எல்லோருமே ஓய்வு காலத்தில் பென்ஷன் வாங்கலாம்!

-செழியன் ஜானகிராமன்

தற்போது அரசு ஓய்வூதியம் தருவதில்லை என்பதால் சோர்வடைய வேண்டியதில்லை. நமக்கு நாமே ஓய்வு காலத்தில் பென்ஷன் கிடைக்க ஒரு வழிமுறையை உருவாக்கி கொள்ள முடியும்! அதற்கு என்ன செய்ய வேண்டும்?

குறுகிய, நடுத்தர, நீண்ட கால முதலீடு வகைகளில் பெரும்பாலும் அதிகமானோர் முதலீடு செய்வார்கள். இந்த தொகையெல்லாம் நாம் சுறுசுறுப்பாக நன்றாகச் செயல்படும் போது பயன்படும் ஆனால்  இதைவிட  முக்கியமான முதலீடு  ஓய்வுக்கால முதலீடு ஆகும். இவை நாம் செயல்பட முடியாத போது தேவைப்படும்.

58 வயது, 60 வயது ஓய்வு என்பதெல்லாம் முடிந்து 50 வயதில் ஓய்வு என்ற நிலையை நோக்கி இன்றைய உலகம் சென்று கொண்டு இருக்கிறது. அரசு ஊழியர், தனியார் ஊழியர் இருவரும் தாங்கள்  சேமித்தால் தான் ஓய்வு காலத்திற்கு அதை ஓய்வூதியம் ஆக்கிக் கொள்ள முடியுமே அன்றி வேறு வாய்ப்பில்லை.

அதனால் இளம் வயதில் வேலைக்குச் சேர்ந்த முதல் மாதத்திலிருந்தே  ஓய்வு காலத்திற்கும் சேர்த்து சேமிக்கத் தொடங்க வேண்டும். அந்த சேமிப்பை சரியாக  முதலீடு செய்தால் ஓய்வுக் காலத்தில் பெரிய தொகையும், மாதம் மாதம் ஓய்வூதியமும் கிடைக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு அரசு உருவாக்கிய திட்டம் தான் NPS-National Pension System, மற்றும் APY – Atal Pension Yojana ஆகும். இவை தவிர தனியார் ஊழியர்களுக்கு EPF, VPF ஓய்வூதியம் திட்டங்கள் உண்டு.

முதலில் NPS குறித்து விரிவாகப் பார்ப்போம்

அனைவரும் NPS பற்றிக் கேள்விப்பட்டு இருப்போம். இவை முதலில் மத்திய அரசு ஊழியர்காக 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பின்பு மற்ற மாநிலங்கள் தங்கள் ஊழியர்களுக்கு NPS திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின. இன்னும் தமிழ்நாடு NPSல்  சேரவில்லை. அதாவது, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு என்று தமிழ்நாடு அரசு  CPS (Contributory Pension Scheme) என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. அவற்றை பிறகு பார்ப்போம்.

மத்திய அரசு ஊழியர் சம்பளத்தில் அடிப்படை சம்பளம்(Basic Salary)  + அகவிலைப் படியில்(DA)  ஓய்வூதியத்திற்காக 10 சதவிகிதம் பிடித்தம் செய்து ஊழியரின் NPS கணக்கில்  சேர்ப்பார்கள். மத்திய அரசு தன்னுடைய பங்காக 14 சதவிகிதம் பணத்தை இவர்களுடைய கணக்கில்  மாதம் மாதம் முதலீடு செய்யும்.

உதாரணம் ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் இருபதாயிரம் ரூபாய், அகவிலைப் படி பத்தாயிரம் ரூபாய் என்று இருந்தால் இதில் 3000 ரூபாய் அதாவது 10 சதவிகிதம் பிடித்தம் செய்வார்கள். அரசாங்கம் 14 சதவிகிதம் அதாவது  4200 ரூபாய் இந்த இரண்டு தொகையும் ஊழியரின் NPS கணக்கில் செலுத்துவார்கள். ஆக மொத்தம் 7200 ரூபாய் ஒவ்வொரு மாதமும் ஊழியரின் NPS கணக்கில் சேரும்.

