பன்னீரை பின்னிருந்து இயக்கும் பாஜக தலைமை!

-சாவித்திரி கண்ணன்

நள்ளிரவு நீதிமன்றத்தை நாடி, அதிகாலை இரண்டு மணிக்கு வழக்கு விசாரணை செய்ய வைத்து, நடக்கவுள்ள பொதுக் குழுவை அதிகாரமற்றதாக்கும் வண்ணம், அதிகாலை நான்கரை மணிக்கு தீர்ப்பு பெறப்படுகிறது என்றால், என்ன நடக்கிறது இங்கே? நீதிமன்றத் தலையீடுகளின் வழியே ஒருவரை தலைவராக நிலை நிறுத்திவிட முடியுமா?

ஒ.பி.எஸ்சுக்கு பாஜகவில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதற்கு நள்ளிரவில் நீதிபதிகள் செய்த கட்டப் பஞ்சாயத்தே சாட்சியாகும்! ஒரு கட்சியின் பொதுக் குழு நடக்கிறது. பல லட்சம் தொண்டர்களின் பிரதிநிதிகளான பொதுக் குழு உறுப்பினர்கள் என்ன தீர்மானம் போடலாம், போடக் கூடாது என்பது குறித்து ஒரு நீதிமன்றம் கட்டளையிடுவது எப்படி சரியாக இருக்கும்? தன் எல்லைகளை மீறி அதிகாரம் செலுத்த நினைத்தால், அது எவ்வளவு பெரிய அமைப்பானாலும், மக்களின் மரியாதையை இழந்துவிடும்!

அடுத்த நாள் காலை பொதுக் குழு கூடுகிறது! இரண்டாயிரத்திற்கும் மேலான பிரதிநிதிகள் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்துள்ளனர். ஊரே தூங்கிக் கொண்டிருக்கும் நள்ளிரவு தொடங்கி, அதிகாலை வரை ஒரு கட்டபஞ்சாயத்து கட்சி உறுப்பினர்களோ, மக்களோ அறியாத வகையில் நடக்கிறது. அது அடுத்த நாள் கூடவுள்ள பொதுக் குழு உறுப்பினர்களின் பிரதான நோக்கத்திற்கும், அது சார்ந்த முடிவுக்கும் முன் கூட்டியே தடை விதிக்கிறது.

கட்சிக்குள் செல்வாக்கில்லை என்றாலும், மேல்மட்ட செல்வாக்கு கிடைத்தால் போதும், பொதுக் குழு கூட்டத்தைக் கூட பொலிவிழக்க வைத்து விடலாம்! நீதிமன்றங்கள் கட்ட பஞ்சாயத்து செய்யும்! ஊடகங்கள் உளையிடும்! கோழைகள் வீரர்களாக சித்தரிக்கப்படுவர்! தனி மரத்தை தோப்பு என்பார்கள்!

‘இனி நீதிமன்றங்களை கேட்டுவிட்டுத் தான் எந்தக் கட்சியும் எந்த தீர்மானமும் நிறைவேற்றலாம்’ என்று கூட பாஜக அரசு அவசர சட்டம் கொண்டு வந்துவிடலாமே! ”பயங்கரவாதத்தை விட பெரிய ஆபத்து நீதித் துறையின் சுதந்திரம் இழப்பு ” என முன்னாள் அட்வகேட் ஜெனரல் பி.வி.ஆச்சார்யா சொல்லியது தான் நினைவுக்கு வருகிறது!

தமிழகத்தின் மைய பகுதியில் உள்ளது சிதம்பரம் சிவன் கோயில்! அந்தக் கோயில் நடப்பது தமிழ் மக்கள் தரும் நிதியால், காணிக்கையால் தான்! ஆனால், அந்தக் கோயிலில் தேவாரம் பாடுவதற்கு அங்குள்ள தீட்சிதர்கள் எதிர்ப்பார்கள் ,பாட வந்தவர்களை விரட்டி அடிப்பார்கள். பொதுமக்கள் தரும் நிதியை கணக்கில்லாமல் களவாடுவார்கள்! அரசாங்கமே அவர்களிடம் கணக்கு கேட்கக் கூடாதாம்! இது உச்ச நீதிமன்றத் தீர்ப்பாம்!

