கருக் கலைப்பை மறுப்பதாலும், சிக்கலுக்கு உள்ளாக்குவதாலும் ஆண்டுக்கு ஒரு லட்சம் பெண்கள் மரணிக்கிறார்கள்! அமெரிக்காவில் கருக்கலைப்பு மறுக்கப்பட்டதற்கு அங்கு பெண்கள் பொங்கி எழுந்துள்ளனர்! கருக்கலைப்பு என்பதை ஏன் பெண்ணின் உரிமையாக கருத வேண்டும்?
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை அமெரிக்க உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான சட்டத்தை, அந்தந்த மாநிலங்கள் இயற்றிக் கொள்ளலாம் எனவும் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு அங்குள்ள பெண்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். வளர்ந்த நாடான அமெரிக்காவிலேயே இந்த நிலை என்றால், நம் நாட்டில் கருக்கலைப்பு வசதிகள் எப்படி உள்ளன என்பதை இந்தக் கட்டுரை சொல்கிறது.
“இந்தியாவில் 1952 ஆம் ஆண்டிலேயே குடும்பக் கட்டுப்பாடு திட்டம் இருந்தது. பின்னர் இந்தத் திட்டத்திற்கு குடும்ப நலம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1971ல் கொண்டுவரப்பட்ட சட்டம் 20 வாரம் வரை கருக்கலைப்பை அங்கீகரித்தது. இந்தியாவில் திருமணம் ஆகாத பெண்களும் கருக்கலைப்பு செய்து கொள்வதை சமீபத்தில் செய்யப்பட்ட கரு கலைப்புச் சட்டத் திருத்தம் அதை 24 வாரம் வரை அனுமதிக்கிறது. ஆனால், காலம் கடந்த கருக்கலைப்பு பெண்ணின் உடல் நலனுக்கு உகந்ததல்ல!
ஒரு கருவை எட்டு முதல் பத்து வாரத்திற்குள் கலைத்துவிடுவது பெண்ணுக்கு பாதுகாப்பானதும், எளிதானதுமாகும்!. நமது பாரம்பரியத்தில் இதை உணவின் வழியிலேயே செய்து விடுவது இன்னும் வழக்கத்தில் உள்ளது. அன்னாச்சிப் பழம், பப்பாளிப் பழம், திணை மாவு உருண்டை, பச்சை வேர்கடலை,எள்ளு உருண்டை போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் ஆரம்பநிலை கருவை எளிதாக கலைத்து விடுவதுண்டு. இப்படி சுதாரித்துக் கொள்ளத் தவறியவர்கள் மருத்துவர்களை நாட வேண்டி உள்ளது.
மற்ற நாடுகளைவிட இந்தியாவின் சட்டங்கள் கருகலைப்புக்கு ஆதரவாகவே உள்ளன. எனவே சட்டத்தை மாற்ற வேண்டிய அவசியம் இங்கு இல்லை. ஆனால் சட்டத்தை எளிமைப்படுத்த வேண்டும். மேலும் செழுமைப் படுத்த வேண்டும். கருகலைப்புச் சட்டத்தை கறாக அமல்படுத்த வேண்டும். ” என்றார் மகப்பேறு மருத்துவரான, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தைச் சார்ந்த, ஏ.ஆர்.சாந்தி.
“சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்துகொள்வதால், நாளொன்றுக்கு பத்து பெண்கள் இறந்துபோகின்றனர் என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. எனவே கருக்கலைப்பு குறித்தும், அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் ஏற்பாடுகளைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இனப்பெருக்க உரிமை பெண்களுக்கானது என்பதை குடும்பமும், சமுதாயமும் உணர்ந்தால்தான் சட்டவிரோத கருக்கலைப்புகளை தடுக்க முடியும். தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க, மாத்திரை, காப்பர்-டி போன்ற கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இவை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்கின்றன.
மத நம்பிக்கையை காரணமாகச் சொல்லித்தான் அமெரிக்க உச்சநீதிமன்றம் பெண்களின் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்துள்ளது. இது ஒரு பிற்போக்கான தீர்ப்பு , உரிமைக்கு எதிரான தீர்ப்பு , பெண்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக் கூடிய தீர்ப்பு” என்றார் மகப்பேறு மருத்துவரான ஏ.ஆர்.சாந்தி.
