செயலிழந்த சிறுநீரகத்தை  புதுப்பிக்க முடியும்!

-எம்.மரிய பெல்சின்

சிறுநீரகம், உடலுக்குள் உள்ள கழிவுகள், நச்சுகளை வெளியேற்றி மனிதன் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ரசாயண உரங்கள், மருந்துகள், ஹோட்டல் உணவுகள், கேன்வாட்டர் போன்ற பல காரணிகள் நமது கிட்னிக்கு எமனாக உள்ளன! கிட்னியை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

நீர் இறைக்கும் இயந்திரத்தைப் போன்று சிறுநீரகம் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால் தான் நாம் நல்ல உடல் நலத்துடன் இருக்க முடிகிறது.

யார் ஒருவருக்கும் சிறுநீரக செயலிழப்பு ஒரே நாளில் அதிரடியாக பாதிப்பு ஏற்பட்டுவிடாது. படிப்படியாகவே ஏர்பட முடியும்! சம்பந்தப்பட்ட நோயாளியிடம் முழு விவரத்தை கேட்ட பிறகே அவருக்கு பாதிப்பு எப்படி வந்தது என்று கண்டுபிடிக்க முடியும். சிலருக்கு சிறுநீரகம் செயலிழந்ததற்கான கேஸ் ஹிஸ்டரியைக் கேட்டால், மிகச் சாதாரணமானதாகவே இருக்கிறது. ஆனாலும், பாதிப்புகள் அவர்களை பாடாய்ப்படுத்துகின்றன. இது போன்ற நிலையில் சில உணவுகளைத் தவிர்த்து சிலவற்றை பின்பற்றுங்கள் என்று சொன்னாலும் அதை சரியாகப் பின்பற்றாததால் அவர்களது உடல்நலத்தில் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.  பெரும்பாலானோருக்கு உணவுமுறை மாற்றமே மிக முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

சிறு நீரகம் செயல் இழப்பதற்கான காரணங்கள்;

வரைமுறையின்றி மது அருந்துவது,

சர்க்கரை நோயின் தாக்கம்

ரத்த அழுத்தம் ஏர்படுத்தும் பாதிப்பு

நீண்டகால சிறுநீரக வீக்கம்,

அளவுக்கதிகமான மருந்து, மாத்திரைகள்

சிறுநீரக ரத்தக்குழாயில் அடைப்பு,

உப்பு மற்றும் ஊறுகாயை அதிக அளவு சாப்பிடுவது,

அதிகமாக காபி குடிப்பது

சிறுநீரை அடிக்கடி அடக்கி வைப்பது

தண்ணீர் போதுமான அளவு குடிக்காமல் இருப்பது

மினரல்கள் நீக்கப்பட்ட கேன்வாட்டர்

பாட்டிலில் அடைத்த குளிர்பானங்கள்

போன்ற காரணங்களால் படிப்படியாக பாதிப்புகள் உருவாகி  சிறுநீரகம் செயலிழக்க நேரிடும்.

சிறுநீரகத்தை பாதுகாக்க விரும்புவர்கள் தவிர்க்க வேண்டியவை!

நுரைத்துக்கொண்டு சிறுநீர் வெளியேறுவது, இயல்பைவிட அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் வெளியேறுவது, ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுவது, சிறுநீர் வருவதுபோன்ற உணர்வு இருந்தாலும் சிறுநீர் கழிக்க முடியாமல் திணறுவது, சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உணர்வு உள்ளிட்ட சில மாற்றங்கள் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளாக இருக்க வாய்ப்புள்ளது. இது சிலருக்கு போதுமான அளவு நீர் அருந்தாதது, நீண்ட நேரம் வெயிலில் வேலை செய்வது, வெயிலில் அலைவது உள்ளிட்ட காரணங்களால் சாதாரணமாகக்கூட வரலாம். இதுபோன்ற சூழலில் நன்னாரி சர்பத் அருந்துவது, கீழாநெல்லி இலைகளை அரைத்து சாறு எடுத்து மோரில் கலந்து அருந்துவது போன்றவற்றின்மூலம் சரி செய்து கொள்ளலாம். அப்படியும் பிரச்சினை தொடர்ந்தால் அதுவிஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

