இனி, உண்மையான சிவசேனா யார் என்பதே போராட்டம்!

-சாவித்திரி கண்ணன்

பாஜக எப்போதுமே உடனடி அரசியல் ஆதாயத்தை சிந்திக்காது. தொலை நோக்கில் தான் அடி எடுத்து வைக்கும். சிவசேனாவை பிளந்து ஏக்நாத் சிண்டேவை முதல்வர் ஆக்கிவிட்டாலும், உண்மையில் நிழல் முதல்வாராக இருக்க போகிறவர் பிராமணரான தேவேந்திர பட்னாவிஸ் தான்!

அதிருப்தியாளர்களுக்கே அரியணையை பரிசளித்தன் மூலம் மொத்தமுள்ள 55 எம்.எல்.ஏக்களில் தற்போது 40 பேர் ஏக்நாத் வசம் வந்துள்ள நிலையில், இது மேலும் கூட வாய்ப்புள்ளது.

” பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வாராவார்” என பரவலாக பேசி கொண்டாடப்பட்டு வந்த நிலையில், பாஜக விலகி நின்று ஏக்நாத்தை ஏகமனதாக முதல்வராக்கி, உத்தவ் தாக்கரேவுக்கு அதிரடி வைத்தியம் தந்துள்ளது. ஏற்கனவே வெறுத்து தன் எம்.எல்.சி பதவியைக் கூட ராஜீனாமா செய்து நொந்து போயுள்ள உத்தவ் தாக்கரே என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏக்களை தன் பக்கம் கொண்டு வந்து முதல்வாராகிவிட்ட ஏக்நாத் சிண்டேவும், அவரது ஆதரவாளர்களும் தாங்களே உண்மையான சிவசேனை என்கிறார்கள்! கட்சி சின்னத்தையும் கைப்பற்ற முயற்சிகள் நடக்கின்றன! அதற்கு தோதாகத் தான் பாஜக ஏக்நாத்திற்கு முடி சூட்டி உள்ளது.

சிவசேனாவின் வீழ்ச்சி குறித்து சற்று விரிவாகப் பார்ப்போம்.

மகாராஷ்டிரா அரசியல் திகுதிகுத்துக் கொண்டுள்ளது! சிவசேனாவை முடிந்த அளவு சிதைத்து சின்னாபின்னமாக்கிவிட்ட பாஜக, தற்போது அதிருப்தி எம்.எல்.ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவை முதலமைச்சர் ஆக்குவதன் மூலம் மிச்ச சொச்சமுள்ள சிவசேனாவையும் முழுங்க திட்டமிட்டுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ்சும், ஏக்நாத் சிண்டேவும்

சிவசேனாவும் பாஜகவும் சித்தாந்த ரீதியில் திக்கஸ்டான கூட்டாளிகள் தான்! 2019 சட்டமன்றத் தேர்தலில் ஒன்று சேர்ந்து தான் தேர்தலை சந்தித்தனர். அதிகார பகிர்வில் பாஜக ஆதிக்கம் செய்வதாகக் கருதிய சிவசேனா சந்தர்ப்பவாத கூட்டணி கண்டது. தங்கள் கொள்கைக்கு முற்றிலும் ஒத்து வராத காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி கண்டது! 106 எம்.எல்.ஏக்கள் கொண்ட பாஜகவிடம் சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகள் தங்களுக்கு முதல்வர் பதவி வேண்டும் எனக் கேட்டு கிடைக்காததால் பிரிந்து வந்து கூட்டணி ஆட்சி அமைத்த  சிவசேனாவின் உத்தவ் தாக்கரே – வெறும் 55 எம்.எல்.ஏக்களை வைத்துக் கொண்டு – ஐந்து ஆண்டுகளும் தானே முதல்வராக இருக்க ஆசைப்பட்டார்.

288 எம்.எல்.ஏக்களைக் கொண்ட சட்டமன்றத்தில் வெறும் 55 எம்.எல்.ஏக்களை பெற்றுள்ள சிவசேனாவை இத்தனை நாட்கள் பாஜக விட்டு வைத்ததே அதிசயம் தான்!

