கட்சிக்காரர்களாலேயே கைவிடப்பட்ட கபடதாரி!

-ச.அருணாசலம்

போலித்தனம், பொய்மை, வாய்ச் சவடால், திறமையின்மை ஆகியவற்றின் அடையாளமாகிப் போன போரீஸ் ஜான்சன், பிரிட்டனை வரலாறு காணாத இக்கட்டான நிலைக்கு தள்ளிவிட்டார்! ஊழல் அரசியல்வாதியை உடனே தூக்கி எறிந்தனர், பிரிட்டிஷ் மக்கள்! ஜான்சனின் மூன்றாண்டு ஆட்சி குறித்த ஒரு ஸ்கேன் ரிப்போர்ட்!

பல்வேறு ஊழல் குற்றசாட்டுகளுக்கும், விதி மீறல்களுக்கும் உள்ளான பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒருவழியாக தனது பதவியில் இருந்து விலகுவதாக வேண்டா வெறுப்பாக அறிவித்து விட்டார். 50க்கும் மேற்பட்ட தனது கட்சியின் அமைச்சர்களும், அதிகாரிகளும் ராஜினாமா செய்து நெருக்கடி கொடுத்த நிலையில் – வரலாறு காணாத பொய்களுக்கும், புனைசுருட்டுகளுக்கும் சொந்தக்காரரான ஜான்சன்  –  ராஜினாமாவுக்கு நிர்பந்திக்கப்பட்டுவிட்டார்!

ஐரோப்பிய யூனியனுடன் இணைந்திருந்த பிரிட்டன் தனது நாட்டு சந்தையையும், பொருளாதாரத்தையும் அதிலிருந்து பிரித்து “தனி வழி” காண முனைந்தது. இந்த வெளியேற்றத்தை பிரக்சிட் -BREXIT-  என்று பெயரிட்டு இயக்கங்கள் நடைபெற்றன. இதற்கு நாடு தழுவிய வாக்கெடுப்பு நடைபெற்றது. பிரிட்டன் அரசியல் மற்றும் சமூக அரங்கினுள் வெளியேற்றத்தை ஆதரித்தும் எதிர்த்தும் பிரிந்து கிடந்தவர்களுக்கு பிரக்சிட் வாக்கெடுப்பு – BREXIT REFERENDUM –  ஒரு தீர்வை கொடுத்தது. வெளியேற்றத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களில் மிக முக்கியமானவர் போரிஸ் ஜான்சன் . முன்னாள் பத்திரிக்கையாளராகவும் பின்னர் அரசியலில் நுழைந்து லண்டன் மாநகர மேயராகவும் பதவி வகித்த ஜான்சன் பிரக்சிட் வாக்கெடுப்பில் அமோக வெற்றிக்கு தானே மூல காரணம் என்று முன்னிலைப்படுத்திக் கொண்டார்!

 இது தொடர்பாக அரசியல் அரங்கில் நிலவிய குழப்ப சூழலைப் பயன்படுத்தி கன்சர்வேட்டிவ் கட்சியில் இணைந்து தனது தடாலடி வழிமுறைகளை முன்வைத்தார் போரிஸ் ஜான்சன். இவரது பேச்சுத்திறனில் மயங்கி, அவர் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கொண்டுவரும் வாக்குகளை கணக்கிலெடுத்து கன்சர்வேட்டிவ் கட்சி இவரை 2019 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தி, மாபெரும் வெற்றியும் கண்டது.

வாய்ச் சவடால்களினாலும், வரலாற்றை திரித்து பொய்யுரைப்பதாலும் வேண்டிய இலக்கை எட்ட முடியாது, பிரச்சினைகளை தீர்க்க இயலாது! பிரபலமாக இருப்பது ஒரு விஷயம். ஆனால், திறமையாளனாக இருப்பது வேறு விஷயம் என்பதை கன்சர்வேட்டிவ் கட்சி மட்டுமல்ல, இங்கிலாந்து மக்களும் மூன்று ஆண்டுகளில் புரிந்து கொண்டனர்.

கெட் பிரக்சிட் டன் ( Get Brexit Done) வெளியேற்றத்தை வெற்றிகரமாக முடி, ஜனவரி 2020 க்குள் என்ற கோஷம் கோவிட் பெருந்தொற்றால் பகல் கனவாக மாறியது, ஆசியாவில் ஆரம்பித்து ஐரோப்பாவை வாட்டியெடுத்த பெருந்தொற்று பிரிட்டன் மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு தாக்கியது. மனித இறப்புகளும் இழப்புகளும் பிரிட்டனை வாட்டிய வேளையில், முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளால் போரிஸ் ஜான்சன் மக்களின் நன்மதிப்பை இழந்து, அவப்பெயரை சம்பாதித்தார் எனலாம் . இந்த வேளையில் கண்டிப்பான ஊரடங்கு -Lock Down-  முறையை பிரிட்டனில் ஜான்சன் அமல் படுத்தினார்.

