சர்சைக்குரிய கேள்விகள், சாவித்திரி கண்ணன் பதில்கள்!

க.செபாஷ்டின், வேலூர்

தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு என்பது சாதியரீதியிலானது. கவுண்டர்களுக்கும், முக்குலத்தோருக்கும் இடையிலான பிளவு என பிரபல பத்திரிகையாளர்கள் சிலர் கூறி வருகிறார்களே..?

ஒ.பி.எஸ்சுக்கும், இ.பி.எஸ்சுக்கும் சாதிய அடையாளம் இருக்கிறது. சுய சாதி அபிமானமும் இருக்கிறது என்பது உண்மை தான் என்றாலும், இந்தப் பிளவுக்கும், சாதிக்கும் சம்பந்தமில்லை.

முக்குலத்து சாதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ்… என ஏறத்தாழ அனைவருமே ஒ.பி.எஸ்சுக்கு எதிரான அணியில் தான் உள்ளனர். முக்குலத்து எம்.எல்.ஏவான ராஜன் செல்ப்பாவோ  ஒ.பி.எஸ்சிடம் ”கட்சியில் இருந்து நீக்கப்படுவதற்கு முன்பாக நீங்களாகவே ராஜீனாமா செய்துவிடுங்கள்” என கூறியுள்ளார். தென் மாவட்ட நிர்வாகிகள் பலரும் ஒ.பி.எஸ்சுக்கு எதிர் அணியில் தான் உள்ளனர். நல்ல வேளையாக இந்தப் பிளவை அதிமுகவினர் யாரும் சாதிப் பகையாக அணுகவில்லை.

என்னைப் பொறுத்த வரை இ.பி.எஸ் நேர்மையாளரோ, உத்தமரோ இல்லை என்பதை உரக்கச் சொல்வேன். ஆனால், ‘இ.பி.எஸ் அணியில் தான் 95 சதமானவர்கள் இருக்கிறார்கள்’ என்ற யதார்தத்தை புறம் தள்ள மாட்டேன். அப்படியானால், அதிமுகவில் 95 சதமானவர்கள் கவுண்டர்களா? இது என்ன பார்வை என்றே நமக்கு புரியவில்லை.இந்த மாதிரியான வாதங்கள் ஆபத்தானவை! வலிந்து சாதி அடையாளத்தை திணிக்கக் கூடாது.

நெடுஞ்செழியன், பாலப்பள்ளம், கன்னியாகுமரி

திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை  தமிழர்கள் தங்களை விடுவித்துவிடுங்கள் அல்லது கொன்று விடுங்கள் என பட்டினி போராட்டம் நடத்துகிறார்கள். அதில், சிலபேர் கவலைக்கிடம் என்றும் செய்திகள் வருகிறது. அவர்கள் மேல் கஞ்சா, கடத்தல் வழக்குகள் இருக்கிறதென்று  சொல்லப்படுகிறதே அல்லது அவர்களை வேண்டுமேன்றே சித்திரவதை செய்கிறார்களா? எது உண்மை?

இலங்கையில் இருந்து வரும் அகதிகள், இந்தியாவைக் காட்டிலும் இலங்கையே மேல் என நினைக்க வேண்டும். அந்தப்படி அவர்களை கண்ணியக் குறைவாக நடத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நோக்கத்தை ஒரு மனதோடு ஏற்று நிறைவேற்றி வருகிறது உடன் பிறப்புகளின் அரசு! இதில் 16 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர். அப்பாவிகள் மீது பொய்ப் பழி போடுவது மகாபாவம்! உள்ளம் பதைக்கிறது.

வைரமுத்து கணேசன், சென்னை

பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கைகளோடு ஆரம்பிக்கப்பட்ட திமுக தற்போது திசைமாறி பக்தி இயக்கம் போல செயல்படுகிறதே?

திமுக, பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கையை எப்போதுமே ஏற்றுக் கொண்ட கட்சியல்ல. ஆனால், பெரியாரிடமிருந்து வந்தவர்களால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி! அண்ணா, ”ஒன்றே குலம், ஒருவனே தேவன்” என்றார்.