இறைச்சி உணவுகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவது மற்றும் ஃபிரைடு ரைஸ் உள்ளிட்ட வெளி உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்றவற்றால்கூட சிறுநீரகம் செயலிழக்கலாம் என்பது சிலரது கேஸ் ஹிஸ்டரியில் கிடைத்த தகவல்கள். மசாலா சுண்டல், பானிபூரி, சோலா பூரி, ஃபிரைடு ரைஸ், நூடுல்ஸ், சமோசா உள்ளிட்ட உணவுகளை அதிக காரம், புளிப்பு, துவர்ப்பு மற்றும் மட்டரகமான நெடியுடன் சாப்பிடுவது நல்லதல்ல. அதுவும் இதுபோன்ற உணவுகளை ஏ.சி அறையில் உட்கார்ந்துகொண்டு கூல்ட்ரிங்ஸ், ஐஸ் வாட்டர் அருந்துவது உடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தும். பொதுவாக பாட்டில் டிரிங்ஸ் சிறு நீரகத்தை பாதிக்கும்! எனவே, பிசுபிசுப்பை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும். மேலும் குறிப்பாக வயிறு நிறைய சாப்பிட்டதும் வறுத்த பயறு வகைகள், அவல் மற்றும் அரிசி முறுக்கு போன்றவற்றை சாப்பிடக்கூடாது.

ஊறுகாய் கிட்னிக்கு ஊறு விளைவிக்கும்

ஊறுகாய் என்பது லேசாக தொட்டுக்கொள்வதற்காக மட்டுமே பயன்படுத்தக்கூடிய ஓர் இணை உணவு என்பதை மறந்துவிட்டு அதையே உணவில் கால் பங்கு அளவு சாப்பிடுவது, மீண்டும் மீண்டும் சூடு செய்த உணவுகள், நன்றாக வேகாமல் கரிந்துபோன எண்ணெய் சப்பாத்தி, தோசை மற்றும் தயிர், கருவாடு, உளுந்து உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதும் உடலில் பிசுபிசுப்பை ஏற்படுத்தி சிறுநீரகத்தில் பாதிப்பை உண்டாக்கும்.

இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த துவர்ப்பும், கசப்பும் நிறைந்த காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். வாழைப்பூ, பாகற்காய், அவரைப்பிஞ்சு, சுண்டைக்காய்,  கறிவேப்பிலை, நெல்லிக்காய் வற்றல், கொள்ளு, நன்றாகக் கடைந்து ஆடை நீக்கிய மோர் மற்றும் மணத்தக்காளி, பொன்னாங்கண்ணி, வல்லாரை, கரிசலாங்கண்ணி போன்ற கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.  இவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொண்டால் சிறுநீரகங்களின் மந்தநிலை விலகி இயல்பாக செயல்பட்டு சிறுநீரை தெளிவாக வெளியேற்றும்.

சிறுநீரகங்களின் செயல்பாட்டுக்கு நெருஞ்சி முள் சூரணத்தையோ அல்லது முழு செடியையோ கசாயமாக்கி குடிக்கலாம். இவற்றுடன் கொத்தமல்லி விதை (தனியா) சேர்த்துக் கொள்ளலாம். இதேபோல் தினமும் அரை அவுன்ஸ் முதல் ஒரு அவுன்ஸ் வரை முள்ளங்கிச் சாறு அருந்துவதும் நல்லது. தர்ப்பைப் புல்லின் வேர், வெட்டி வேர், விலாமிச்சை வேர், கரும்பு வேர் மற்றும் பொன்னாங்கண்ணி வேர் ஆகியவற்றை இடித்து இரவில் பானை தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வருவது சிறுநீரக பாதிப்புகளை சரிசெய்யும்.

அருகம்புல், வில்வ இலை, கீழாநெல்லி சம அளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி அதனுடன் வாழைத்தண்டு சாறு கலந்து காலை, மாலை தலா 100 மில்லி அளவு கொடுத்துவருவதும் பலன் தரும்.

கறிவேப்பிலையுடன் காய்ந்த மிளகாய், புளி, பூண்டு, உப்பு சேர்த்து வறுத்து அரைத்து தினமும் சாப்பிட வேண்டும். எலுமிச்சை சாற்றுடன் தேன், தக்காளிச்சாறு கலந்து பகல்வேளையில் குடிக்கலாம். பாலில் எலுமிச்சைச்சாறு கலந்து உடனே சாப்பிடலாம் அல்லது பாகற்காய் சாற்றுடன் மோர் கலந்து குடிக்கலாம்.