“உடலுறவு ஏற்பட்ட 72 மணி நேரத்திற்குள் கருத்தடை மாத்திரை எடுத்துக் கொண்டால் தேவையற்ற பிரசவத்தை தடுக்க முடியும். அதே போல கருத்தரித்த எட்டு வாரங்களுக்குள், ஒரு பெண் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஊசி மூலம் கர்ப்பத்தைக் கலைத்துக் கொள்ள முடியும். பெண் உடல் என்பது அவளது உரிமை. அதில் தான் கர்ப்பப்பை இருக்கிறது. அவள்தான் அதன் பிறகான சுமைகளை ஏற்றுக்கொள்கிறாள். எனவே பிரசவம் வேண்டுமா, வேண்டாமா என்பதை அவள்தான் முடிவெடுக்க வேண்டும்.
ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கருக்கலைப்பு செய்வதற்கு போகிறவர்களை அங்குள்ள ஊழியர்கள் கேள்வி, மேல் கேள்வி கேட்கிறார்கள். கருக்கலைப்பு நடந்த பிறகு, கணவன் மருத்துவமனை ஊழியர்களிடம் சண்டை போடுவார்கள் என்று பயந்து கொண்டு, கணவனையோ, அவளது குடும்பத்தாரையோ அழைத்து வர நிர்ப்பந்திப்பார்கள். இப்படி யாரையாவது அழைத்துவர வேண்டும் என்பது சட்டப்படி அவசியமில்லை. திருமணமான பெண்களே அரசு மருத்துவமனைகளில் அவமானப்படும் போது விதவைகள் குறித்தோ, தனியாக வாழும் பெண்கள் குறித்தோ, திருமணமாகாத பெண்கள் குறித்தோ கேட்கவே வேண்டாம்”. என்றார் பத்திரிக்கையாளரான பிருந்தா சீனிவாசன்.
“12 வாரங்களுக்குப் பிறகு அரசு மருத்துவமனைகளில் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம். 12 வாரங்களுக்குப் பிறகு கருவில் இருப்பது ஆணா, பெண்ணா என்பது தெரிந்துவிடும். எனவே பெண் குழந்தை என்பதை தெரிந்துகொண்டு, கருக்கலைப்பு செய்வதை தடுக்கும் நோக்கத்தோடு, 12 வாரங்களுக்குப் பிறகு நடைபெறும் கருக்கலைப்புகளை இரண்டு மருத்துவர்கள் செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. 24 வாரங்கள் வரை பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம்.
கருக்கலைப்பு என்பது கிட்டத்தட்ட ஒரு பிரசவம் போலத்தான். முதல் குழந்தை பிறந்த பிறகு கருவுருவாவதை பெண்கள் வீட்டிற்குச் சொல்லுவதை அவமானமாக கருதுகிறார்கள். எனவே தாமாக வந்து கருக்கலைப்பு செய்து கொள்வார்கள். அதே போல வயதுக்கு வந்த குழந்தைகள் இருக்கும்போது, கரு உருவாவதையும் அவமானமாக நினைத்துக் கொள்கிறார்கள். எனவே மருத்துவமனைகளுக்குச் செல்வதற்கு அஞ்சி, சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்துகொள்வது நடக்கிறது. அடுத்த குழந்தை வளர்ப்பதற்கு அஞ்சி, கணவனுக்குத் தெரியாமல் கருக்கலைப்பு செய்துகொள்பவர்களும் உள்ளனர். எருக்கங்குச்சி, கை மருத்துவம் போன்றவை மூலம் கருக்கலைப்பு செய்துகொள்வது நடக்கிறது. 2007 ஆம் ஆண்டு முதல் 2011 ஆண்டு வரையுள்ள காலத்தில் 67 சதம் சட்டவிரோத கருக்கலைப்புகள் அதிகரித்து உள்ளதாக ஐநா மக்கள்தொகை நிதிய அறிக்கை கூறுகிறது.