கடவுளை  ஏற்றுக் கொள்வதற்கும் சரி, மறுப்பதற்கும் சரி ஒரு பரிசுத்தமான மனமும், நேர்மையும் வேண்டும். திமுகவினரின் கடவுள் பக்தி என்பது நியாயமற்ற வழிமுறைகளில் கணக்கு, வழக்கின்றி சொத்து சேர்த்த குற்றவுணர்வால் ஏற்பட்டதாக இருக்கலாம்! குற்றவுணர்வு உள்ளவர்களின் ஒரே புகழிடம் கோவில்களே! கடவுளுக்கு கமிஷன் தந்து பாவத்தை கரைக்கப் பார்ப்பார்கள்! குற்றவுணர்வு வீரியமானது. அது எந்த எல்லைக்கும் ஒருவரை எடுத்துச் சென்றுவிடும்!

பாண்டித்துரை, அரசரடி, மதுரை

ஆண்மை என்பது பாலியல் வீரியம் சம்பந்தப்பட்டதா? அல்லது அச்சம் தவிர்த்த வீரம் சம்பந்தப்பட்டதா?

கோழையாக இருக்கும் ஒருவனைப் பார்த்து, ”உனக்கு ஆண்மை இருந்தால் எதிர்த்துப் பார்” என்பது பொது வழக்கு.

ஒரு பெண்ணின் பாலியல் இச்சையை நிறைவேற்ற முடிந்தாலும், குழந்தை பாக்கியம் ஏற்படுத்தி தர முடியாதவனையும், ”ஆண்மை இல்லாதவன்” எனச் சொல்வதும் பொது வழக்கு.

எண்ணிக்கையில் போதுமான விந்தணுக்கள் இல்லாமையால் பெண்களுக்கு குழந்தை பாக்கியம் தர முடியாத ஒரு ஆணை ஆண்மை இல்லாதவன் என்று சொல்லும் பார்வை பிழையானது! அதே போல குழந்தை பெற்றுக் கொள்ள இயலாத பெண்ணை பெண்மை இல்லாதவள் என கருதுவதும் பிழையானது!

ஆண்மை வீரத்தின் அம்சம். பெண்மை கருணையின் அம்சம். இந்த இரண்டும் சேர்ந்ததே குடும்பத்தை பாதுகாக்கும் கவசம்!

க.அப்துல்கலாம், ஹைதராபாத்.

ஒ.பி.எஸ் – இ.பி.எஸ் சண்டையில் திமுக பன்னீர் செல்வத்தின் பக்கம் நிற்பதாக எழும் குற்றச்சாட்டுகள் குறித்த உண்மைத் தன்மை என்ன?

சன் தொலைகாட்சியும், தினகரனும் எப்படி எல்லாம் ஒ.பி.எஸ்ச்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், முட்டுக் கொடுத்தும் செய்தி தருகிறார்கள் என பார்த்திருந்தால் உங்களுக்கு இந்த சந்தேகத்திற்கே வாய்ப்பில்லை. மேலும், நள்ளிரவில் நீதிமன்றக் கதவுகள் திறக்கப்பட்டதிலும், அதிகாலை நான்கு மணி வரை விடிய, விடிய விசாரணை நடத்தப்பட்டதிலும் திமுக மேல்மட்டம் காட்டிய அக்கறையை பிரத்தியட்சமாக பார்த்ததாக ஹைகோர்ட் மூத்த நிருபர்களும் உறுதிபடுத்தினர். ஆக, பன்னீருக்கு பக்கபலமாக இருப்பதில் பாஜகவும், திமுகவும் ஒரே நேர்கோட்டில் நிற்கும் இந்த விசித்திர அரசியலை விளங்கிக் கொள்ளவே முடியவில்லை.

எஸ், ராஜலட்சுமி, மதுரவாயில்

எழுத்தாளர் மாலனுக்கு மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு உள்ளதே…! இது, ‘பாஜகவிற்கு பாதம் தாங்கியதால் அவருக்கு கிடைத்த எழுத்துக் கூலி’ என்று சொல்லலாமா?