இப்படி பெருந்திரளான தொண்டர்கள் முடிவுக்கு எதிராக,

பெரும் திரளான மக்களுக்கு எதிரான காரியங்களை நிகழ்த்த..

நீதிமன்றங்கள் தலையீடு செய்து துணை போகும் என்றால், இதைத் தான் ‘ஜீடிசியல் டெரரிசம்’ என்பார்கள்! அதாவது, நீதிமன்ற பயங்கரவாதம்!

அதிமுக ஒன்றும் எனக்கு விருப்பமான கட்சியல்ல! இ.பி.எஸ் என்பவரும் நான் ஆதரிக்கதக்க விழுமியங்களை கொண்ட தலைவருமல்ல! அதற்காக, ‘எந்த ஒரு கட்சிக்குமான தலைவரை தேர்ந்தெடுக்கும் உரிமை அதன் பொதுக் குழு உறுப்பினர்கள், தொண்டர்களுக்குத் தான் உள்ளதே அன்றி நீதிமன்றத்திற்கு அல்ல’ என்ற உண்மையை எப்படி நிராகரிப்பது?

பொதுக் குழு கூடுவது என்பது ஒ.பி.எஸ்சும், இபி.எஸ்சும் சேர்ந்து எடுத்த முடிவு தான்! இந்த பொதுக் குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இ.பி.எஸ்சின் ஒற்றைத் தலைமையை விரும்புகிறார்கள் என்று அறிந்தவுடன் பொதுக்குழுவை கூட்ட வேண்டாம் என கடிதம் எழுதி பொதுவெளியில் ஊடகங்களுக்கு தருகிறார்! தலைமையை கைப்பற்ற போதுமான பலம் தனக்கு இல்லை என்றவுடன் தேர்தல் கமிஷன் போவேன்.சின்னம் பிரச்சினையாகும் என மிரட்டுகிறார். பிறகு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஆகிவிடும் என காவல்துறையைக் கொண்டு தடுக்க பார்க்கிறார்! இவை எதுவும் பலன் தராது என்றவுடன் கட்சி உறுப்பினர்கள் பொதுக் குழுவில் கலந்து கொள்ள வேண்டாம் என சொல்லி கடிதம் எழுதுகிறார். இவரை சட்டை செய்ய கட்சியினர் தயாரில்லை என்றவுடன் நீதிமன்றம் செல்கிறார். தனி நீதிபதி விசாரித்து சரியாகவும்,தெளிவாகவும் தான் தீர்ப்பு தந்தார். ”ஒரு கட்சியின் பொதுக் குழுவில் என்ன முடிவு எடுக்கலாம், என்ன எடுக்கக் கூடாது என நீதிமன்றம் தலையிட்டு சொல்ல முடியாது. அது கட்சி பொதுக் குழு உறுப்பினர்களின் உரிமை” என்கிறார், நீதிபதி. இது தான் கண்ணியமான அணுகுமுறை!

இவ்வளவு அவமானங்களை பெற்ற பிறகாவது பன்னீர் அடங்கினாரா…? என்றால், அது தான் இல்லை. அவரை தூண்டிவிடும் சக்திகள் யார்? சாதாரணமானவர்களா?

நள்ளிரவு நீதிமன்றத்தை நாடி அதிகாலை இரண்டு மணிக்கு வழக்கு விசாரணை செய்ய வைத்து அதிகாலை நான்கரை மணிக்கு நடக்க உள்ள பொதுக் குழுவை அதிகாரமற்றதாக்கும் வண்ணம் தீர்ப்பை பெறுகிறார் என்றால், என்ன நடக்கிறது இங்கே?

இந்த நாட்டில் லட்சோப லட்ச வழக்குகள் ஆண்டுக்கணக்கில் தள்ளி வைக்கப்பட்டு அலைக்கழிக்கபடுகிறது. நீதிமன்றங்களில் விசாரணைக்கே வராமல் தேங்கி கிடக்கும் வழக்குகளுக்கு கணக்கு வழக்கு உண்டா? இப்படி விழுந்தடித்து விடிய, விடிய விசாரித்து தீர்ப்பு சொல்ல வேண்டிய நிர்பந்தத்தை நீதித் துறையின் மீது செலுத்தியது யார்? எந்த அதிகார மையம் இதன் பின்னணியில் உள்ளது? என்று நாம் பார்க்க வேண்டும்.

