காவல்துறை என்பது ஜனநாயகம் மறுக்கப்பட்டதாகவே கட்டமைக்கப்பட்டு உள்ளது! இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரம் இன்னும் இங்கு காவல்துறைக்கு வரவில்லை. நிலப் பிரபுத்துவ பண்ணைச் சமூக மனநிலையில் உழலும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆயிரக்கணக்கான காவலர்களை ஆர்டர்லியாக வீட்டு வேலைக்கு வைத்துள்ளனர்!
சுமார் 45,000 ரூபாய் அளவுக்கு சம்பளம் பெற்று வரும் காவலர்கள் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுள்ள தருணத்திலும் கூட மக்கள் பணி செய்ய முடியாமல் உயர் அதிகாரிகள் வீட்டில் தோட்டப் பணிகள், வீட்டு வேலைகள், காய்கறிகள், மளிகை சாமான்கள் வாங்குவது, குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிட்டு கூட்டி வருவது, நாய்களை பராமரிப்பது, சமையல் செய்வது, வீட்டம்மாவின் எடுபிடியாக இருப்பது… என பற்பல வேலைகளில் உழல்கின்றனர். இப்படி இவர்களை பயன்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு எந்த குற்றவுணர்ச்சியும் இல்லாதிருப்பது மட்டுமின்றி, அதை தங்கள் உரிமையாகவும் கருதும் மனநிலை உள்ளது தான் அதிர்ச்சியளிக்கிறது.
திருட்டு, கொலை,கொள்ளை, சாலையில் செல்லும் பெண்களின் தாலி அறுத்துச் செல்லும் கயவர்கள், பிக் பாக்கெட் திருடர்கள், பொருளாதார குற்றவாளிகள், குழுக்களுக்கு இடையிலான சண்டைகள், சாதி, மத மோதல்கள்,பாலியல் குற்றவாளிகள், குழந்தை கடத்தல்காரர்கள்.. இப்படியாக எண்ணற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வு காண்பதற்காகத் தான் இவர்கள் காவலர் பணியில் சேர்கிறார்கள்! சம்பளமும் அதற்குத் தான் தரப்படுகிறது. அதற்காகவே கம்பீரம் தரும் காக்கி உடை அணிகிறார்கள்! ஆனால், இப்படி பணியாற்றும் வாய்ப்பு இவர்களுக்கு உயர் அதிகாரிகளின் சுயநலத்தால் மறுக்கப்படுவது, இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் இழைக்கப்படும் அநீதியல்லவா?
சாதாரண மக்களின் எத்தனை பிரச்சினைகளை காவல்துறையால் காது கொடுத்து கேட்க முடிகிறது? எத்தனை பிரச்சினைகளில் நடவடிக்கை எடுக்க முடிகிறது? எத்தனை பிரச்சினைகளில் தீர்வை எட்ட முடிகிறது? ஒரு பக்கம் ஸ்டேசனில் மாடாக உழைக்கும் காவலர் உழைத்துக் கொண்டே இருப்பார். மறுபக்கம் உயர் அதிகாரிகள் வீட்டில் கொத்தடிமையாக இருந்து சம்பள உயர்வுகளும், சலுகைகளும் பெறும் காவலர்களூம் இருந்து கொண்டே இருக்கிறார்கள்! தங்கள் சொந்தத் துறையிலேயே நீதியை நிலை நாட்ட முடியாதவர்கள் மக்களுக்கு எப்படி நீதியைப் பெற்றுத் தரமுடியும்? ஆர்டர்களில் ஆண், பெண் வித்தியாசமில்லை!
ஆர்டர்லி முறையை எதிர்க்கும் கலகக் குரல்கள் காவல்துறையில் 75 ஆண்டுகளாக ஒலித்துக் கொண்டு தான் உள்ளது. நீதிமன்றங்களும் அவ்வப்போது இதை தட்டிக் கேட்டு வந்துள்ளன!