அவ்வப்போது முலாம்பழம், தர்பூசணி ஜூஸ் குடிக்கலாம். விளாம்பழமும் நல்லது. நாவல்பழம் சாப்பிடலாம். தூயமல்லி, கருங்குறுவை அரிசி, கைகுத்தல் அரிசி,  வரகு அரிசி போன்ற அரிசி வகைகளைச்  சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகள் பலப்படும்.  சிறுநீரக பாதிப்பு ஏற்ப்பட்டவர்கள் மட்டன், சிக்கன்,  முட்டை போன்ற அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

காய்கறி, கீரைகளில் அதிகமாக நீர் விட்டு நன்றாக வேக வைத்து நீரை வடிகட்டிவிட்டு மிளகுத்தூள், மஞ்சள்தூள் சேர்த்துச் சாப்பிடலாம். இது உப்புகள் உணவில் அதிக அளவு தங்காமால் பார்த்துக் கொள்ளும். மூக்கிரட்டை இலைகளை லேசாக வதக்கி துவையல் செய்து சாப்பிட்டாலும் பிரச்சினை சரியாகும். மூக்கிரட்டை முழு செடியுடன் தலா கால் டீஸ்பூன் சீரகம், பெருஞ்சீரகம், ஓமம் சேர்த்து கசாயமாக்கிக் குடிக்கலாம்.

நாள் இரவு உளுந்தை நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த நீரைக் குடிக்க வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் விடுபடலாம். கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதையை சமஅளவு எடுத்துப் பொடியாக்கி தினமும் சாப்பிடுவது, கறிவேப்பிலைப் பொடியை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதும் நல்ல தீர்வைத் தரும்.

நெருஞ்சிலுடன் நொய்யரிசி சேர்த்த கஞ்சி செய்து சாப்பிடுவது நல்லது. குருணை அரிசி அதாவது நொய்யரிசி 100 கிராம் எடுத்து 3 டம்ளர் தண்ணீர் விட்டு வேக வைக்க வேண்டும். சுத்தமான துணியில் நெருஞ்சி விதை 5 கிராம், 5 மிளகு, பூண்டு ஒரு பல், கால் டீஸ்பூன் சீரகம், மஞ்சள்தூள் இரண்டு சிட்டிகை (2 பிஞ்ச்)  போட்டு கட்டி அரிசி வேகும்போது பாத்திரத்தில் போட வேண்டும். துணியின் ஒரு நுனி வெளியே தெரியும்படி இருக்கட்டும். அரிசி குழைய வெந்ததும் நெருஞ்சி கட்டி போட்ட துணியை எடுத்துவிட்டு அந்தக்கஞ்சியில் உப்பு சேர்த்து சாப்பிட வேண்டும். அரிசியுடன் தேவைப்பட்டால் கொஞ்சம் சிறுபருப்பு சேர்த்துக்கொள்ளலாம். இந்தக் கஞ்சியை ஒருவேளை உணவாக எடுத்துக் கொள்ளுங்கள்.

மிகச் சாதாரணமாகக் கிடைக்கும் கீழாநெல்லிச் செடியை அரைத்து சாறு எடுத்து பால் அல்லது மோரில் கலந்து குடித்துவந்தாலும் பிரச்சினைகள் சரியாகும். சாணாக்கீரையை கசாயம் வைத்துக் குடிப்பதுடன் அவ்வப்போது அந்தக்கீரையை சமைத்துச் சாப்பிடவும் செய்யலாம். மாலைவேளையில் சோம்பு (பெருஞ்சீரகம்), பார்லி, மஞ்சள் மூன்றையும் ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ கசாயம் வைத்துக் குடிக்கலாம். டீ, காபிக்குப் பதில் பூனை மீசை மூலிகையை நீர் விட்டுக் காய்ச்சி குடிக்கலாம். இதுபோன்ற எளிய முறைகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்புகளில் இருந்து விலகலாம். குறிப்பாக டயாலிசிஸ் செய்ய தேவையிருக்காது.

ஆனால், பலர் இவற்றில் சில வழிமுறைகளை பின்பற்றி பலன் பெற்றதும், தவிர்க்க வேண்டிய உணவுகளை உண்ணத் தொடங்குகின்றனர். இதனாலேயே அவர்களது சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியவில்லை. மனம் வைத்தால் மார்க்கம் உண்டு என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டுரையாளர்; எம்.மரிய பெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time