பன்னீரின் பதவி, பறி போவது உறுதி!

-சாவித்திரி கண்ணன்

பதவிச் சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பொதுக் குழுவில்  ஒருங்கிணைப்பாளர் பதவி பறிபோகும் என்பதை உணர்ந்த பன்னீர் அணி, கடைசி பிரம்மாஸ்த்திரமாக பொதுக் குழுவை தடுக்க கோரி காவல்துறையை நாடியுள்ளது! அதாவது, திமுக அரசின் தயவில், அதிமுக பொதுக் குழுவை தடுத்து நிறுத்தும் அளவுக்கு சென்றுவிட்டது!

”அதிமுக பொதுக் குழு நடந்தால் அதில் கலவரம் வெடிக்கும்” என பன்னீர் புகார் தருகிறார் என்றால், என்ன பொருள்? பெரும்பான்மை உறுப்பினர்களின் முடிவுக்கு எதிராக தன் ஆதரவாளர்கள் கலவரம் செய்வார்கள் என்பதற்கு அவரே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் என்று தான் அர்த்தம்!

கட்சிப் பதவியை தக்க வைத்துக் கொள்ள தன்னை தகுதிபடுத்திக் கொள்ளாமல், பாஜகவின் தாட்சயண்யத்திலேயே காலம் தள்ளிவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தார் பன்னீர்! பாஜகவும் பன்னீரை தோளில் சுமந்து சோர்ந்துவிட்டது. ”அப்பா, இனியும் முடியாது. உன் கட்சியிலே உனக்கு போதுமான ஆதரவை உருவாக்கி கொள்ள வேண்டியது உன் பொறுப்பு, அதில் நாங்க தொடர்ந்து தலையிட முடியாது. சின்னப் பிள்ளைகளைப் போல டீச்சர் அவன் என்னை அடிச்சுட்டான் என்பது போல அடிக்கடி வந்து எடப்பாடி என்னை மதிக்கலைன்னு எங்ககிட்ட புலம்பக் கூடாது” என கைவிட்டு விட்டனர்.

”கோர்ட்டுக்கு போவேன், கட்சி சின்னம் பறிபோகும்” என்று பொதுவெளியில் சொந்தக் கட்சியையே மிரட்டிப் பார்த்தார். நடக்கவில்லை. கட்சிப் பிரச்சினையை பொது வெளியில் பன்னீர் இப்படிப் புலம்பப், புலம்ப அவர் தன் பலவீனத்தை தான் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் பன்னீர் செல்வம் தன் தகுதிகளுக்கு மீறி பதவி சுகத்தை பல காலம் அனுபவித்து விட்டார்! தகுதி இல்லாமல் பேராசைப்படுபவன் ஒரு நாள் சொல்லொண்ணா அவமானத்தை பெற்றே தீர வேண்டும்!

”ஒற்றைத் தலைமை என்கிறாயா? வா, மோதிப் பார்க்கலாம்” என தோள் தட்டி கோதாவில் இறங்கும் திரானி அவரிடம் இல்லை. சசிகலாவிடம் தூதுவிட்டுப் பார்த்தார். ஆனால், மதில் மேல் பூனையான சந்தர்ப்பவாத சாகஸத்தில் கைதேர்ந்த பன்னீரோடு கைகோர்க்க சசிகலா முன்வரவில்லை. பன்னீரோடு இருந்தவர்கள் எல்லாம் படிப்படியாக எடப்பாடி பக்கம் நகர்ந்து விட்டனர்! எஞ்சியுள்ளவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் தான்! அவ்வளவு ஏன் அவரது சொந்த மாவட்டமான தேனீ மாவட்ட நிர்வாகிகளில் பலரே எடப்பாடி பழனிச்சாமி பக்கம் நகர்ந்துவிட்டனர் என்றால், இதைவிட அவலம் வேறென்ன இருக்க முடியும்?

கோவை சத்யன்

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அண்ணா திமுகவின் அதிகாரபூர்வ பேச்சாளர் சத்யன் என்பவர் ஒ.பி.எஸ்சின் தீவிர ஆதரவாளராக இருந்தார். மேடைதோறும் ஒ.பி.எஸ்சை புகழ்ந்து தள்ளுவார். யூடிபிலே கூட நிறைய பேசியுள்ளார். இப்படி கொங்கு மண்டலத்தில் இருக்கும் ஒரு கட்சிப் பேச்சாளன் எடப்பாடியை எதிர்த்து, பன்னீரை கமிட்மெண்டாக ஆதரித்ததை பலரும் வியந்து பார்த்தனர். அப்படிப்பட்ட சத்யன் உடல் நிலை மோசமான நிலையில் கடந்த சில மாதங்களாக மருத்துவ மனையில் படுத்த படுக்கையாக உள்ளார். மருத்துவ செலவுக்கான உதவி கேட்டு அவர் மனைவி பன்னீரை தொடர்பு கொண்டால், லைனுக்கே வரவில்லையாம். வேறு வழியில்லாமல் எடப்பாடியை அணுகியதும், ”தம்பி உயிர் பிழைத்து வர வேண்டும். என்ன செலவானாலும் சரி” எனப் பொறுப்பு எடுத்துக் கொண்டாராம் எடப்பாடி! பன்னீரையும், எடப்பாடியையும் ஒப்பிட்டு இது போன்ற பல விவகாரங்கள் அதிமுக தொண்டர்கள் மத்தியில் விவாதிக்கப்படுகிறது!

சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் பத்து தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற வைத்தார் எடப்பாடி! இன்னும் சொல்வதென்றால், கொங்கு மண்டலம் முழுக்கவே அதிமுகவிற்கு கணிசமான வெற்றியை ஈட்டித் தந்தார். ஆனால், தென்மாவட்ட வேட்பாளர்களின் வெற்றிக்கு பன்னீர் எந்த மெனக்கிடலும் செய்யவில்லை. பண விஷயத்தில் கையை இறுக்கி மூடிக் கொண்டார்.  தேனீ மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் மூன்றை பறி கொடுத்து தான் மட்டுமே வெற்றி பெற்று வந்தார்.

பன்னீர்செல்வம் சுயநலத்தின் உச்சமாக இருப்பதால் சொந்த சாதியிலும் அவருக்கு செல்வாக்கு இல்லை. சொந்த மாவட்டத்திலும் செல்வாக்கு இல்லை. கட்சி உதவி இல்லாமல் சுயேட்சையாக போட்டியிட்டால் தேனியில் டெபாசிட்டை பறி கொடுக்கும் நிலையில் தான் அவர் செல்வாக்கு உள்ளது.

அதுவும் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, ‘பாஜகவின் நலனை பாதுகாப்பதற்காகவே அவர் அரசியல் செய்கிறாரோ…’ என எண்ணத்தக்க வகையில், பாஜகவின் பாதம் தாங்கி அரசியலை செய்து வருகிறார். இந்த விஷயத்தில் அப்பன் எட்டடி என்றால், அவர் மகன் ரவீந்திரநாத் பதினாறு அடி பாய்கிறார். டெல்லியில் நாடாளுமன்றத்தில் ரவீந்திரநாத் காட்டும் பாஜக விசுவாசம் அதிமுக சீனியர்களையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

”பிரதமர் மோடி சொன்னார் என்பதற்காகவே துணை முதல்வர் பதவியை ஏற்றுக் கொண்டேன்” என்ற பன்னீரின் ஒப்புதல் வாக்குமூலம் ஒன்று போதுமானது! பன்னீரை யார் இயக்குகிறார் என்பதற்கு! பதவி சுகத்திற்காக சொந்தக் கட்சியையும், தமிழக மக்களையும் பாஜவின் நலனுக்காக அடகு வைத்து பிழைப்பு நடத்தும் பன்னீர் செல்வம் தான் இருப்பதிலேயே தமிழகத்தின் ஆகத் தீமையான அரசியல்வாதி!

இவரை ஓரம் கட்டாவிட்டால் அதிமுகவிற்கே எதிர்காலம் இல்லை. ஆனால், நிஜத்தில் இவரை ஒரம் கட்டவே முடியாது. அப்படி ஒரம் கட்டுவதை பாஜக அனுமதிக்காது. ஆகவே, பன்னீரைப் படிப்படியாகத் தான் பலம் இழக்க வைத்து ஓரம் கட்ட வேண்டும். அதை செய்வதற்கு சரியான நபர் எடப்பாடியை விட்டால் வேறில்லை! ஏனென்றால், எடப்பாடி தான் எத்தனுக்கு எத்தன்! சசிகலா வகையறாக்களையே ஓரம் கட்டிய அவருக்கு பன்னீர் எம்மாத்திரம்? பன்னீரின் வீழ்ச்சி அதிமுகவிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகத்திற்குமே நல்லது!

திமுக ஆட்சிக்கு வந்தது தொடங்கி கடந்த ஓராண்டாக அதிமுகவில் விரக்தியில் உள்ள ஆளுமைகளை எல்லாம் வலைபோட்டு பிடித்து திமுகவில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில் அதிமுக ஏற்கனவே ரொம்பவும் பலவீனப்பட்டு உள்ளது. அத்துடன் கூட இருந்தே தங்களுக்கு குழி பறித்து வரும் பாஜகவை விலக்கி வைக்கும் தைரியமும், திமுகவின் ஊழலை எதிர்க்கும் தார்மீக பலமும் எடப்பாடி பழனிச்சாமியிடம் எதிர்பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை. கொடநாடு வழக்கை தூசி தட்டினால், அவரும் சிறைக் கம்பிகளை எண்ண வேண்டியதிருக்கும்! அந்த அளவுக்கு கிரிமினல் பின்னணி உள்ளவர் தான் எடப்பாடி பழனிச்சாமி!

அதிமுக உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால், அது செய்ய வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவையும், கடமையும் ஒன்றே ஒன்று தான். அது மதவெறி பாஜகவையும், ஊழல் திமுகவையும் ஒருசேர எதிர்க்க வேண்டும்! ஆனால், அப்படி எதிர்ப்பதற்கான தார்மீகத் தகுதியை அது எப்போதோ இழந்துவிட்டது! இந்த நிலையில் கட்சியில் எடப்பாடியின் ஏற்றம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட வாய்ப்பில்லை!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time