அணை திட்டங்கள் மக்களுக்கு உதவுவதை விட ஒப்பந்ததாரர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும், நிதி உதவி செய்யும் சர்வதேச நிறுவனங்களுக்கும் தான் பயன்படுகின்றன! மேக்கேதாட்டு விவகாரத்தில் கர்நாடகாவின் மூர்க்கமான முஸ்தீபுகளை வெறும் பெயரளவுக்கு எதிர்த்துவிட்டு பம்முகிறது தமிழக அரசு!

பெரும் அணைக்கட்டுத் திட்டங்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் அடையும் ஆதாயங்களை, மறைக்கப்பட்டு வரும் அந்த உண்மையை ஏற்கனவே மேத்தாபட்கர் துல்லியமாக அம்பலப்படுத்தி உள்ளார்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ், மஜத போன்ற கட்சிகள் இந்த திட்டத்தின் மதிப்பான 9,000 கோடியில் கணிசமாக கையூட்டு பெற்றுக் கொள்ளவே தண்ணீருக்காக போராடுவது போல பாவனை காட்டி வருகின்றனர்.

உண்மையில் தண்ணீர் தேவையில் தன்னிறைவு பெற்ற மாநிலம் தான் கர்நாடகம்! அங்கு கிருஷ்ணா, கோதாவரி, வடபெண்ணை,தென் பெண்ணை உள்ளிட்ட 36 ஆறுகள் பாய்கின்றன. தமிழகத்தைக் காட்டிலும் சுமார் மூன்று மடங்கு நீர்வளம் நிறைந்த மாநிலம் கர்நாடகா! இதனால், ஆண்டுக்கு சுமார் 2,000 டி.எம்.சி நீரை கடலுக்கு தாரை வார்க்கப்படுவது குறித்து கவலைப்படாமல் இருக்கிறது, கர்நாடகா! அவர்களின் ஒரே கவலை காவிரி நீர் தமிழகத்திற்கு தரப்படுவது தான்! தமிழகத்திற்கு தண்ணீர் தரப்படுவதை எதிர்ப்பதன் மூலம் கர்நாடகத்தில் கதாநாயக அந்தஸ்த்தை கட்டமைத்துக் கொள்கின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்!

”பெங்களூருக்கு இன்னும் தண்ணீர் வேண்டுமாம்! தற்போது பெங்களுரு 1,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் பெற்று வருகிறது. இந்தத் தண்ணீரில் முறைகேடான நீர்மேலாண்மை காரணமாக 40% தண்ணீர் வீணடிக்கப்படுகிறது. அதை சீர் செய்தாலே போதும் தமிழகத்திற்கு சென்று கொண்டுள்ள காவிரியை கைது செய்ய வேண்டிய தேவையில்லை’’ என அந்த மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரபல சுற்றுச் சூழல் நிபுணர் டி.வி.ராமச்சந்திரா கர்நாடக அரசுக்கு எடுத்துரைத்துள்ளார்.

மேகேதாட்டு அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், தமிழகத்தின் சேலம்,  நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட காவிரி வடிநில மாவட்ட, தமிழக விவசாயிகளின் நலன் பாதிக்கப்படும் என்பதோடு சுமார் ஒன்றரைக் கோடி தமிழக மக்களின் குடிநீர் தேவையும் பாதிக்கப்படும்! ஏற்கனவே ஒப்பந்தப்படி தண்ணீர் தர மறுத்து கர்நாடக அரசு இழுத்தடித்து வரும் காரணத்தால் காவிரி டெல்டாவில் பெருமளவு விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் மெக்கேதாட்டுக்கால போர்முரசு கொட்டுகிறது!

1970 வரையில் தமிழகம் காவிரியில் சுமார் 400 டி.எம்.சிக்கு குறையாமல் அனுபவித்து வந்தது! காவேரி தாவா ஆரம்பித்த பிறகு நீதிமன்றம், நடுவர் மன்றம் என்றெல்லாம் பல ஆண்டுகள் அலைக்கழிப்புக்கு பிறகு நமக்கு இன்று கிடைத்துக் கொண்டு இருப்பதோ வெறும் 177 டி.எம்.சி! தமிழக அரசியல் கட்சிகள் 1970 களில் கர்நாடகாவிடம் இணக்கமாகப் பேசி 350 டி.எம்சி வரை ஒப்பந்தத்ததை போட்டு இருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், ‘தமிழினத் தலைவர்’ என்ற தோற்றப்பாட்டுக்கு ஒரு விட்டுக் கொடுக்காத, வீராவேஷமான பாவனை தேவைப்பட்ட காரணத்தால், வீம்பாக, ”தமிழக உரிமையில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்” என வீரவசனம் பேசி கிடைத்து வந்ததில், பாதியை பறி கொடுத்தோம்.