தற்போது கூட நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “காவல்துறையினர் எதற்காகப் பயிற்சி பெற்றிருக்கிறார்கள்? வீட்டு வேலை செய்வதற்கா? ஒரு வீட்டு உதவியாளரை நியமிப்பதற்காக மாதாந்த அலவன்ஸ் பெறும் போதிலும், உயரதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவது நியாயமா?” எனச் சுட்டிக்காட்டினார்.
அதாவது, மாதாந்திர அலவன்ஸை உயர் அதிகாரிகள் வாங்கிக் கொண்டு, அதற்கான வெளி பணியாளர்களை நியமிக்காமல் துஷ்பிரயோகம் செய்கின்றனர். ‘இவ்வாறு செய்தால் இன்ன தண்டனை’ என சட்டம் போடாத வரை இவர்களை திருத்தவே முடியாது என்று தான் தோன்றுகிறது!
இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு நீதிபதி கிருபாகரன் அவர்கள், இந்த ஆர்டர்லி முறையைக் கடுமையாகச் சாடினார். ”இந்த ஆர்டர்லி முறையாலும், உயர் அதிகாரிகளின் சர்வாதிகார போக்காலும் பல இளம் காவலர்கள் மனம் நொந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். காவல்துறையில் இந்த ஆர்டர்லி முறையில் இன்னும் எத்தனை பேர் இருக்கின்றனர்.,? அந்த லிஸ்டை தாருங்கள்” என கேட்டார்.
ஆனால், அப்போது டிஜிபியாக இருந்த டி.கே. ராஜேந்திரன் நீதிமன்றத்தில், ”ஆர்டர்லி முறை 1979 லேயே ஒழிக்கப்பட்டுவிட்டது…” என்றெல்லாம் சொல்லி சமாளித்தார். அவர் அப்படி சொல்லிய போது அவர் வீட்டில் 12 காவலர்கள் ஆர்டர்லியாக பணியாற்றி வந்தனர்.
டி.ஜி.பி.ராஜேந்திரனின் பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், ‘தமிழகத்தில் ஆர்டர்லி முறையே இல்லை. எந்த ஒரு போலீஸ் அதிகாரிகள் வீட்டிலும், ஆர்டர்லிகள் இல்லை என்று டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்வார் என்று எனக்கு நன்கு தெரியும்’. இந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்களை விட, அதிக விவரங்கள் எங்களிடம் உள்ளது. பல விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளது. உயர் போலீஸ் அதிகாரிகள், ஓய்வு பெற்ற உயர் போலீஸ் அதிகாரிகள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோருக்கு அரசு வாகனங்கள் எத்தனை பயன்படுத்தப்படுகிறது?, ஓய்வு பெற்ற அதிகாரிகள் வீட்டில் எத்தனை போலீசார் பணியாற்றுகின்றனர்?, ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வீடுகளில் ஆர்டர்லி போலீசார் பணியாற்றுகின்றனரா?, போலீசாருக்கு பணி நேரத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு ஏன் உத்தரவிடக்கூடாது?” என்று காட்டமாகக் கேட்டார்!
இப்படி பொய்யான தகவல்களை கோர்ட்டுக்கு தருவது குறித்த எந்த குற்றவுணர்வும் காவல்துறைக்கு இருப்பதாகத் தெரியவில்லை. தற்போதும் அதே போல ஏதோ 210 காவலர்கள் மட்டுமே ஆர்டர்லியாக இருந்தது போலவும், அவர்களை திரும்பவும் பொதுமக்கள் பணிக்கு அழைத்துக் கொண்டது போலவும் நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளனர்.
