இது, இரண்டு பேருக்கு இடையிலான சண்டையல்ல!

-சாவித்திரி கண்ணன்

இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகிய இருவருக்கிடையான தனி நபர் அதிகாரப் போட்டியாக மட்டும் இதை சுருக்கிப் பார்த்து விட முடியாது. இதன் பின்னணியில் உள்ள ஆதிக்க சக்திகள் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்ற புரிதல் இல்லாமல் இதை அணுக முடியாது! ஒ.பி.எஸை தூக்கி சுமப்பவர்கள் யார் என பார்க்க வேண்டும்!

அதிமுக பொதுக் குழு நடத்துவது தொடர்பான வழக்குகள் நீதிமன்றங்களில் விவாதிக்கப்பட்டு வருவது பெரிய துரதிர்ஷ்டமாகும். இன்றைய தினம் உச்சநீதிமன்றம், ”ஓ.பி.எஸ் தரப்பிடம் உங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை நீங்களே பார்த்து கொள்ளுங்கள். கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழு உறுப்பினராக உள்ள நீங்கள் பொதுக்குழுவில் பிரச்னையை தீர்த்துக் கொள்ளாமல் நீதிமன்றத்தை நாடியது ஏன்..?” என கேள்வி எழுப்பினர் . ஆனாலும் ஒ.பி.எஸ் இதை லேசில் விடமாட்டார். பெரும்பான்மை கட்சியினரோடு அவர் உடன்படமாட்டார்.

இதை இ.பி.எஸ், ஒ.இ.எஸ் என்ற ஒரு தனிப்பட்ட நபர் விவகாரமாக நான் பார்க்கவில்லை. என்னைப் பொறுத்த வரை இந்த இருவருமே பொது நலனுக்கு எதிரான சுயநல அரசியல்வாதிகள் தாம்! இருவருமே ஊழலில் திளைத்தவர்கள் சந்தேகமில்லை. எனவே, இந்த இருவரில் யாரை ஆதரிப்பது என்ற கேள்விக்கான விடையாக இந்த பிரச்சினை அணுக வேண்டியதில்லை. இன்னும் சொல்வதென்றால், இந்த இருவரில் யார் தங்களுக்கு தேவை என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் அந்த கட்சியில் உள்ளவர்களே அன்றி கட்சிக்கு வெளியில் உள்ள பத்திரிகையாளர்களோ, நீதிமன்றமோ அல்ல!

அந்த வகையில் நாம் விரும்புகிறோமோ இல்லையோ இன்று கட்சியினரில் 95 சதவிகிதமானவர்கள் எடப்பாடி அணியை ஆதரிக்கிறார்கள்! ஒ.பி.எஸ்சால் ஒரு அணியைக் கூட உருவாக்கிக் கொள்ள முடியவில்லை. ஏறத்தாழ தனிமரமாய் நிற்கிறார். அதாவது 95 சதமானவர்கள் ஒ.பி.எஸ்சை ஆதரிக்கவில்லை. அவர்கள் இ.பி.எஸ் அணியால் கூட்டப்பட்ட பொதுக் குழு கூட்டத்திற்கு இசைவாக உள்ளனர்.

இதற்கான காரணம், ”எடப்பாடி நல்லவர் என்றோ, பெரும் தலைவர் என்றோ அல்ல! ஒ.பி.எஸ் செல்லும் பாதை சரியல்ல, அவரது செயல்பாடுகளும், அணுகுமுறைகளும் அதிமுகவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல” என அந்தக் கட்சிக்குள் பெருவாரியானவர்கள் நினைக்கிறார்கள்!

குறிப்பாக அவர் முழுக்க, முழுக்க பாஜக தலைமையால் இயக்கப்படுகிறார்! கேள்விக்கு இடமில்லாதவாறு பாஜகவுடன் இரண்டற கலந்து உறவாடுகிறார். அவர் அதிமுக தலைமையாக வந்தது கூட அவருக்கு பாஜக மேலிடத்தில் உள்ள செல்வாக்கின் அழுத்தத்தில் தான்! இது ஒரு புறமென்றால், எந்த மன்னார்குடி மாபியாக்கள் ஜெயலலிதா இருந்த போது கட்சியை ஆட்டிப் படைத்தார்களோ.. அந்த மன்னார்குடி மாபியாக்களை கட்சிக்குள் கொண்டு வர சதா சர்வகாலமும் முயற்சிக்கிறார்.

டி.டி.வி.தினகரன் விலகினார். தனி கட்சி தொடங்கினார். ‘நீயா, நானா பார்க்கலாம்’ என தனக்கென ஒரு அரசியலை நடத்துகிறார். சரியோ, தவறோ தன் சொந்த பலத்தின் மீதான நம்பிக்கையில் அவர் போராடி பார்க்கிறார். ஆம், சசிகலா ஆசியோடு தொடங்கப்பட்டது தான் அமமுக. அதனால், பெரிய அளவு மேலெழுந்து வரமுடியவில்லை என்றதும், சசிகலா, அதிரடியாக தினகரனை கைகழுவிவிட்டு அதிமுகவிற்குள் நுழைந்து தலைமை பொறுப்பை அபகரிக்க துடிக்கிறார்.

