‘அக்னிபத்’ சந்திக்க உள்ள ஆபத்துகள் என்னென்ன?

-சாவித்திரி கண்ணன்

”நான்கே வருஷத்தில் நட்டாற்றில் விடுகிறீர்களே” என ஒருதரப்பும், ”நாலு வருஷத்தில் நல்ல பணம் கிடைக்குது” என மறுதரப்புமாக அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பும், ஆதரவும் சம விகிதத்தில் இருக்கிறது! உண்மை என்ன? இந்திய ராணுவம் குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

”பதினெழரை வயசுல சேரணும், 21 வயசுல வெளியேறிடணும்” என முதலில் அறிவித்தார்கள்! இதற்கு எதிர்ப்பு வலுத்தவுடன், ”18,19 வயதிலும் சேரலாம்,23 வயது வரை இருக்கலாம்.” என மாற்றியுள்ளனர். இந்த ஒரு சம்பவமே முறையான திட்டமிடல் இன்றி, அவசர கதியில் இந்த திட்டத்தை கொண்டு வந்ததை அம்பலப்படுத்துகிறது.

”சரி, விடுங்க சார்! நல்ல சம்பளத்துடன் முடிவில் 11 லட்சத்து 71 ஆயிரம் மொத்தமா பணம் தருகிறார்கள்! எப்படி பார்த்தாலும் இது சந்தோசம் தான்! அதுக்கு பிறகு ஒரு வேலையைத் தேடிக் கொண்டோ, சுய வேலையை ஏற்படுத்திக் கொண்டோ கல்யாணம் செய்து கொண்டு செட்டில் ஆயிடலாம் தானே!” என்றனர் சில இளைஞர்கள்!

”சார், ஒரு நாலு வருஷம் ராணுவத்தில் இருந்துவிட்டு மீண்டும் நம்ம ஏரியாவுக்கு வந்து நான் இராணுவத்தில் இருந்தவன் தெரியுமா? என்று கெத்து காட்டலாமே..’’ என்றனர் இன்னும் சிலர்!

மேற்கூறிய இந்த ஆதரவு நிலைப்பாட்டில் நமக்கு தெரிய வருவது இராணுவத்தில் சேருவதை பணம் ஈட்டுவதற்கான ஒரு வழிமுறையாகவும், பகட்டும், பந்தாவும் செய்வதற்கான ஒரு வழிமுறையாகவும் பாஜக மாற்றிவிட்டுள்ளது என்பதேயாகும்! மேலும், ஒரு பணி என்பது தற்காலிகப் பணி எனும் போது, அதை ஜாலியாக என்ஜாய் பண்ணிவிட்டு ரிலீவ் ஆகிப் போகும் மனநிலையே இருக்கும். இதில் எந்த அளவு ஈடுபாடும், அர்ப்பணிப்பும் எதிர்பார்க்க முடியும்? என்ற யதார்த்தத்தை ஆட்சியாளர்கள் கவனிப்பதில்லை. ”நான்காண்டு தானே எதற்கு ‘ரிஸ்க்’ எடுக்க வேண்டும்?” எனத் தோன்றுமே..? போர்க்களத்திற்கு எண்ணிக்கையை விடவும் ‘எவிசியன்ஸி’ தான் முக்கியம். ஆபத்தான காலத்தில் போராடத் தயங்கி கோட்டைவிட்டு விடும் வீரர்கள் ராணுவத்திற்கே ஆபத்தில்லையா..?

இது வரை இராணுவத்தில் 15 முதல் 17 வருடம் பணியாற்றி வந்த வீரர்கள் யாருமே இராணுவப் பணியை இந்த கோணத்தில் அணுகியதில்லை. இந்த தேசத்தின் பாதுகாப்பிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட மனநிலையில் தான் அவர்கள் பணியாற்றினர். அவர்களிடம் பேசிய போது, ”வேலையின் தன்மை பற்றிய ஒரு புரிதல் பெறவே எங்களுக்கு மூன்று, நான்கு வருடங்கள் தேவைப்பட்டது” என்றனர். ”அதன் பிறகு அடுத்தடுத்த கட்டங்களுக்கு எங்களை வளர்த்துக் கொண்டதில் ஒரு சவாலானப் பணியாக ஈடுபாட்டுடன் செயலாற்றினோம்” என்றனர். பணியின் முடிவில் அவர்கள் மிகுந்த பக்குவத்துடன் வெளியேறினர். ”சாதாரண சிவிலியன் மக்களோடு இரண்டற கலந்து வாழும் பக்குவத்துடன் வெளிவந்தோம்” என்றனர். ”இதை நான்காண்டு பணியில் இருந்து வருபவர்களிடம் எதிர்பார்க்க முடியுமா?” தெரியவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

