மானுட விழுமியங்களே மாமனித அடையாளமாகும்!

-சாவித்திரி கண்ணன்

மாமனிதன் என்பதன் இலக்கணம் என்ன? என்பதற்கு இந்த சினிமாவை விட சிறப்பாக விடை சொல்ல முடியாது! வெள்ளந்தியான ஒரு மனிதன் வில்லங்கத்தில் மாட்டிக் கொள்ளும் போது ஏற்படும் அளவில்லா துயரத்திலும் கூட, தன்னிலையோ, தன்மானமோ இழக்காமல், வாழ்ந்து மாமனிதனாகிறான் என்பதை திரைக் காட்சிகளின் ஊடே கவிதையாக்கியுள்ளனர்!

உழைப்பின் வழியே கிடைக்கும் பணம் மட்டுமே உத்தமம் என்று எண்ணும் மனம்! அடுத்தவர் பொருளுக்கு கிஞ்சித்தும் ஆசைப்படாத குணம்! மற்றவர்கள் நலனில் அக்கறை காட்டும் இயல்பு..இப்படியான ஒரு ஆட்டோ தொழிலாளி ராதாகிருஷ்ணனாக அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி!

தன் ஆட்டோவில் நகையை தவறவிட்டவனை ஒரு நாள் முழுக்க தேடி, அவன் வீட்டுத் திண்ணையில் படுத்து, காத்திருந்து அந்த நகையை ஒப்படைத்து நிம்மதி அடையும் அந்த எளிய ஆட்டோ தொழிலாளியும் அவன் கூட்டாளியான பெட்டிக் கடை பாயும் இன்னும் இந்த உலகம் இயங்கிக் கொண்டிருப்பதே அடுத்தவர் பணத்திற்கு ஆசைபடாத, கண்ணியமான இந்த எளிய மனிதர்களால் தான் என்ற நம்பிக்கை கீற்றை விதைக்கிறது.

எல்லோருக்கும் தரமான கல்வி என்பதை சாத்தியப்படுத்தாத சமூக அரசியல் சூழலில், வணிகமயப்படுத்தபட்ட தரமான கல்வியை தன் குழந்தைகளுக்கு சாத்தியப்படுத்த தவிக்கிறான் அந்த ஏழை ஆட்டோ தொழிலாளி! பணம் சேர்க்கவோ, வீடு வாங்கவோ, நகை நட்டு வாங்கி மனைவிக்கு அழகூட்டிப் பார்க்கவோ அவன் ஆசைப்பட்டானில்லை. அன்பான குடும்பம், அமைதியான வாழ்க்கை என போய்க் கொண்டிருக்கிறது! ஆட்டோ ஓட்டும் தொழிலாளி குழந்தைக்கு இன்றைய தனியார்கள் நடத்தும் பள்ளிகள் ஒரு எட்டாக் கனி! ஆகவே, அவன் ஒரு ரியல் எஸ்டேட் முதலாளியுடன் வொர்க்கிங் பார்ட்டனராக சேர்கிறான். அவன் அந்த முதலாளி மீது நம்பிக்கை கொண்டது போலவே, அவன் மீது நம்பிக்கை உள்ள ஊர் மக்கள் எளிதில் நம்பி பணம் கொடுத்து விடுகின்றனர்.

நம்பிக்கை பொய்க்கும் போது ஊர் மக்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்து, துவண்டு போகிறான் நாயகன். செய்யாத தவறுக்காக அயோக்கிய அடையாளம் பெற்ற ஒரு நல்லவனுடைய மனவலியையும், குடும்பத்தை பிரிந்து சென்று மனைவி, குழந்தைகளை நினைத்து மருகும் உணர்வையும் மிக அழுத்தமாகவே பதிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி.

படத்தில் அந்த ரியல் எஸ்டேட் முதலாளியைத் தவிர்த்து, பெரும்பாலான கதாபாத்திரங்கள் சூதுவாதில்லாதவர்கள்! அதுவும், அனைத்து பெண் கதாபாத்திரங்களும் அழகுப் பதுமைகளாக அல்லாமல் தன்மானச் சிகரங்களாக வார்த்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

கணவன் ரியல் எஸ்டேட் துறையில் இறங்கும் போது அதை எதிர்த்து, ”இருக்கும் வாழ்வே போதுமானது, பணத்திற்கு ஆசைப்பட்டு சிக்கலில் மாட்ட வேண்டாம்” என எச்சரிக்கிறாள் மனைவி! ஊரார் பழிச் சொல்லை தாங்க முடியாமலும், வறுமையிலும் கவுரவத்தை விட்டுக் கொடுக்காமலும் வாழும் குடும்பத் தலைவியாக வாழ்ந்து காட்டியுள்ளார் காய்த்திரி.