ஆக, தற்போது அண்ணா திமுகவிற்கு உள்ள பிரதான பிரச்சினையே பாஜகவை சமாளிப்பதும், சசிகலாவின் நுழைவைத் தடுப்பதும் தான்! நன்றாக கவனிக்க வேண்டும், அதிமுகவால் பாஜகவை தற்போது எதிர்க்க முடியாது. ஆனால், அவர்கள் கட்சியை விழுங்கிவிடாமல், சூதானமாக இயக்கத்தை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்தக் கடமையை எடப்பாடி பழனிச்சாமி நன்கு புரிந்து இயங்கி வருகிறார். ஆனால், தொடர்ந்து இதற்கு இடையூறாக பன்னீர் செல்வம் இருக்கிறார்.

பன்னீர் செல்வத்திற்கு உள்ள ஒரு பலம் என்னவென்றால், அவர் பழனிச்சாமிக்கு முன்பே நன்கு பொதுவெளியில் அறியப்பட்டவர். ‘தனக்கான தனிப் படையை உருவாக்கி தன்னை எதிர்க்க திரானியில்லாதவர்’ என்ற ஒரே நம்பிக்கையில் ஜெயலலிதாவால் தற்காலிகத் தலைமைக்கு பயன்படுத்திக் கொள்ளப்பட்டவர் என்ற வகையில் கடந்த இரு தசாப்தங்களாக அவர் அரசியலின் பின் இயங்கு சக்தியாக உள்ள பிராமண லாபிக்கு முற்றாக வளைந்து கொடுப்பவர். அவர்களின் முழு நம்பிக்கைக்கு பாத்திரமானவர். இந்தப் பின்னணி தான் ஒற்றை மனிதராக நிற்கும் அவருக்கு இன்றைக்கு தமிழகத்தின் பிராமண லாபி விட்டுக் கொடுக்காமல் அனுதாபத்தை உருவாக்கத் துடிக்கிறது. தொடர்ந்து அவரை தலைப்பு செய்தியில் லைவ்வாக வைத்துள்ளது.

பிராமண லாபி என்று சொல்லும் போது அது வெளித் தன்மைக்கு அறியமுடியாத அடிநாதமாக இயங்கும் ‘ஆர்.எஸ்.எஸ் லாபி’ என்ற புரிதல் மிக முக்கியம்! தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்சின் குரலாக ஒலிக்கும் தினமலர் உரிமையாளர்களும், தினமணி வைத்தியநாதனும், தி இந்து மாலினி பார்த்தசாரதியும் கடந்த இரு தசாப்தங்களாக பன்னீர் செல்வம் வழியில் பெற்ற பலன்கள் கொஞ்ச, நஞ்சமல்ல! ஆகவே, அவர்கள் இயன்ற வரை பன்னீரைத் தூக்கிப் பிடிப்பார்கள்!

பொதுவாகவே முக்குலத்தோருக்கும் ,பிராமணர்களுக்குமான பிணைப்பு வலுவானது. தென் மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு இது பிரதியட்சமாகத் தெரியும். பல நூற்றாண்டுகளாக முக்குலத்து சமூகம் தன் விசுவாசத்தை பிராமணர்களுக்கு தந்து கொண்டிருக்கும் சமூகம் தான். இந்தப் பின்னணியில் தான் ஜெயலலிதா – சசிகலா நடராஜன் உறவையும் புரிந்து கொள்ள வேண்டும். அந்த விசுவாசத்தில் அவர்கள் பெற்றது தான் பல்லாயிரக்கணக்கான கோடிகளுக்கான சொத்துக்கள்!

ஆக, ஜெயலலிதா காலத்தில் செல்வாக்காக இருந்த சசிகலா மீண்டும் தன் செல்வாக்கை நிலை நிறுத்த கடைசி துருப்பு சீட்டாக தற்போது பன்னீர் செல்வத்தை பயன்படுத்தி வருகிறார். சசிகலாவின் அதிகார அரசியல் எப்படியானது என்ற கடந்த கால கசப்பான அனுபவங்களை பெற்றுள்ள கட்சியினர் அவர் நுழைவை எப்பாடுபட்டாவது தடுக்கத் துடிக்கின்றனர். அப்படி துடிப்பவர்களில் முக்குலத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.விஜயபாஸ்கர், காமராஜ் போன்றோர்கள் இ.பி.எஸ் அணியில் இருப்பதுவே சாட்சி! தன் சொந்த மாவட்டத்தில் கூட ஒ.பி.எஸ்சுக்கும், சசிகலாவிற்கும் கட்சியினர் ஆதரவு இல்லை.

ஆகவே, அதிமுகவிற்குள் நடப்பது அதிகாரப் போட்டி தான் என்றாலும், அது இரு தனி நபர்களுக்கு இடையிலான போட்டியோ அல்லது இரண்டு சமூகங்களுக்கு இடையினான போட்டியோ அல்ல. அது அதிமுக தன்னாட்சி உரிமையோடு இயங்குவதற்காக நடத்தும் போராட்டமாகும். அதற்குத் தான் எடப்பாடி பழனிச்சாமி அணி போராடுகிறது! ஒரு வேளை எடப்பாடி பழனிச்சாமி கொட நாடு வழக்கில் சிறை சென்றால் கூட, அந்த அணிக்கு வேறு யாரேனும் ஒருவர் தலைமை தாங்கி இந்த போராட்டத்தை முன்னெடுப்பாரே அன்றி, அவர்கள் பன்னீர் செல்வத்தையோ, சசிகலாவையோ ஆதரிக்கமாட்டார்கள்!

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time