நாடு கடும் இக்கட்டைச் சந்தித்த நெருக்கடியான தருணத்தில் 56 வயது ஜான்சன் 34 வயது பெண்ணை கல்யாணம் செய்து உல்லாசமாக வலம் வந்தார்! தான் வாழும் பிரதமர் மாளிகையில் கூத்தும் கும்மாளமும் நிரம்பிய ‘குடி’ விருந்துகளை நடத்தினார். இதில் வேதனை என்னவென்றால், முதலில் இப்படி நடக்கவே இல்லை என மறுத்த பிரதமர் ஆதாரங்களுடன் செய்தி வந்தவுடன் மழுப்பி ஒப்புக் கொண்டதை இங்கிலாந்து மக்கள் ரசிக்கவில்லை. இதனால்,நேர்மையாளன் என்ற திரை விலகத்தொடங்கியது. ஊருக்குத் தான் உபதேசம் என்ற ஜான்சனின் போலித்தன்மை கன்சர்வேட்டிவ் கட்சியினரை சிந்திக்க தூண்டியது.

கிறிஸ் பின்ச்சர் என்ற என்ற நபரை கன்சர்வேட்டிவ் கட்சிக் கொறடாவாக ஜான்சன் நியமித்ததார்!  அந்த குடிகாரக் கோமாளி செய்யும் விவஸ்தையற்ற செயல்பாடுகள்  பிரிட்டன் அரசியல், சமூக வெளியில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் ஜான்சனுக்கு தெரிந்தே நடந்த போதும் அதை மறைக்க அவர் எத்தனித்ததானது அவரை பொதுவெளியில் மேலும் தோலுரித்துக் காட்டியது எனலாம் .

சமயக் கூடங்களுக்கான அமைச்சர் நியமனத்திலும் பிரிட்டன் மக்கள் ஜான்சனின் வக்கிரத்தை புரிந்து கொண்டனர். ஏற்கனவே பாலியல் குற்றங்களுக்கு ஆளான ஒரு நபரை  வேண்டப்பட்டவர் என்பதற்காக அமைச்சராக்கியது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இவரைப் பற்றிய ஆதாரங்கள், விவரங்கள் ஜான்சனுக்கு தெரிவித்து, எச்சரிக்கப்பட்டும் அவர் ஊழலில் தொடர்ந்து ஈடுபட்டார் என்பது வெட்டவெளிச்சமான போது, தன் கட்சியினரிடமே ஜான்சன் தனிமைப்பட்டு போனார் .

பிரிட்டன் குடியுரிமை பெற்று ஸ்காட்லாந்தில் வாழும் ஜகதார் சிங் ஜோகல் என்பவர் இந்தியாவுக்கு தனது திருமணத்திற்காக பஞ்சாப் வந்த பொழுது – காலிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர் என்று கூறி, இந்திய அரசு கைது செய்தது! இன்று வரை , ஐந்து வருடங்களுக்கு மேலாக அவர் மீது எந்த வழக்கும் பதியாமல், எந்த ஆதாரங்களையும் காட்டாமல் சிறையில் அடைத்து வைத்துள்ளது.

இதே போன்று பிரிட்டன்காரரான கிறிஸ்ட்டியன் மிஷேல் என்பவரை துபாயிலிருந்து கடத்தி வந்து- தகுந்த காரணமின்றி – சட்டத்திற்கு புறம்பாக கடத்தி வந்து திகார் சிறையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அவர்மீது எந்த வழக்கும் பதியாமல் இன்று வரை அடைத்து வைத்துள்ளது.

”காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக சாட்சியம் கொடுத்து அப்ரூவர் ஆனால் விடுவிப்போம் என்று இந்திய அதிகாரிகள் மிரட்டுகின்றனர்” என அவர்  இந்திய உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டுள்ளார். ஆனால், அம் மனு இன்னும் பரிசீக்கவே படவில்லை. பிரிட்டன் குடிமகன் என்ற முறையில் தன்னை சட்டத்திற்கு புறம்பான சிறைக்காவலில் இருந்து மீட்பதற்கு பிரதமர் ஜான்சனுக்கு கிறிஸ்டியன் மிஷேல் கோரிக்கை விடுத்து இருந்தார். ‘தனிநபர் சுதந்திரம், உரிமை’ பற்றி எல்லாம் வாய்கிழிய பேசும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த இரு விவகாரங்களிலும் முனைப்புடன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதும் அவருக்கு அவப் பெயரை பெற்றுத் தந்துள்ளது. ‘நரேந்திர மோடியின் இந்திய அரசியலுக்கு ஜான்சன் துணை போகிறாரா?’ என்பது மக்களின் விடை தெரியாத கேள்வியாக உள்ளது.

