ஆண்மைக் குறைவு ஒரு நோயல்ல!

-எம். மரியபெல்சின்

ஆண்மைக் குறை பிரச்சினையால நிறையபேர் அவதிப்படுறாங்க. பொதுவா பெண்மை, தாய்மை பற்றி பேசுற நாம ஆண்மை பற்றி பெருசா பேசுறதில்லை. ஆண்மைனா என்ன?  ஆண்மைக்கு அளவுகோல் உண்டா? இதற்காக மருந்து, மாத்திரை, லேகியம், சூரணம் என்று அலைபாய்வது தேவையற்றது.

ஆண்மை இல்லாத ஒரு மனுசனை இந்தச் சமூகம் எப்படி பார்க்குது? ஒரு ஆண்மகனால குழந்தை பெத்துத்தர முடியலன்னா அவனை எப்படி பார்ப்பாங்க? பெண்கள்கிட்ட தாய்மையை எதிர்பார்க்கிற மாதிரி ஆணிடம் ஆண்மை இருக்கான்னு எதிர்பார்க்கிறதுல என்ன தவறு? ஆண்மைல ஏற்படக்கூடிய குறைபாட்டுக்கு என்ன காரணம்னு நிறையவே யோசிக்க வேண்டியிருக்கிறது.

முதல்ல ஆண்மைக்குறைன்னா என்னன்னு தெரியணும். உறவு கொள்ளும்போது ஒரு ஆண்கிட்ட இருந்து  கோடிக்கணக்கான விந்தணுக்கள், பெண்ணுறுப்புக்குள்ள நுழைஞ்சி கர்ப்பப்பையை நோக்கிப் போகும். நம்மளோட பார்வையில தூரம் அதிகமில்லைன்னாலும் அந்த விந்தணுக்கள் உயிர்ப்போட கடந்து கருமுட்டைக்குள்ள நுழையணும். விந்தணுக்கள்  கோடிக்கணக்கா இருந்தாலும் அதுல துடிப்பான ஒரேயொரு ஜாம்பவான்… அதாவது விந்தணு மட்டுந்தான் கருமுட்டையோட வெளிச்சவ்வை துளைச்சிக்கிட்டு உள்ளே நுழையும்.

விந்தணுக்கள் வெளிப்படும்போது சிலபேருக்கு எண்ணிக்கை கூடவோ, குறையவோ இருக்கலாம். சிலபேருக்கு சில காரணங்களால விந்தணு குறைஞ்சிருக்கும். அதைத்தான் கவுண்டிங் குறைவா இருக்குன்னு சொல்வாங்க. இப்பிடி கவுண்டிங் குறைவா இருக்கிறதை வச்சித்தான் ஆண்மைக் குறைன்னு சொல்றாங்க. இப்படிப்பட்டவரால உறவுல ஈடுபட முடியும். ஆனால், அவருக்கு விந்தணு எண்ணிக்கை குறைஞ்சிருக்கும். கருமுட்டையின் ஆற்றல் குறைவா இருக்கும். இதை ஒரு நோயாக கருத வேண்டியதில்லை. இதில் அவமானப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தமாதிரி பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் ஒரு காரணமா இருக்கும்னு ஆய்வுகள் சொல்கின்றன!. தற்போதைய வேலைச்சூழல், குடும்ப உறவுகளில் சிக்கல்னு பல காரணங்களால மன அழுத்தம் உண்டாகி, அதுக்கு மருந்து மாத்திரை எடுப்பாங்க. அந்த நேரத்துல சிலபேர் அதிகமா குடிப்பாங்க, சிலபேர் புகைப்பழக்கம், போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி அதுக்காக மருந்து மாத்திரை சாப்பிடுவாங்க.

அடிக்கடி சுய இன்பம் அனுபவிக்கும் பழக்கம் உள்ளவங்க விந்தணுவை விரையம் செய்திருப்பாங்க! அதே போல வரம்பு மீறி அடிக்கடி உடலுறவு கொண்டாலும், உடல் பலவீனம் ஏற்படும். சுயக் கட்டுப்பாட்டோடு இருப்பது ஆண்மைக்கு பாதுகாப்பாகும்!

சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் மட்டுமில்லாம வேற சில நோய்களுக்காக மருந்து, மாத்திரைகள் எடுக்கிறதால சில பக்கவிளைவுகள் ஏற்பட்டு ஆணுறுப்பை பாதிக்க வாய்ப்பு இருக்கு.

