அன்றாடங் காய்ச்சியும் 60 வயதில் பென்ஷன் வாங்கலாம்!

செழியன் ஜானகிராமன்

விவசாயக் கூலி, தள்ளுவண்டிக்காரர், தினக் கூலிகள், ஆட்டோ தொழிலாளி, வீட்டு வேலை செய்யும் பெண்கள் இவர்களைப் போன்ற ஏழை, எளியவர்கள் எல்லாம் 60 வயதானதும் பென்ஷன் வாங்குவதற்கு அரசு ஒரு எளிய திட்டம் வைத்துள்ளது! அதை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், நிரந்தரமில்லாத வேலை செய்து கொண்டு இருக்கும் ஏழை, எளியவர்கள், தினக் கூலியாளர்கள்  எந்த நேரமும் பொருளாதாரச் சிக்கலில் இருப்பார்கள். வருமானம் பற்றாக்குறையாகவே  இருக்கும்.

60 வயதுக்கு பிறகு பொருளாதார ரீதியாக எப்படி வாழப் போகிறோம் என்று யோசித்தே பார்க்க  மாட்டார்கள்! அப்படிப் பார்க்கும் மனநிலையும் பொதுவாக இவர்களுக்கு இருக்காது.  ஆனால் இவர்களும் 60 வயது மேல் வாழப் போகிறார்கள்.  இன்று போல் என்றும்  பணம் மிக மிக அவசியம்.

வயதானால் உடல் தளர்வடையும்! இன்று சம்பாதிக்கும் சிறு பணம் கூட அன்று சம்பாதிக்க முடியாத நிலை ஏற்படலாம் என்பதால், இத்தகைய விளிம்பு நிலை மனிதர்களுக்காகவே உருவாக்கப்பட்டது அடல் பென்சன் யோஜனா (APY) திட்டமாகும். இது ஒரு மத்திய அரசுத் திட்டம்.

பணம் தொடர்பாக யாரையும்  எதிர்பார்க்காமல் கடைசி வரை வாழ்வது என்பது சவாலான காரியம். குறைந்தபட்ச பணமாவது மாதாமாதம் வந்தால்  ஒருவரின்  அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். அந்த வருமானத்தை அடல் பென்ஷன் யோஜனா தருகிறது. அப்படித்தான் திட்டத்தை உருவாக்கி உள்ளனர்.

நிலையான மாத பென்சன் கிடைக்கும்  1000, 2000, 3000, 4000, 5000 மொத்தம் இந்த ஐந்து  வகையான பென்சன் தொகைதான் இந்த திட்டத்தில் உண்டு.  அதற்கு மேல் இல்லை. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்திய குடிமகன் அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம் இருந்தாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை இந்த திட்டத்தில் சேர வைப்பதே இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்..

சிறுவர்களுக்கு பெற்றோர் காப்பாளராகக் கொண்டு கணக்கு தொடங்க முடியாது. அவர்கள் 18 வயதுக்கு பிறகு தொடங்க முடியும்.

வங்கி அல்லது தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு இருந்தால் போதும் கணக்கு தொடங்கிவிடலாம். மற்றும் மொபைல் எண் கொடுக்க வேண்டும். ஆதார் கார்ட் விருப்பப்பட்டால் கொடுக்கலாம் ஆனால் கட்டாயம் இல்லை.

கணக்கு தொடங்கும் நபர்கள் சிறு தொகையை 60 வயது வரை கட்டி வர வேண்டும். உதாரணமாக 18 வயது நபர் மாதம் 1,000 ரூபாய் பென்சன் வேண்டும் என்று முடிவு செய்து இந்த திட்டத்தில் சேர்ந்தால் அவர் ஒவ்வொரு மாதம் 42 ரூபாய் கட்டினால் போதும். ஒரு வருடம்  504 ரூபாய்தான் கட்டுவார்.

நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் விவசாயக் கூலிகள் இதில் சேரலாம். ரிக்‌ஷா ஓட்டிகள், ஆட்டோ ஓட்டுனர்கள், துப்புரவு பணியாளர்கள் .. என யாரும் எளிதில் சேரலாம். இவ்வளவு குறைவான பணத்தை கட்ட முடியாத நிலையில் யாரும் இருக்கமாட்டார்கள்! பெண்கள் இதை கட்டி வந்தால் வயதான காலத்தில் கணவனையோ, மகனையோ நம்ப வேண்டியதில்லை.

25 வயது நபர் 1000 ரூபாய் பென்சன் திட்டத்தில் சேர்ந்தால் மாதம் 76 ரூபாய் கட்ட வேண்டும். 40 வயது நபருக்கு மாதம் 291 ரூபாய் கட்டி வர வேண்டும். 40 வயது நபர் அடுத்து 20 வருடங்கள் மட்டுமே கட்டுவார் ஆனால் 18 வயது நபர் 42 வருடம் கட்டுவதால் அவருக்கு மிகச் சிறிய தொகை 42 ரூபாய் ஆகும்.

