வாடிக்கையாளர்களைக் கைகழுவுகிறதா   எல்.ஐ.சி.நிறுவனம்.?

  - மாயோன்.

இது நாள் வரையில்லாத அளவுக்கு புதுப்புது நெருக்கடிகளைத் தனது வாடிக்கையாளர்கள் மீது திணிப்பதன் மூலம் எல்.ஐ.சி.யின் வாடிக்கையாளர்களான ஏழை,எளிய மக்களின் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது!

கடந்த மார்ச் 24 ந்தேதி  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இன்னும் அது முழுமையாக விலக்கிக்  கொள்ளப் படவில்லை.

தொழில் ,பணி என்று சகலமும் தொய்வடைந்து மக்கள் பெரும் பாதிப்பில் உள்ளனர்.

குறிப்பாக ,கீழ்த்தட்டு, நடுத்தர பொருளாதாரப் பிரிவில் வாழும் மக்கள் வயிற்றை  வாயைக்கட்டி வாழ்கிறார்கள்.

அத்தியாவசிய பொருட்களை வாங்க மட்டும் இணுக்கி இணுக்கி செலவழிக்கிறார்கள்.

வீட்டுக் கடன்,  வாகனக் கடன்,  இ .எம். ஐ. செலுத்த கால நீட்டிப்பு அவகாசம் கேட்டு தொடர்ந்து குரல்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

பிரிமியம் வசூலிப்பதில் புதிய அணுகுமுறை.

மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு சலுகைகளை அறிவித்தது போல, இந்திய அரசின் மாபெரும் நிறுவனமான எல் .ஐ .சி .யும் வாடிக்கையாளர்களுக்கு  சலுகையை அறிவித்தது .

கடந்த மார்ச் ,ஏப்ரல் மாதங்களில் கட்ட வேண்டிய பிரிமியத்தை ஒரு மாதம் கழித்து தாமதக் கட்டணம் இல்லாமல் செலுத்தலாம் என்று தெரிவித்தது. அவ்வாறே பெற்றுக் கொள்ளவும் செய்தது.

இப்படி சலுகை காட்டிய இந்த மாபெரும் அரசு நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பிரிமியம் தொகையை நெருக்கிப் பிடித்து வாங்கும் புதிய முறையை கடந்த மாதம் அமல்படுத்தி உள்ளது.

வழக்கமான நடைமுறை எல்.ஐ.சி யில் பல சேமிப்புத் திட்டங்கள்- கால அளவுகள்  இருந்தாலும் பொதுவாக பெரும்பாலான  எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள்  குறைந்தது 10 ஆண்டுகள் முதல் அதிகபட்சம்  25 ஆண்டுகள் வரை உள்ள திட்டங்களில் சேர்ந்து  பிரிமியம் செலுத்துகிறார்கள். இதை மாதம்தோறும்  என்ற அடிப்படையிலோ காலாண்டுக்கு ஒருமுறையோ அரையாண்டுக்கு ஒரு தடவையோ அல்லது ஆண்டு பிரிமியமாகவோ செலுத்துகிறார்கள்.

காலதாமதமின்றி பிரிமிய கட்டணம் செலுத்த மாத பிரிமியதாரருக்கு 15 நாட்களும் மற்ற மூன்று வகைப் பிரிவினருக்கு 30 நாட்களும் அவகாசம் வழங்கப்படுகிறது.இந்த காலத்திற்குள்  பிரிமியம் கட்டப்பட வில்லை என்றால் பாலிசி காலாவதி(LAPSE) ஆகிவிடும்.

காலாவதியானபிறகும்  காலதாமத கட்டணத்துடன்(LATE FEE) பிரிமியம் செலுத்துவதற்கு பொதுவாக, ஆறுமாதம் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.

அதன் பிறகும் பிரிமியம் செலுத்தப்படாத  பாலிசிகளை புதுப்பிக்க உரிய பாரம்  நிரப்பி அதனுடன் அடையாள ஆவணங்களை இணைத்து ,அதுவரை நிலுவையில் உள்ள முழுத் தொகையையும் செலுத்தியாக வேண்டிய கட்டாயத்திற்கு பாலிசிதாரர் தள்ளப்படுகிறார்.

இந்த முறைதான்  இதுவரை நடைமுறையில் இருந்து வந்தது.

நீண்டகாலமாக நடைமுறையில் இருந்தவந்த  இந்த முறையில்,  பிரிமியம் செலுத்துவதற்கான கடைசி தேதி முடிவடைந்து ஆறு மாதம் வரை வாடிக்கையாளர் கையிருப்புக்கு ஏற்ப பிரிமியம்  செலுத்தும் வசதி கடந்த மாதம் வரை  இருந்தது.

இந்த வாய்ப்பை   இந்த ஊரடங்கு  காலகட்டத்தில்  எல்.ஐ.சி. நிறுவனம் திடீரென ரத்து செய்துள்ளது தான் பிரச்சினை.!

