பெண் இனத்தை பெருமைப்படுத்தும் நாவல்!

பீட்டர் துரைராஜ்

இந்த நாவலில் வரும் தன் நம்பிக்கையுள்ள அசாத்தியமான மனஉறுதி கொண்ட தன்மான பெண் பாத்திரமான காமாட்சி, வாசகர்கள் மனதில் என்றென்றும் வாழ்வாள்! சுதந்திரத்திற்கு முந்தைய தமிழகத்தின் சமூக வாழ்வியலையும், சரித்திர நிகழ்வுகளையும் ஒரு சேர தரிசிக்கத் தருகிறார் பாவை சந்திரன்.

ஒன்றுபட்ட தஞ்சாவூர் மாவட்டத்தின், கிழக்குப் பகுதியின், அறுபது ஆண்டு கால வரலாற்றை இந்த நூல் பேசுகிறது. நாகப்பட்டினத்தை மையமாகக் கொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விடுதலை வரை நடந்தவைகளை இந்த நாவல் சொல்லுகிறது.

காமுவிற்கு பெண் பார்ப்பதில் கதை தொடங்குகிறது. மனைவியை இழந்த, கைக் குழந்தையோடு இருக்கும் ஒருவனுக்கு இவளைத்  திருமணம் செய்து வைக்க வேண்டுமா என்று பெற்றோர்கள் யோசிக்கிறார்கள். ஆனால் துணிச்சலாக திருமணத்திற்கு சம்மதிக்கிறாள் காமு என்று அழைக்கப்படும் காமாட்சி. ஏறக்குறைய இவள்தான் கதையின் நாயகன். இதே துணிச்சலோடு கதையின் இறுதிவரை வருகிறாள். பெண்ணை முக்கிய பாத்திரமாக மையப்படுத்தியமைக்காக பாவை சந்திரனை பாராட்டலாம்.

இதில் வரும் காமாட்சி, மீனாம்பா, சீத்தாம்மா, கோகிலத்தம்மாள், லட்சுமி, அம்புஜம், அம்மாக்கண்ணு, சரசு, பாப்பா, சகுந்தலா, பார்வதி, காமாட்சியம்மாள், செல்லம்மா என எல்லா பெண் கதாபாத்திரங்களும் மிக இயல்பாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர்.

கதை நெடுங்கதை. அடுத்தது என்ன நடக்கும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் பல்வேறு சம்பவங்கள் கதையின் போக்கில் வருகின்றன. இச்சம்பவங்கள் கதையை இழுத்துச் செல்கின்றன. எதையும் புனைவு என்று சொல்ல முடியாது. ‘கதையில் வரும் வரலாற்று நிகழ்வுகளும், அவற்றின் சரித்திர நாயகர்களும் நிஜம்’ என்கிறார் பாவை சந்திரன். இக்கதை புதிய பார்வையில் தொடராக வந்தது.

மங்கலம், நாகப்பட்டினம், வெளிப்பாளையம், வேதாரண்யம், ரங்கூன், நாகூர் என பல இடங்களில் கதை நடக்கிறது. கதையில் கண்டியர், செட்டியார், ஐயர், பிள்ளை, முதலியார், மீனவர், ஆச்சாரி   என எல்லா சாதியினரும் வருகிறார்கள். இவர்களுக்கிடையே பூசல், திருவிழா, கொலை, தொடுப்பு, ஊரை விட்டு ஓடிப்போதல் என சகலமும் நடைபெறுகிறது. எந்த சம்பவமும் அதீதமாக இருக்கவில்லை. எதுவும் தேவையற்று இருக்கவில்லை. வேளாங்கண்ணி வேண்டுதலுக்கு பக்தர்கள் வருகிறார்கள். நாகூர் ஆண்டவருக்கு வேண்டிக் கொள்கிறார்கள்.

