திரெளபதி முர்மு தோற்றால், பழங்குடிகள் பாதுகாக்கப்படுவர்!

-சாவித்திரி கண்ணன்

குடியரசுத் தலைவருக்கு எதிர்கட்சிகள் யஷ்வந்த் சின்ஹாவை அறிவித்தனர்! பாஜக ஒடிசா பழங்குடியினத்தின் திரெளபதி முரமுவை அறிவித்தது. பழங்குடியினத்திற்கு பாஜக அரசு இழைத்து வரும் கொடுமைகள் கொஞ்சமா? நஞ்சமா? திரெளபதி அம்மையாரின் யோக்கியாம்சங்கள் புல்லரிக்க வைக்கின்றன!

”பழங்குடியினத்தில் இருந்து முதன்முதலாக இந்தியாவில் ஒருவர் குடியரசுத் தலைவராகிறார், அதுவும் ஒரு பெண்ணுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என சந்தோஷப்பட்டு கடந்து செல்ல முடியவில்லை.

காரணம், இன்று இந்தியாவில் வாழும் 20 கோடி பழங்குடியினரை பெரும் அச்சுறுத்தலில் வைத்திருக்கும் ஒரு அரசாக பாஜக அரசு உள்ளது. பழங்குடியினர் காலம் காலமாக வாழ்ந்து வரும் இடங்களில் இருந்து அவர்களை அப்புறப்படுத்துவது, அந்த இடத்தை அம்பானி, அதானி முதலான கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது என்பதை பாஜக அரசு தொடர்ச்சியாக செய்து வருகிறது.பாஜக ஆட்சிக்கு வந்தது தொடங்கி வனப் பகுதிகளில் வளர்ச்சி என்ற பெயரில் ஏறத்தாழ ஆயிரம் திட்டங்களுக்கு அனுமதி தந்துள்ளது. இதனால், சுமார் 45 லட்சம் பழங்குடியினர் வனப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். சுமார் 12 லட்சம் பழங்குடிகளுக்கு வாழ்விடப் பட்டா மறுக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் கொண்டுவந்த வன உரிமைச் சட்டத்தை வலுவிழக்கச் செய்யும் விதமாக பாஜக- ஒரு சட்டம் கொண்டு வந்தது. அந்த முயற்சி நீதிமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், பா.ஜ.க வனப்பகுதிகளில் பெரும் போரை உண்டாக்கியது. அதில், இயற்கை வளங்களையும், விலங்குகளையும், பழங்குடியினரையும் பலியிட்டது.

ஜார்கண்டில் வாழும் பழங்குடிகளின் நிலம் சார்ந்த உரிமைகளை பாதுகாப்பதற்காக என்று கூறி சோட்டானக்பூர் குத்தகை சட்டம், சந்தல் பர்கானா குத்தகை சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தத்தை கொண்டுவருவதற்கு பாஜக தலைமையிலான அம்மாநிலத்தின் முந்தைய அரசு முயற்சி செய்தது. அதற்கு கவர்னாராக இருக்கும் போது துணை போனவர் தான் இந்த திரெளபதி முரமு! இது பாஜக மீது பழங்குடி மக்கள் இடையே பெரும் அதிருப்தி ஏற்படுவதற்கு வழிவகுத்தது.

இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலியுறுத்தலையும் மீறி, அதை பிடிவாதமாக நிறைவேற்றிய பாஜக அரசு, ஒப்புதலுக்காக அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது.