ரசாயண ஆலைகள் உடல் சூட்டை அதிகரிக்கும்

உடல்சூடு அதிகமானாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்படும். இயல்பாவே சிலபேருக்கு உடல் சூடு அதிகமா இருக்கும். சமையல் வேலையில் அடுப்பு சூட்டோடு இயங்குபவர்கள், ரசாயன மருந்துக் கம்பெனியில வேலைபார்க்கிறவங்க, கதிர்வீச்சு அதிகம் உள்ள இடங்கள்ல வேலைபாக்கிறவங்க, ரொம்ப தூரம் பைக் ஓட்டுறவங்க மட்டுமில்லாம கார், லாரி, பஸ்னு மணிக்கணக்குல வண்டி ஓட்டுறவங்களுக்கு இந்த பிரச்சினைகள் வர வாய்ப்புகள் இருக்கு. விந்தணு உற்பத்திக்கும், உடல் சூட்டுக்கும் தொடர்பு இருக்கு. உடல் சூடு அதிகரிச்சா விந்தணு உற்பத்தில பாதிப்பு உண்டாகும். இது ஒர் அனுபவ உண்மை! இப்படிப்பட்டவங்க வேலை நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அல்லது வேலை மாறிக் கொள்ள வேண்டும். தினசரி இருமுறை குளிக்க வேண்டும். தலைக்கு தினசரி தேங்காய் எண்ணெய் தேய்க்க வேண்டும். உடல் சூடு தணிக்க தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரவில் ஊற வைத்த சிறிது வெந்தயத்தை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடிக்க வேண்டும்.

ஆண்மைக் குறைங்கிறது தனிப்பட்ட ஒரு நோய் கிடையாது. அது பல நோய்களோட பக்க விளைவுங்கிறது தான் உண்மை. இல்லன்னா சில நோய்களோட அறிகுறிகளில் ஒன்றாகும்! அந்த பிரச்சினைகளோட வெளிப்பாடுன்னும் சொல்லலாம். சிலபேருக்கு கல்யாணப் பேச்சை எடுத்ததுமே ஆண்மைக் குறைவு இருக்குமோங்கிற பயமும் சேர்ந்திரும். ஆனா 40 வயசைக் கடந்த பிறகுதான் இந்த பாதிப்பு அதிகமா வெளிய தெரியும். இதுல கவலைப்படுவத்ற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமில்லை.

இன்னைக்கி சூழல்ல வேலை, வேலைன்னு அலையுறவங்க நிறையபேர் இருப்பாங்க. அவங்களுக்கு பணம் மட்டுந்தான் குறிக்கோள். வேற எந்த சிந்தனையும் வராது. இந்த மாதிரி சூழல்ல இருந்தாலும் மனதளவுல உள்ள எண்ணங்கள்கூட ஆண்மைக்குறை உண்டாக காரணமா இருக்கலாம்.

சிலபேர் உடல் சுத்தமா இருக்கமாட்டாங்க. உறவு வைக்கும்போதாவது குளிச்சி சுத்தமா இருக்கணும். சிலபேருக்கு வியர்வை நாற்றம், பொடுகு நாற்றம், வாய் நாற்றம் இருக்கும். இது ஆணாவும் இருக்கலாம், பெண்ணாவும் இருக்கலாம். இதுல யாரோ ஒருத்தருக்கு இந்தமாதிரி இருந்தா விரும்பாம உறவு கொள்ளும் போது அது கூட ஒரு ஆணுக்கு குறைபாட்டை ஏற்படுத்தலாம். ஆனா, இதெல்லாம் சரி பண்ணக் கூடிய பிரச்சினைகள் தான். பல பேர் இதை சரிபண்ணாததால அது வேற விதமா போய் நின்னுருது.

ஆண்மைக்குறை ஏற்படுறதுக்கு உணவுமுறை மாற்றமும் முக்கிய காரணமா இருக்கு. அதேமாதிரி வேலைச் சூழலும் ஒரு காரணமா இருக்கு. ஆண்மை, ஆண்மைக்குறை பற்றி பேசுற இந்த நேரத்துல காமத்தைப் பத்தியும் தெரிஞ்சிருக்கணும். செக்ஸ் பத்தி நல்லதொரு புரிதல் தேவை. அதேநேரத்துல ஆண்மைக்குறை ஏற்பட என்ன காரணம்னு கண்டுபிடிக்கணும்.