ஜோக்கராக அரசியலில், அடியெடுத்து வைத்து ராஜதந்திரியாக பரிணமிக்க முயன்ற போரிஸ் ஜான்சன் இறுதியில் கோமாளியாக வெளியேறுகிறார் என்று மேலை நாட்டு ஊடகங்கள் அவரது பதவி விலகலை விமர்சிக்கின்றன.

நிலையான கொள்கைப்பிடிப்பு ஏதுமின்றி, பழமைவாதிகள் மத்தியில் தன்னை ஒரு புதுப்பாதைக்காரனாகவும், முற்போக்காளர்கள் மத்தியில் தன்னை ஒரு கண்டிப்பான பேர்வழியாகவும் காட்ட முயற்சித்த ஜான்சன் இறுதியில் இரண்டுங்கெட்டானாக இன்று நிற்கிறார்.

இந்தியா வந்த போது புல்டோசரில் ஏறி நின்று புளகாங்கிதம்!

போரிஸ் ஜான்சன் பதவி விலகுவது ஒரு நல்ல செய்தி என்றும் இதை அவர் முன்னமே செய்திருக்க வேண்டும் என்று லேபர் கட்சித்தலைவர் கீர் ஸ்டார்மர் கூறியுள்ளார் . பிரதமர் பதவிக்கு எப்பொழுதுமே லாயக்கற்றவர் ஜான்சன் என்று எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியினரிடையே தனிமைப்பட்டு போன ஜான்சன் இடைத் தேர்தல்களில் அடைந்த தோல்விக்குப் பின் பதவியில் நீடிப்பது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது. ஜான்சன் ரிஷி சோனக் மற்றும் சாஜிட் ஜாவிட் ஆகிய இரு அமைச்சர்களின் விலகலும்,  நிதி அமைச்சரான காதிம் ஜவாகியே பதவி விலகச் சொல்லி ஜான்சனுக்கு கடிதம் எழுதியதும் அவரை மேலும் தனிமைப்படுத்தியது.

இப்படி தனக்கெதிராக கட்சியினர் தனது ஒருவர்பின் ஒருவராக குரல் கொடுப்பதைத்தான் ஜான்சன் செம்மறி ஆட்டு மனநிலை -herd instinct-  என சாடுகிறார் .

இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான உறவுகள் ஜான்சனின் அணுகுமுறையால் முன்பிருந்ததைவிட மோசமாகியுள்ளது. இதனால் மக்களும், வணிக சமூகத்தினரும் இளைஞர்களும் ஜான்சன் மீதும் அரசு மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் மீதும் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனுடைய வெளிப்பாடுதான் சமீபத்தில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் அடைந்த தேர்தல் தோல்வி.

போதாக்குறைக்கு ஸ்காட்லாந்து மீண்டும் விடுதலை கொடியை உயர்த்தியுள்ளதும், வடக்கு அயர்லாந்து பிரிட்டன் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் நிலைமையை மேலும், மோசமாக்கியுள்ளது.

முஸ்லீம் மக்களை கேலி பேசியும், தனிமனித வாழ்வில் ஒழுங்கீனத்தின் எடுத்துக்காட்டாக வாழுகின்ற ஜான்சன், கிறித்துவ ஒழுக்கத்தையும் மறுதலிப்பவராக காட்சியளித்து அனைத்து பிரிவு மக்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளானதில் வியப்பில்லை! ஆனால், அது மூன்றாண்டுகளில் நடந்துள்ளது தான் ஆச்சரியமாகும்.

பொய்களுக்கும் , புனைவுகளுக்கும் சுருட்டல்களுக்கும் ஊழல் மற்றும் ஊதாரிதனத்திற்கும் பெயர் போன போரிஸ் ஜான்சனுடன் அவரது நடவடிக்கைகளுக்கு துணை போன அதிகாரிகளும், கன்சர்வேட்டிவ் கட்சியினரும் வெட்கி தலைகுனிய வேண்டும் என்று எதிர்கட்சிகள் கூறுகின்றன.

நாட்டில் உணவுப் பொருள்களின் விலையும் பெட்ரோல் டீசல் விலையும் விண்ணை முட்டுமளவிற்கு உயர்ந்துள்ளது. பணவீக்கம் இங்கிலாந்து வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்களின் வாழ்க்கை செலவு பன்மடங்கு உயர்ந்து உள்ளது. ”நாட்டின் கடன் சுமை 1.2 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு உயர்ந்துள்ளது, நிலைமையை சீராக்க நேர்மையான, திறமையான அரசியல் தலைமை வேண்டும்” என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .

கட்டுரையாளர்; ச.அருணாசலம்

 

 

Support Aram

நேர்மையான, வெளிப்படையான,

சுதந்திரமான இதழியலுக்கு தோள்

கொடுங்கள்.

UPI QR CODE

Razorpay Payment Gateway

Personal Info

Donation Total: ₹1,000.00 One Time