அவர் மொழி பெயர்த்துள்ளது ஒரு பிணந்தூக்கியின் வரலாற்று குறிப்புகள் என்ற சிறந்த படைப்பு தான்! ஆனால், அதில் அவரது மொழிபெயர்ப்பு திறன் என்பது பாராட்டும்படியானதில்லை எனக் கேள்விப்பட்டேன்.  தமிழில் ஆகச் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் என்ற வரிசையில் சுமார் ஒரு டஜன் பேரை பட்டிலிட்டாலும், அதில் கடைசி ஆளாகக் கூட வரமுடியாதவர் தான் மாலன்! அவரை ஒரு எழுத்துக் கூலி என்றால், நான் அதை எதிர்ப்பேன். கூலி என்பது உழைப்பு சம்பந்தப்பட்டது. கூலியாக இருப்பது கேலிக்குரியதல்ல, உண்மைக்கு எதிரான போலியாக இருப்பதே ஆபத்தானது.

கிருஷ்ணவேணி, மடிப்பாக்கம்,சென்னை

குடியரசுத் தலைவர் பதவிக்கு எதிர்கட்சிகளும் ஒரு பழங்குடியையோ அல்லது கிறிஸ்த்துவ தலித்தையோ, இஸ்லாமியரையோ நிறுத்தி இருந்தால் சரியான போட்டியாக இருந்திருக்கும் என சில ஊடகங்களில் எழுதுகிறார்களே?

சாதி என்ற ஆயுதம் கொண்டு கொய்துவிடக் கூடிய வெற்றியாக குடியரசுத் தலைவர் பதவியை பார்ப்பதே பிழையான பார்வையாகும்!

ஒருவர் குடியரசுத் தலைவராவதற்கான முதல் தகுதி, நாட்டு நலன் தொடர்பான விவகாரங்களில் அவர் சார்பு நிலையத் தவிர்த்து, அனைவருக்குமான பொதுநலவாதியாக இருக்க வேண்டும் என்பதே! அந்த வகையில் திரெளபதி முர்மு தேற மாட்டார். அதுவும், பாஜக போன்ற ஒரு பாஸிச மதவெறியாளர்கள் ஆட்சியில் இருக்கும் போது, அவர்களுக்கு சிறிய அளவிலாவது ‘செக்’ வைக்கும் திரானியுள்ளவர் அப் பதவிக்கு வருவதே சரியாக இருக்கும். நீதி, நேர்மை, ஜனநாயகத்தில் உறுதியான பிடிமானம் ஆகிய தகுதிகள் முக்கியம். அந்த வகையில் அனுபவமும், அறிவும், துணிச்சலும் ஒருங்கே பெற்ற யஷ்வந்த் சின்ஹா தான் இன்றைய சரியான தேர்வு.

ஆர்.ரமேஷ், பெங்களூர்

அதிமுக ஆட்சியில் ஊழல்களுக்கு எல்லாம் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த படுமோசமான 12 ஊழல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மீது திமுக அரசு ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறது…?

ஊழல் செய்தால் அடுத்து வரும் ஆட்சியாளர்களால் தண்டிக்கப்படுவோம் என்று ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சுதாரித்துக் கொள்வார்கள்! ஆகவே, அவர்களோ, அவர்களைப் போன்றவர்களோ இன்றைய ஊழல் ஆட்சியாளர்களுக்கு ஒத்துழைக்க தயங்குவார்கள்! ஆகவே, அவர்களை தண்டிக்கச் சொல்லி தூண்டுவதன் மூலம் நீங்கள் இன்றைய ஊழல் ஆட்சியாளர்களின் கைகளை கட்டிப் போட நினைக்கிறீர்களே…அது எப்படி நடக்கும்?

எல். ஞானசேகரன், ஈரோடு

ரசாயன உரங்கள் கடத்தப்படுவது, பதுக்கப்படுவது, அவற்றின் அதீத விலையேற்றம் போன்றவை எதைக் குறிக்கின்றன?

