பயங்கரவாதத்தை வளர்ப்பதில் அரசின் பங்கு என்ன?

-பீட்டர் துரைராஜ்

‘ANEK’ வட கிழக்கு மாநில பிரச்சினைகளை கலை வடிவத்தில் பேசுகிறது! இதில் புறக்கணிக்கப்பட்ட அந்த மக்கள் இந்தியாவில் இருந்து அன்னியப்பட்டு வாழ்வதையும், அங்கு தீவீரவாதம் துளிர்ப்பதையும், அதில் அதிகார வர்க்கம் குளிர் காய்வதையும்  சமூக அரசியலுடன் சொல்லி உள்ளார் இயக்குனர் அனுபவ் சின்ஹா!

“ஆர்ட்டிகள்-15”, “தப்பட்”, “முல்க்” போன்ற  படங்களால், சமூக அரசியல் குறித்த விவாதங்களை ஏற்படுத்திய இயக்குனர் அனுபவ் சின்ஹா. இந்தி நடிகர் ஆயுஷ்மான் குரானா, நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர். அனுபவ் சின்ஹாவும், ஆயுஸ்மானும் ஏற்கனவே ஆர்டிகள்-15 படத்தில் இணைந்து அசத்தி இருந்தனர். தற்போது மீண்டும் இணைந்து கலக்கி உள்ளனர்.  வடகிழக்கு மாநிலங்கள் பற்றிய திரைப்படமான அனேக் – இல் (ANEK), ஆயுஷ்மான் குரானா உளவுத்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இது நெட்பிளிக்சில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அனேக் என்ற இந்தி வார்த்தைக்கு அனேகம் என்பது பொருள். இந்தியாவின் அடையாளமான,  ‘பன்மைத்துவத்தை’ குறிக்கும் வகையில் பெயரிடப்பட்டுள்ளது. அதே சமயம் AK க்கு இடையில்  (துப்பாக்கிகள்) , NE (வடகிழக்கு) இருப்பதால் ANEK என்றும் பொருள் கொள்ளலாம்.  உளவுத்துறை அலுவலர், பேச்சுவார்த்தை நடத்தும் குடிமைப்பணி அதிகாரி,  குத்துச்சண்டை வீராங்கனை, போராளியாகும் சிறுவன் எனப் பலரை மையப்படுத்தி இந்தப்படம் உள்ளது. இதில் கதை தான் நாயகன்.

நேரு காலத்தில் இருந்தே, வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சினைகள் உள்ளன. அங்கு பல்வேறு போராளிக் குழுக்கள் உள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் மாநிலங்களான மணிப்பூர், மேகாலயா, மிசோராம், நாகாலாந்து, திரிபுரா போன்ற மாநிலங்களில் வாழ்பவர்கள் தங்களை இந்தியர்களாக கருதுவதில்லை. யாரும் இது வரை பேசாத கதையை,  பிரச்சினையை எடுத்ததற்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம். சிக்கலான பிரச்சினைகள் நிறைந்த இந்தப் படத்தை, பொறுப்புணர்வோடு எடுத்துள்ளனர். கடின உழைப்பும், அர்த்தமுள்ள ‘நச்’ வசனங்களும் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.

ஆயுஸ்மான் குரானாவும், அனுபவ் சின்ஹாவும்

நீண்டகாலமாக போராடிக்கொண்டிருக்கும் போராளிக் குழுத் தலைவரான டைகர் சங்கா, பிரபல தொலைக்காட்சி  நிறுவனத்தின் செய்தியாளருக்கு பேட்டியளிப்பதில் கதை தொடங்குகிறது. ஆழமான கேள்விகளை எளிமையாக செய்தியாளர் கேட்கிறார். டைகர் சங்கா பதில் அளிப்பதில் அவரது தலைமைப் பண்பும், முதிர்ச்சியும் தென்படுகின்றன. வசனம் எழுதி, இயக்கி, தயாரித்துமுள்ள அனுபவ் சின்கா பாராட்டுக்கு உரியவர். இது முழுமையான அரசியல் படம். அரசியலில் ஒற்றையான வாதங்களை, ஒரு தரப்பாக வைக்க முடியாது. அதே நேரம் பாதிக்கப்பட்டவர்கள் குரலை பதிவு செய்யாமலும்  இருக்க முடியாது. இந்தச் சவாலை சிறப்பாக எதிர் கொண்டுள்ளார் இயக்குநர். ஒரு கலைஞனுக்குரிய உரிமைகளை, நேர்த்தியாக அனுபவ் சின்ஹா பயன்படுத்தி இருக்கிறார். படத்தை பார்த்தவுடன் ரசிகர்கள் மேலும் விபரங்களைத் தெரிந்துக் கொள்ளக் கூடும்; விவாதிக்கக் கூடும்.