பாஜக அரசு இராணுவ வீரர்களை கிட்டதட்ட ஒரு ‘காண்டிராக்ட் லேபர்’களைப் போல அதாவது, ஒப்பந்தக் கூலிகளைப் போல கையாள விரும்புகிறது. அதற்கு அது சொல்லும் காரணம், ”நமது இராணுவத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவு என்பது மிகப் பெரிய சுமையாக உள்ளது” என்பது தான்!

பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கல்வி மற்றும் மருத்துவம் ஆகியவற்றுக்கு செலவழிப்பதைக் காட்டிலும் மிக அதிகமாக இராணுவத்திற்கு தான் செலவு செய்து வருகிறது. இந்த வகையில் உலகில் இராணுவத்திற்கு செலவு செய்யும் நாடுகளில் அமெரிக்கா மற்றும் சீனத்திற்கு அடுத்த நிலையில் மிக அதிகமாக பணத்தை அள்ளி இறைக்கிறது! அதாவது, நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த இங்கிலாந்தைவிடவும், அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த ரஷ்யாவை விடவும் இராணுவத்திற்கு அதிக நிதியை இந்திய இராணுவம் செலவிடுகிறது. இந்திய ராணுவத்தில் 14,50,000 பேர் பணிபுரிகின்றனர்! அதாவது, ஆள் பலத்தில் உலகின் இரண்டாவது பெரிய ராணுவத்தைக் கொண்டது இந்தியா! இதன் முக்கிய நோக்கம் பக்கத்து நாடான பாகிஸ்தானை ஒரு பதற்றத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற பாஜக அரசின் விருப்பம் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இராணுவத்தில் இந்தியா வல்லரசாக வேண்டுமாம். இந்தியா பட்டினியில்லாத நாடாக இருக்க வேண்டும் என்றோ, தற்சார்பு பொருளாதாரத்தில் கடன் வாங்காத நாடாக இருக்க வேண்டும் என்றோ சிறிதளவு கூட முனைப்பு காட்டாத பாஜக அரசு இராணுவத்திற்கு ஆண்டுக்கு ஆண்டு பட்ஜெட்டில் அதிகம் நிதியை ஒதுக்கி வருகிறது.

அந்த வகையில் இந்த நிதி ஆண்டில் (2022 – 22023) மட்டுமே 5 லட்சத்து 25 ஆயிரத்து 166 கோடிகளை இராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது! இந்தப் பணத்தை அது துப்பாக்கிகளுக்கும், குண்டுகளுக்கும், ராணுவ தளவாடங்களுக்கும், ராணுவ விமானங்களுக்கும், போர் கப்பல்களுக்கும் செலவிடுவதில் தான் பேரார்வம் காட்டுகிறது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர்களுக்கு தரும் சம்பளத்தையும், ஓய்வூதியத்தையும் ஒரு சுமையாகப் பார்க்கிறது!

”ஆமாம், சுமை தான் சார்! இதை ஒத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை. இந்திய அரசு மாதம் தோறும் ஆறு லட்சம் விதவைகளுக்கும், 20 லட்சம் வீரர்களுக்கும் பென்ஷன் தந்து கொண்டுள்ளது! இந்திய இராணுவத்தை பொறுத்த அளவில் ஒரு வீரன் இறந்தாலும் சுமை தான், உயிரோடு இருந்தாலும் சுமை தான்! மொத்த பட்ஜெட்டில் இதற்கு மட்டுமே 22 சதவிகிதம் செலவாகிறது. இது பெரும் சுமை தானே…” என்றார் ஒரு பாஜக ஆதரவாளர்! இது போன்ற மனநிலை கொண்டவர்களை எப்படி புரிந்து கொள்வது…என்றே தெரியவில்லை…!