உணவுப் பற்றாக்குறை எனும் பூச்சாண்டி காட்டித் தான் ரசாயண உரங்களைத் திணித்தார்கள்! இதனால், இந்தியா வெளிநாட்டில் இருந்து பல லட்சம் டன்கள் ரசாயண உரங்களை இறக்குமதி செய்வதற்கும், விவசாயத்தில் தனது சுயசார்பை இழந்து வெளி நாட்டு உர இறக்குமதி வாயிலாக மட்டுமே உணவு உற்பத்தி செய்வதற்குமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. தட்டுபாடும், விலையேற்றமும் இனி வெளிநாட்டு உரங்கள் இறக்குமதிக்கு வாய்ப்பு குறைவதை காட்டுகிறது.

தன்னையும், மண்ணையும் மட்டுமே நம்பி வாழ்ந்த இந்திய விவசாயிகளை அந்நிய நாட்டு உரத்தை நம்பி மட்டுமே ஜீவிக்கும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளிவிட்டது பசுமைப் புரட்சி! இதனால் மண் வளம் குன்றி இந்தியாவின் முன்றில் ஒரு பங்கு நிலங்கள் மலடானது தான் கண்ட பலன். வெளி நாட்டு உர இறக்குமதியை சிறிது, சிறிதாகக் குறைத்துக் கொண்டு பழையபடி இயற்கை விவசாயத்திற்கு நாம் திரும்பாவிடில், இருக்கும் மண் வளத்தையும் இழக்க நேரிடும். பிறகு உர இறக்குமதிக்கு பதிலாக உணவு இறக்குமதியை நம்பி வாழ வேண்டியதாகிவிடும்.

கோமதிநாயகம், கோவை

மகாராஷ்டிரத்தில் சிவசேனாவின் தற்போதைய பிளவில் சிவசேனாவின் பாஜகவின் பங்கு இருக்கிறதா?

சிவசேனாவின் பெருவாரியான எம்.எல்.ஏக்கள் தலைமையை எதிர்த்து வெளியேறியதற்கு பாஜகவின் பங்கு உறுதியானது என்பதில் சந்தெகம் இல்லை. ஆனால், அதே சமயம் பாஜக சிவசேனாவில் பிளவை உருவாக்க இடம் தந்தது உத்தவ் தாக்கரேயின் மகனை முன் நிறுத்திய குடும்ப அரசியல் என்பது மறுக்க முடியாத உண்மை. அதைத் தவிர்த்திருந்தால், இது சாத்தியப்பட்டு இருப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவே!

எஸ், கோபிநாத், ஆத்தூர், சேலம்

பொதுத் துறை நிறுவனங்களின் தந்தை வி.கிருஷ்ண மூர்த்தி மறைவு குறித்து உங்கள் கருத்து?

மன்னிக்கவும். பொதுத் துறை நிறுவனங்கள் பலப்பட வேண்டும் என்ற உறுதிப்பாட்டில் பேசியும், எழுதியும் வருபவன் என்றாலும், இறப்புக்கு பிறகே இவர் பெயர் எனக்கு தெரிய வந்தது.

மு. ரத்தினவேல், விருதாச்சலம்

குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என போராடிய சமூக ஆர்வலர் தீஸ்தா செதல்வாத், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.பி.குமார், சஞ்சீவ் பட் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளார்களே..? இதற்கு யார் காரணம்?

2004 முதல் 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் குஜராத் கலவரத்திற்கு காரணமானவர்களை சரியாக முனைப்புடன் விசாரித்து, தண்டனைக்கு உட்படுத்தாதே காரணமாகும். அதனால் தான் அவர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். அவர்களை ஆட்சியில் அமர்த்திய  மக்கள் அனைவருமே காரணம்!

குறிப்பு;

https://forms.gle/g3i6Bd5S4DD9FGWD8

கேள்வி கேட்க விரும்புபவர்கள், இந்த லின்கில் சொடுக்கி, உங்கள் கேள்வியை சுலபமாக பதிவு செய்யலாம்.

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time