பால் தாக்கரேவைப் போல சுயம்புவாக உருவானவரல்ல உத்தவ் தாக்கரே! அப்பாவின் பலத்தால் கட்சித் தலைவரானவர். பெரிய வீட்டுப் பிள்ளையாகவே இருந்து விட்டவர். அடித்தட்டு மக்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முடியாதவர். கல்யாணம் செய்து கொண்டதும் ஒரு பிராமணப் பெண்மணியைத் தான்! அவரது மகனும் ஒரு ஷோக்கு பேர்வழி தான்! சமூகத்தின் மேல்தட்டு மக்களிடம் தான் சகவாசமே! இவருக்கு பிரிட்டிஷ் அரசியல் தெரிந்த அளவுக்கு பிறந்த மண்ணின் அரசியல் தெரியாது. ஆனால், தாத்தா பால்தாக்கரேவோ மண்ணுக்கான அடையாளத்தைப் பேசியே மாபெரும் தலைவரானவர்!

சிவசேனாவை பொறுத்த அளவில் உத்தவ் தாக்கரே தலைவர் என்றாலும் களத்தில் தளபதியாக நின்று சகல தரப்பிலும் பணியாற்றிவர் ஏக்நாத் தான்! இவர் மராட்டிய மண்ணின் மைந்தர். நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. ஆட்டோ டிரைவராக இருந்தவர் என்பதால் அடித்தள மக்களோடு கட்சியை பிணைக்கும் சங்கிலியாகவும் இருந்தார்.

உண்மையில் சிவசேனா காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்சுடன் கூட்டணி கண்டாலும் ஒட்ட முடியாத ஒரு உறவையே பேணி வந்தது. பல நேரங்களில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த இந்துத்துவ ஆதரவு சட்டங்களை, இஸ்லாமிய விரோத சட்டங்களை ஆதரித்தது. காஷ்மீரில் 370 விலக்கிக் கொள்ளப்பட்ட போது, அதை ஆதரித்தது. முஸ்லீம் பெண்களின் பர்தா விவகாரத்திலும் பாஜகவின் நிலையை ஆதரித்தது. குடியுரிமை திருத்த சட்ட மசோதாவைக் கூட பேரளவுக்கு எதிர்ப்பது போல எதிர்த்து பாவனை காட்டியது! இதை எல்லாம் காங்கிரஸ்சும், தேசியவாத காங்கிரஸ்சும் மிகுந்த சகிப்பு தன்மையுடன் அனுசரித்து தான் போனார்கள்!

நீண்ட நெடுங்காலமாக அப்பட்டமான இந்துத்துவ வெறி அரசியலில் புரண்டு எழுந்து வந்த சிவசேனையின் இரண்டாம் கட்டத் தலைவர்களும், தொண்டர்களும் மதச்சார்பற்ற கூட்டணிக்குள் தங்களை பொருத்திக் கொள்ள முடியாமல் பொறுமிக் கொண்டு இருந்ததும் உண்மை தான்! என்ன தான் ஆட்சித் தலைமை கிடைத்தாலும், அதிகார பலம் வாய்த்தாலும் தங்கள் அடையாளத்தை மறைத்துக் கொண்டு, ஒரு அரசியல் செய்வது அவர்களுக்கு ஒரு உறுத்தலாகவே இருந்தது. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் மெல்ல, மெல்ல சிவசேனாவை மதவாத பாதையில் இருந்து மீட்டுக் கொண்டு வரலாம் என நம்பியது பலிக்கவில்லை. காரணம், தங்கள் மதவாத அரசியல் அடையாளத்தை கைவிட்டால், அந்த இடத்தை பாஜக ஆக்கிரமித்துக் கொள்ளும் என சிவசேனா அஞ்சியது.

 

அதனால், எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் அது இந்துத்துவ அடையாளத்தை தூக்கிப் பிடித்தது. போதாக் குறைக்கு போட்டி அரசியல் செய்யும் ராஜ்தாக்கரேவையும் சமாளிக்க வேண்டுமே!

