ரத்தம் உறைதலைத் தவிர்ப்பது எப்படி?

எம்.மரியபெல்சின்

ரத்தம் உறைதல் பிரச்சினை இன்றைக்கு பேசுபொருளாகி இருக்கிறது. கொரானாவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்ட மிகப் பலருக்கு இந்த ரத்தம் உறைதல் பிரச்சினை வருகிறது! இதை தவிர்க்கவும், இதில் இருந்து மீளவும் என்ன செய்ய வேண்டும்!

இது காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினைதான் என்றாலும் கொரோனாவுக்குப் பிறகு ரத்தம் உறைதலால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இளம்வயதினருக்கும்கூட ரத்தம் உறைந்து அவர்கள் மரணமடைவது நம்மில் பலர் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஆகவே, இந்தக்கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாக இருக்குமென்று நம்புகிறேன்.

ரத்தம் உறைதல் ஏன் நடைபெறுகிறது? அதிலும் சமீபகாலமாக ரத்தம் உறைதல் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்? என்பதுபோன்ற விவாதத்துக்கு நாம் உள்ளே போக விரும்பாமல் பிரச்சினையை சரி செய்வது பற்றி ஆலோசிப்போம். ரத்தம் என்பது கெட்டியாக இல்லாமல் நீரோட்டம் போல நீர்த்தலுடன் இருக்க வேண்டும்.

நீர்த்தலுடன் இருந்தால்தான் ரத்தத்தில் கட்டிகள் உருவாகாமல், உறைந்துபோகாமல் உயிருக்கு ஆபத்து ஏற்படாமலிருக்கும். ஆனால், ரத்தப்போக்கு மற்றும் உடலில் இருந்து ரத்தம் வெளியேறும்சூழலில் உறைதல் தன்மையை அடைய வேண்டும். இல்லாவிட்டால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். அதே வேளையில் ரத்தம் உறைதல் தன்மை அதிகமானால் ரத்தத்தில் கட்டிகள், இதயக்கோளாறு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆகவே, ரத்தமானது நீர்த்தல் தன்மையுடன் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ரத்தம் உறைதலுக்கு அடிப்படையில் நீரிழப்பும் ஒரு காரணமாக இருக்கிறது. பொதுவாக பலர் போதுமான அளவு நீர் அருந்தாததால்தான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன. அந்தவகையில் ரத்தம் உறைதலுக்கும் நீரிண்மை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே, போதுமான அளவு நீர் அருந்தவில்லை என்பதை கண்டுபிடிக்க நமக்கு நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளலாம். சிறுநீர் கழிக்கும்போது வைக்கோலைப் போன்ற மஞ்சள் நிறத்தில் இருந்தால், பிரச்சினையில்லை. அதுவே, அடர் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு, பழுப்பு நிறமாக காணப்பட்டால் நீர்ச்சத்து தேவை என்று பொருள்.

குர்குமின் அதிகம் காணப்படும் மஞ்சள் மனிதர்களுக்கு மிகவும் அவசியம்! குறிப்பாக தோல் முதல் உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்படக்கூடிய அழற்சியைக் குறைக்க உதவும். அந்தவகையில் ரத்தத்தில் அழற்சிக்கு எதிரான பண்பை உருவாக்குகிறது. ரத்தத்தை நீரோட்டத் தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளை அதிகம் கொண்ட மஞ்சள் ரத்தம் உறைதல் அபாயத்தைக் குறைக்கும்.

மஞ்சளைப் போல வெள்ளைப் பூண்டுக்கும் ரத்தம் உறைதல் தன்மையைக் குறைக்கும் பண்பு உண்டு. ஆன்டி பயாடிக் மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகளைக் கொண்டிருப்பதால் பூண்டு ரத்தம் உறைதல் மற்றும் வேறு சில நோய்களுக்கு எதிராக செயல்படும். மேலும் குறிப்பாக ரத்தத்தை நீர்த்தலுடன் வைத்திருக்க உதவுகிறது. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் நம் முன்னோர் பாரம்பரிய உணவுகளில் மஞ்சள், இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டனர். ஆக, இவை ஒவ்வொன்றுக்கும் உள்ள மருத்துவ பண்புகள் நம்மையும் அறியாமல் நமக்கு நலம் பயக்கின்றன.

இஞ்சியில் சாலிசிலேட் என்ற இயற்கையான வேதிப் பொருள் அதிக அளவில் உள்ளது. தாவரங்களில் காணப்படும் ஒருவகையான சுண்ணாம்புச் சத்தே இந்த சாலிசிலேட். இதுவும்கூட ரத்தத்தை உறையாமல் நீர்த்தல் தன்மையுடன் வைத்துக் கொள்ள உதவுகிறது. இஞ்சியை தோல் நீக்கி சாறு பிழிந்து சுமார் 5 நிமிடம் வைத்திருந்து அடியில் படிந்திருக்கும் வெள்ளை நிற படிவத்தை விட்டுவிட்டு தெளிந்த நீரை மட்டும் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது தேன் சேர்த்து அருந்தினால் ரத்த அழுத்தம் சமநிலைப்படும்.  ரத்தம் உறைதல் பிரச்சினை உள்ளவர்களும் இதே போன்று அருந்தி பலன்பெறலாம்.