அதைத்தொடர்ந்து இந்த சட்டதிருத்த மசோதாவுக்கு  கடும் எதிர்ப்புகள் அதிகரிக்கவே, அதில் கையெழுத்திடாமலேயே மாநில அரசுக்கு திருப்பி அனுப்பினார் குடியரசுத் தலைவர். அதன் பிறகு, இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளும் பணிகள் கைவிடப்பட்டது! வன உரிமைச் சட்டம் கூறுவதுபோல, இந்த வனப்பகுதிகள் பிரிட்டிஷ் கால மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய அரசாங்கங்கள் வனவாசிகளுக்கு இழைத்த வரலாற்று அநீதியால் செல்வாக்கானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. அவற்றை பழங்குடிகளே மீண்டும் வாழ அனுமதிப்பது தான் காங்கிரஸ் கொண்டு வந்த வன உரிமைச் சட்டம். ஆனால், பாஜக அரசோ தற்போது மீண்டும் அநீதி இழைக்க துடிக்கிறது.  இந்தியாவின் இருபது கோடி வனவாசிகளின் மீதான இந்த தாக்குதலை திரெளபதி முரமுவைக் கொண்டு நிறைவேற்றும் எண்ணத்துடன் தான் அவரை குடியரசுத் தலைவராக்குகிறது பாஜக அரசு!

ஸ்டேன் சுவாமி தமிழகத்தில் அரியலுாரின் விரகனூர் கிராமத்தில் பிறந்தவா்! இவர் 40 ஆண்டுகளாக ஜார்கண்டிலும்,ஒரிசாவிலும் வாழும் பழங்குடி மக்களுக்காக பாடுப்பட்டவர். அவர்கள் படிப்புக்கும், தற்சார்பு பொருளாதாரத்திற்கும் துணை நின்றவர். 1997-ல் ‘சமத்தா’ வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பழங்குடியினரின் நிலங்களில் உள்ள கனிம வளங்களை யாரும் அபகரிக்க முடியாத அளவுக்குப் பாதுகாப்பு அளித்தது. இந்தத் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்தக் கோரி போராடியவர் தான் ஸ்டேன் சுவாமி!

ஸ்டேன் சுவாமி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் ஜார்க்கண்ட் மாநில பாஜக அரசு 2013-ல் ஒரு திருத்தத்தைக் கொண்டுவந்தது. அதன்படி, நல்ல விளைச்சலைத் தரும் பழங்குடியினரின் வளமான நிலங்களை, கனிம வளங்களைத் தோண்டி எடுக்க அரசே தனியார் நிறுவனங்களுக்குத் தாரைவார்த்தது. இதை எல்லாம் தொடர்ந்து எதிர்த்த காரணத்தால் 83 வயது ஸ்டேன்சாமியை திவீரவாதிகளுடன் தொடர்புள்ளவர் என சித்தரித்து கைது செய்து சிறையில் அடைத்து கொன்றுவிட்டது பாஜக அரசு! ஸ்டேன் சுவாமியின் சேவைகள் குறித்து நன்கு தெரிந்திருந்தும், இதற்கெல்லாம் வாய் மூடி துணை போனவர் தான் ஜார்கண்டின் கவர்னராக இருந்த திரெளபதி முரமு!

பாதர் கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் குடும்பத்துடன்!

ஆஸ்திரேலியாவில் இருந்து வந்து ஓரிசாவின் மயூர்பன்ச் மாவட்டத்தில் உள்ள பழங்குடிகளுக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்தவர் பாதர் கிரகாம் ஸ்டெய்ன்ஸ். இந்த மாவட்டம் தான் தற்போது குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரெளபதி பிறந்து, வளர்ந்த மாவட்டமாகும். 1999 ஆம் ஆண்டு ஒரு நாள் பாதர் கிரகாம் ஸ்டெய்ன்ஸ் தன் இரண்டு சிறு மகன்களோடும் ஜீப்பில் வந்து கொண்டிருந்த போது இந்துத்துவ தீவிரவாதிகளால் உயிரோடு கொளுத்தப்பட்டார்! அவரும், அவரது இரு குழந்தைகளும் ஜீப்பிலேயே உயிரோடு எரிக்கப்பட்டனர். இந்தக் கொடூரச் செயல் உலகையே உலுக்கியது. அப்போது அங்கு பாஜக கவுன்சிலராக இருந்தவர் தான் திரெளபதி! இந்த அநீதியாளர்களோடு இருந்த தொடர்பை திரெளபதி துண்டித்து இருந்தால், அவர் உண்மையான மனுஷியாக மதிக்கப்பட்டு இருக்கலாம். ஆனால், அவர்களுடன் தன்னை நெருக்கமாக ஐக்கியபடுத்திக் கொண்டதால் அவர் அடுத்த ஆண்டே அமைச்சராக்கப்பட்டார்!

இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் அவர்களை பாஜக குடியரசுத் தலைவராக்கியது. அந்த காலகட்டத்தில் தான் குஜராத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர் மோடி ஆட்சியில்! உலகமே கண்டித்த அந்த நிகழ்வை அப்துல்கலாமால் கண்டிக்க முடியவில்லை. அதற்கு எதிரான நடவடிக்கைகளை கோர முடியவில்லை. வருத்தப்படவே முடிந்தது. அதே போல தலித் குடியரசுத் தலைவரான ராம்நாத் கோவிந்த் காலகட்டத்தில் இந்தியாவில் தலித் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளின் பட்டியல் மிகப் பெரிது. இதில் ஏதாவது ஒன்றுக்காவது அவர் எதிர்ப்போ, கண்டணமோ தெரிவிக்க முடிந்ததா? அல்லது தடுக்கத் தான் முடிந்ததா?

இந்தச் சூழல்களை மனதில் இருத்திப் பார்த்தால் பாஜகவின் சூது அரசியல் புரிபடும்!

அதே சமயம் எதிர்கட்சிகள் சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு உள்ள யஷ்வந்த் சின்ஹா 1980களில் மொரார்ஜி காலகட்டத்தில் ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் நுழைந்தவர்! அதற்கு முன்னதாக 1958-60 காலகட்டத்தில் பட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பேராசிரியராகவும், பின்னர் இரண்டு தசாப்தங்களுக்கும் அதிகமாக ஐஏஎஸ் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

ஜனதா கட்சியில் சேர்ந்து 1988இல் மாநிலங்களவை உறுப்பினரானார் யஷ்வந்த் சின்ஹா. 1989இல் நிறுவப்பட்ட ஜனதா தளத்திலும் இவர் இருந்தார். சந்திர சேகர் அமைச்சரவையிலும் இருந்துள்ளார். பின்பு தான் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பணியாற்றியவராவார்!

2014க்கு பிறகு பாஜகவின் தீவிர மதவாத அணுகுமுறைகள், கட்சிக்குள் ஜனநாயக மறுப்பு, மூத்த தலைவர்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டது, முதிர்ச்சியற்ற வகையில் மோடி தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருவது, கார்பரேட்டுகளுக்கு ஆதரவான நடவடிக்கைகள்.. ஆகியவற்றை கட்சிக்குள் இருந்து கொண்டே கண்டித்து, சீர்திருத்த முயன்று தோற்றுப் போனார் யஷ்வந்த் சின்ஹா!  ”ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது. அதை காப்பாற்ற வேண்டும்” என வெளிப்படையாக பேசியும், எழுதியும் வந்தார்!

அந்த வகையில், ‘மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்’ என்பதற்காக பாஜகவில் இருந்து விலகிவிட்டார். மம்தா பானர்ஜியின் வேண்டுகோளுக்கு இணங்க திரிணமுள் கட்சியில் இணைந்து துணைத் தலைவராகி பாஜகவிற்கு எதிரான அரசியலை மம்தா முன்னெடுக்க துணை நின்றார். அறிவார்ந்த ஒரு தலைவராக அறியப்பட்ட யஷ்வந்த் சின்ஹாவுடன், பாஜகவின் அடிமையாக தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்ட திரெளபதியை நாம் ஒப்பிடவே முடியாது. அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து, வேறுபாடுகளை மறந்து யஷ்வந்த் சின்ஹாவை குடியரசுத் தலைவராக்கினால், அவர் பாஜக அரசு தவறான பாதையில் பயணிக்காதவாறு ஒரு ‘செக்’ வைப்பார். ஜனநாயகத்தின் பாதுகாவலராக இருப்பார்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time