எல்லோரயும்போல பொத்தாம் பொதுவா மருந்து சாப்பிட்டு பலன் இல்லை. என்னென்னவோ லேகியம், சூரணம்னு சாப்பிட்டாலும்கூட பலன் இருக்காது. அதனால முதல்ல உங்களை நீங்களே சுயமா பரிசோதனை பண்ணிப்பாக்கணும். பீடி, சிகரெட் மட்டுமில்லாம  போதை மருந்துகள் பயன்படுத்துறது, தண்ணி அடிக்கிறத முதல்ல விடணும். ரொம்ப இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் போடுவதை தவிர்க்க வேண்டும். இறைச்சி உணவுகளுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது. முக்கியமா பிராய்லர் சிக்கன் சாப்பிடாதீங்க. மருந்துகள் சாப்பிடுறதுக்கு முன்னாடி அகத்திக்கீரை  சாப்பிட்டா உடம்புல உள்ள சில நச்சுப்பொருள்கள் வெளியேறிரும், அதுக்கப்புறமா எளிமையான வழிகளைப் பின்பற்றுனா பலன் கிடைக்கும்.

ஆண்மையை அதிகரிக்கும் வழி மூறைகள்:

அமுக்கரா சூரணம் பத்தி கேள்விப்பட்டிருப்பீங்க, அதோட சம அளவு நீர் முள்ளி விதை சூரணத்தைச் சேர்த்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து சூடான பசும்பால்ல கலந்து காலைலயும் ராத்திரியும் சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிடுங்க. அமுக்கராவும் நீர் முள்ளியும் நாட்டு மருந்துக் கடைல கிடைக்கும். இதை சாப்பிடுறதால நரம்புத் தளர்ச்சி சரியாகும். இதனால உடம்புக்கு புது தெம்பு கிடைக்கும். முகம் அழகாகும், தாம்பத்திய உறவுல விருப்பம் உண்டாகும்.

கானாவாழைன்னு ஒரு மூலிகை கேள்விப்பட்டிருப்பீங்க. இது ரொம்ப சாதாரணமா ரோட்டோரத்துல வளர்ந்து கிடக்கும். பூங்காக்கள்லயும் இந்தச் செடி தாராளமா வளரும். கைப்பிடி அளவு எடுத்து மையா அரைச்சி பால்ல கலந்து சாப்பிடலாம். இல்லன்னா கானாவாழை இலைச்சாறை ஜாதிக்காய்த்தூளை ஊற வச்சி காய வச்சி எடுத்து தினமும் ரெண்டு சிட்டிகை அளவு சாப்பிட்டு வந்தா ஆண்மைக்குறையும், நரம்புத்தளர்ச்சியும் சரியாகும்.

அம்மான் பச்சரிசி,                                                                                  கீழா நெல்லி இலை

அம்மான்பச்சரிசி செடியையும், கீழாநெல்லி இலையையும் சம அளவு எடுத்து அரைச்சி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து அதை 200 மில்லி எருமைத்தயிர்ல சேர்த்துச் சாப்பிட்டா விந்து ஒழுகுதல் பிரச்சினை சரியாகிறதோட ஆண்மைக்குறை பிரச்சினையும் சரியாகும்.

மத்தியான சாப்பாட்டுல முருங்கைக் கீரை, முருங்கைப்பூ, தவசிக்கீரை, வெந்தயக்கீரை, பசலைக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரைன்னு எதாவது ஒரு கீரையைச் சேர்த்துட்டு வந்தா பலன் கிடைக்கும்.கொத்தமல்லித்தழைல துவையல், சட்னி செஞ்சி சாப்பிட்டாலும் பலன் கிடைக்கும். பிஞ்சு முருங்கைக்காய் பாத்திருப்பீங்க… ரொம்ப மெல்லிசா இருக்கும். அதை பொடிப்பொடியா நறுக்கி அதுல கொஞ்சம் மிளகுத்தூள், உப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தா ஆண்மை அதிகரிக்கும்.

தேங்காய்ப்பால், பாதாம்பால் குடிக்கலாம். அப்பப்போ முந்திரிப்பருப்பு, பிஸ்தா, மாதுளம்பழம் சாப்பிடலாம். நிலக்கடலை, உளுந்தும்கூட ரொம்ப நல்லது. அத்திப்பழம், அரசம்பழம், ஆலம்பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வரலாம். பட்டாணியை முளைவிட்டு அடிக்கடி சாப்பிட்டு வந்தாலும் ஆண்மைக்குறை சரியாகும். சாப்ப்ட்டில் மாப்பிள்ளை சம்பா சேர்க்கிடலாம்!

வெற்றிலை நல்லது. அதாவது வெற்றிலை போடும்போது கொஞ்சம் ஜாதிக்காய் சேர்த்துக்கிடலாம். வெற்றிலைமேல கருஞ்சீரக எண்ணெய் தடவி சாப்பிடலாம். ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி மாதுளம்பழம் இல்லன்னா செவ்வாழைப்பழம் சாப்பிடலாம். இதையெல்லாம் கொஞ்சநாள் பின்பற்றுனாலே ஆண்மைக்குறை பிரச்சினை சரியாயிரும். கண்டதையும் வாங்கிச் சாப்பிட்டு பணத்தையும் வீணாக்கி உங்க உடம்பைக் கெடுக்காம உங்களை நீங்களே சரி பண்ணலாம்.