கிராமத்தில் வசதியான நமச்சிவாயம் ஒரு இரவில் தலைவேறு, முண்டம் வேறாக துண்டிக்கப்பட்டு கிடக்கிறான். தலை புதுச்சேரி எல்லையில் கிடக்கிறது; முண்டம் இங்கு கிடக்கிறது. உடலை நாகப்பட்டினம் போலீஸ் கைப்பற்றி விசாரிக்கிறது. தலையை திருமலைராயன்பட்டினம் பிரெஞ்சு போலீஸ் எடுத்துச் செல்கிறது. அக்கால பிரெஞ்சு – வெள்ளைக்கார அரசாங்கத்தின் போக்குகளை இக்கதை பேசுகிறது. துபாஷியை வைத்து, காவல் அதிகாரி விசாரிக்கிறார். கொலையுண்ட அன்று இரவு  காமுவின் கணவன் சுப்புணி கிராமத்தில் இருந்து காணாமல் போய்விடுகிறான். அவன் எங்கு போனான், என்ன ஆனான் என்பது கதையின் பெரும்பகுதி முடியும்வரையில் நமக்குத் தெரிவதில்லை. ஊரை விட்டு் ஓடிப்போனதால், கொலையின் துப்பு கிடைக்கும்வரை, காமு வீட்டாரோடு யாரும் ஒத்துழைக்க கூடாது என தண்டாரோ போடுகிறார்கள். இந்த நெருக்கடியை காமு எப்படி எதிர்கொள்கிறாள் ? ஏதோ ஒரு ஊரில் இருந்து வந்து பிழைப்பு நடத்தும் மாணிக்கம் பிள்ளை காமுவிற்கு ஆதரவாக இருக்கிறார். விவசாயம் செய்ய, பிள்ளைகள் வளர, உதவி செய்கிறார்.

ஊரில் பாஞ்சாங்கம் பார்க்கும் ஐயர், ஹிதகாரினி பத்திரிகையை, தன் மனைவி கேட்கும் வகையில் உரத்து வாசிக்கிறார். அதன் மூலமாக தென்னாப்பிரிக்காவில், நாட்டால் நகரத்திற்கு சென்ற தமிழர்கள் பட்ட இன்னல்களை நாம் தெரிந்து கொள்கிறோம். இவ்வாறாக சர்வதேச அரசியல், ஐயர் வழியாக அந்த ஊருக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.

கணக்குப்பிள்ளை காமுவிற்கு கொடுக்கும் தொல்லைகளை, பஞ்சாங்ககார ஐயர், வழக்கறிஞர் மூலமாக தடுக்கிறார். இப்படி கிராமத்தில் நுழையும் அரசாங்க இயந்திரத்தின் கைகளையும் காண்கிறோம்; அதை எதிர்கொள்ளும் மக்களையும் காண்கிறோம்.

அனைத்துப் பாத்திரங்களும் தேவையை ஒட்டி உருவாகிறார்கள்; இடம் பெயர்கிறார்கள். அவர்களைச் சுற்றி கதையும் இயல்பாகச் செல்கிறது.

காமுவின் தோழியான அம்புஜத்தின் கணவன் கதரை நூற்கிறான். கிராமத்து மக்களுக்கு கதரைத் தருவித்து, நூற்கச் செய்கிறான். அவனுடைய இறப்பிற்குப் பிறகு, காவல்துறையின் நெருக்கடிக்கு அஞ்சி, கிராமத்தை விட்டு் விலகி நாகப்பட்டினத்தில் கிளப்புக் கடை ஆரம்பிக்கிறாள். இரயில்வே பணிமனைத் தொழிலாளர்களை நம்பி உருவாகும் புதிய தொழில் அது.

நாகப்பட்டினம் ஒர்க்‌ஷாப்பில்தான், காமுவின் நாத்தனார் (சுப்புணியின் அக்கா) கணவன் காத்தமுத்து  பணிபுரிகிறான். காமு கணவனின்  மூத்த தாரத்திற்கு பிறந்த வேலுவை, அவர்கள் வீட்டில், வளர்கிறார்கள். காந்தி வருவதை வேடிக்கைப் பார்ப்பதை ஆசிரியர் கண்டிக்கிறார். நாகப்பட்டினம் சட்டைக்காரிகளை யாரோ ஒரு மாணவன் கிண்டல் செய்ய, வேலுவை தாணாக்காரன் பிடிக்கிறான். பவுண்டன் பேனாவைத் தொலைக்கிறான். பயந்து போய் கப்பல் ஏறி, ரங்கூன் செல்கிறான்.

வேலு வழியாக பர்மா வாழ்க்கை நமக்குத் தெரிய வருகிறது. நன்னிலம் அரிசியை ஏற்றுமதி செய்து, ஏன் பர்மா அரிசியை இறக்குமதி செய்ய  வேண்டும் என்ற கேள்வி, அரசியலாக மாறுகிறது. உலகத்தையே ஆட்சி செய்த வெள்ளைக்காரன், திடீரென்று ஜப்பான்காரனுக்கு பயந்துகொண்டு, பொதுமக்களைப் பற்றி கவலையே படாமல்  பர்மாவைவிட்டு் வெளியேறுகிறான். வெள்ளைக்காரனுக்கு படகு கிடைக்கும், விமானம் கிடைக்கும். அங்கிருந்த சாமானிய மக்களின் நிலமை ? ஆத்தங்குடி செட்டியாரைப் போன்றவர்கள் வீட்டை விட்டு, சொத்துக்களை விட்டு, கால்நடையாக வெளியேறுகிறார்கள். உயிரோடு வந்து சேர்வார்களா ? பா.சிங்காரத்தின் கடலுக்கு அப்பால், புயலிலே ஒரு தோணி  -நாவல்களுக்குப் பிறகு, பர்மா வாழ்க்கையை சித்தரிக்கும் தமிழ் நாவல் இது.