எடுத்துக்காட்டாக, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பிரிமியம் செலுத்தி வந்த ஒருவர் வருவாய் பாதிப்பு காரணமாக கடந்த ஐந்து மாதம் செலுத்தவில்லை என்றால், இந்த மாதம் ஐந்து மாதத்திற்கான மொத்த பிரியத்தையும் காலதாமதக் கட்டணத்துடன் சேர்த்து அவர் செலுத்தியாக வேண்டும். மாதம் ரூபாய் 3000 பிரிமியம் செலுத்துபவராக இருந்தால் ஐந்து மாதத்திற்கு ரூபாய் 15 ஆயிரம்  தாமத கட்டணத்துடன் செலுத்திட வேண்டும்.மாதந்தோறும் பிரிமியம் செலுத்துவோர் பெரும்பாலும் குறைந்த வருவாய் பிரிவில் உள்ளவர்கள்தான்.

கடந்த மாதம் வரை இந்த நிலைமை இல்லை .ஆறுமாதம் கடக்காதவரை ,கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப  ஒரு மாத பிரிமியமோ 2 மாத பிரிமியமோ   செலுத்தலாம். இப்படி கையில்  பணம் கிடைக்கும் போதெல்லாம் செலுத்தி  படிப்படியாக நடப்பு நிலைக்கு (CURRENT POSITION) கொண்டுவரமுடியும்.

காலாண்டுக்கு ஒரு முறை பிரிமியம் செலுத்துவோருக்குகூட இதனால் பலன் கிடைத்து வந்தது.

 லட்சக்கணக்கான பாலிசிகள் காலாவதியாகக் கூடிய அபாயம்.!

இந்த ஊரடங்கு காலத்தில் கையில் போதிய பணமின்றி பார்த்துப் பார்த்து செலவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு எல்.ஐ.சி .நிறுவனம் புதிய சலுகை எதுவும் தர வேண்டாம், ஆனால் காலம் காலமாக இருந்து வந்த  வாய்ப்பைப் பறித்துக் கொண்டது நியாயமா?

இப்படி கிடுக்கிப்பிடி பிரிமிய வசூலில் ஈடுபட்டால் பல லட்சம் பாலிசிகள் காலாவதியாகி, அவ்வளவு  வாடிக்கையாளர்களும் குறிப்பாக ஏழை, எளிய தினக்கூலி பாலிசிதாரர்கள்  பெரும் இழப்பை சந்திப்பார்களே!

அது எல்.ஐ.சி. நிறுவனத்தின் வளர்ச்சிக்கு நல்லதா?

தற்போது எல்.ஐ.சி‌.நிறுவனத்தில்  சுமார் 29 கோடி வாடிக்கையாளர்கள் (POLICY HOLDERS) உள்ளனர்.ஒன்றரை லட்சம் முகவர்கள் உள்ளனர்.

அதாவது இந்திய நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒருவர் தன் எதிர்கால பாதுகாப்புக்கு  சேமிப்புக்கு எல்.ஐ.சி. யை  நம்பி உள்ளார்.

அவர்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டாமா ?

பாலிசி முதிர்ச்சி அடைந்தவுடன் பணம் கட்டிய வாடிக்கையாளர் மறந்து போனாலும்  தொலைபேசியில் அவரை அழைத்து முதிர்வு தொகையை உடனடியாக கையில் கொடுக்கும் மகத்தான நிறுவனமாக எல்.ஐ.சி. உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் இந்த கடினமான  காலகட்டத்தில் இப்படிப்பட்ட அணுகுமுறையே மேற்கொள்ளலாமா?

“இந்த கொரோனா பெருந்தொற்று  ஊரடங்கு காலத்தில் மொத்த பிரிமிய  நிலுவைத் தொகையையும் ஒரே மூச்சில் செலுத்து”  என்று சொல்வது நியாயமா? மேலும்  பாலிசி கட்டுபவர்களிடம்  புதிதாக ஜி.எஸ்.டி வரி என்று வசூலிப்பதெல்லாம் வாடிக்கையாளர்களை மிகவும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

காப்பீட்டுத் துறையில் 70% வாடிக்கையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ள  எல்.ஐ.சியை எப்படியாவது வீழ்த்தி,அதன் வாடிக்கையாளர்கள் ஈர்க்கும் முயற்சியில் பல்வேறு தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க சுற்றி சுற்றி வரும் சூழலில்,

தன் வாடிக்கையாளர்களுக்கு சேதம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்க வேண்டிய இன்றியமையாத கடமை எல்.ஐ.சி. நிர்வாகத்திற்கு இருக்க வேண்டுமா?  இல்லையா ?

இது குறித்து,அகில இந்திய ஆயுள் காப்பீட்டு ஊழியர் சங்க வட்டாரத்தில் பேசிய போது, எல்.ஐ.சியை பலவீனப்படுத்தி தனியாரை ஊக்கப்படுத்தும் முயற்சியாக எல்.ஐ.சி பங்குகளை விற்க சென்ற ஆண்டு ஒரு முயற்சி  மேற்கொள்ளப்பட்டது. ஆனால்,பலத்த எதிர்ப்பு கிளம்பியதையடுத்து அது பின்வாங்கிக் கொள்ளப்பட்டது.  அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் ஆபத்பாந்தவனாக  இருந்து உதவிய எல்.ஐ.சியின் பங்குகளை விற்க துணிந்தது நியாயமற்ற செயல் என்றனர்.

         

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time