ஓய்வூதியம் என்பது ஒவ்வொருவருக்கும் முக்கியம் என்பதால் தொடக்கத்தில் அரசு ஊழியருக்கு என்று உருவாக்கப்பட்ட NPS திட்டத்தை 2009 ஆம் ஆண்டு முதல் பொதுமக்களும் NPSல் கணக்கு தொடங்கலாம் என்ற விதியை மத்திய அரசு உருவாக்கியது. 18 வயது முதல் 65 வயது நபர்கள் வரை அனைவரும் NPS திட்டத்தில் சேரலாம்.

இந்தியாவில் வாழும் குடிமக்கள், வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்(NRI) கணக்கு தொடங்கலாம்.

NPS கணக்கு தொடங்க 500 ரூபாய் போதும். மாதம் மாதம் அல்லது எப்பொழுதெல்லாம் பணம் இருக்கிறதோ உங்கள் கணக்கில் செலுத்தி வரலாம். குறைந்தபட்சம் 1000 ரூபாயாவது ஒரு வருடத்தில் செலுத்தி இருக்க  வேண்டும். அதற்குக் குறைவாகச் செலுத்தக் கூடாது. அதிகபட்சம் நம் விருப்பம் போல் செலுத்தலாம்.

பொதுத்துறை வங்கி, போஸ்ட் ஆபீஸில், பல தனியார் வங்கியில் பொதுமக்கள் NPS கணக்கு தொடங்க முடியும். ஆன்லைனில் கூட(https://enps.nsdl.com/eNPS/) தொடங்கலாம். Pan Card, Aadhar Card, Photo வங்கி passbook அல்லது Cancelled cheque போன்றவை தேவையான ஆவணங்கள் ஆகும்.

NPS திட்டத்தில் சேரும் தொகையை இந்திய அரசின்  நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் PFRDA (Pension Fund Regulatory and Development Authority) அமைப்பு நிர்வகிக்கிறது.

இந்த அமைப்பு தங்களிடம் சேரும் அரசு ஊழியரின் தொகை மற்றும்  பொதுமக்கள் தொகையை  பங்குச் சந்தை சார்ந்த திட்டங்கள், அரசு கடன் பத்திரம்,, பெறும் தனியார் நிறுவன கடன் பத்திரம்(Corporate Bond), மாற்று முதலீடு  போன்றவற்றில்  முதலீடு செய்யும்.  இவற்றைச் சுருக்கமாக EGCA என்று குறிப்பிடுவார்கள்.

மாற்று முதலீடு என்பது சமீப வருடமாகப் பிரபலமாகி வரும் முதலீடு திட்டம் ஆகும். Real Estate Investment Trusts (REITs), Infrastructure Investment Trusts (InvITs) போன்றவற்றில் நம் NPS கணக்கில் உள்ள தொகையில் அதிகபட்சம் 5 சதவிகிதம் மட்டுமே இவற்றில் முதலீடு செய்ய முடியும்.

இந்த கட்டுரையில் NPS முதலீடு செய்யும் திட்டங்கள் எவை என்பது குறித்து மட்டும் பார்க்கிறோம். இந்த நான்கு(EGCA) முதலீடு திட்டங்கள் குறித்து விரிவாக அதற்கென்று வரும் கட்டுரையில் பார்க்கலாம்.

உங்களுக்கு பங்குச்சந்தை, கடன் பத்திரங்கள் குறித்துத் தெரிந்து இருந்தால் உங்கள் NPS கணக்கில் உள்ள பணத்தை உங்கள் விருப்பம் போல் மேல் உள்ள 4 முதலீட்டுத் திட்டத்தில் பிரித்து முதலீடு செய்யலாம். இதற்கு Active Choice என்று பெயர்.

அப்படி அந்த முதலீடு குறித்துச் சரியாகத் தெரியவில்லை என்றால் Auto Choice  என்பதைத் தெரிந்து எடுத்துக் கொண்டால் நிர்வாகமே உங்கள் வயதுக்கேற்ப மேல் உள்ள முதலீட்டுக் கலவையில் EGC யில் பிரித்து முதலீடு செய்வார்கள். Auto Choiceல் Alternative investmentல்  முதலீடு செய்வதில்லை.