2000 ரூபாய் முதல் 5000 ரூபாய் பென்சன் தொகை வேண்டும் என்பவர்களுக்கு  மாதம் செலுத்தும் தொகை இதில் சிறிது உயரும். ஆனால் அனைத்து பிரிவு மக்களும் பணம் கட்ட முடியும் என்ற வகையிலேயே இந்த திட்டத்தை உருவாக்கி உள்ளனர். அதனால் ஓய்வுக் காலத்தில்  அடிப்படைத் தேவைகளுக்கு கூட பணம் இல்லாமல் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் பயன் தரும் திட்டம் ஆகும்.

இந்த திட்டத்தில் சேர்ந்து  மாதாமாதம்  அல்லது 3 மாதம் ஒரு முறை, அல்லது 6 மாதம் ஒருமுறை என்று பணம் செலுத்தலாம்  3 மாதம் ஒரு முறை என்றால் 3 மாத தொகையைச் சேர்த்துக் கட்ட வேண்டும்.  அதேபோல்தான் 6 மாதம் ஆகும்.

பொதுவாக வருமானம் குறைவான மனிதர்களுக்காக இந்த திட்டம் உருவாக்கி இருந்தாலும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள யார் வேண்டுமென்றாலும் சேரலாம். வெளி நாட்டில் வேலை செய்பவர்கள் கூட சேரலாம். ஆனால் ஒருவருக்கு ஒரு APY கணக்கு மட்டுமே தொடங்க முடியும். NPS பென்சன் கணக்கில் சேர்ந்து உள்ளவர்கள் கூட APYயில் சேரலாம்.

அடல் பென்சன்  கணக்கில் நாமினியை  நிச்சயம் இணைக்க வேண்டும். கணவன் கணக்கு தொடங்கினால் மனைவியும், மனைவி கணக்கு தொடங்கினால் கணவனும் நாமினி என்று எடுத்துக் கொள்வார்கள். வேறு நபர்களை நாமினியாக கொடுக்க முடியாது. ஆனால் திருமணமாகாத நபர்கள் கணக்கு தொடங்கினால் யாரை வேண்டுமானாலும் நாமினியாக சேர்க்கலாம்.

தொடக்கத்தில் மாதம் 1000 ரூபாய் பென்சன் திட்டத்தில் சேர்ந்து சில மாதங்கள் அல்லது வருடங்கள் பிறகு  2000, 3000, 4000, 5000 ரூபாய் பென்சன் திட்டத்தில் சேர விருப்பம் இருந்தால் சேர்ந்து கொள்ள முடியும். அதற்கான தொகையைச் சேர்த்துக் கட்ட வேண்டும்.

அதே போல் தொடக்கத்தில் 5000 திட்டத்தில் சேர்ந்து பிறகு அதைக் குறைத்து 4000, 3000  2000, 1000 ரூபாய் மாதம் பென்சன் திட்டத்தில் கூட மாற்றிக் கொள்ளலாம். அப்படி பென்சன் தொகையைக் குறைத்தால் ஏற்கனவே அதிகமாகக் கட்டியிருந்த தொகையை உங்கள் வங்கி அல்லது தபால் நிலைய சேமிப்பு கணக்கில் செலுத்தி விடுவார்கள்.

இப்படி 1000லிருந்து 5000 ரூபாய்  திட்டம் அல்லது  5000லிருந்து  1000 ரூபாய்  திட்டங்களுக்கு மாற வேண்டுமென்றால் நிதி ஆண்டு தொடக்கமான ஏப்ரல் மாதம் மாற்றிக் கொள்ள வேண்டும். இடையில் மாற்ற முடியாது.

அடல் பென்சன் திட்டத்தில் மாதம் உங்கள் வங்கி அல்லது தபால் சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தி விட வேண்டும் அதிலிருந்துதான்  எடுத்துக் கொள்வார்கள்.(Auto Debit). அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்  auto debit வழியாகத்தான் பணம் எடுப்பார்கள்.

அடல் பென்சன் திட்டத்தில் சேர்ப்பவர்களுக்கு PRAN கார்டு கொடுப்பார்கள்.  PRAN கார்டு என்பது உங்கள் பென்சன் எண் அச்சடிக்கப்பட்ட கார்டு ஆகும். பார்ப்பதற்கு PAN கார்டு போன்று இருக்கும்.

கணக்கு தொடங்கிய  பிறகு தொடர்ந்து 6 மாதம் பணம் செலுத்தவில்லை என்றால், கணக்கை தற்காலிகமாக நிறுத்தி வைப்பார்கள்(Frozen). 12மாதம் செலுத்தவில்லையென்றால் கணக்கை மூடி விடுவார்கள்.

18 வயது முதல் 40 வயது வரை உள்ள யார் கணக்கைத் தொடங்கி இருந்தாலும், 60 வயதில் தான் முதிர்வு அடையும். அதன் பிறகுதான் பென்சன் தரத் தொடங்குவார்கள். 60 வயது பிறகு கணக்கு தொடங்கிய வங்கி அல்லது தபால் நிலையத்திற்குச் சென்று அதற்கான படிவம் எழுதி கொடுத்தால் பென்சன் கொடுக்க தொடங்குவார்கள்.