கருக்கலைப்பு செய்யும் தனியார் மருத்துவமனைகளும் குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் தனியாகச் செல்லும் பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ய தயங்குகின்றன.இது போன்ற காரணங்களால் மூன்றில் இரண்டு பங்கு கருக்கலைப்புகள் சட்டவிரோதமாகவே நடைபெறுகின்றன.
கருக்கலைப்பிற்கு பிறகு கர்ப்பபை முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு விட்டதா என்பதை சரிபார்த்த பிறகே பெண்களை மருத்துவமனைகளில் இருந்து விடுவிப்பார்கள். இதனால் கருக்கலைப்பினால் ஏற்படும் பின்விளைவுகளை (பாதிப்படைந்த கரு, மரணம்) தவிர்க்க இயலும். இத்தகைய வாய்ப்புகள் சட்டவிரோத கருக்கலைப்புகளில் கிடைப்பதில்லை.
இதில் பெண்களை குறை சொல்ல ஏதுமில்லை. கற்பு, புனிதம், பாவம் என்பதன் பேரால் நடைபெறும் அனைத்து உபாதைகளையும் அவள்தான் ஏற்றுக் கொள்கிறாள். கருவை அழித்ததை ஒரு குற்றமாக கருதிக்கொள்கிற மனோபாவம் அவளுக்கு இறுதிவரை இருக்கிறது. பெண்ணுக்கு ஆதரவாக சமூகமும், குடும்பமும் அவளுக்கு இருக்க வேண்டும்.
Also read
ஆண்களுக்கான கருக்கலைப்பு சாதனங்கள் என்பது பாதுகாப்பானது. ஆணுக்கான கருத்தடை சாதனமான நிரோத் அவனது உடலுக்கு வெளியில் உபயோகிக்கப்படுகிறது. மாத்திரைகள், ஊசி, காப்பர்- டி போன்ற பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள் பெண்களின் உடலுக்குள் செலுத்தப்படுகின்றன. எனவே உடல் உபாதைகளும் பெண்களுக்குத்தான் வருகின்றன. பெண்தான் கருத்தடை செய்துகொள்கிறாள். பிரசவம், குழந்தை வளர்ப்பு என அனைத்திலும் பெண்களே முதன்மையான பங்கேற்கிறாள். இந்நிலையில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் பெண்கள், தனித்திருக்கும் பெண்கள்தான் சட்டவிரோத கருக்கலைப்பினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்” என்றார் நடைமுறை சிக்கலை பேசினார் பத்திரிகையாளரான பிருந்தா சீனிவாசன்.
” பெண்களுக்கு கருக்கலைப்பிற்கான வசதிகளும், கருத்தடைக்கான வசதிகளும், அது தொடர்பான விழிப்புணர்வும் இலவசமாகவும், எளிதாகவும், பாதுகாப்பானதாகவும் கிடைக்க வேண்டும். பாலியல் கல்வியும். இனப்பெருக்க உரிமையும் வழங்கப்பட வேண்டும்.இதுதான் தேவையற்ற கர்ப்பத்தையும், திட்டமிடாத கர்ப்பத்தையும் குறைக்கும். ” என்றார் ஏ.ஆர்.சாந்தி.
கட்டுரையாளர்; பீட்டர் துரைராஜ்
கலவியலும் கற்பியலும்
கசடற கற்றிருந்தால்
கண்ணியர்கள் காணவேண்டாம்
கருப்பைகள் கலைவதனை!!
கருக்கலைப்பு ஒருப் பெண்ணிற்க்கு பிரசவத்திற்கும் மேல் பாதிப்பு அதிகம் அதைத்தவிர்ப்பது மிகவும் நல்லது. இதைத்தவிர்த்து குழந்தை என்பது கடவுல் கொடுத்த பொக்கிஷம் அது சில பெண்களுக்கு ஒரு வரம் அதைப் பேனிக்காப்பது அவர்களுடைய கடைமையாக நினைத்துப் பெற்று வளர்க்க வேண்டும்.