கணவனை இழந்த மலையாளப் பெண் அன்னிய ஆடவர்களிடம் இருந்து தானும், தன் சிறிய மகளும் விலகி கண்ணியமான உழைப்பு சார்ந்த வாழ்க்கையை வாழ்வதும், முதலில் விஜய் சேதுபதியை விலக்கி வைத்து, பிறகு குணம் தெரிந்ததும் நம்பி பழகுவதும் நெகிழ்ச்சியான காட்சிகள்!

துன்பத்திலும், வறுமையிலும் உழலும் நண்பன் குடும்பத்தை கண்னியத்துடன் காப்பாற்றி கரை சேர்க்கும் அந்த பெட்டிக் கடை இஸ்லாமியரும், அவரது அன்பு மனைவியும் வணங்கத்தக்க கதாபாத்திரங்களாகும்.

காசியில் நகரத்தார் மடத்திற்கு வரும் பக்தர்களுக்கு அன்னமிடும் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் விஜய் சேதுபதியிடம், ”அத்வைதம் தெரியுமா? வசிஷ்டாவைத்தியம் தெரியுமா?” என ஆன்மீக பரிட்சை வைத்து அறிவை சோதிக்கும் அந்த சிவனடியார்கள்.., பிறகு ஆன்மீகம் என்பது தகவல்கள் சேகரிப்பு சம்பந்தமானதல்ல, அது அகத்தின் முதிர்ச்சியும், பக்குவமும் சம்பந்தமானது என்பதை அந்த எளிய மனிதனிடம் உணரும் தருணம் உன்னதமானதாகும்!

தன்னுடைய ஓடி ஒளியும் வாழ்க்கைக்கு காரணமான, தன் குடும்பத்தை நிர்பதியாய் விட்டுவிட்டு எங்கேயோ வாழும் துர்பாக்கிய நிலைக்கு அச்சாரமிட்ட அந்த அயோக்கியனை மீண்டும் காணும் தருணத்தில் எவர் ஒருவராக இருந்தாலும்..எப்படி ஆங்காரமும், ஆத்திரமும் மேலெழுந்து வந்திருக்கும்… அந்த இடத்திலும், ”உங்க தாயை அனாதையாக சாகவிட்டு போய்விட்டீர்களே…’’ என துரோகிக்கு இரக்கம் காட்டும் அந்த மனநிலை கொண்டவன் தானே உண்மையான ஆன்மீகவாதி!

தேனீ மாவட்டம் சம்பந்தப்பட்ட காட்சிகள், கேரளாவின் எழில் கொஞ்சும் ஓடைகள், காசி மாநகரின் ஆன்மீக செயல்பாடுகள் ஆகியவற்றை போகிற போக்கில் கதையினூடே மிக அழகாக ஒளிப்பதிவு செய்து உள்ளனர்.

யதார்த்தமான மனித வாழ்க்கையை, அதன் இயல்பு நிலை மாறாமல், துளியும் கமர்சியல் கச்சடாக்கள் இல்லாமல் எடுக்கும் இது போன்ற திரைப்படங்கள் அரிதிலும் அரிது. அதை மார்க்கெட் வேல்யூ உள்ள ஒரு கதாநாயகன் ஈடுபாட்டுடன் நடித்துக் கொடுப்பது அதனிலும் அரிது. விஜய்சேதுபதி உண்மையிலேயே வித்தியாசமான கலைஞன் தான்!

படத்தை தயாரித்ததுடன் இல்லாமல், தந்தை இளையராஜாவுடன் இணைந்து இனிய இசையை நல்கியுள்ள யுவன் சங்கர் ராஜா பாராட்டப்பட வேண்டியவர்!

மானுட விழும்பியங்கள் எளிய மனிதர்கள் இடத்தில் தான் ஏராளமான வகையில் குவிந்து கிடக்கிறது! படித்தவன், பதவியில் உள்ளவன், படாடோபமாக தானம் செய்யும் பணக்காரன் இவர்களிலேயே மாமனிதனைத் தேடி பழக்கப்பட்ட சமூகத்தின் பொதுபுத்திக்கு மாற்றாக மற்றவர் நலனுக்காக வாழ்பவன் யாரோ, மற்றவர் துன்பத்தை துடைக்க எதிர்பார்ப்பின்றி ஓடி வந்து உதவுபவன் யாரோ, கொடும் துன்பத்திற்கு காரணமானவனிடம் கூட பழிவாங்கும் உணர்வை கொண்டிராதவன் யாரோ…  அவன் தான் உயர்ந்த மாமனிதன் என சீனு ராமசாமி மிக இயல்பான திரைக் காட்சிகளின் ஊடே உணர்த்திவிடுகிறார்!

வன்முறையும், ஆபாசங்களும் தூக்கலாக உள்ள இந்தக் காலத்திலும் இப்படி ஒரு சினிமா எடுக்கவும், இயக்கவும், நடிக்கவும் முடியும் என்பதோடு  மனித மனங்களை விசாலப்படுத்தவும் முடியும் என நிருபித்த இந்த திரைக் கூட்டணியே மானிதர்களின் அணிவகுப்பு தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time