பென்சன் வாங்கும் நபர் இறந்தால் அவர் துணைக்கு பென்சன் கொடுப்பார்கள். அவரும் இறந்தபிறகு அவர் யாரை நாமினியாக நியமித்து உள்ளாரோ அவருக்கு முழு தொகையும் கொடுத்து விடுவார்கள்.

60 வயதுக்குள் கணக்கு தொடங்கிய நபர்  இறந்து விட்டால் அவர் துணைவிக்கு அடல் பென்சன் கணக்கில் இறந்தவர்  கட்டிய தொகை மற்றும்  அதற்கு அரசு வழங்கிய வட்டி சேர்த்து முழுவதும் கொடுத்துவிடுவார்கள்.

அப்படி துணைவி அந்த முழு தொகை வாங்காமல் மீதி வருடங்கள் அதாவது அவர் கணவர் கட்ட வேண்டிய மாத தவணையைக் கட்டி 60 வயது பிறகு மாதம் மாதம் பென்சன் வாங்கலாம். இங்கு 60 வயது என்பது அவர் கணவர் வயது ஆகும்.

முழு பணம் வாங்குவதும் அல்லது மீதி வருடங்கள் கட்டி பென்சன் வாங்குவதும் அதை நாமினி தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம். அந்த வாய்ப்பும் இந்த திட்டத்தில் உண்டு.

NPS திட்டத்தைப் போன்றே அடல் பென்சன் திட்டத்தையும் நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் PFRDA (Pension Fund Regulatory & Development Authority) அமைப்பு தான் இதில் சேரும் தொகையும்  நிர்வகிக்கிறது.

கணக்கை இடையில் மூட முடியுமா?

60 வயது முடிந்து தான் பணம் கிடைக்குமா? அல்லது இடையில் கொஞ்சம் பணம் எடுக்க முடியுமா அல்லது . 60 வயதுக்குள் கணக்கை மூடி பணம் முழுவதும் எடுக்க முடியுமா என்று பலருக்குக் கேள்வியாக இருக்கலாம்

60 வயது முன்பு அடல் பென்சன் கணக்கைத் தேவையென்றால் மூடலாம். அதற்கு இரண்டு வகை உண்டு.

தீவிரமான நோய் ஏற்பட்டால்  அதற்காகக் கணக்கை மூடலாம். அப்படி மூடினால்  அதுவரை கணக்கில் நாம் செலுத்திய தொகை, அதற்கான அரசு கொடுத்த வட்டி  சேர்த்துக் கொடுத்துவிடுவார்கள்.

நோய் ஏதும் இல்லாமல் கணக்கு மூட வேண்டுமென்றால் அதுவரை நீங்கள் செலுத்திய தொகை அதற்கு அரசு கொடுத்து உள்ள வட்டி சேர்த்துக் கொடுப்பார்கள் ஆனால் அதுவரை கணக்கைப் பராமரிப்பதற்கு அபராத தொகை பிடித்து மீதி தொகை கொடுப்பார்கள்.

செலுத்தும் தொகையில் இடையில் பாதி தொகை அல்லது நமக்குத் தேவையான தொகையை எடுக்க முடியாது கணக்கு மூடி முழு தொகையும் தான் கொடுப்பார்கள்.

NPS மற்றும் APY என்ன வித்தியாசம்

அரசு நடத்தும் NPS (national Pension System) திட்டமும் மாதாமாதம் பென்சன் கொடுக்கும். அப்படி  திட்டம் இருக்கும் பொழுது எதற்கு அடல் பென்சன் திட்டம்(APY) நடத்த வேண்டும்?

NPSல் அதிகம் பணம் செலுத்தி அதிகம்  பென்சன் வாங்கலாம். ஆனால், அடல் பென்ஷன் திட்டத்தில் 1000 முதல் 5,000 வரை தான் பென்ஷன் வாங்க முடியும். காரணம் ஏழை,எளிய மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது அடல் பென்சன் திட்டம் ஆகும்.

NPSல் நாம் செலுத்தும் பணம் பங்குச் சந்தை திட்டங்களில் முதலீடு செய்வார்கள் அதனால் உறுதியாக இவ்வளவு பென்சன் கிடைக்கும் என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் அடல் திட்டத்தில் நாம் செலுத்தும் தொகைக்கு வட்டி கொடுத்து எவ்வளவு பென்சன் கிடைக்கும் என்று தொடக்கத்திலேயே உறுதியாகச் சொல்வார்கள்.

ஏற்றத்தாழ்வு இல்லாமல் ஓய்வு காலத்தில் அனைவரும் பென்சன் வாங்க வேண்டும் என்று NPS -APY இரண்டு திட்டம் உருவாக்கி உள்ளனர்  அவர் அவர் பொருளாதார நிலைக்கு ஏற்ப இந்த திட்டங்களில் சேர்ந்து கொள்ளலாம். அனைவரும் ஓய்வை யாரையும் எதிர்பார்க்காமல் நிம்மதியாகக் கழிக்கலாம்.

கட்டுரையாளர்; செழியன் ஜானகிராமன்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time