டைகர் சங்காவோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்திய அரசு விரும்புகிறது. இதற்கு அரசாங்கத்தின் சார்பில் பேச அப்ரார் பட் – என்ற குடிமைப்பணி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.(ஏன் காஷ்மீரைச் சார்ந்த ஒருவரை இதற்கு நியமிக்க வேண்டும்? ) மூத்த அதிகாரிக்குள்ள நடிப்பை பக்குவமாக வெளிப்படுத்தியுள்ளார், இந்தப் பாத்திரத்தில் நடிக்கும் மனோஜ் பாவா. டைகர் சங்மாவோடு நடக்கும் அமைதிப் பேரணியில் ஒன்றிய அமைச்சரும் கலந்து கொள்வார். அதில் அனைத்துப் போராளிக் குழுக்களின் பிரதிநிதிகளும் இடம்பெற வேண்டும் என்பது அவரது முனைப்பு.

அமன் என்ற உளவுத்துறை அதிகாரி , ஜோசுவா என்ற பெயரில் அங்கு  வாழ்கிறார். டைகர் சங்மாவை பேச்சுவார்த்தையில் ஈடுபட வைக்க நிர்ப்பந்திக்கும் வகையில், அவருக்கு எதிரான போராளிக் குழுவிற்கு ஆதரவு தருகிறார். அவருக்கு ஆயுதங்களைத் தருகிறார். (ஆயுதங்களை உளவுத்துறை விநியோகிப்பதன் மூலம், போராளிக் குழுக்களுக்குள் ஊடுருவ முடியும்). இந்தப் பாத்திரத்தில் நடித்துள்ள ஆயுஷ்மான் குரானா படம்  முழுவதும் வரவில்லை. ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள், அறம் சார்ந்தவை.

ஒரு அதிகாரி தனது மேல் அதிகாரியிடம் விசுவாசமாக இருப்பதை விட,  மக்கள் நலனுக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும் விசுவாசமாக இருப்பது அவசியம் இல்லையா?  இந்திய அரசுக்கு, சகலரையும் உள்ளடக்கி, உண்மையான அமைதியைக் கொண்டு வருவது தானே முக்கியம்? என்று உளவுத்துறை அதிகாரியான அமன் கேள்வி கேட்கிறான்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை வாக்களிப்பதுடன் மக்களின்  கடமை முடிந்து விடுகிறது என்று சொல்லும் உயர் அதிகாரி அப்ராருக்கு, தனது தில்லி எஜமானை திருப்தி செய்தால் போதும். மக்கள் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்.அமைதி திருமப் வேண்டும் என்பதில் அக்கறை இல்லை.

காஷ்மீரில் 370 வது ஷரத்து இருந்தது போல, வடகிழக்குப் பகுதிகளுக்கு 371 ஷரத்து உள்ளது. இந்தியாவில் பல்வேறு தேசிய இனங்கள் உள்ளன. தென்படும் சிக்கல்களும் விநோதமானமானவை. இதை இந்திய அதிகார வர்க்கம் உணர முற்படுகிறதா? என்பதற்கு இந்தப் படம் பதில் சொல்கிறது!  இந்தப் படத்தில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருந்து நடிகர்கள் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.

தன்னைச் சகோதரனைப் போல நேசிக்கும் ஒருவன், தன் கண் முன்னே இறந்தால், அவனோடு  இருக்கும் இளம் பையன் போராளியாக மாட்டானா?  அவனைப் பெற்ற தாயின் நிலமை என்ன ஆகும்? மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்போடு் ஒப்பந்தம் ஏற்பட்டு பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட வேண்டுமா அல்லது தங்களுக்கு வேண்டப்பட்ட தவறான தலைவரோடு ஒப்பந்தம் ஏற்பட வேண்டுமா ? அமைதி நிலவ வேண்டும் என்று அரசின் அமைப்புகள் உண்மையாகவே விரும்புகின்றனவா ..?இல்லையா என்பதற்கும் பதில் கிடைக்கிறது.