நாகப்பட்டினம் ஒர்க்‌ஷாப்பை மூடுவது என வெள்ளைக்காரன் முடிவெடுக்கிறான். இதனை எதிர்த்து வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. வெளிப்பாளையம் பக்கிரிசாமி பிள்ளை இரயில்வே தொழிற்சங்க தலைவராக உருவாகிறார். இந்தப் போராட்டத்தினூடே திரு.வி.க, ம.சிங்காரவேலர், பெரியார் போன்றோர் வருகின்றனர். 5000 பேர் வேலை இழக்கின்றனர். வேலை இழந்த தொழிலாளர்கள் தகரப்பெட்டி தொழிற்சாலை ஆரம்பிக்கின்றனர்.

காமுவின் தம்பி,  முத்துசாமி உப்பு சத்தியாகிரக தொண்டர்படையில் சேர்கிறான். திருச்சிராப்பள்ளியில் இருந்து 148 மைல் தூரத்தில் இருக்கும் வேதாரண்யம் வரை நடக்கும் யாத்திரையை முன்னின்று நடத்தும், வேதரத்தினத்தின் முன்னோடும் பிள்ளையாக இருக்கிறான். அதுவரை உப்புக் குறவனிடம் உப்பு வாங்கிய மக்கள்,  வெள்ளைக்காரனிடம் அதிகக் காசு கொடுத்து உப்பு வாங்க தயாராக இல்லை. போராட்டம் பரவுகிறது. இந்தப் பகுதியை வெகு அழகாக விவரித்துள்ளார் ஆசிரியர். தன் தம்பி முத்துசாமிக்கு, காமு தன் மகளைக் கட்டிக் கொடுக்கிறாள்.

இந்தக் கதை தீவிர அரசியலைப் பேசவில்லை. ஆனால் கதையின் போக்கில் அனைத்தும் வருகின்றன. எட்டுக்குடி முருகனுக்கு காவடி எடுக்கிறார்கள். சாம்பவசிவம் கொலை வழக்கில் சிக்கிய சாத்தூரானை, எட்டுக்குடி கும்பலில் (மனநிலை பிறழ்ந்தவனை) கழட்டி விடுகிறார்கள். பலசரக்கு வியாபாரம் செய்ய வந்த செட்டியாரான சாத்தூரான், கொஞ்சம் கொஞ்சமாக சொத்து சேர்ப்பதும், வியாபாரத்தில் நிலை கொள்ளுவதும்  தனிக்கதை. கிராமத்தில் தொடுப்பு ஏற்படுவதும், அதனை ஒட்டி போட்டி, பொறாமை, கொலை ஏற்படுகின்றன. இக்கதையில் ஆங்காங்கே வரும் வழக்கறிஞர்கள் சுயமரியாதைக்கார்களாகவோ, கதரைப் பிரச்சாரம் செய்பவர்களாகவோ இருக்கிறார்கள். அவர்கள் மூலம் அரசியல் கிராமத்தில் எட்டிப் பார்க்கிறது.

காமுவின் கணவன் என்ன ஆனான் ? மீண்டும் திரும்பி வந்தானா ? எங்கிருந்தான் ? இறுதியில் காமுவின்  பிள்ளைகளான  வேலுவிற்கு அல்லது சந்தானத்திற்கு  திருமணம் நடக்க வேண்டும். வேலு பட்டணத்தில் விடுதலை நாளின்போது, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் சிலையின் கரங்களில் மூவர்ணக்கொடியை திணித்த களேபரத்தில், அவனை ஆங்கிலோ இந்திய காவலர்கள் பிடித்துச் சென்று விடுகிறார்கள். திருமணம் நடக்குமா என்ற கேள்விக் குறியோடு கதை முடிகிறது.

இது தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நாவல். கோவை, கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் முதல் பரிசு பெற்ற நாவல். பத்திரிகையாளர் பாவை சந்திரன் தொடர்ந்து இது போன்ற படைப்பிலக்கியங்களை தர வேண்டும்.

நூல் விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.

நூலின் பெயர்; நல்ல நிலம்,

ஆசிரியர்; பாவை சந்திரன்

கண்மணி கிரியேட்டிவ் வேவ்ஸ்,

5 முத்து கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார்,

தியாகராயநகர், சென்னை -17, பக்கம் 838,

விலை ரூ. 600 . கைபேசி; 97910 71218

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time