வெள்ளைப்பூண்டு பக்கவிளைவில்லாத ஒரு பாலுணர்வு தூண்டிங்கிறது எத்தனைபேருக்குத் தெரியும்? விரைப்புத் தன்மையைப் பராமரிக்க முடியாதவங்களுக்கு ஒரு டானிக்கா செயல்படுது இந்த வெள்ளைப்பூண்டு. தினம் ரெண்டு இல்லன்னா மூணு பூண்டுப்பல்லை எடுத்து வேக வச்சி சாப்பிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

அதேமாதிரி வெங்காயம் ஆண்மையை அதிகரிக்கச் செய்றதோட இனப்பெருக்க உறுப்புகளை வலுப்படுத்தும். ஆண் உறுப்புல விரைப்புத் தன்மை ஏற்படாம துன்பப்படுறவங்களுக்கு வெங்காயம் நல்ல மருந்து. வெங்காயத்துல எல்லா வகை வெங்காயமும் நல்லது தான்னாலும் வெள்ளை வெங்காயத்தை பச்சையாகச் சாப்பிட்டு வந்தா நிச்சயம் அதோட பலன் தெரியும்.

அடுத்ததா கேரட்… சோர்வு இல்லன்னா முன்கூட்டியே விந்து வர்றவங்களுக்கு நல்ல தீர்வு தரும். கோழி முட்டைகளோட கேரட் சேர்த்துச் சாப்பிட்டா ஒரு புதுமையான பாலியல் அனுபவம் கிடைக்கும். 150 கிராம் அளவு கேரட்டை எடுத்து நல்லா துருவணும். அதுல பாதி அளவு இருக்கிற மாதிரி வேக வச்ச முட்டை சேர்க்கணும். இதோட கொஞ்சமா தேன் சேர்த்து ரெண்டு மாசம் தொடர்ந்து சாப்பிட்டா பலன் கிடைக்கும்.

தண்ணீர்விட்டான் கிழங்கு… இதுக்கு சதாவேரிங்கிற பேரும் உண்டு. இந்த தண்ணீர்விட்டான்கிழங்கோட காய்ஞ்ச வேர், முன்கூட்டி விந்துவருதல் மட்டுமில்லாம பாலியல் கோளாறுகளுக்கு பயன்படுத்தப்படுத்தக்கூடிய பொதுவான மருந்து.  ஒரு டம்ளர் பால்ல 15 கிராம் பொடியைச் சேர்த்து கொதிக்க வச்சி காலை, மாலை வேளைகள்ல காபி குடிக்கிறதுமாதிரி குடிச்சிட்டு வந்தா பலன் கிடைக்கும்.

முருங்கைக்காய்… ரொம்ப சக்தியுள்ளது. பாலுணர்வை தூண்டுறதுல இதோட பங்கு அதிகம். ஆண்கள் மட்டுமில்லாம பெண்களுக்கு வரக்கூடிய குறைபாடுகளை சரிபண்ணும். முருங்கை மரத்தோட உலர்ந்த பட்டை ஆண்மைக்குறைவு, முன்கூட்டி விந்து வெளியேறுறது, விந்துக்குறைபாடு பிரச்னைகள்ல இருந்து விடுவிக்கும்.முருங்கை பட்டைத் தூள் 150 கிராம் எடுத்து அதோட அரை லிட்டர் தண்ணி விட்டு நல்லா கொதிக்க வைக்கணும்.  அரை மணி நேரம் கொதிச்சதும் அதுல தேவையான அளவு எடுத்து ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு மூணுதடவைன்னு மூணு மாசம் குடிச்சிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும்.

முருங்கைப் பூவை கீரை பொரியல் பண்றமாதிரி பொரியல் செஞ்சி சாப்பிடலாம். நல்லா காய வச்சி பொடியாக்கி பால்ல கலந்து சாப்பிடலாம். இல்லன்னா தேன்ல குழைச்சும் சாப்பிடலாம். பச்சையா பால்ல வேகவச்சி வடிகட்டியும் குடிக்கலாம். அதாவது முருங்கைப்பூ 15 கிராம், 250 மில்லி பால் சேர்த்துக் கொதிக்க வச்சி குடிச்சா ஆண்மை பலமாகும்.

கட்டுரையாளர்; எம். மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time