வீட்டையே அன்னச்சத்திரமாக்கிய அபூர்வ தம்பதி!

-அஜிதகேச கம்பளன்

‘அந்தரி இல்லு’ டாக்டர் தம்பதிகளைப் பற்றி சொல்ல நிறையவே இருக்கிறது. பசித்தவர்கள் எந்த நேரமும் இங்கு சென்று உணவருந்தலாம். ஓய்வெடுத்துச் செல்லலாம்னு ஒரு ஏற்பாடு! இவங்க வாழ்க்கையே ஒரு செய்தின்னு சொல்லத் தோணுகிறது.

தங்களுடைய வாழ்க்கையை பிறரோடு பகிர்ந்து கொள்கிறார்கள்! தங்களுடைய நேரத்தை இல்லத்தின் ஒரு பகுதியை, உழைப்பை, செல்வத்தை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறார்கள்!

நமக்கு எவ்வளவோ உறவினர்கள் இருக்கலாம். நண்பர்கள் இருக்கலாம். ஆனால், எல்லோர் வீட்டிற்கும் போய்விட முடியுமா? போனால், அங்கு ஒரிரு நாட்கள் தங்குமளவுக்கு உரிமை எடுத்துக் கொள்ள முடியுமா? சுதந்திரமாக அந்த இடத்தை பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்பதெல்லாம் இன்றைய தினம் கேள்வி குறியாகிவிட்டது!

இப்படியான உலகில் முன்பின் அறியாத எவருக்கும் தன் வீட்டுக் கதவை திறந்து வைக்கும் தம்பதிகளாக டாக்டர்.சூரியமூர்த்தியும் அவர் மனைவி காமேஸ்வரியும் இருப்பது அபூர்வமான விஷயம் தான்!

மற்றவர்களுக்கு பயன்படக் கூடிய ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அடிப்படையான ஒரு எண்ணத்தின் விளைவே இந்தச் செயல்! அந்த காலத்தில் அன்ன சத்திரங்கள் பல இருந்தன!அப்படி கட்டி வைப்பதை நமது முன்னோர்கள் புண்ணியச் செயலாக கருதினார்கள்!  வழிபோக்கர்கள் அதில் உணவருந்தி செல்லும் வழக்கமும் இருந்துள்ளன! இன்று அவை வழக்கொழிந்துவிட்டன!

ஹைதராபாத்தில் இருந்து சுமார் 9 கீமீட்டர் தொலைவில் உள்ள ஊர் கோதபேட். இங்கு தான் அந்தரி இல்லம் என்ற பெயரில் அனைவருக்குமான ஒரு பொது இல்லத்தை கட்டி வைத்துள்ளனர் டாக்டர் தம்பதிகள்!

ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தில் பிறந்த சூரிய பிரகாஷ் தன் 18 வயதில் சகோதரியை இழக்கிறார். நண்பனை ஒரு விபத்தில் இழக்கிறார். வாழ்க்கையின் நிலையாமை குறித்த யதார்த்ததை ஆழமாக உள்வாங்குகிறார். மருத்துவத்தை சேவைத் தொழிலாகக் கருதி படித்து பணியாற்றுகிறார். பல தொண்டு நிறுவனங்களில் தன்னார்வலராக தன்னை இணைத்து சேவை செய்ய விழைகிறார். தொண்டு நிறுவனங்களாக அறியப்பட்டவர்களின் பணம் சேர்க்கும் ஆசை, மத அடையாளத்தை நிறுவும் ஆசை இருப்பதை பார்த்து விலகிவிடுகிறார். ”கார்ப்பரேட்டுகளிடம் பணம் பெற்று செய்வது சேவையாகாது” என்பது இவரது கருத்தாக உள்ளது.

ஒரு நாள் பட்டினியோடு ஒருவர் வீட்டுவாசலில் வந்து உணவு கிடைக்குமா? என கேட்கிறார். வீட்டில் இருக்கும் சாப்பாட்டை அவருக்கு பரிமாறுகிறார்கள். சாப்பிட்டவர் திருப்தி அடைகிறார். அவர் கண்களில் கண்ணீர் பெருகுகிறது. ”இரண்டு நாளாக சாப்பிடவில்லை…செத்துவிடுவேனோ என்ற பயம் வந்தது. பிழைத்துக் கொண்டேன்” என்றார். இந்த சம்பவம் தான், பசித்தவர் யார் வேண்டுமானாலும் தேடி வந்து சாப்பிடும் இல்லம் ஒன்றை ஏன் ஏற்படுத்தக் கூடாது எனத் தோன்றியதாம்!