அதனால் தான் ஆட்சியை இழப்பதற்கு முன்பாக கடைசி அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய உத்தவ் தாக்கரே தன் ஆழ்மனதில் கொந்தளித்துக் கொண்டிருந்த விவகாரத்திற்கு வடிவம் தந்துவிட்டார்! மகாராஷ்டிராவில் மன்னர் மீஸ் உஸ்மான் அலி பெயரில் இருந்த உஸ்மானாபாத் நகரத்தின் பெயரை தாராஷிவ் என்றும் முகலாய பேரரசர் அவுரங்கசீப் பெயரில் இருந்த அவுரங்காபாத் என்ற நகரத்தின் பெயரை சம்பாஜிநகர் நகர் எனவும் மாற்றியதன் மூலம் நான் மாறவில்லை, இன்னும் இந்துத்துவா தான் என்ற செய்தியை அழுத்தம், திருத்தமாக சொல்லிவிட்டார்.

ஆனால், இந்த அறிவிப்பை காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் கொஞ்சமும் விரும்பவில்லை. ஏன், மும்பைவாசிகளில் மிகப் பெரும்பான்மையோர் விரும்பவில்லை. நீண்ட நெடுங்காலமாக மக்கள் மனதில் பதிந்த ஒரு ஊர் பெயரை ஆட்சியாளர்கள் மாற்றினாலும், புழக்கத்தில் இருந்து அதை அவ்வளவு சீக்கிரம் அழிக்க முடியாது. தேவை இல்லாமல் இஸ்லாமியர்களின் வெறுப்பை தான் சம்பாதிக்க வேண்டியதாகிவிட்டது.

கொரானாவிற்கு பிறகு உத்தவ் தாக்கரேவின் உடல்நலம் குன்றியது. அதனால், அவரால் நிர்வாகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை. கட்சியில் தனக்கு அடுத்த நிலையில் இருந்தவர்களின் மீது அவர் நம்பிக்கை வைத்து பொறுப்புகளை ஒப்படைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய போது, யாரும் எதிர்பாராதவிதமாக மகனை அரசியலுக்குள் இறக்கினார். தேர்தலில் நிற்க வைத்து எம்.எல்.ஏ ஆன கையோடு, கேபினெட் அமைச்சராகவும் ஆக்கினார். இதை கட்சியில் உள்ள பெரும்பாலான சீனியர்கள் விரும்பவில்லை.

ஆதித்திய தாக்கரேவை குறைந்தபட்சம் ஒரு பத்தாண்டு தீவிர அரசியலில் ஈடுபடுத்திய பிறகு முக்கியத்துவம் தரப்பட்டு இருக்குமானால், இவ்வளவு அதிருப்தி வந்து இருக்காது. ஆனால், எடுத்த எடுப்பிலேயே நாட்டாமை செய்வதற்கு ஒரு சின்ன பையன் வந்து நின்றால், அது எப்படிப்பட்ட விளைவை உருவாக்கும் என்பதை உத்தவ் தாக்கரே உணரத் தவறிவிட்டார். இது போன்ற பல அதிருப்திகளில் இருந்த சிவசேனா எம்.எல்.ஏக்களை வென்றெடுப்பது பாஜகவிற்கு மிகவும் எளிதாகிவிட்டது. உத்திர பிரதேசத்திற்கு அடுத்தபடியாக பிராமணர் ஆதிக்கம் அதிகம் உள்ள மாநிலம் மகாராஷ்டிரா! திசைமாறிய சிவசேனாவை அவர்கள் பால்தாக்கரே குடும்பத்திடம் இருந்து விடுவித்துவிட்டனர். இனி அதை பாஜகவிற்குள் ஐக்கியப்படுத்தும் செயல்பாடுகளை வலிக்காமல் செய்வார்கள்!

உத்தவ் தாக்கரேவிடம் தற்போது வெறும் 14 எம்.எல்.ஏக்களே எஞ்சியுள்ளனர்! அவர்களை தக்க வைத்துக் கொள்ளவே அவர் அரும்பாடுபட வேண்டும். அதற்காக, பொருந்தா கூட்டணியில் விருந்தாடச் சென்றதற்கு மன்னிப்பு கூட கேட்கலாம்! தீவிர இந்துத்துவா அடையாளத்தை மீட்க மீண்டும் புலி வேஷம் கட்டலாம், போராடலாம், என்ன தான் செய்தாலும் வாரிசு அரசியல் ஏற்படுத்திய வீழ்ச்சியில் இருந்து மீள்வது கடினம் தான்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time