சரி, கிடைக்கும் தண்ணீரையாவது ஒழுங்காக பெறுவதற்குத் தக்க ஒப்பந்தம் போட்டார்களா? என்றால் அது தான் இல்லை. தண்ணீர் என்பது தினசரிப் பயன்பாடு! ‘அதை தினப்படி அதன் போக்கில் வரவிட்டு அளந்து கொள்ளுங்கள்’ என்றல்லவா ஒப்பந்தம் போட்டு இருக்க வேண்டும்? பயிர்களுக்கு தினசரி அல்லவா தண்ணீர் தேவைப்படுகிறது. மாதத்திற்கு ஒரு முறை தான் அளவிட்டுத் தருவார்களாம்! இது போன்ற ஒரு முட்டாள்தனமான ஒப்பந்தத்தை போட வேண்டிய நிர்பந்தம் தான் என்ன? ஒவ்வொரு மாதமும் ஐயா திறந்து விடுங்கள் என கையேந்தி கெஞ்சுவதும், அப்படியும் அவர்கள் அதை தராமல் இஷ்டப்படி திறந்துவிடுவதும் அல்லவா நடக்கிறது.

சரி, தற்போதைய விவகாரத்திற்கு வருவோம். ‘மேக்கேதாட்டு என்ற அணையைக் கட்டக் கூடாது’ என தமிழக மக்கள் மட்டுமல்ல போராடி வருவது, கர்நாடகத்தில் உள்ள சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், நடுநிலையாளர்களுமே இதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சுமார் 12 ஆயிரத்து சொச்சம் ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து தான் இந்த அணை கட்டப்பட உள்ளது. இதில் சுமார் 10,000 ஏக்கர் நிலம் அடர்ந்த வனப்பகுதியாகும். வனத்தை அழிப்பது நம் வாழ்வாதரத்தை அழிப்பதற்கு சமமாகும். ஆகவே, ”அரசியல்வாதிகளே திட்டத்தில் கிடைக்கும் கமிஷனுக்கு ஆசைப்பட்டு இயற்கை வளங்களை அழிக்காதீர்கள்..” என அவர்கள் போராடி வருகின்றனர்.

ஆனால், இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கர்நாடக அரசு பல நூறு கோடிகள் செலவில் அணைகட்டும் முன்னேற்பாடுகளை கடந்த ஐந்தாண்டுகளாகவே செய்த வண்ணம் உள்ளனர். திட்ட வரைவு அறிக்கையையும் உருவாக்கிவிட்டனர். அதை ஏற்கக் கூடாது என தமிழக அரசு வாதிட்டது. ஆனால், ”அது வெறும் அறிக்கை தானே! அதை உருவாக்குவதோ, அதை மத்திய அரசு பெறுவதோ தவறில்லை” என உச்சநீதிமன்றம் கூறியது. அதாவது, ‘கொலை செய்யத் தான் கூடாது, கொலை செய்ய திட்டமிடுவதை எப்படி தவறு என்பீர்கள்?’ என கேட்பது போல இருந்தது உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை!

அடுத்தக்கட்டமாக ‘மேக்கேதாட்டு திட்ட வரைவை பரிசீலிக்கலாம்’ என நடுவர் மன்றத்தை கர்நாடகம் நிர்பந்தித்தது! அந்த நிர்பந்தத்தை ஏற்று, ”ஆம், பரிசீலிக்கலாம், விவாதிக்கலாம் வாருங்கள்” என காவேரி நடுவர் மன்றத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் தமிழக அரசுக்கு மே 25 ஆம் தேதி கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதம் கண்டு தமிழக அரசு கொந்தளித்து இருக்க வேண்டாமா? இப்படியான ஒரு அநீதியான கடிதம் குறித்து பொது வெளியில் கூட சொல்லாமல் கமுக்கமாக அமைதி காத்தது ஏன் எனத் தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மக்களின் ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் வெளிப்படுத்தும் அரிய வாய்ப்பு பிரதமரின் சென்னை விசிட்டின் போது அவர் முன்னிலையில் தமிழக மக்களின் கோரிக்கைகளை ஸ்டாலின் சொல்லிய போது இதையும் இணைத்து சொல்லி இருக்கலாமே.