முதலில் ஒரு தள்ளுவண்டி நிறைய வாழைப் பழங்களை வாங்கி வைத்து ரோட்டில் எடுத்துச் செல்வது! ”சக்தியுள்ளவர்கள் காசு கொடுத்து வாங்கலாம். பசி உள்ளவர் எடுத்து சாப்பிடலாம்”என்ற ஏற்பாட்டில் அதற்கான ஆட்களை வைத்து சில வருடங்கள் செய்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டில் தொடங்கியது இந்த சேவை இல்லம்! இரண்டு அடுக்குகள் கொண்ட பெரிய இல்லம். அதில் கீழ் பகுதி முழுக்க வருபவர்களுக்கு! முதல் மாடி கிளினிக்! இரண்டாவது மாடியில் தங்கள் குடும்பம் என வாழ்கிறார்கள்! கிழ் பகுதியை நிர்வகிக்க இருவரை நியமித்து உள்ளார்கள்! வந்தவர்கள் சாப்பிடலாம், ஓய்வு எடுக்கலாம். ஆனால், இரவு தங்க முடியாது. இரவில் தங்க நினைப்பவர்களுக்கு தகுந்த காரணங்கள் இருந்தால், சில நேரங்களில் அனுமதிக்கிறார்கள்! வேலை தேடி வரும் இளைஞர்கள், படிக்கும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்! நூலகம் ஒன்றையும் வைத்துள்ளனர். அதையும் பயன்படுத்த முடியும். மனக்குறலோடு யாரும் வந்தால், நேரம் ஒதுக்கி, அவர்கள் பிரச்சினைகளை காது கொடுத்து கேட்டு ஆற்றுப்படுத்துகின்றனர். ‘இந்த சமூகத்தில் நம்ம பிரச்சினையை காது கொடுத்து கேட்கக் கூட ஆள் இல்லையே’ என்பது தானே பலரது அனுபவமாக உள்ளது.

பணமாக யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை. உணவு பொருளாக, துணியாக எதையும் இங்கு தர விரும்பியவர்கள் தந்தால், அதை வருபவர்களில் தேவைப்படுவர்கள் எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். இங்கே கொடுப்பவர்கள் யாரென்றும் தெரியாது. தேவைப்பட்டு எடுப்பவர் யாரென்றும் தெரியாது. தாங்களே சமையல் அறைக்கு சென்று சமைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்பதாக ஏற்பாடு செய்துள்ளனர்.

தினசரி 40 முதல் 50 பேர் பயன்படுத்திக் கொள்கிறார்களாம். 2006 ஆம் ஆண்டு தொடங்கி இந்த செயல்பாடுகள் நடந்து கொண்டுள்ளன! இது வரை ஒரு லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்த இல்லத்தால் பயன்பட்டுள்ளனர். அதிகாலை 5.30 தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை இந்த இல்லம் திறந்து வைத்திருப்பதான ஒர் ஏற்பாடு உள்ளது. நான்கு அறைகள் உள்ளன! சுற்றிலும் விசாலாமான தாழ்வாரமும் உள்ளது. வெளியூரில் இருந்து சிகிச்சைக்காக வரும் பெண்கள் தங்கி சென்றுள்ளார்களாம். ஆறேழு குழந்தைகளும் இங்கு பிறந்துள்ளனர் என்கிறார்.

தங்களுடைய சேவை இன்ஸ்பிரேஷனில் இங்குள்ள நூலகத்தை போல தெலுங்கானாவில் சுமார் 100 நூலகங்கள் உருவாகியுள்ளதாக சொல்கிறார் சூர்யபிரகாஷ்! இந்த சிறிய சேவை தங்கள் காலத்திற்கு பிறகும் தொடர வேண்டும் என்பதான விருப்பத்தையும் தெரிவிக்கிறார் சூர்யபிரகாஷ்!

”எங்களைப் பற்றிய செய்திகளை கேள்விப்பட்டு பலர் நன்கொடை தர முன்வருகிறார்கள்! அப்படி தருவதை நாங்கள் ஏற்கமாட்டோம். அவங்கவங்க தங்கள் சக்திக்கு உட்பட்ட முறையில் இந்த மாதிரி செய்யலாம். பசித்தோருக்கு உணவிடுதல் என்பது மிகப் பெரிய ஆத்ம திருப்தி தரும் செயல். சாலையில் செல்லும் போது பசித்த முகத்துடன் யாரேனும் எதிர்பட்டாலோ, பசியில் ரோட்டில் சுருண்டு படுத்திருந்தாலோ ஒரு வேளை உணவு வாங்கி தரலாம். இப்படி அந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் தாங்களே செய்ய வேண்டுமே அல்லாது பிறர் மூலம் செய்யலாகாது. சமூக பங்களிப்பு என்பது அவரவர் உள்ளத்தின் உள்ளே இருந்து தானாக வர வேண்டிய உணர்வு. மகிழ்ச்சியுடன் நேர்பட செய்ய வேண்டியது” என்கிறார்.

அஜிதகேச கம்பளன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time