இந்தப் பிரதேசத்தில் அனைவருக்கும் வேலை இல்லை. உயர்க்கல்வி கிடைக்கவில்லை. ஆனாலும் உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி பொருள் ஈட்டி மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லும் மக்கள்  போராளியான ஜான்சன் அமைதி ஒப்பந்தத்தை எதிர்க்கிறார். போதைப் பழக்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி செய்கிறார். தன் மகள், குத்துச் சண்டை போட்டியில் கலந்து கொண்டு இந்தியா சார்பாக விளையாடி விருது வாங்குவதை பெருமையாக அந்தத்  தந்தை நினைக்கவில்லை ! தந்தையின் போராட்டங்கள் மகளுக்குத் தெரியாது. இப்படி எண்ணற்ற சந்தேகங்கள், பதில் சொல்ல முடியாத கேள்விகள் எழுகின்றன.

குத்துச் சண்டை விளையாட்டு வீராங்கணையாக வரும் ஆதி, -ஜோசுவா -வை காதலிக்கிறாள். அவனுடைய உண்மையான பெயரோ, வேலையோ அவளுக்குத் தெரியாது. போராளிக் குழுக்களை வேவு பார்ப்பதற்காகவே, அங்கு வசிக்கும் ஜோசுவா, யாரென்று அவளது அப்பாவிற்குத் தெரியும்.

இயற்கை வளம் நிறைந்த ஒரு பகுதியில் நிம்மதியாக வாழ அனுமதிக்கபடாத மக்கள், அவர்களை அடக்கி ஆளத் துடிக்கும் அதிகார வர்க்கம், அங்கே அதை எதிர்த்து உருவாகும் போராளிக் குழுக்கள், அந்த போராளிக் குழுக்களிடம் பேச்சுவார்த்தை என்ற பெயரில் அதிகாரவர்க்கம் செய்யும் பசப்பல்கள், தவறான போராளி குழுவை அங்கீரித்து, மக்களுக்கான உண்மையான போராளிக் குழு தலைவனை குற்றவாளியாக சித்தரித்து கொல்ல முயற்சிக்கும் அதிகார வர்க்க அணுகுமுறைகள், மக்கள் பிரச்சினை கடைசி வரை தீர்க்கப்படாமல் ஒருபுறம் அரச பயங்கர வாதமும், மறுபுறம் போராளிகளின் பயங்கரவாதமும் ஆக சின்னாபின்னப்படும் கிராமம்…என யதார்த்தத்தில் நடந்து கொண்டிருப்பதை தோலுரித்து காட்டி உள்ளது இந்தப் படம்!

இப்படி பன்முனைகளில் கதை பாவுகிறது. இது பார்க்க வேண்டிய படம். அனுபவ் சின்ஹா இயக்கிய ஆர்க்கிள்-15,  தப்பட் போன்ற படங்களில்  திரைக்கதைகள் வலுவாக இருந்தன. இந்தப் படத்திற்கு ஐஎம்டிபி ரேட்டிங்  7.6  கொடுத்துள்ளது.1998 ல் வந்த  ‘தில் சே’ படத்தில் மணிரத்தினம் வடகிழக்கு மாநிலங்களின் பிரச்சனையை  காட்டியதைவிட இப்படம் சிறப்பாகவும் நேர்மையாகவும் காட்டுகிறது.

அரசியல் சினிமா என்ற பிரிவில், இந்தப் படத்தை ஒதுக்கிவிட்டு யாரும் பேச முடியாது. விவாதங்களை இந்தப் படம் தொடர்ந்து எழுப்பும். “இப்போதுதான் அனேக் படம் பார்த்தேன். அப்பா, என்னவொரு படம். அனுபவ் சின்ஹாவிற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் ” என்று  டிவிட்டரில் துஷார் காந்தி எழுதியுள்ளார்.

விமர்சனம்; பீட்டர் துரைராஜ்.

 

Support Aram

நேர்மையான,வெளிப்படையான,சுதந்திரமான இதழியலுக்கு தோள் கொடுங்கள்.

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time