பரஸ்பர நிதி(Mutual Fund) போல் NPSல் நாம் செலுத்தும் தொகைக்கு யூனிட்ஸ் (Units)ஆகப் பிரித்துக் கொடுத்து விடுவார்கள்.  அதற்கான NAV ஏறும்போது நம் யூனிட் மதிப்பு ஏறும். பரஸ்பர நிதி குறித்து விரிவாகப் பிறிதொரு கட்டுரையில் பார்க்கலாம்.

NPS உருவாக்கிய பொழுது அதில் இரண்டு விதமான திட்டங்களை உருவாக்கினார்கள். Tier 1 மற்றும் Tier 2 திட்டங்கள் ஆகும்.

Tier 1 கணக்குதான்  ஓய்வுக் காலத்தில் பென்சன் வழங்கும் திட்டம் ஆகும். இதில் தான் இன்றும் அனைவரும் சேர்க்கிறார்கள். அரசு ஊழியர்களும் இந்த திட்டத்தில் தான் சேர்ந்து உள்ளனர்.

Tier 2 திட்டம்  பரஸ்பர நிதி(Mutual Fund) போன்று செயல்படக்கூடிய திட்டம் ஆகும். ஓய்வுக் காலத்துக்கு பென்சன் என்பது இல்லை. பணம் முதலீடு செய்கிறோம் அவை தேவைப்படும் போது எடுத்துக் கொள்ள முடியும். இந்த திட்டத்தில் சேர்வதற்கு பதில் பரஸ்பர நிதியில் கூட நாம் சேரலாம். அதனால்  Tier 1 கணக்கு தான் மிக முக்கியமானது ஆகும்.

Tier 1 கணக்கில் சேர்ந்தால்தான் Tier 2 கணக்கில் சேர முடியும். நேரடியாக Tier 2 கணக்கில் சேர முடியாது.  Tier 2 கணக்கில் சேராமலும் இருக்கலாம்.  கட்டாயம் இல்லை.

ஒருவர் ஒரு NPS கணக்கு மட்டுமே தொடங்க முடியும். அதில் அதிகபட்சமாக 3 நாமினிகளை நியமித்து கொள்ளலாம். கணக்கு தொடங்கிய உடன் Pan card  போன்று ஒரு அட்டையைக் கொடுப்பார்கள் அதற்க PRAN Card (Permanent Retirement Account Number)  என்று பெயர். அதுதான் NPS அத்தாட்சி.

எப்படி நம் பணம் பென்சனாக கிடைக்கும் 

நாம் செலுத்திவரும்  பணம் 60வது வயதில் எவ்வளவு வளர்ந்து உள்ளதோ அதில் 60 சதவிகிதம் தொகையைக் கொடுத்து விடுவார்கள். மீதமுள்ள 40 சதவிகிதம் தொகையிலிருந்து மாதம் மாதம் ஓய்வூதியம் கொடுப்பார்கள்.  இந்த ஓய்வூதியம் தொகை நிலையான தொகையாக இருக்காது. நம் பணம் பங்குச்சந்தை கேற்ப ஏறி-இறங்கும் என்பதால் ஓய்வூதியம் தொகையும் மாறுபட்டு இருக்கும்.

இது அரசு ஊழியர்கள், பொதுமக்கள் இருவருக்குமே ஒன்றுதான்.

இடையில் பணம் எடுக்க முடியாதா?

Tier 1 கணக்கு தொடங்கி 10 வருடம் வரை இடையில் பணம் எடுக்க முடியாது. பிறகு பிள்ளைகள் மேற்படிப்பு-திருமணம், வீடு வாங்குதல், முக்கிய மருத்துவச் செலவு போன்ற காரணங்களுக்கு நாம் முதலீடு செய்து உள்ள தொகையில் 25 சதவிகிதம் வரை எடுக்கலாம். அரசு ஊழியர்கள் அவர்கள் செலுத்திய தொகையில் 25 % எடுக்க முடியும் அவர்களுக்கு அரசு செலுத்திய தொகையில் எடுக்க முடியாது.

அதிகப்படியாக NPS முடிவு காலம் வரை 3 முறைதான் இடையில் எடுக்க முடியும். பணம் எடுக்கக் குறைந்த பட்சம் 5 வருடம் இடைவெளி இருக்க வேண்டும்.