பிரிட்டிஷார் காலம் தொடங்கி இன்று வரை தமிழகத்தில் ஆர்டர்லி முறை உள்ளது. ஆனால் ஆர்டர்லி என்ற வார்த்தைக்கு பதில், அதர் டூட்டி(ஓடி) அல்லது ஆன் டூட்டி என்று பணி பதிவேட்டில் போட்டுவிடுகின்றனர். பணியில் உள்ளவர்களில், இன்ஸ்பெக்டருக்கு, ஏசிக்கு,டிசிக்கு, டிஎஸ்பிக்கு, ஐ.ஜிக்கு என பல பேர் ஆர்டர்லியாக உள்ளனர். ஏன், ஓய்வுபெற்ற காவல் அதிகாரி வீட்டில் கூட ஆர்டர்லிகள் கணிசமாக உள்ளனர். திலகவதி, நட்ராஜ், ஜார்ஜ்… போன்ற ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரிகள் வீட்டில் இன்னும் கூட தலா நான்கைந்து ஆர்டர்லிகள் உள்ளனர். ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர், தாங்கள் வாங்கி குவித்துள்ள பண்ணை பங்களாக்களின் பாதுகாப்பு பணிக்கும், ஓய்வுக்கு பிறகு தாங்கள் ஆரம்பித்து செய்யும் வியாபாரத்திற்கும் ஆர்டர்லிகளைத்தான் கூச்சமின்றி பயன்படுத்துகின்றனர்.
இன்று தமிழக காவல்துறையில் 20 சதவீதம் ஆள் பற்றாக்குறை உள்ளது. அதாவது சுமார் 25,000 பணியிடங்கள் பற்றாகுறையாக உள்ளது. அதே சமயம் சுமார் 8 முதல் 10 சதவிகிதம் போலீசார் உயர் அதிகாரிகள் வீட்டில் ஆர்டர்லியாக பணியாற்றக் கூடிய துர்பாக்கிய நிலையை ஒழிக்க முடியவில்லை.
போலீஸ் அதிகாரிகள் வீட்டில் பணியாற்ற உதவியாளர்களை நியமிப்பது கொள்வது தொடர்பாக தமிழக உள்துறை கடந்த 2012-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த ஆணையை பல உயர் அதிகாரிகள் மதிப்பதில்லை. மேலும், கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், 8 ஆயிரத்து சொச்சம் போலீசார், மன உளைச்சலில் வேலையை உதறிச் சென்றுள்ளனர். இதே காலக்கட்டத்தில் 520 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 296 பேர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துள்ளனர். இந்த 10 ஆண்டுகளில் பணியில் இருக்கும்போது, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இந்த நிலைகள் குறித்த ஒரு சுய பரிசீலனைக்கு தமிழக காவல்துறை தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும்.
Also read
காவலர்களுக்கு வேலை நேரம் குறித்த வரையரை இல்லை. வாரத்திற்கு ஒரு நாள் ஓய்வு என்பது கூட அவர்களுக்கு இல்லை. அவர்களை மனித உயிர்களாகக் கூட நாம் கருதுவதில்லை. ஆனால், அவர்களின் சேவை நமக்குத் தேவை! இது தான் சமூகத்தின் மனநிலை! மக்களில் ஒரு பிரிவினர் தானே அவர்களும்! அவர்களுக்கான நீதியில் தான் பொதுச் சமூகத்தின் நலனும் அடங்கி உள்ளது. தேவையான ஓய்வும், சுதந்திரமும் காவலர்களுக்கு தரப்பட்டால் தான் அவர்களது சேவையின் தரம் உயரும். காவல்துறையை ஜனநாயகப்படுத்தாமல் மனித உரிமைகள் பற்றிப் பேசுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
தேவையான கட்டுரை
காவல் துறையை என்றைக்கு ஆளும் அரசாங்கம் ஏவல் துறையாக நினைக்காமல் மக்களை பாதுகாக்கும் துறை, அதில் அரசின் தலையீடு இருக்க கூடாது என செயல்படும் நான் என்னாலோ அந்நாள் காவல் துறைகயில் மற்றாங்கள் தானக நடைபெறும்.