ஆறு லட்சம் குடும்பம், தன் தலைவனை இழந்து வாழும் நிலையில், போரில் இறந்த வீரர்களின் மனைவிமார்களும், குழந்தைகளும் சுமக்கும் வலி உங்களுக்கு ஏன் தெரிவதில்லை? இராணுவ வீரர்களுக்கு பென்ஷன் தருவது சுமை என்றால், அவர்கள் உழைப்பை நாட்டிற்கு வேறு எந்த வழியில் எப்படிப் பயன்படுத்தலாம் என திட்டமிடலாம்! எந்த மனிதனும் வெறும் வாயோடும், வயிற்றோடும் மட்டும் பிறக்கவில்லை. நல்ல ஆரோக்கியமான கை, கால்களுடனும், அறிவுடனும் தான் பிறந்துள்ளான். ஆக, ஒரு ஆரோக்கிய மனிதனை இந்த நாட்டுக்கும், சமூகத்துக்கும் பயன் தரத்தக்க அளவில் பயன்படுத்த கண்ணியமாகத் திட்டமிடலாமே!

இராணுவத் தளவாடங்கள், விமானங்கள், போர்கப்பல்கள் வாங்குவதில் உள்ள பேர அரசியலும், கமிஷன் மற்றும் கையூட்டுகளையும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையாகவே வளர்த்து எடுத்து உள்ளனர்! அதாவது, எந்த ஒன்றையும் இந்திய அரசு நேரடியாக வாங்காமல் தரகு மூலமாகவே வாங்கும். அந்த தரகு பணமாக பல்லாயிரம் கோடிகள் விரையமாவது குறித்த குறைந்தபட்சக் குற்றவுணர்வு கூட இல்லாதவர்கள் தான் இந்த தேசபக்தர்கள்! இது ரபேல் விமானங்கள் விவகாரத்திலேயே நன்கு வெளிப்பட்டது.

சரி, தற்போதைய விவகாரத்திற்கு வருவோம். இந்த அக்னிபத் திட்டப்படி இந்திய அரசு அறிவித்துள்ள சம்பளம் முதலாமாண்டு ரூ 30,000, இரண்டாமாண்டு 33,000, மூன்றாமாண்டு ரூ 36,500, நான்காமாண்டு ரூ 40,000 என்பது முழு உண்மையல்ல! இதில் 30 சதவிகிதம் கடைசியாக தரப்படும் பணத்திற்காக பிடித்துக் கொள்ளப்படும்! அதாவது 30 ஆயிரம் என்றால் 21 ஆயிரம் என புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் கடைசியில் தரப்படும் 11லட்சத்து 71 ஆயிரத்தின் பாதிப்பணம் சம்பந்தப்பட்டவர்கள் சம்பளத்தில் இருந்து தான் தருகிறார்கள்!

முடிவாக ஒன்று,  ”நான்காண்டு முடிவில் இராணுவத்தில் சேர்ந்தவர்களில் 75 சதவிகிதமானவர்களை கழித்துக் கட்டிவிட்டு 25 சதவிகிதமானவர்களை நிரந்தர பணிக்கு வைத்துக் கொள்வோம்” என்கிறீர்கள்! இதற்கு எந்த மாதிரியான அளவுகோலைப் பயன்படுத்துவீர்களோ, அதில் என்னென்ன பிரச்சினைகள், கொந்தளிப்புகள் ஏற்படுமோ… என்ற கவலை தான் மேலோங்கிறது. இதில் காட்டப்படும் பாகுபாடுகள் மேலும் சில பெரும் பிரச்சினைகளையே ஏற்படுத்தும்.

ஆகவே, ‘இதைத் தான் நாங்கள் செயற்படுத்துவோம்’ என்றால், குறைந்தபட்சம் இராணுவத்திற்கு ஆள் எடுக்கும் போதே நான்காண்டுக்கானவர்கள், நிரந்தரமானவர்கள் என்ற கேட்டகிரியிலேயே தேர்ந்து எடுத்துவிடுங்கள். பிற்பாடு வரும் பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே முற்றுப் புள்ளி வைத்துவிடலாம்! வீண் எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்ளாமல்….,  ஆம், ”நான்காண்டுகள் மட்டுமே பணியாற்ற உள்ளோம்..” என்ற தெளிவுடனாவது அவர்கள் நிம்மதியாக – ‘நிராகரிக்கப்பட்டோம்’ என்ற மன உளைச்சல் இல்லாமலாவது – வெளி வரட்டும்! இளம் வயது புறக்கணிப்பை தாங்காது என்பதால், கொஞ்சமாவது சிந்தித்து செயல்படுங்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time