மானுடத்தின் இயல்பே, கடவுள் குறித்த கற்பிதங்களாகிறது!

-சாவித்திரி கண்ணன்

காளியம்மன் குறித்த லீனா மணிமேகலை வெளியிட்ட போஸ்டர் குறித்து இந்து சனாதனிகள் கொந்தளிக்கின்றனர். அவரவர் விருப்பப்படி கடவுளை கற்பிதம் செய்து கொள்ளும் வழிமுறை நமது பாரம்பரியத்தில் காலம் காலமாக உள்ள ஒன்று தான்! சனாதனிகள் வைத்ததே சட்டமாகிவிடுமா?

காளி புகை பிடிப்பதைப் போலவும் பாலியல் சுதந்திரத்தை வலியுறுத்தும் கொடி ஒன்றை பிடித்திருப்பதுமான உள்ள காளி தேவியின் படம் அது! இது குறித்து தான் சனாதனவாதிகள் கொந்தளிக்கின்றனர்.

”காளிதேவியை இழிவுபடுத்திவிட்டாய் விட்டேனா பார் உன்னை!”

”தலையை வெட்டுவேன், கண்டந்துண்டமாகக் கொலை செய்வேன்”

என ஆளாளுக்கு பேசியுள்ளனர். டிவிட்டர் நிறுவனம் அவரது அந்த காளி போஸ்டரை டிவிட்டரில் இருந்து நீக்கிவிட்டதாக சொல்லியுள்ளது.

இந்த நிலையில் திரிணமுல் காங்கிரசின் மஹீவா மொய்த்ரா, ”நான் காளியின் பக்தை தான். மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டம் தாராபீத் கோயிலை சுற்றி துறவிகள் புகைபிடித்துக் கொண்டிருப்பார்கள்! காளியின் அந்த வடிவத்தை தான் இங்கு மக்கள் வழிபடுகிறார்கள். காளியின் பக்தர்களுக்கு தங்கள் விரும்பியபடி தங்கள் தெய்வத்தை கற்பனை செய்யவும், வழிபடவும் உரிமை உள்ளது. அந்த வகையில் பல இடங்களில் காளியம்மா மாமிசம் உண்பவராகவும் மது அருந்துபவராகவும் கருதி மக்கள் படையல் வைக்கின்றனர். இது காலம்காலமாக உள்ளது தான்! அவர்களின் மத உரிமையில் நாம் தலையிட உரிமை இல்லை. காளியை சைவ தெய்வமாகவும், வெள்ளையுடை தரித்தவளாகவும் கருதவும், வழிபடவும் எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அது போல இதற்கும் உரிமை உள்ளது தானே” எனக் கூறியுள்ளார். இவர் பிராமணப் பெண்ணாக இருந்தாலும் மிக இயல்பாக எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் உண்மையை பேசியுள்ளார்.

இதற்கு இந்துத்துவ அமைப்பினர் பலர் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். மஹீவாவிற்கு எதிரான போராட்டங்கள் மேற்கு வங்கத்தில் நடக்கின்றன.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் கருத்து மிகத் தெளிவாக உள்ளது. பொது வெளியில் மதம் குறித்த எந்த அம்சத்தையும், யாரும் எதுவும் கூற முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளோம். அவரவர் வழியில் மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை நாம் அனுமதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உண்மையில் இது ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட சுதந்திரம் தான்! நிறைய இடங்களில் கிராம தெய்வங்களுக்கு ஆடு,கிடாய் வெட்டி மாமிசத்தை படையாலாக வைப்பது வழக்கத்தில் உள்ளது! தமிழகத்தில் அதை தடுக்கும் வண்ணம் சட்டம் கொண்டு வந்தார் ஜெயலலிதா. அது அவரது அரசியல் வாழ்க்கைக்கு பெரிய பின்னடவைத் தான் தந்தது.

பொதுவாக மனிதன் தன்னைப் போலத் தான் தெய்வத்தை பாவிக்கிறான். அதனால் தான் தெய்வத்திற்கும் மனித உருவம் தந்து வழிபடுகிறான். தனக்கு எதுவெல்லாம் ரொம்ப பிடிக்குமோ, அதுவே தெய்வத்திற்கும் பிடிக்கும் என்று நினைக்கிறான். வட இந்தியாவில் காலபைரவர் கோவிலுக்கு போகும் யாருமே அங்குள்ள பூஜாரிக்கு சிறந்த மதுவை தந்து தான் படையல் தருகிறார்கள்! மக்கள் வணங்கும் சிவபெருமான் யார்? அவர் வெட்டியான் தானே!

இதே போல வட இந்தியாவில் ராம்லீலா கொண்டாட்டங்கள் பிரசித்தமானது. சாலைகளில், வீதி ஓரங்களில் ராம நாடகங்களை தெருகூத்து கலைஞர்கள் நடத்துவார்கள்! அதில் ராமர் சிகரெட் பிடிப்பது போல காட்சிகள் இடம்பெறுவதுண்டு. இது குறித்த புகைப்படங்களை பேப்பரில் பார்த்த ஞாபகம் பலருக்கும் இருக்கலாம்!

