வாசிப்பை நேசிக்க கற்றுத் தரும் நூல்!

-அஜிதகேச கம்பளன்

‘இலக்கியத்தில் மேலாண்மை’ என்ற இந்த நூல் வாழ்க்கையின் சகல கூறுகளையும் அலசுகிறது! இறையன்புவின் பரந்துபட்ட ஆழமான வாசிப்பு அனுபவங்களும், வாழ்வியல் பார்வைகளும் கைகோர்த்து நூலுக்கு அணி சேர்க்கின்றன! ஏராளமான புகைப்படங்கள், ஓவியங்கள் வண்ணத்துடன் அழகுற, தகுந்த இடங்களில் சேர்க்கப்பட்டு இருப்பது நூலுக்கு பொலிவைத் தருகின்றன!

‘இலக்கியங்கள் நடைமுறை சார்ந்த வாழ்க்கைக்கு தேவையில்லை’ என்ற அறியாமையை சுக்கு நூறாக்கிவிடுகிறது இந்த நூல்! ‘இலக்கியத்தின் வழியே நம் சிந்தனைகளையும்,செயல்பட்டையும், வாழ்க்கை குறித்த தெளிவையும் பெற முடியும்’ என்பதை ஆதாரபூர்வமாகச் சொல்லி வியக்க வைக்கிறார் ஆசிரியர்!

சுமார் 600 பக்கங்கள், 105 தலைப்புகள் என விரிந்து பரந்த இந்த நூல் சங்ககால இலக்கியம் தொடங்கி நவீன இலக்கியம் வரை மட்டும் பேசவில்லை. இந்திய மொழிகளான இந்தி, மலையாளம் மற்றும் வங்க இலக்கியம், ஆங்கில இலக்கியம், சீன இலக்கியம், பிரெஞ்சு இலக்கியம், சமஸ்கிருத இலக்கியம், அராபிய இலக்கியம், ஜென் கவிதைகள் என எல்லாவற்றிலும் மேற்கோள் காட்டி, வெகு சுவாரஷ்யத்துடன் எழுதப்பட்டு உள்ளது. எத்தனை விதமான இலக்கியங்களை பேசினாலும், இறையன்பு திருவள்ளுவரிடமும்,ஷேக்‌ஷ்பியரிடமும் தான் நிறைய ஈடுபாடு கொண்டுள்ளார் என்பது தெட்டென தெரிகிறது.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

குத்தொக்க சீர்த்த இடத்து.

‘பொறுத்திருக்கும் காலத்தில் கொக்கு போல அமைதியாக இருக்க வேண்டும். காலம் வாய்த்த போது அதன் குத்து போல தவறாமல் செய்து முடிக்க வேண்டும்’ என்ற திருவள்ளுவரை போன்றே சேஷ்க்ஸ்பியரும் ‘மேக்பத்’ காவியத்தில் பலம் வாய்ந்த கழுகை சாதாரண ஆந்தை நேரம் பார்த்து வீழ்த்துவதை சொல்லி இருப்பார்.

இலக்கியத்தில் மேலாண்மை என்ற தலைப்பை பார்த்தமட்டில், இது என்னவோ நிறுவனங்களை நிர்வகிப்பவர்கள், பெரிய அதிகாரிகள், பிஸினஸ் மேன்கள்..மொத்தத்தில் பிஸியான பெரும் பொறுப்பில் உள்ளவர்களுக்காக மட்டுமே எழுதப்பட்ட நூல் என நினைத்துவிடக் கூடாது! மேற்படியானவர்களுக்கு மட்டுமல்ல, மேலோங்கிய வாழ்க்கை விழுமியங்களை வாழ்வில் கடைபிடிக்க விரும்பும் யாவருக்கும் உகந்த நூலாக இது உள்ளது.