இஞ்சியை டீயில் சேர்த்துக்கொள்வது, துவையல், சட்னி போன்ற வடிவங்களில் சேர்த்துக் கொள்வது நல்லது என்றாலும், தினமும் சாப்பிடுவது வேறு பிரச்சினைகளை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. வெண்ணெய், மிளகாய், பெர்ரி, செர்ரி பழங்களிலும்கூட சாலிசிலேட் அமிலம் உள்ளது. எனவே, இவற்றைச் சாப்பிடுவதால் ரத்தம் உறைதல் பிரச்சினை தடுக்கப்படுகிறது.

லவங்கப்பட்டையை நாம் நமது உணவில் அதிகம் பயன்படுத்துவதில்லை. அசைவ உணவுகள் சமைக்கும்போது மட்டும் அவற்றை சேர்ப்போம். சிலர் லவங்கப்பட்டையின் மருத்துவ குணம் அறிந்து அதை பயன்படுத்துகின்றனர். கூமரின் என்னும் மூலப்பொருளைக் கொண்ட லவங்கப்பட்டை உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்தம் உறைதலைத் தடுக்கிறது. அதனால்தான் விஷயம் தெரிந்த சிலர் லவங்கப்பட்டையில் டீ போட்டு குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். கீல்வாதம் மற்றும் அழற்சி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யவும் லவங்கப்பட்டை உதவுகிறது.

நமது உணவுப்பொருள்களில் வெந்தயத்துக்கும் நாம் முக்கியத்துவம் அளிப்பதுண்டு. உயர் ரத்த அழுத்தம், இதயக்கோளாறுகள் மற்றும் பல பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைப்பதில் வெந்தயத்தின் பங்கு உண்டு. இதேபோல் அதிக ரத்தப் போக்கை கட்டுப்படுத்துவது, ரத்தம் உறைதலை தடுப்பது போன்ற பண்புகளும் வெந்தயத்துக்கு உண்டு. இதுபோன்று நமது அன்றாட சமையலில்…. உணவுப்பொருள்களில் நாம் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் சேர்க்கக்கூடிய ஒவ்வொரு பொருள்களிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. குறிப்பாக, அவை ரத்தம் உறைதல் பிரச்சினையை போக்குவதில் சிறப்பான பங்காற்றுகிறது.

இவை அல்லாமல் வழக்கமாக நாம் உண்ணக்கூடிய பட்டை தீட்டிய அரிசிகளைத் தவிர்த்து பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்கள் உண்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். எண்ணெய்ப் பண்டங்கள் உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் குறிப்பாக, வெளி உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வடை, போண்டா, பஜ்ஜி, சமோசா, சிக்கன் 65, பொரித்த மீன்கள், இறைச்சி உணவுகள் உண்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவை வீடுகளில் தயாரித்தவையாக இருந்தால் குறைவாக எடுத்துக் கொள்ளலாம்; உணவகங்களில் தயாரிப்பவை என்றால் அவற்றை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. கொழுப்பு நிறைந்த, எண்ணெய் அதிகமுள்ள, சுவையூட்டிகள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது மிக மிக நல்லது.

தவிர்க்க முடியாத சூழலில் இந்த உணவுகளை உட்கொள்ள நேரிட்டால் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு போட்டு அவை செரிமானமாகுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இஞ்சி முரப்பா, வறுத்த ஓமம் சாப்பிடுவதும்கூட பலன் தரும். வாரம் ஒருவேளை இஞ்சியை அரைத்து சாறு எடுத்து தேன் கலந்து குடிக்கலாம். இதயக் கோளாறுகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள்  எலுமிச்சம் பழத்தின் தோலை மட்டும் எடுத்துக் கொண்டு பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதற்கு சம அளவு இஞ்சியை (தோல் நீக்கி) எடுத்து பொடிப்பொடியாக நறுக்கி இவை இரண்டும் மூழ்குமளவு நீர் ஊற்றி ஒரு கொதி வருமளவு அடுப்பில் வைக்க வேண்டும். இதை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் இதய அடைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளும் சரியாகும்.

இவை தவிர திராட்சை, கிவி பழம், ஆளி விதை, அக்ரூட், பாதாம் போன்ற பருப்புகளும்கூட ரத்தம் உறைதலைத் தடுக்கக் கூடியவை. பொதுவாக நோய் வந்தபின் அதற்கான சிகிச்சைகள் எடுப்பதையே நாம் வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். அதை விடுத்து நோய் வருமுன் தடுக்க அவ்வப்போது இதபோன்ற உணவுகளை உட்கொண்டு இந்த நோய் அல்ல எந்த நோய்களும் வராமல் தடுக்கலாம். ஆகவே, விழிப்புடன் இருப்போம், நோய் நொடிகளிலிருந்து நம்மை காத்துக் கொள்வோம்.

கட்டுரையாளர்; எம்.மரியபெல்சின்

மூத்த பத்திரிக்கையாளர் மற்றும் மூலிகை ஆராய்ச்சியாளர்.

வீடுகளைச் சுற்றி வளரக்கூடிய மிகச் சாதாரண மூலிகைகள் மற்றும் அஞ்சரை பெட்டியில் உள்ள மிளகு, சீரகம் போன்றவற்றைக் கொண்டு தலைவலி முதல் கொரோனா காய்ச்சல் வரை சரி செய்ய முடியும் என்பதை அனுபவப்பூர்வமாகச் சொல்பவர்.

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time