”மேக்கேதாட்டு விவகாரத்தில் இயற்கைக்கு விரோதமாகவும், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிராகவும் ஒன்றிய அரசு கர்நாடகத்திற்கு அனுசரணையாக செயல்படக் கூடாது” என வேண்டுகோள் வைத்து இருக்கலாமே! ஏன் செய்யவில்லை? இந்தக் கள்ள மெளனத்தின் காரணம் என்ன?

இந்த அளவுக்கு கர்நாடகம் மேக்கேதாட்டு விவகாரத்தில் முன்னேறிச் செல்வதற்கு மத்திய பாஜக அரசின் பரிவு தானே காரணம்! மத்திய அரசின் சட்ட அமைச்சகம் தான் இந்த திட்டத்தை பரிசீலிக்கலாம் என காவேரி நடுவர் மன்றத்திற்கு ஆலோசனை தந்துள்ளது! அத்துடன் நிற்காமல், ”தமிழக அரசு மேக்கேதாட்டு அணை திட்டத்தை மறுக்கும் வாய்ப்புக்கே இடமில்லை” என மத்திய அரசின் ஜலசக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவாத் நாடாளுமன்றத்திலேயே எப்படி சொல்ல முடிந்தது. இதற்கெல்லாம் மவுனம் சாதிக்கவா தமிழக மக்கள் திமுக அரசை தேர்ந்து எடுத்தார்கள்?

ஏன் இப்படி மெளனம் சாதித்தீர்கள்? என்ற கேள்வியை விவசாய சங்கத் தலைவர்கள் எழுப்பிய பிறகு பிரதமருக்கு கடிதம் எழுதுவதும், இல்லையில்லை நாம் கோர்ட்டில் வழக்கு போட்டு உள்ளோம் எனக் கூறுவதும் சமாளிப்பு தானே! எழுதப்படும் கடிதங்களுக்கும், போடப்படும் வழக்குகளுக்கும் என்ன மரியாதை என்பதை கடந்தகால வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளது தானே! தவறான போக்குகளை தார்மீகச் சீற்றத்துடன் முளையிலேயே கிள்ளி எறிய முற்படாமல், நாங்களும் எதிர்த்தோம் என்ற கணக்கில் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பிவிட்டு உட்கார்ந்து விட்டால் போதுமா?

தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முயற்சியில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு பரிசீலிக்கும், அனுமதிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டதே வியப்பைத் தருகிறது! மத்திய அரசு பரிசீலிக்கலாம் என்பதே மறைமுக ஆதரவு நிலைப்பாடு இல்லாமல் வேறு என்ன?

கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை

கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, ”சட்டமன்றத்தில் எப்படி வேண்டுமானாலும் தீர்மானம் நிறைவேற்றிக் கொள்ளுங்கள்! மேக்கேதாட்டு அணை கட்டுவதை தமிழகம் எதிர்ப்பதே சட்டவிரோதமானது. ஆகவே, அதை பொருட்படுத்தமாட்டோம்”என்று பேசியுள்ளார். இதற்கு நம் தமிழக முதல் அமைச்சர் வாயே திறக்கவில்லை!

தமிழகத்தின் எல்லைப் பகுதியில் தான் மேக்கேதாட்டு அணைக்கான முஸ்தீபுகள் வேகம் எடுத்தவண்ணம் உள்ளது. அதைக் கண்டும் காணாததுமாக – அதை தடுத்து நிறுத்தும் திரானியற்று – இங்குள்ள அரசியல் இயக்கங்களும், ஆட்சியாளர்களும் அமைதி காப்பது எப்படி எனப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. 9,000 கோடி பிராஜக்ட்! கர்நாடக அரசியல்வாதிகளை கவனித்த காண்டிராக்டர்கள் தடையைத் தகர்க்க தமிழக ஆட்சியாளர்களையும் கவனித்துவிட்டார்களா? என்ற சந்தேகத்தை தவிர்க்க முடியவில்லை.

எதிர்ப்பது போல பாவனைக் காட்டி தமிழக மக்களை ஏமாற்றிவிடாதீர்கள் எஜமானர்களே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time