குடும்பத்தில் கணவன் மனைவிக்குள்ள புரிதல்களை மேம்படுத்தும் சங்கதிகளும், குழந்தை வளர்ப்பில் இருக்கும் நுட்பங்களையும் கூட போகிற போக்கில் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். குடும்பத்திற்குள்ளும் மேலாண்மை பண்புகள் முக்கிய இடம் வகிக்கின்றன தானே! கணவனின் ஈகோவை திருப்திபடுத்த மனைவிமார்கள் கையாளும் நுட்பங்கள்..,  முதல் குழந்தைக்கும் இரண்டாம் குழந்தைக்கும் உள்ள பிணைப்பை வலுப்படுத்த கையாள வேண்டிய அணுகுமுறைகள், மேலதிகாரிகளின் ஈகோ, கீழ் நிலை பணியாளர்களின் குணாம்சங்கள்..என சகலவற்றையும் நுட்பமாக உள்வாங்கி வாழ்வியல் புரிதல்களை தருகிறார் இறையன்பு!

‘திட்டமிடுவதை ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டும். அன்றன்றைக்கான பணிகளை மன அடுக்குகளில் வகுத்துக் கொள்ள வேண்டும்’ எனவும், ‘நம்மைச் சுற்றி யாரை வைத்துக் கொள்கிறோம் என்பதே நம் வெற்றியை தீர்மானிக்கிறது’ எனவும் இராமன் பரதனுக்கு சொல்லுகையில், அது நமக்கானதாகவும் ஆகிறது!

‘உயர் அதிகாரிகள் உலக சுகங்களில் அதிக நாட்டம் செலுத்த முடியாது’ என்பதற்கு மடியின்மை குறித்த திருக்குறளின் அதிகாரத்தை வழிகாட்டலாகக் கொள்கிறார்!

நேர மேலாண்மையை நம் இந்திய மரபுக் கதைகளான பஞ்ச தந்திரம், ஹீதோபதேசம் போன்றவற்றில் இருந்தும் சொல்கிறார். மரத்தில் கூடு கட்டியுள்ளது காகம். அதன் முட்டைகளை காகம் இறை தேடச் செல்லும் போது கவர்ந்து தின்னுகிறது நாகம். நாகத்தை தன்னால் அழிக்க முடியாது என்பதை உணர்ந்த காகம் ராணி குளிக்கும் போது கழட்டி வைத்த நகையை கொண்டு வந்து நாகத்தின் பொந்தில் போட்டுவிடுகிறது. பிறகென்ன, நகையை நாகத்தின் பொந்தில் காணும் காவலர்கள் நாகத்தை அடித்துக் கொன்று விடுவர்! ‘பலமான எதிரியை பலவீனமானவனாலும் அழிக்க முடியும்’ என்பதை இந்தக் கதை உணர்த்துகிறது.

‘வார்த்தை லாகவம்; வாழ்க்கையில் வரம்’ என்ற அத்தியாயத்தில் ‘தேவையில்லாமல் பேசக் கூடாது குறைவாகப் பேசி விளங்க வைக்க வேண்டும்’ என்பதற்கு முழு நிலவில் முத்துச் சிற்பிகள் பூரிப்படைந்து தங்கள் வாயை பூரணமாகத் திறக்கின்றன! அதை பார்த்த நண்டுகள் சின்னக் கல்லை அதில் எறிந்து அவை மறுபடியும் சிப்பி வாயை மூடிக் கொள்ளாதவாறு செய்து அவற்றை உணவாக்கிக் கொள்கின்றன. அதிகமாக வாயைத் திறக்கிறவர்கள் இந்த நிலையைத் தான் அடைகிறார்கள்! என டாவின்ஸி சொன்னதை மேற்கோள் காட்டி எழுதி இருக்கிறார்.

மகாபாரதம், கம்ப ராமாயணம்,சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்கள், மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன், புதுமை பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, தகழி சிவசங்கரன் பிள்ளை, நா.பார்த்தசாரதி, மு,மேத்தா, கவிக்கோ அப்துல்ரகுமான், சிற்பி, மீரா, வைரமுத்து… என ஏகப்பட்ட இலக்கியங்களும், ஆளுமைகளும் சரியான இடங்களில் கையாளப்பட்டு நூல் இலக்கிய சுவை கூட்டுகிறது.

அதே போல உலகப் பெரும் தலைவர்களான மார்க்ஸ், ஏங்கெல்ஸ்,லெனின், ஆப்பிரகாம் லிங்கன், நெல்சன் மண்டேலா, புத்தர், வீரத் துறவி விவேகானந்தர், ராமகிருஷணர், ராமலிங்க அடிகளார்..தலைவர்களையும், ஞானிகளையும் தகுந்த முறையில் அடையாளப்படுத்துகிறார்!