ராமாயணம் என்பதே வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல! நூற்றுக்கணக்கான ராமாயணங்கள் உள்ளன! பல நூற்றாண்டுகளாக பல்வேறு எழுத்தாளர்கள் அதை விதவிதமாக கற்பனை செய்து எழுதியுள்ளனர். அவை அவரவர் மனநிலைக்கு ஏற்ப வடிவம் கண்டுள்ளன! சில பழங்குடிகளின் வழக்கில் உள்ள ராமாயணங்களில் ராமர் மது குடிப்பவராக அறியப்படுகிறார். இதைக் கொண்டு ராமரை பழங்குடிகள் அவமானப்படுத்திவிட்டார் என்று கருதினால் அதைப் போன்ற அறியாமை வேறில்லை. ராமரை அவர்கள் தங்களில் ஒருவராக கருதுகிறார்கள் என்பது தான் முக்கியம். அவரை அவர்கள் அன்னியப்படுத்தி பார்க்க விரும்பவில்லை. நீங்கள், ”ராமர் மது குடிக்க மாட்டார். மாமிசம் அருந்த மாட்டார்” என்றால்,”அப்படியானால், அவர் எங்கள் கடவுள் இல்லை. அவர் உங்கள் கடவுள்…” என்பார்கள்!

இந்த சனாதனவாதிகளிடம் இருக்கும் பிரச்சினை என்னவென்றால், தாங்கள் கற்பிதம் செய்ததையே அனைவரும் பின்பற்ற வேண்டும் என நினைப்பது தான்! தூய்மைவாத சிந்தனையே ஆபத்தானது. மனதில் தூய்மை வேண்டும். அவ்வளவு தான்!

63 நாயன்மார்களில் கண்ணப்ப நாயனார் கதை என்ன? வேடவரான அவர் தினசரி தான் வேட்டையாடிய மாமிசத்தை இறைவனுக்கு படைக்காமல் சாப்பிடமாட்டார். ஒரு நாள் அவர் காட்டில் உள்ள அந்த சுயம்பு லிங்கத்திற்கு படையல் வைக்க வரும் போது, இறைவனின் ஒரு கண்ணில் இருந்து ரத்தம் வழிவதைப் பார்த்து தன் கண்ணை நோண்டி இறைவனுக்கு வைப்பாராம். அப்படி வைத்தவுடன் இறைவனின் மறு கண்ணிலும் ரத்தம் வடியும். அதைப் பார்த்து துடித்த கண்ணப்பனார், தன் இன்னொரு கண்ணையும் பிடுங்கி இறைவனுக்கு வைக்க நினைத்து, இரண்டாவது கண்ணை நோண்டி எடுத்து விட்டால், எந்த இடத்தில் அதை பொருத்துவது என்பது தெரியாமல் போய்விடுமே என இறைவன் முகத்தில் தன் கால் பெருவிரலை கண்ணை பொருத்த வேண்டிய இடத்தில் பதித்து, தன் கண்ணை நோண்டி வைத்தாராம்! சனாதானிகளின் பார்வையில் இது பெரும் குற்றமாகப்படலாம். ஆனால், கோடானுகோடி சிவ பக்தர்கள் கண்ணப்ப நாயனாரை 63 நாயன்மார்களில் ஒருவராக வணங்கி வருகின்றனர்.

கிருபானந்த வாரியாருடன் சின்னப்பா தேவர்

தமிழகத்தில் சின்னப்பா தேவர் என்றொரு பிரபல தயாரிப்பாளர் இருந்தார். நிறைய பக்தி படங்கள் எடுத்து தமிழகத்தில் பக்தி சிறந்தோங்க காரணமானவர். சிறந்த பக்திமான். தன் சம்பாத்தியத்தின் பெரும்பகுதியை முருக கடவுளுக்கே செலவழித்தார். மருதமலை முருகன் கோவில் பிரபலமாக அடித்தளமிட்டவர் அவரே! அவரது முருகபக்தி கண்மூடித்தனமானது. கேள்விக்கு அப்பாற்பட்டது. ஆனால், அவர் பெரும் துன்பமோ, சோகமோ ஏற்படும் போது சில நேரங்களில் முருகனை மிகக் கடுமையாக வசைபாடுவார் எனக் கேள்விப்பட்டு உள்ளேன். ”அடப்பாவி முருகா! இப்படி பண்னிட்டியேடா! உன்னைத்தானே கும்பிடுறேன் என்னை கைவிட்டுட்டியேடா… ” என்று கண்டபடி, கேட்கவே முடியாதபடி திட்டுவார். அதுவும் அன்பின் வெளிப்பாடு தான்!, கடவுள் மீது அவர் கொண்டுள்ள உரிமையே அதற்கு காரணம்.

இந்த உலகம் ரொம்ப பெரிது. இதில் உள்ள ஒவ்வொருவரையும் கன்காணிப்பதோ, அவர்கள் எல்லோருமே இப்படி, இப்படித் தான் கடவுளை வணங்க வேண்டும் என்று சட்டம் போடுவதோ, நிர்பந்திப்பதோ ஒருபோதும் நடக்க முடியாததாகும். கடவுளுக்கும், அவரவர் மனதிற்குமான புரிதலில் அடுத்தவர் தலையிட உரிமை இல்லை.

லீனா மணிமேகலை தன்னைப் போல காளியை பாவிக்கிறார். அது தான் மனித இயல்பு! எனக்கு அவரது கற்பனையில் உடன்பாடில்லை. ஆனால், அது அவரது தன்மை என புரிந்து கடந்து போகிறேன்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time