காந்தி கொலையும், பாபர் மசூதி இடிப்பும்…!

சாவித்திரி கண்ணன்

மகாத்மா காந்தியின் கொலைக்கு முன்னும், பின்னும் நடந்த வரலாற்று நிகழ்வுகளுக்கும், பாபர் மசூதி இடிப்புக்கு முன்னும்,பின்னும் நடந்தவற்றுக்கும் பெரிய வித்தியாசமில்லை! ஒரே வித்தியாசம் காந்தி கொலையின் தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வந்துவிட்டது! அதுவே, பாஜக ஆட்சியில் வெளியாகி இருந்தால்,கோட்ஸே தியாகியாக்கப்பட்டிருப்பார் நீதி அரசர்களால்…!

28 ஆண்டுகள் இழுபறிக்குப் பிறகான காலதாமதபடுத்தப்பட்ட தீர்ப்பே மிகப் பெரிய அநீதியாகும்!

இப்படி காலதாமாக்கப்பட்டதே…இந்த வழக்கில் உரிய நீதி வழங்குவதற்கு எவ்வளவு தடைக்கற்கள் இருந்துள்ளன என்பதற்கான விளக்கமாகிவிடுகிறது!

உண்மை என்ற ஒன்று தெட்டெனத் தெரியும் போது அதை உறுதிபடுத்துவதற்கு தாமதம் செய்வானேன்?

ரு தீமை கருக்கொள்ளும் போதே தடுத்திருக்க முடியும்! தடுக்கப்படவில்லை!

அது வளர்ந்து விஸ்வரூபமெடுக்கும் வாய்ப்பும் தரப்பட்டது!

விஸ்வரூபமெடுத்த பிறகு அதற்கு இசைந்து இடம்தர வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் அரசுக்கு ஏற்படுகிறது.

எதிர்த்தால் என்ன நடக்குமோ என்ற பயம், இந்து சமூக ஓட்டுகளை இழந்துவிடுவோமோ என்ற தயக்கம்….எல்லாம் சேர்கையில் அநீதியாளர்கள் அதிக பலம் பெற்றுவிடுகிறார்கள்!

இந்த பயத்தையும்,தயக்கத்தையும் சாதகமாக்கிக் கொண்டு தான் பாபர்மசூதி இடிப்பு நடந்தேறியது!

ஒன்று தவறென்றால் சமரசமின்றி தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.இரும்புக் கரம் கொண்டு அடக்கி இருக்க வேண்டும்!

காந்தி கொலைக்கு ஆதாரமாயிருந்தவர்களுக்கு அன்று அதிகாரமட்டத்தில் சிலர் அனுசரணையாக இருந்ததை நேருவாலேயே தடுத்து நிறுத்த முடியவில்லை!

ஆர்.எஸ்.எஸ் இயக்கம் காந்தி கொலையுண்ட ஒரே ஆண்டில் தடை விலக்கப்பட்டது எப்படி? அதற்கு ஒரேயடியாக அன்றே முடிவு எழுதப்படவில்லையே…..!

இந்த நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிப்பதில் காட்டப்பட்ட வேகத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கையேனும்,ஆர்.எஸ்.எஸ்சை ஒடுக்குவதில் காட்டாமல்விட்டதன் பலனை நாடு இன்று அனுபவிக்கிறது!

அநீதி இழைப்பவர்கள் தங்கள் செய்வது நியாயம் என்று அழுத்தமாக நம்புகிறார்கள்! அந்த நம்பிக்கைக்கு சட்டப்படி தடை இல்லை என்ற தளர்வான போக்குகளும் கடை பிடிக்கப்பட்டன! சட்டத்தை  மதிக்கும் சமூக மனசாட்சி வெல்லுமா? சட்டத்தை மீறும் சமூக நம்பிக்கை வெல்லுமா? என்பது தான் 28 ஆண்டுகால இழுபறியாக வழக்கு சென்றதற்கான காரணம்!

சட்டத்தின் மனசாட்சியை நம்புவோருக்கு நாளுக்கு நாள் நம்பிக்கை தளர்ந்தது! சமூக நம்பிக்கைக்கு சட்டம் தளர்ந்து இடம் கொடுத்துவிட்டது!

இது தான் பாபர்மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பில் நாம் புரிந்து கொள்ள வேண்டியதாகும்!

வலுத்தவன் சட்டத்தையே வளைத்துக் கொள்வான்!

பலவீனமானவனுக்கு சட்டத்தால் கூட பாதுகாப்பு வழங்கமுடியாது என்ற சமூகச் சூழல் இந்தியாவில் கட்டமைக்கப்பட்டுள்ளதன் அடையாளமாகவே நான் இந்த தீர்ப்பை புரிந்து கொள்கிறேன்.

நடந்த நிகழ்வை ’’அக்கிரமம்’’ என எழுதலாம்! வழங்கப்பட்ட தீர்ப்பை ’’அநீதிக்கு அனுசரணையானது’’ என்று மறுகலாம்!

ஆனால்,அந்த அக்கிரமத்தை நிகழ்த்தியவர்களை அரியணையில் அமர்த்தி அழகுபார்க்கும் நிலைக்கு வந்துவிட்ட சமூக யதார்த்தம் தீர்ப்பில் ஆதிக்கம் செலுத்தாமல் இருக்குமா என்ன?

இந்த தீர்ப்பை கிட்டதட்ட எதிர் நோக்கிய நிலைக்கு சமூகம் தன்னை தயார்படுத்திக் கொண்டதால் தான் பெரிய அதிர்வுகள் விரிந்து பரந்த தளத்தில் ஏற்படவில்லை!  நம்மால் ஏற்படுத்தவும் முடியவில்லை!

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time