கடந்த ஒருவார காலமாக இந்த பொதுக் குழு நடக்க கூடாது என சகல பிரயத்தனங்களையும் செய்து, ”யாருமே கலந்து கொள்ளாதீர்கள்” என கடிதம் எழுதிய பன்னீர்செல்வம் ஏன் இந்த பொதுக் குழுவில் வந்து கலந்து கொள்கிறார்? கொஞ்சமாவது மானம், மரியாதை வேண்டாமா? இத்தனை ஆகாதித்தியங்கள் செய்து, ஒட்டுமொத்த கட்சிக்காரர்களின் வயிற்று எரிச்சலையும் வாங்கிக் கட்டிக் கொண்ட நிலையில், அந்த பொதுக் குழுவுக்குள் எப்படி பன்னீர் செல்வத்தால் காலடி எடுத்து வைக்க முடிகிறது!

”துரோகியே வெளியேறு’…”என நரம்புகள் புடைக்க தொண்டர்கள் கத்தினார்களே…!

கொஞ்சமாவது சூடு சொரணை இல்லையா? அந்த உடம்பில் ரத்தம் தான் ஓடுகிறதா? இல்லை வேறு ஏதாவது ஓடுகிறதா? யார் கொடுத்த துணிச்சலில் அங்கு வந்து உட்காருகிறார்? ஏதாவது தன் மீது தாக்குதல் நடந்தால் அதை வைத்து அனுதாப அரசியலை செய்யத் தானே காத்து இருந்தார்!

”கட்சி தற்போது உள்ள நிலை குறித்தும், குறிப்பாக இரட்டைத் தலைமையால், கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவுகள், சங்கடங்கள், நிர்வாக சிக்கல்கள் பற்றியும் ஆளும் திமுக அரசையும், கட்சியையும், பிரதான எதிர்கட்சி என்ற முறையில், இரட்டைத் தலைமையால் எதிர்த்து செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் பொது மக்களிடையே மிகுந்த ஏமாற்றமும், அதிர்ச்சியும் ஏற்படுத்தியுள்ளது.” என பொதுக் குழுவில் வெளிப்பட்ட கருத்து உண்மை தானே!

இரண்டரை சதவிகித வாக்கு வங்கி உள்ள பாஜக, தன்னை பிரதான எதிர் கட்சியாக தோற்றம் காட்டுவதை பன்னீர் செல்வம் வேண்டுமானால் ரசிக்கலாம். அதிமுக தொண்டனும், தமிழக மக்களும் எப்படி ஏற்பார்கள்? அதிமுக வலுவிழந்து, இரட்டைத் தலைமையால் பொலிவிழந்து வருவதைத் தானே பாஜக விரும்புகிறது. தன் நோக்கப்படி அதிமுகவை ஆட்டி வைக்க வேண்டும் என்றால், ‘கட்சிக்குள் பன்னீர் பலமான பொறுப்பில் இருந்தால் தான் சாத்தியமாகும்’ என்பது தானே பாஜகவின் திட்டம்!

அதிமுக பொதுக் குழு நடந்து முடிந்த கையோடு பாஜக அண்ணாமலை இ.பி.எஸ்சையும், ஒ.பி.எஸ்சையும் தனித்தனியே சந்தித்து  பேசுவதன் உள்ளார்ந்த அர்த்தம், ” நீங்கள் கைவிட்டாலும், நாங்கள் பன்னீர் செல்வத்தை கைவிடவில்லை” என்பது தான்!

பாஜகவின் திட்டப்படி தான் அதிமுகவில் இது வரை எல்லாம் நடந்து வருகிறது! ‘எந்தத் தகுதியும் இல்லாமல், உழைப்பைக் கூட செலுத்தாமல் ஒய்யாரமாக வலம் வரும் ஒ.பி.எஸ்சை உயர் பதவி கொடுத்து காலமெல்லாம் தூக்கி சுமக்க வேண்டும்’ என்று நிர்பந்திப்பதற்கு எந்த நியாயமும் இல்லை! வேண்டுமானால் பாஜகவில் பதவி தந்து ஒ.பிஎஸ்சை வைத்துக் கொள்ளட்டுமே!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time