இடையில் அரசு ஊழியர் வேலையை ராஜினாமா செய்து விட்டால், அவர்கள் NPS கணக்கில் சேர்ந்து உள்ள தொகையில் 20 சதவிகிதம் மட்டுமே கொடுப்பார்கள். மீதி 80 சதவிகிதம் தொகையை அவர்கள் 60 வயது முடிந்த பிறகு பென்சனாக மாதம் மாதம் கொடுப்பார்கள்.

NPS Tier 1 கணக்கில் செலுத்தும் தொகைக்கு வருமான வரி 80C கீழ் 1,50,000 ரூபாயையும், 80CCD கீழ் 50,000 ரூபாய் மொத்தம் இரண்டு லட்சம் ரூபாய் காண்பித்து வரியை சேமிக்கலாம். Tier 2 கணக்கில் செலுத்தும் தொகையை வருமான வரியில் காட்ட முடியாது. NPS கணக்கு வைத்திருப்பவர் இறந்தால் அவர்கள் NPS கணக்கில்  சேர்ந்து உள்ள தொகையை யாரை நாமினியாக குறிப்பிட்டு உள்ளார் அவர்களுக்கு முழு தொகையும் கொடுத்துவிடுவார்கள்.

இப்படி நிறைய நன்மைகள் வயது முதிர்ந்த காலத்தில் பென்சன் என்று பாதுகாப்பு இருப்பதால் தாராளமாக அனைவரும் NPS திட்டத்தில் சேரலாம். உங்கள் வீட்டில் உள்ள இளைஞர்களையும் சேரச் சொல்லுங்கள்.

தமிழ்நாடு அரசு ஊழியர் பென்சன் திட்டம்

ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் தொகை 1 ஏப்ரல் 2003 முதல் சேரும் தமிழக அரசு ஊழியருக்கு இல்லை என்று அறிவித்து CPS(Contributory Pension Scheme) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது தமிழ்நாடு அரசு.

அதாவது ஓய்வுக்கு பிறகு வழங்கப்படும் மாதாந்திரப் பென்சனுக்கு பதில் ஓய்வு பெறும் போது பெரிய தொகையைக் கொடுத்து அத்தோடு முடித்துக் கொண்டது தமிழக அரசு.

எப்படி செயல்படுகிறது CPS 

ஊழியரின் அடிப்படை சம்பளம் + அகவிலைப் படியில் 10 சதவிகிதம் பிடித்து CPS கணக்கில் செலுத்துவார்கள். கூடவே, தமிழ்நாடு அரசு 10 சதவிகிதம் தொகையை ஊழியரின் CPS கணக்கில் செலுத்தும். மொத்தம் 20 சதவிகிதம் ஆகும்.  ஆனால் NPSல் மத்திய அரசு தங்கள் ஊழியருக்கு 14 சதவிகிதம் செலுத்துவதால்  அங்கு மொத்தம் 24 சதவிகிதமாக இருக்கும்.

இப்படிச் சேரும் பணம் NPS போல் பங்குசந்தை திட்டங்களில்  முதலீடு செய்யாமல்  வைப்புத் தொகைக்கு (Fixed Deposit) வழங்கும் வட்டி போல் நிலையான வட்டி அளிக்கிறது தமிழக அரசு . தற்பொழுது இந்த வட்டி 7.1 என்ற அளவில் உள்ளது. வட்டி அவ்வப்பொழுது மாற்றங்களுக்கு  உரியது.

ஊழியருக்கு என்ன நன்மை 

தமிழக அரசு ஊழியர், ஓய்வு பெற்றவுடன் வட்டியுடன் சேர்ந்து உள்ள தொகையை அந்த ஊழியருக்கு கொடுத்து விடுவார்கள்! இது பெரிய தொகையாக இருக்கும். இது தவிர வேறு பென்சன் கிடையாது!

இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய பென்சன் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளன! ஆனால், இதில்  வாடிக்கையாளர்களுக்குப்  பணம் கொஞ்சம் குறைவாகக் கிடைக்கும். அதனால் இன்சூரன்ஸ் பென்சன் பாலிசியை விட NPS சிறந்தது.

அடுத்து APY(Atal Pension Yojana), EPF(Employee Provident Fund) போன்ற திட்டங்கள் பார்ப்போம். மிக முக்கியமான திட்டங்கள் ஆகும்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time