சுற்றுச் சூழல் மேலாண்மை குறித்து மூன்று அத்தியாயங்கள் உள்ளன! ‘வனத்தை வளமாக்கி வாழ்வை நலமாக்குவோம்’ என்ற அத்தியாயம் வெகு சிறப்பு!

‘போரும்,வர்த்தகமும்’ என்ற தலைப்பில் மூன்று அத்தியாயங்கள் உள்ளன! அதில் ‘வர்த்தகமும் போரே’என்ற அத்தியாயம் அசத்தலான, அதிர்ச்சியான உண்மைகளை பேசுகிறது.

‘தகவல் பரிமாற்றம்’ என்ற தலைப்பில் பத்து அத்தியாயங்கள் எழுதியுள்ளார்! அத்தனையுமே முத்து! அதில் ‘காது கொடுங்கள், கனவு மெய்ப்படும்’ என்ற அத்தியாயம் மிகச் சிறப்பாக உள்ளது.

உடல் மொழி, உணர்ச்சி மேலாண்மை, முடிவெடுக்கும் திறன், தலைமைப் பண்புகள், கோப மேலாண்மை, மனிதவள மேலாண்மை ஆகியவை குறிப்பிடத்தக்க அத்தியாயங்களாகும்!

தண்டனை மேலாண்மை என்ற தலைப்பில் பத்து அத்தியாயங்கள் இறுதியாக எழுதப்பட்டு உள்ளன! மனிதவள மேம்பாட்டில் ஒழுங்குபடுத்துவது ஒரு முக்கியமான அம்சம். ‘அது நல்ல பணியாளர்களுக்கு வெளிச்சமாகவும், சரியாக பணியாற்றாதவர்களுக்கு சவுக்காகவும்’ இருக்க வேண்டும். ‘எந்த ஒரு நிறுவனத்திலும் 90 சதவிகித பணியாளர்கள் சரியாக இருந்தாலுமே கூட, பத்து சதவிகிதமானவர்கள் சரியாக பணியாற்றாமல் படுத்துவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்களை ஒழுங்குபடுத்த தவறினால், மொத்த பணியாளர்களையும் கெடுத்துவிடுவார்கள்’ என்ற எச்சரிக்கையும் தருகிறார்! ‘நெருப்பை தொட்டால் சுடுவது போல தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ என்று உணர்த்தப்பட்டால் தான் நிர்வாகம் சிறக்கும்’ என்கிறார்.

இந்த 105 அத்தியாயங்கள் கொண்ட பெரிய நூலை முப்பது நாட்களில் தான் எழுதியதாக ஆசிரியர் கூறி இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. மிகப் பரந்துபட்ட வாசிப்பும் அனுபவச் செறிவும், ஞாபக சக்தியும் ஒருங்கே சேராமல் இது போன்ற ஒரு நூல் சாத்தியமில்லை. எனில், நேர மேலாண்மையை இவர் வாழ்க்கையில் எவ்வளவு கறாராக கடைபிடிக்கிறார் என்பதற்கு நடைமுறைச் சான்றாகிறார் என்றே தோன்றுகிறது. பெரிய நிர்வாகிகள் மட்டுமின்றி, மாணவர்கள் தொடங்கி சாதாரண இல்லத்தரசிகள் கூட, வாசித்து புரிந்து கொள்ளத் தக்க எளிய நடையில் அரிய பல தகவல்களை, கருத்துக் கருவூலங்களை கொண்டுள்ள இந்த நூல், தங்களை மேம்படுத்திக் கொள்ள விரும்புவர்கள் தவறாது படிக்க வேண்டிய நூலாகும்!

நூல்; இலக்கியத்தில் மேலாண்மை

ஆசிரியர்; வெ.இறையன்பு

பக்கங்கள் ; 596

வெளியீடு; நியூ செஞ்சூரி புக் ஹவுஸ்

அம்பத்தூர், சென்னை-98

தொலைபேசி; 044- 26251968

விலை; ரூ 1,500

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time